SHARE

கிளாஸ்கோவில் வைத்து கைது செய்யக்கோரி பிரித்தானிய பொலிசாரிடம் ஆதாரங்கள் சமர்ப்பிப்பு

சிறிலங்காவின் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச உட்பட அந்நாட்டு இராணுவ மற்றும் காவல்துறை உயர் அதிகாரிகளுக்கு எதிராக சர்வதேச குற்றவியல் நீதி மன்றில் (International Criminal Court (ICC) வழக்கு ஒன்று இன்று புதன் கிழமை (27) தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இலங்கை அரசால் பாதிக்கப்பட்டு, நாட்டைவிட்டு வெளியேற நிர்ப்பந்திக்கபட்ட 200 தமிழர்கள் சார்பாக, Wayne Jordash QC என்ற சட்டநிபுணர் தலைமையில், உலக உரிமைகள் இணக்கம் (Global Rights Compliance LLP (GRC) என்ற சட்டவல்லுனர் அமைப்பினால் ரோமச் சட்டத்தின் 15ஆவது சரத்தின் (Article 7of the Rome Statute) கீழே இந்த வழக்கு சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் தொடரப்பட்டுள்ளது.

இதேவேளை எதிர்வரும் 31 (ஒக்ரோபர்) ஆம் திகதி முதல் நவம்பர் 12 வரையில் கிளாஸ்கோவில் (Glasgow) நடைபெறவுள்ள ஐக்கிய நாடுகள் சபையின் 2021 காலநிலை மாற்ற மாநாட்டில் (COP26) கலந்துகொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படும் சிறிலங்கா ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்சா மற்றும் மேலே பெயர் குறிப்பிடப்பட்டுள்ள இதர நபர்களில் சிலர் உள்ளிட்ட சிறிலங்கா அதிகாரிகளை சர்வதேச அதிகாரவரம்பு கொள்கையின் கீழ் கைதுசெய்வதற்கான பிடிவிராந்தை வெளியிடுவதற்கான ஆயத்தங்களைச் செய்வதற்கு பிரித்தானிய தேசியப் பொலிஸ் அதிகாரிகளுக்கும் இந்த வழக்கில் சமர்ப்பிக்கபட்ட ஆதாரங்கள் அனுப்பி வைக்கும் எனவும் சட்டவாளர்கள் தெரிவித்துள்ளனர்.

தற்போதைய ஜனாதிபதியும் முன்னாள் பாதுகாப்புச் செயலருமான கோட்டாபய ராஜபக்ச, சிறிலங்காவின் தற்போதைய பாதுகாப்புச் செயலரும் சிறிலங்கா இராணுவத்தின் (SLA) முன்னாள் இராணுவத் தளபதியுமான கமால் குணரட்ண, சிறிலங்காவின் முன்னாள் இராணுவத் தளபதியும் சிறிலங்கா இராணுவத்தின் பாதுகாப்புப் படைகளின் தலைமை அதிகாரியுமான ஜகத் ஜெயசூரியர், சிறிலங்கா பொலிஸின் குற்ற விசாரணைப் பிரிவு (CID) மற்றும் பயங்காரவாத விசாரணைப் பிரிவுகளின் (TID) பிரதிப் பொலிஸ்மா அதிபர் சிசிர மென்டிஸ் மற்றும் பொலிஸ்மா அதிபர்கள் அதிரடிப்படைப்பிரிவின் (STF) கட்டளை அதிகாரிகளே இந்த வழக்கில் பெயரிடப்பட்டுள்ளனர்.

