இலங்கையின் இராணுவத்தளபதி சவேந்திர சில்வா உள்ளிட்ட போர்க்குற்றவாளிகளை பிரித்தானியாவின் உலகளாவிய மனித உரிமைகள் தொடர்பான தடைவிதிப்பு அதிகாரசபையின் கீழ் (Global Human Rights Sanction Regime) தடை செய்வதற்கு பிரித்தானிய அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென பிரித்தானிய தொழிலாளர் கட்சியின் East Ham தொகுதிக்கான பாராளுமன்ற உறுப்பினர் Hon.Stephen Timms வலியுறுத்தியுள்ளார்.
சவேந்திர சில்வா உள்ளிட்ட யுத்த குற்றவாளிகளை தடைசெய்யகோரி பிரித்தானியாவில் உள்ள தமிழர்கள் முன்னெடுத்து வரும் போராட்டத்திற்கு செய்பாட்டாளர் சதீஸ் குலசேகரம் முன்வைத்த கோரிக்கைக்கு இணங்கி ஆதரவு தெரிவித்து நமது ஈழநாட்டுக்கு அவர் வழங்கிய விசேட காணொளியிலேயே இதனை அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் அதில் இலங்கையில் இடம்பெற்ற இறுதி யுத்தத்தில் பலர் கொல்லப்பட்டது, வைத்தியசாலைகள் மற்றும் சமாதான பிரதேசம் ஆகியவற்றின் மீதான குண்டுவீச்சுக்களை மேற்கொண்ட 58 ஆவது படைப்பிரிவிற்கு தலைமை தாங்கி இராணுவத்தை நேரடியாக வழிநடத்திய சவேந்திர சில்வாவை அமெரிக்கா தடை செய்யதது போன்று பிரித்தானியாவும் தங்கள் மனித உரிமைகள் தொடர்பான தடை விதிப்பு அதிகாரசபையின் கீழ் தடை செய்ய வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளார்.