Home Blog Page 9

தேர்தல் சட்ட விதி முறை மீறல்: 50 முறைப்பாடுகள் பதிவு!

image_pdfPRINT

ஜனாதிபதி தேர்தல் நடைபெறும் காலப்பகுதிவரை அமைதியான காலமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ள நிலையில், தேர்தல் சட்டவிதிமுறைகளை மீறிய குற்றச்சாட்டில் 50 முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக பெப்ரல் அமைப்பு தெரிவித்துள்ளது.

பெப்ரல் அமைப்பின் நிறைவேற்று பணிப்பாளர் ரோஹன ஹெட்டியாராச்சி இதனை தெரிவித்துள்ளார்.

குறித்த காலப்பகுதியில் சட்டவிரோதமான முறையில் பிராசாரங்களை மேற்கொண்ட குற்றச்சாட்டில் 30 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

அரச சொத்துக்களை துஷ்பிரயோகம் செய்தமை தொடர்பாக முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாகவும் பெப்ரல் அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.

இதனிடையே தேர்தல் சட்டவிதிமுறைகளை மீறியமை தொடர்பாக கிடைக்கக்பெற்றுள்ளமுறைப்பாடுகளி;ன் எண்ணிக்கை ஐயாயிரத்தினை அண்மித்துள்ளதாக தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

நாட்டில் சட்ட ஒழுங்கை நிலைநாட்டுமாறு ஜனாதிபதி பணிப்புரை

image_pdfPRINT

தேர்தலுக்குப் பின்னரான காலப்பகுதியில் மக்களின் அன்றாட வாழ்க்கைக்கு இடையூறு ஏற்படாத வகையில் நாட்டில் சட்டம் ஒழுங்கை நிலைநாட்டுவதற்குத் தேவையான அனைத்து நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பாதுகாப்புத் தரப்புப் பிரதானிகளுக்குப் பணிப்புரை விடுத்துள்ளார்.

ஜனாதிபதி அலுவலகத்தில் இன்று  இடம்பெற்ற  தேசிய பாதுகாப்பு சபையினருடனான கலந்துரையாடலின் போதே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இதன்போது எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலை சுதந்திரமாகவும் நியாயமாகவும் நடத்துவதற்கு அவசியமான பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொள்வது தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் நாட்டில் சட்டம் ஒழுங்கை நிலைநாட்டுதல், வேட்பாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்தல், வாக்கு எண்ணும் நிலையங்களை அண்டிய பகுதிகளில் பாதுகாப்பைப் பலப்படுத்துதல் மற்றும் தேர்தல் ஆணைக்குழுவுக்குத் தேவையான ஒத்துழைப்பை வழங்குதல் என்பன குறித்தும்  ஆராயப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்போது  தேர்தலுக்குப் பின்னரான காலப்பகுதியில் மக்களின் அன்றாட வாழ்க்கைக்கு இடையூறு ஏற்படாத வகையில் நாட்டில் சட்டம் ஒழுங்கை நிலைநாட்டுவதற்குத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்குமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பாதுகாப்புத் தரப்புப் பிரதானிகளுக்குப் பணிப்புரை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

‘துயர் தோய்ந்த நவாலிப்படுகொலைகள்’ நூல் வெளியீடு

image_pdfPRINT

1995 யூலை 09 ம் திகதி சிறிலங்கா வான்படை படையினரின் குண்டுவீச்சில் படுகொலை செய்யப்பட்ட 153 தமிழ் அப்பாவிப்பொதுமக்களை கொலை செய்ததன் ஊடக அப்போதைய சந்திரிக்கா மிகப்பெரும் இனப்படுகொலையை நிறைவேற்றியிருந்தது.

இந்த படுகொலையை ஆவணமாக்கும் முயற்சியில் ஈழத்தின் மிகப்பெரும் எழுத்தாளர்களில் ஒருவராக அடையாளப்படுத்தப்பட்ட வல்வை ஆனந்தராஜ் அவர்களால் எழுதப்பட்ட “துயரம் தோய்ந்த நவாலிப்படுகொலைகள் எனும் வரலாற்று ஆவணநூல் லண்டன் குறைடன் பகுதியில் உள்ள கேட்போர் கூடம் ஒன்றில் ஊடகவியலாளர் தம்பையா தயாபரன் அவர்களின் தலைமையில் மிகச்சிறப்பாக 19-09-2024 அன்று நடைபெற்றது.