சிறிலங்காவிலும் பிரித்தானியாவிலும் வாழும் ஏராளமான பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட (ஆட்கடத்தல்கள், சட்டவிரோதமான தடுத்துவைப்புக்கள், சித்திரவதைகள் ஆகிய செயற்பாடுகள் ஊடாக) வலுக்கட்டாயமாக நாடுகடத்தல், நாடு திரும்பிச் செல்வதற்கான உரிமையினை மறுதலித்தல், துன்புறுத்துதல் ஆகிய மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்களுக்கு (Crimes against humanity of deportation (through underlying acts of abductions, unlawful detention and torture), deprivation of right to return and persecution) பொறுப்பாக இருந்தார்கள் என்ற முடிவுக்கு வருவதற்கான நியாயமான அடிப்படையைக் காட்டியே மேற்படி வழக்குத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் மேற்படி வழக்கு குறித்து Global Rights Compliance LLP வெளியிடப்பட்டுள்ள உத்தியோகபூர்வ அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

“பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு எதிரான, மிகமோசமான ‘வெள்ளை வான் கடத்தல்கள் உட்பட்ட மனித குலத்திற்கு எதிரான குற்றங்களைப் புரிவதில் நேரடியாக ஈடுபட்ட (குற்ற விசாரணைப்பிரிவு, பயங்கரவாக விசாரணைப் பிரிவு, விசேட அதிரடிப்படை உட்பட்ட) சிறிலங்கா பொலிஸ் மற்றும் சிறிலங்கா இராணுவம் உள்ளிட்ட பாதுகாப்புப் படைகள் மீது மேற்குறிப்பிடப்பட்டுள்ள நபர்கள் அதிகாரத்தினைச் செலுத்தும் பதவிகளை வகித்திருந்தார்கள் என்பதனை இத்தகவல் காட்டுகின்றது.

அவர்களது செயற்பாடுகள் மற்றும் செயற்பாடு தவிர்ப்புக்கள் மூலமாக இந்த மாபெரும் கொடூரங்கள் நடைபெறுவதற்கு இச்சந்தேகநபர்களே நேரடியாகப் பொறுப்பானவர்களாவர். இருந்தபோதிலும், இவர்களில் ஒருவர் கூட, இந்தக் குற்றங்களின் தீவிரத்தன்மை பாரதூரமானதாக இருந்தும், சிறிலங்காவில் குற்றவிசாரணைக்கோ அல்லது வழக்குவிசாரணைக்கோ உட்படுத்தப்படவில்லை. இந்த அடிப்படையில், சர்வதேச நீதிமன்றுக்கு பொருத்தமான இந்த வழக்குகள் சர்வதேச நீதிமன்றத்தில் விசாரணைக்கு ஏற்றுக்கொள்ளப்படக் கூடியவை.

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் ஆதரவாளர்கள் அல்லது உறுப்பினர்கள் என்று சிறிலங்கா அரசாங்கத்தால் கருதப்பட்ட தமிழ் மக்களுக்கு எதிராக, குறைந்தது 2002 ஆம் ஆண்டிற்குப் பின்னர் சிறிலங்காவிலும் பிரித்தானியாவிலும் பரவலாகவும் திட்டமிட்ட ரீதியிலும் மேற்கொள்ளப்பட்ட வலுக்கட்டாயமாக நாட்டை விட்டு வெளியேற்றுதல், மனிதாபிமானமற்ற ரீதியில் திரும்பிச் செல்வதற்கான உரிமையினை மறுதலித்தல், துன்புறுத்துதல் ஆகிய மனித குலத்திற்கு எதிரான குற்றங்கள் தொடர்பாக முக்கியமான தகவல்களின் சுருக்கத்தினை இத்தொடர்பாடல் வழங்குகின்றது.