வரவேற்புரையை பொறியியலாளர் திரு சி. சிவலீலன் அவர்கள் வழங்க தலைமையுரையை திரு தம்பையா தயாபரன் அவர்கள் நிகழ்த்தினார் . தொடர்ந்து நூலின் அறிமுக உரையை ஆசிரியர் கந்தையா பாலகிருஸ்ணன் அவர்கள் வழங்கினார் . வெளியீட்டு உரையை திருமகாலிங்கம் சுதாகரன் அவர்கள் நிகழ்த்தினார் . தொடர்ந்து கருத்துரைகளை அருட்தந்தை ஜெபநேசன் அவர்களும், சிவசிறி ராம் வாகீசக்குருக்கள் அவர்களும், அரசியல் இராணுவ ஆய்வாளர் கலாநிதி பிரபாகரன் அவர்களும் , வைத்திய கலாநிதி திருமதி இந்துமதி அவர்களும் வழங்கினார்கள் . இறுதியாக நூலின் ஏற்புரையை ஒய்வுபெற்ற கல்விப்பணிப்பணிப்பாளரும் நூலாசிரியருமான வல்வை ஆனந்தராஜ் அவர்கள் வழங்கினார் .

இந்த நிகழ்வில் பெருமளவான தமிழ்த்தேசிய ஆர்வலர்கள் , மக்கள் கலந்துகொண்டு சிறப்பித்தனர் .

தமிழரசுக் கட்சியின் தீர்மானத்தை எதிர்க்கின்றேன்! – சிறிதரன் தெரிவிப்பு

image_pdfPRINT

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் ஐக்கிய மக்கள் கூட்டணியின் வேட்பாளர் சஜித் பிரேமதாசவை தாம் ஆதரிப்பதாக தமிழரசுக்கட்சி அறிக்கை வெளியிட்டுள்ள நிலையில்,  குறித்த  தீர்மானத்தை தான் எதிர்ப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் சி. சிறிதரன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது”  இன்றைய கூட்டத்தில் ஐந்து பேர் சஜித் பிரேமதாசாவுக்கு ஆதரவு தெரிவிக்கும் நிலைப்பாட்டில் இருந்தார்கள்.

அது தொடர்பாக ஒரு அறிக்கையும் எழுதப்பட்டிருந்தது. அந்த அறிக்கையில் ஏற்கனவே எடுக்கப்பட்ட தீர்மானத்தின்படி சஜித் பிரேமதாசாவுக்கு ஆதரவளிப்பதாகவே இருந்தது.

மத்திய குழுவில் கடந்த முதலாம் திகதி எடுக்கப்பட்ட தீர்மானம் பிழை என நான் எழுத்து மூலமாகவும் வழங்கி இருக்கிறேன். நான் ஒரு தெரிவு செய்யப்பட்ட தலைவர் என்ற ரீதியில் எழுத்து மூலமாக அறிவித்து விட்டு தான் பிரித்தானியா சென்று இருந்தேன்.

6 திகதி நான் மீளவும் இலங்கைக்கு திரும்புவேன். ஏழாம் திகதி வரை கூட்டத்தினை வைக்க வேண்டாம் என கூறியிருந்தேன். அவ்வாறு கூட்டங்கள் வைத்தாலும் தீர்மானங்கள் எடுக்கப்படாது என்று பொதுச்செயலாளர் சத்தியலிங்கம் எனக்கு உறுதிமொழியையும் தந்திருந்தார்.

தற்போதைய தலைவராக இருக்கின்ற மாவை சேனாதிராஜாவை 26 ஆம் தேதி சந்தித்து பேசுகின்ற போது நாங்கள் தீர்மானங்கள் எதுவும் நிறைவேற்றமாட்டோம் சில விடயங்கள் தொடர்பாக பேச இருக்கிறோம் என தெரிவித்திருந்தார்.

இவற்றையெல்லாம் தாண்டி 2024. 8. 18ஆம் திகதி ஆறு பேர் கொண்ட குழு நியமிக்கப்பட்டு அந்தக் குழு கூடி தீர்மானம் எடுக்காத நிலையில் மத்திய குழுவில் அவசர அவசரமாக யாருடைய தேவைக்காக யாருடைய தீர்மானத்தை எடுத்தார்கள். சஜித் பிரேமதாசவுக்காக அந்த தீர்மானத்தை எடுத்துள்ளனர்.

அந்த தீர்மானம் எடுத்த பின்னர் நான் கடிதம் மூலமாகவும் தெரிவித்திருந்தேன்.  இதனை நான் எதிர்க்கிறேன். என்னைப் பொருத்தவரை  தமிழ் மக்களுடைய தேசிய உணர்வுகளை பிரதிபலிக்க கூடிய வகையில் நாங்கள் ஒரு பொது வேட்பாளருக்கு வாக்களிக்க வேண்டும்.

பொது வேட்பாளரை நிறுத்த வேண்டும் என்கின்ற ஒரு தெளிவான நிலைப்பாட்டை கொண்டு இருந்தேன். அதனை இப்போதும் கொண்டிருக்கிறேன். இன்றும் இந்தக் கூட்டத்தில் அதனை வலியுறுத்தி என்னுடைய கருத்து இவர்களுடைய தீர்மானத்திற்கு எதிரானது என்பதனை பதிவு செய்யுமாறு தெரிவித்து இருக்கிறேன்.

ஸ்ரீதரன் இதனை ஏற்கவில்லை அதாவது ஸ்ரீதரன் சஜித் பிரேமதாசாவுக்கு மட்டுமல்ல ரணில் விக்கிரமசிங்க, அனுரகுமார திசாநாயக்க உட்பட்ட தென்னிலங்கையினுடைய வேட்பாளர்கள் யாருக்கும் ஆதரவு இல்லை என்பதை பதிவு செய்யுமாறு குறிப்பிட்டு அந்த கூட்டத்திலிருந்து என்னுடைய நேரம் முடிந்ததும் புறப்பட்டேன்” இவ்வாறு தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சியில் ஜனாதிபதி தேர்தலுக்கான ஏற்பாடுகள் பூர்த்தி!

image_pdfPRINT

கிளிநொச்சி மாவட்டத்தில் ஜனாதிபதி தேர்தலுக்கான ஏற்பாடுகள் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதுடன் இதுவரை 10 தேர்தல் விதிமுறை மீறல்கள் தொடர்பான முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்று இருப்பதாக மாவட்ட அரசாங்க அதிபர் எஸ் முரளிதரன் தெரிவித்துள்ளார்.

இன்று(14.09.2024) கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் மேற்கண்டாவாறு குறிப்பிட்டுள்ளார்.

தொடர்ந்து குறிப்பிடுகையில், “கிளிநொச்சி மாவட்டத்தில் ஒரு லட்சத்து தொள்ளாயிரத்து ஏழு வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி உடையவர்களாக உள்ளனர்.

கிளிநொச்சி மாவட்டத்தில் 108 வாக்களிப்பு நிலையங்களும் எட்டு வாக்கெண்ணும் நிலையங்களும் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கின்றது

இதுவரை தேர்தல் தொடர்பான பத்து முறைப்பாடு முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றிருக்கின்றன. இதில் ஆறு முறைப்பாடுகள் சிறிய அளவிலான முறைப்பாடுகளும் நான்கு முறைப்பாடுகள் சாதாரண முறைப்பாடுகளாகவும் காணப்படுகின்றன.

அதே நேரம் தேசிய அடையாள அட்டை இல்லாதவர்களுக்கு தற்காலிக அடையாள அட்டைகளை வழங்குவதற்கான செயற்பாடுகள் கிராம அலுவலர்கள் ஊடாக முன்னெடுக்கப்பட்டுள்ளது” என்றும் அரசாங்க அதிபர் எஸ் முரளிதரன் குறிப்பிட்டுள்ளார்.