தமிழீழ விடுதலைப் புலிகளிற்கும் சிறிலங்கா அரசாங்கத்திற்கும் இடையிலான போர் நடந்துகொண்டிருந்த காலத்திலும் 2009 இல் அது முடிவுக்கு வந்தபின்னரும் மேலே குறிப்பிடப்பட்டுள்ள சிறிலங்கா பாதுகாப்புப் படைகளுக்குச் சொந்தமான சிறிலங்கா அரசாங்கத்தின் அதிகாரிகளால் ஆயிரக்கணக்கான உண்மையான தமிழ் ஆதரவாளர்கள் அல்லது ஆதரவாளர்கள் என்று கருதப்பட்டவர்கள் அல்லது தமிழீழ விடுதலைப் புலி உறுப்பினர்கள் திட்டமிட்ட ரீதியில் கடத்தப்பட்டும், சட்டத்திற்குப் புறப்பாகத் தடுத்துவைக்கப்பட்டும் அல்லது சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டும் வந்துள்ளார்கள். இந்த முறைப்பாடானது பாதிக்கப்பட்ட 200 பேரின் சார்பாகவே மேற்கொள்ளப்படுகின்றது என்றாலும், இவர்களுக்கு ஏற்பட்ட அனுபவங்களானது மேலும் பல்லாயிரக்கணக்கானோர் இவ்வாறு பாதிக்கப்பட்டிருக்கலாம் என்பதைக் கோடிட்டுக் காட்டுகின்றது. இவ்வாறாக, சிறிலங்காவிலும் பிரித்தானியாவிலும் தமிழ் ஆண்கள், பெண்கள் சிறுவர்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட, தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டுவருகின்ற கொடூரமான குற்றங்களின் ஒரு பகுதியையே இப்பாதிக்கப்பட்ட 200 பேரும் பிரதிநிதித்துவப்படுத்துகின்றார்கள்.

தமிழீழ விடுதலைப் புலிகளமைப்பிற்குள்ளும் அதன் ஆதரவளர்களுக்குள்ளும் வேரூன்றிப்போயுள்ள தமிழ்ப் பிரிவினைவாதத்தினை எந்த வழியிலாவது இல்லாதொழிப்பதே இக்குற்றங்களைப் புரிந்த சிறிலங்கா அதிகாரிகளின் முக்கிய நோக்கமாக இருந்துள்ளது, இருக்கின்றது. எனினும் இந்த அரசியல் நம்பிக்கையுடன் இருப்பவர்களுக்கும் அமைதியையும் பாதுகாப்பையும் தாயகம் என்று தாம் அழைக்கும் ஒரு இடத்தினையும் தவிர வேறெதையும் விரும்பாத ஆயிரக்கணக்கான சிறிலங்காவின் ஆண்கள், பெண்கள், சிறுவர்களுக்கும் இடையில் சிறிலங்கா அரசாங்கம் எந்தவொரு வேறுபாட்டையும் காட்டுவதில்லை.
இவ்வாறாக, இன மற்றும் அரசியல் அடிப்படையின் இக்குற்றச்செயல்களை சிறிலங்கா அரசாங்க அதிகாரிகள் மேற்கொள்கையில், உண்மையில் அவர்கள் இனப்பாகுபாடு மற்றும் துன்புறுத்தல் நடவடிக்கைகளையே புரிந்திருக்கின்றார்கள். தாங்கள் எதிர்கொண்ட துன்புறுத்தல்களின் கொடூரத்தன்மை காரணமாக பாதிக்கப்பட்டவர்கள் சிறிலங்காவை விட்டு வெளியேறி, பிரித்தானியாவில் புகலிடம் கோருவதைத் தவிர அவர்களுக்கு வேறெந்தத் தெரிவையும் விட்டுவைக்கவில்லை.