ரணில் யாழில் முன்வைத்த வாக்குறுதிகளுக்கு நானே பொறுப்பு- டக்ளஸ் திட்டவட்டம்

image_pdfPRINT

ரணில் விக்ரமசிங்க யாழ். மக்களுக்கு கொடுக்கும் வாக்குறுதிகளுக்கு நானே பொறுப்பு என கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் இன்று இடம்பெற்ற ரணில் விக்ரமசிங்கவுக்கான ஆதரவு பிரசார கூட்டத்தில் மேலும் கருத்து தெரிவித்த அவர்,

“நான் உங்கள் முன்னால் கூறியவற்றுக்கும் நாமே பொறுப்பாகவும் இருப்போம். அரசியலுக்காகவோ அல்லது வாக்குக்காகவோ எதையும் நான் பேசுவதில்லை.

உங்களதும் நாட்டினதும் எதிர்காலத்தை ஒளிமயமாக்கும் வேலைத் திட்டங்களை அவர் செய்து காட்டியுள்ளார்.

தேநேரம் மக்கள் நலன் சார்ந்தே எனது அனைத்து செற்பாடுகள் அமையும். அதனடிப்படையில் தமிழ் மக்களது பிரச்சினைகளுக்கு தீர்வுகாணப்பட வேண்டும் என்பதில் நான் உறுதியாக இருக்கின்றேன்.

அந்த வகையில் எதிர்வரும் 21 ஆம் திகதியன்று உங்கள் ஒவ்வொரு வாக்கினூடாக எரிவாயு சிலிண்டர் சின்னத்தை வலுப்படுத்தி அந்த சந்தர்ப்பத்தை ரணில் விக்ரமசிங்கவுக்கு கொடுப்பதன் ஊடாகவும் அவரோடு நாம் ஒவ்வொருவரும் சேர்ந்து பயணிப்பதன் ஊடாகவும் எமது மக்கள் எதிர்கொள்ளுகின்ற பிரச்சினைகளில் இருந்து விடுதலைபெற முடியும்” என்றார்.

தென்னிலங்கையின் முகவா்களாக சிலா் வடக்கில் செயற்படுகின்றனா் – அரியநேந்திரன்!

image_pdfPRINT

ஜனாதிபதித் தேர்தலில் சங்கு சின்னத்திற்கு மாத்திரமே வாக்களிக்குமாறும், ஏனையவர்களுக்கு விருப்பு வாக்கு போட வேண்டாம் என்றும் தமிழ் பொது வேட்பாளர் அரியநேந்திரன் கோாிக்கை விடுத்துள்ளாா்.

யாழில் இன்றையதினம் வெள்ளிக்கிழமை இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே இவ்வாறு கோாிக்கை விடுத்துள்ளாா். இவ்விடயம் தொடா்பாக அவா் மேலும் தொிவிக்கையில்,

”எட்டு மாவட்டங்களிலும் எமது பிரச்சார நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. எதிர்பார்த்த வாக்குக்களை விட அதிக வாக்குகள் எமக்கு கிடைக்கும் என்ற நம்பிக்கை எமக்கு வந்துள்ளது.

மக்களிடம் நாம் சங்கு சின்னத்திற்கு மாத்திரம் வாக்களிக்க வேண்டும் என்றே கோரி வருகிறோம். ஆனால் சிலர் சங்கு சின்னத்துக்கு வாக்களித்த பின்னர் விரும்பிய மற்றைய வேட்பாளருக்கு வாக்களிக்குமாறு சிலர் கூறு கின்றனர். இது எனதோ இப்பொதுக் கட்டமைப்பை சார்ந்தவர்களுடைய கருத்தோ இல்லை.

தற்போதைய நிலவரப்படி எவருமே 50 வீதத்திற்கும் அதிகமான வாக்குகளை பெற முடியாத நிலைமை காணப்படுகிறது. அதானல் தென்னிலங்கையை சேர்ந்தவர்கள் வடக்கு கிழக்கில் முகாமிட்டு பிரச்சாரங்களை முன்னெடுக்கின்றனர்.

நல்லூர் திருவிழாவிற்கு காப்புக்கடை போடுவது போன்று, கொக்கட்டிசோலை தான்தோன்றிஸ்வரர் ஆலயத்தில் இனிப்பு கடை போடுவது போன்று, வடக்கு கிழக்கில் வந்து தங்கி பிரச்சாரம் செய்கின்றனர்.

அவர்களுக்கு முகவர்களாக சில தமிழர்கள் செயற்படுகின்றனர். எமது இனத்திற்காக அவர்கள் சிந்தித்து சங்கு சின்னத்திற்கு ஆதரவு வழங்க முன் வரவேண்டும்” என அரியநேந்திரன் மேலும் தெரிவித்தார்.

நாம் யார் மீதும் சேறுபூச வில்லை! -ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க

image_pdfPRINT

தாம் யார் மீதும் சேறுபூச வில்லை எனவும், இந்த நாட்டை நல்ல நிலைக்குக் கொண்டுவர தாம் பல சிரமங்களை எதிர்கொண்டதாகவும், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

புத்தளத்தில் இடம்பெற்ற  தேர்தல் பரப்புரைக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும்  தெரிவித்துள்ளதாவது” நான் இளைஞர்கள் சிலரை சந்தித்தேன். அவர்களில் எனக்கு ஆதரவாளர்களும் தேசிய மக்கள் சக்திக்கு ஆதரவானவர்களும் இருந்தார்கள். அந்த இளைஞர்களிடம் எதற்காக திசைக்காட்டிக்கு ஆதரவு வழங்குகின்றீர்கள் என்று கேட்டேன். அதற்கு அவர்கள் ஒரு முறை சந்தர்ப்பம் வழங்கிப் பார்ப்போம் என்று விடையளித்தார்கள்.

நான் மீண்டும் கேட்டேன், நீங்கள் எதிர்க்காலத்திடமும் இவ்வாறு சந்தர்ப்பம் கேட்பீர்களா என்று கேட்டேன். இதற்கான விடையை தான் மக்கள் வழங்க வேண்டும். இது சந்தர்ப்பம் வழங்கிப் பார்க்கும் தருணம் கிடையாது. ஐ.எம்.எப். அமைப்பின் ஒத்துழைப்பினால்தான் நாம் இன்று பயணித்துக் கொண்டிருக்கிறோம்.

இந்த ஒத்துழைப்பு இல்லாவிட்டால், டொலருக்கு நிகரான ரூபாயின் பெறுமதி 500 ரூபாயாக உயர்வடைந்திருக்கும். 2022 இல், ரூபாயின் பெறுமதியை ஸ்தீரப்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு அழைப்பு விடுக்கப்பட்டபோது, யாரும் முன்வரவில்லை.

எரிவாயு, எரிபொருள், மருந்துகளுக்கு அன்று வரிசை ஏற்பட்டபோது, அதனை நிவர்த்தி செய்ய யாரும் முன்வரவில்லை. இப்படியான நபர்களுக்கு ஏன் மக்கள் வாக்களிக்க வேண்டும்? நாம் யார் மீதும் சேறுபூச வில்லை. இந்த நாட்டை இந்த நிலைமைக்கு நாம் மிகவும் சிரமப்பட்டுதான் கொண்டுவந்துள்ளோம்.

இதற்காக சில கடினமான முடிவுகளை எடுக்க வேண்டியிருந்தது. பொருளாதாரம் வளர்ச்சியடையும்போது, அதன் பலனை மக்களுக்கு நாம் வழங்க தயாராகவே உள்ளோம். இப்போது நாம் ஆரம்பித்துள்ள பொருளாதார அபிவிருத்தி செய்றபாடுகளை, இடைநிறுத்தி மீண்டும் பின்நோக்கி செல்லப் போகின்றோமா என்பதை மக்கள் தான் தீர்மானிக்க வேண்டும்” இவ்வாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

எனது ஆட்சியில் அரசியல் தலையீடின்றி அரச சேவைகள் முன்னெடுக்கப்படும்!

image_pdfPRINT

ஜனாதிபதித் தேர்தல் வெற்றியுடன் நாட்டின் அனைத்து துறைகளிலும் அரசியல் தலையீடின்றி சேவைகளை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஐக்கிய மக்கள் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார்.

சஜித் பிரேமதாச தலைமையில் இன்று இடம்பெற்ற ஒற்றுமை விளையாட்டு மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இது குறித்து சஜித் பிரேமதாஸ மேலும் தெரிவித்துள்ளதாவது” விளையாட்டுத்துறையில் உலகளவில் சாதனை படைத்த பலர் நம் நாட்டில் உள்ளனர். ஆனால் அவர்களுக்கான நலத்திட்டங்கள் எதுவும் நாட்டில் நடைமுறைப்படுத்தப்படவில்லை.