அதன் தொடர்ச்சியாக, கோத்தபாய ராஜபக்சாவாலும் கமால் குணரட்ணவாலும் வழிநடத்தப்படும் சிறிலங்கா அரசாங்கத்தின் பாதுகாப்புப் படைகளின் அச்சுறுத்தல்கள், சித்திரவதைகள், துன்புறுத்தல் கொள்கைகள் காரணமாக பாதிக்கப்பட்டவர்கள் திரும்பவும் தங்கள் வீடுகளுக்குத் திரும்பிச்செல்வதற்கான அவர்களது உரிமையினை அவர்களிடமிருந்து பறித்தொடுக்கப்பட்டதுடன் தொடர்ந்தும் மறுதலிக்கப்படுகின்றது. இந்த நபர்களும், ஒட்டுமொத்தமாக சிறிலங்கா அரசாங்கமும் ஆரம்பித்துள்ள கொள்கைகள் இன்றுவரை பாதிக்கப்பட்டவர்கள் தங்கள் வீடுகளுக்குச் செல்வதைத் தடுத்துக்கொண்டிருக்கின்றது. பாதிக்கப்பட்டவர்கள் விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்களோ இல்லையே, அவர்கள் சிறிலங்காவுக்குத் திரும்பிச்சென்றால், அவர்கள் சித்திரவதை, காயங்கள் மற்றும் மரணத்தைச் சந்திக்கக்கூடிய ஆபத்தினை எதிர்கொண்டுள்ளர்கள். சிறிலங்காவிலுள்ள பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு இழைக்கப்படும் தொல்லைப்படுத்தல்கள் மற்றும் அச்சுறுத்தல்களால் மட்டுமன்றி, பிரித்தானியாவிலேயே அவர்கள் மீது தொடர்ந்து மேற்கொள்ளப்படும் கண்காணிப்புக்கள், தொல்லைப்படுத்தல்கள், துன்புறுத்தல்கள் காரணமாகவும் பாதிக்கப்பட்டவர்கள் தொடர்ந்தும் துன்பத்துக்கு ஆளாகிவருகின்றார்கள். மேற்சொன்ன துன்பங்களுடன் சேர்ந்து, தங்களது வீடுகளை, கலாச்சாரத்தை, குடும்பங்களை இழந்து வெளிநாடு ஒன்றில் தங்களது வாழ்க்கையினைப் புதிதாக ஆரம்பிப்பதிலுள்ள வேதனைகள் உட்பட, பிரித்தானியாவில் அகதியாக இருப்பதிலுள்ள அவமதிப்புக்கள் மற்றும் சிரமங்களும் பாதிக்கப்பட்டவர்களுக்குக் கடுமையான மனப்பாதிப்புக்களை ஏற்படுத்தியுள்ளன. தொடர்ந்து ஏற்படுத்திவருகின்றன.

இந்தவகையில், இந்த நடவடிக்கைகள் மூலமாகத் தற்போதைய சிறிலங்கா அரசாங்கத்தினால் பிரித்தானியாவிலுள்ள பாதிக்கப்பட்டவர்கள் தொடர்ந்தும் துன்புறுத்தலுக்கு உள்ளாகிவருகின்றார்கள் என்பதே முக்கிய கரிசனையாகும். இந்த நடவடிக்கைகளும், தொடர்ந்துவரும் அக்கொடூரத்தனமும் பிரித்தானியாவிலுள்ள பாதிக்கப்பட்டவர்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட, தொடர்ந்தும் மேற்கொள்ளப்பட்டுவரும் மனிதகுலத்திற்கு எதிரான மூன்று தனித்துவமான குற்றச்செயல்களுக்கு (வலுக்கட்டாயமாக நாட்டை விட்டு வெளியேற்றுதல், மனிதாபிமானமற்ற ரீதியில் திரும்பிச் செல்வதற்கான உரிமையினை மறுதலித்தல், துன்புறுத்துதல்) வலுச்சேர்ப்பதாகவே அமைகின்றன. ரோமச் சட்டத்தின் அரச பங்காளிகளாக ஐக்கிய இராஜ்ஜியம் திகழ்வதால், அது சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் அதிகார வரையறைக்குள் வருவதுடன் மட்டுமன்றி, இன்னொரு அடிப்படையிலும் – உலகளாவிய சட்டவரம்புக் கொள்கைகளின் அடிப்படையிலும் – ஐக்கிய இராஜ்ஜியத்திற்கு வரும்போது அவர்களைக் கைதுசெய்வதற்கான அதிகாரத்தினைப் பிரித்தானியாவுக்கு வழங்குகின்றது.