21 ஆம் திகதியின் பின்னர் இந்த நாட்டின் விளையாட்டுத்துறையில் பாரிய மாற்றங்கள் ஏற்படுத்தப்படும். விளையாட்டுத்துறைக்கான தேசிய கொள்கைதிட்டம் ஒன்றை உருவாக்குவோம்.

ஆட்சிக்கு வந்து மிகவும் குறுகிய காலத்திற்குள்ளேயே நாம் அதனை நடைமுறைப்படுத்துவோம். பாடசாலை வலய மட்டத்தில் மாகாண மட்டத்திலும் தேசிய சர்வதேச மட்டத்திலும் விளையாட்டுத்துறையில் உள்ள திறமைசாலிக்கு சந்தர்ப்பம் வழங்கப்படும்.

அதுமாத்திரமல்ல தேசிய விளையாட்டு நிதியம் ஒன்று ஸ்தாபிக்கப்படும்” இவ்வாறு சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார்.

இலங்கை துடுப்பாட்ட அணிக்கு எதிராக இலண்டனில் தமிழீழ சுயநிர்ணய அமைப்பு ஆர்ப்பாட்டம்

image_pdfPRINT

டிலக்‌ஷன் மனோரஜன்

பிரித்தானியாவின் ஓவல் மைதானத்திற்கு முன்பாக இன்று தமிழீழ சுயநிர்ணய அமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்ட இலங்கை துடுப்பாட்ட அணிக்கு எதிரான கண்டன போராட்டம் எழுச்சியுடன் இடம்பெற்றது.

புலம் பெயர்ந்து தமிழர்கள் வாழும் வெளிநாடுகளிற்கு கிரிக்கெட் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இலங்கை கிரிக்கெட் தேசிய அணி தொடர்ச்சியான போட்டிகளில் விளையாடி வருகின்றது. இதன் மூலம் சர்வதேச நாடுகளுடன் நெருங்கிய உறவை கையாழும் தந்திரத்தை மேற்கொள்ளும் சிறிலங்கா அரசு தமிழர்களுக்கு எதிரான இனப்படுகொலையை மூடிமறைத்து வருகின்றது.

இந்நிலையிலேயே கிரிக்கெட் விளையாட்டை வைத்து இலங்கை தமிழர்களுக்கு மேலான இனப்படுகொலையை மறைக்க நினைக்கின்ற இலங்கை பௌத்த பேரினவாத அரசுக்கும் மேற்கத்திய நாடுகளுக்கு எதிராகவும் கண்டனத்தை தெரிவிக்கும் வகையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தமிழ் மக்கள் இறந்தவர்களுக்கு அஞ்சலி செய்யகூடாது ஆனால் வெற்றி கொண்டாட்டத்தில் பங்கெடுக்க வேண்டும் மற்றும் இறந்த இராணுவத்திற்கு அஞ்சலி செலுத்தவேண்டும் என்று துன்புறுத்தப்படுகிறார்கள். தமிழர்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்றால் நாம் இலங்கை அணியை புறக்கணித்து, இலங்கைக்கு எதிராக போராடியாக வேண்டும். இலங்கை அணியை புறக்கணித்து ஈழ தமிழர்களுக்கு எதிராக நடக்கும் இனப்படுகொலையை உலகுக்கு எடுத்து சொல்லும் முகமாகவே கண்டன போராட்டம் ஆனது இன்று இடம்பெற்றது.

இக் கண்டன போராட்டத்தின் போது இலங்கை அரசுக்கு எதிரான கோஷங்களும், இலங்கை கிரிக்கெட் அணிக்கு எதிரான கோஷங்களும் பலமாக எழுப்பப்பட்டது. கண்டனப் போராட்டத்தில் புலம்பெயர்ந்து வாழும் ஈழத் தமிழர்கள் பங்கேற்றனர்.

’நமக்காக நாம்’ பிரச்சார பயணம்- யாழில் ஆரம்பம்!

image_pdfPRINT

பொலிகண்டி முதல் பொத்துவில் வரை முன்னெடுக்கப்பட்டு வரும் ‘நமக்காக நாம்’ பிரச்சார பயணத்திற்கு வலுச் சேர்க்கும் வகையில் இன்று யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலைய பகுதியில் தமிழ்த் தேசிய பொதுக்கட்டமைப்பினர் பரப்புரை நடவடிக்கையினை முன்னெடுத்திருந்தனர்

இந்த நடவடிக்கையில் தமிழ்த் தேசிய பொதுக்கட்டமைப்பில் அங்கம் வகிக்கும் தமிழ்த் தேசிய கட்சிகளை பிரதிநிதித்துவப்படுத்தும் நாடாளுமன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர்கள், மாகாணசபை முன்னாள் உறுப்பினர்கள், உள்ளுராட்சி சபைகளின் முன்னாள் உறுப்பினர்கள் உள்ளிட்ட அரசியல் பிரமுகர்கள் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது

தனக்குத்தானே வேட்டு வைத்த தமிழரசுக்கட்சி – சிறிகாந்தா !

image_pdfPRINT

ஒற்றையாட்சியை முன் வைத்துள்ள சஜித் பிரேமதாசவிற்கு வாக்களிக்குமாறு தமிழரசுக் கட்சி கோரியுள்ளமையானது தனது அத்திவாரத்திற்கே வேட்டு வைக்கும் செயல் என தமிழ் தேசிய கட்சியின் தலைவர் என். சிறிகாந்தா தெரிவித்துள்ளார்.

யாழ் . ஊடக அமையத்தில் நடைபெற்ற ஊடக சந்திப்பின் போதே இதனைத் தெரிவித்தார். இவ்விடயம் தொடா்பாக அவா் மேலும் தொிவிக்கையில்,

தமிழினத்தின் சுதந்திரத்தையும், சுயநிர்ணய உரிமை வேண்டும் என்ற கோரிக்கையுடன் தமிழ் தேசிய கட்டமைப்பாக நாம் நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் அரியநேந்திரனை களமிறக்கியுள்ளோம்.

தென்னிலங்கையின் பிரதான வேட்பாளர்களான ரணில் விக்கிரமசிங்க, சஜித் பிரேமதாச, அநுர குமார திஸநாயக்க மற்றும் நாமல் ராஜபக்சே ஆகிய நால்வரும் ஒற்றையாட்சி சித்தாந்தத்தை ஏற்றுக்கொண்டு அதன் வழி நடப்பவர்கள்.

சஜித் பிரேமதாச ஒற்றையாட்சிக்கு வெளியே சென்று தீர்வு காணுவதாக மூச்சு கூட விடவில்லை. 13ஆம் திருத்தத்தை பற்றி பேசி இருக்கிறார். புதிய அரசியல் யாப்பை ஏற்படுத்தும் வரையில் 13ஆம் திருத்தத்தை நடைமுறைப்படுத்த உள்ளதாக கூறியுள்ளார்.

ஆனால் இணைப்பாட்சி பற்றியோ ஒற்றையாட்சி பற்றியோ எங்கேயும் குறிப்பிடவில்லை.

இந்த நிலையில் தான் தமிழரசு கட்சியினர் அவசரமாகக் கூடி சஜித் பிரேமதாசாவிற்கு வாக்களிப்போம் என கூறியுள்ளனர்.

இதன் மூலம் தமிழரசு கட்சி தமிழ் மக்களுக்கு எதனை சொல்லுகிறார்கள் என்பதனை தான் நாங்கள் கேட்கிறோம்.

இதுவரை காலமும் ஒற்றையாட்சிக்குள் இருந்து எம்மை விடுவிக்க வேண்டும் என நாம் தொடர்ந்து அரசியல் ரீதியாக போராடி வரும் நிலையில், ஒற்றையாட்சியின் வழி நடக்கும் சஜித் பிரேமதசாவை ஆதரித்துள்ளார்கள். இவர்களின் நோக்கம் என்ன ?

ஆகவே மக்கள் தமிழரசு கட்சியின் நோக்கத்தை தெளிவாக புரிந்து கொள்ள வேண்டும்” என என். சிறிகாந்தா மேலும் தெரிவித்தார்.

error: Content is protected !!