இத்தொடர்பாடல் காட்டுவதுபோன்று, இரண்டு காரணங்களுக்காக இது இருக்கின்றது: முதலாவது, வலுக்கட்டாயமாக நாட்டைவிட்டு வெளியேற்றுதல் என்பது தொடர்ந்து நடைபெறும் ஒரு குற்றச்செயலாகும், அதாவது மேலே குறிப்பிடப்பட்ட நபர்களின் செயற்பாடுகள் காரணமாகவும், சிறிலங்கா அதிகாரிகளின் தொடர்ச்சியான துன்புறுத்தல் செயற்பாடுகள் காரணமாகவும் பாதிக்கப்பட்டவர்களை சிறிலங்காவிலுள்ள தங்களது சொந்த வீடுகளுக்குத் திரும்பிச் செல்வதைத் தடுப்பது தொடர்ந்து நடைபெறும்வரைக்கும் இக்குற்றச்செயலானது ஐக்கிய இராஜ்ஜிய நிலப்பரப்பிலேயே நடைபெறுக்கின்றது என்றே பொருள்கொள்ளப்படும். இரண்டாவது, சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் நீதித்துறையால் அண்மையில் உறுதிப்படுத்தப்பட்டது போன்று, தங்களது சொந்த வீட்டுக்குத் திரும்பிச் செல்வதற்கான உரிமை மறுக்கப்படும் குற்றச்செயலானது பாதிக்கப்பட்டவர் தற்போது அகதியாக எங்கே இருக்கின்றாரோ அங்கேயே நடைபெறுவதாகவே கொள்ளப்படும், அதாவது இவ்விடயத்தில் அது ஐக்கிய இராஜ்ஜியத்தில் நடைபெறுகின்றது. பாதிக்கப்பட்டவர்கள் கடத்தப்பட்டு, தடுத்துவைக்கப்பட்டு, சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டு, துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்பட்டு (சிறிலங்காவிலும் பிரித்தானியாவிலும்), அதன்மூலமாக அவர்களது இன மற்றும் அரசியல் அடையாளங்கள் காரணமாக தங்களது தாயகத்திற்கத் திரும்பிச்செல்லும் உரிமை பறிக்கப்பட்டநிலையில் இருக்கின்றார்கள்.

மேலே குறிப்பிட்ட விடயங்களின் அடிப்படையில், இக்குற்றங்கள் தொடர்ந்தும் நடப்பதைத் தடுப்பதற்கும் பாதிக்கப்பட்டவர்கள் தங்களது தாயகம் திரும்பிச் செல்வதற்குரிய அவர்களுக்குள்ள உரிமையினை உறுதிப்படுத்துவதற்கும், உண்மையைத் தெரிந்துகொள்வதற்கும், தங்களைச் சித்திரவதைக்கு உள்ளாக்கியவர்கள் நீதிவிசாரணையை எதிர்கொள்வதைக் காண்பதற்கும், தங்களது இழப்பீட்டுத்தொகையினைப் பெற்றுக்கொள்வதற்கும் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் வழக்கு நடத்துனரால் விசாரணை ஆரம்பிக்கப்படுவது அத்தியாவசியமானது என பாதிக்கப்பட்டவர்கள் வாதிடுகின்றனர் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது”.

இந்த வழக்கின் முதல் கட்டமாக தற்போது பிரித்தானியாவில் வாழும் 200 பாதிக்கப்பட்டவர்கள் சாட்சியம் வழங்கியுள்ள போதிலும், அடுத்த கட்டங்களில் மேலும் பலர் இணைந்து தமது சாட்சியங்களை வழங்கலாம் என்றும், ஏனைய மனித உரிமை அமைப்புக்களும் ஆதாரங்களையும் வாதங்களையும் சமர்ப்பிக்லாம் என்றும் இந்த வழக்கை வழிநடத்துபவர்கள் குறிப்பிட்டுள்ளார்கள்.

எதிர்வரும் காலத்தில், தமிழர்கள் மீதான இனப்படுகொலையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றில் நிருபிக்கும் முயற்சியில் இது ஒருபடிக்கல்லாக அமையும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

வழக்கு குறித்து Global Rights Compliance LLP வெளியிடப்பட்டுள்ள உத்தியோகபூர்வ அறிக்கை

Press-Release-Final

Executive-Summary-Final

Print Friendly, PDF & Email