SHARE

தாம் யார் மீதும் சேறுபூச வில்லை எனவும், இந்த நாட்டை நல்ல நிலைக்குக் கொண்டுவர தாம் பல சிரமங்களை எதிர்கொண்டதாகவும், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

புத்தளத்தில் இடம்பெற்ற  தேர்தல் பரப்புரைக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும்  தெரிவித்துள்ளதாவது” நான் இளைஞர்கள் சிலரை சந்தித்தேன். அவர்களில் எனக்கு ஆதரவாளர்களும் தேசிய மக்கள் சக்திக்கு ஆதரவானவர்களும் இருந்தார்கள். அந்த இளைஞர்களிடம் எதற்காக திசைக்காட்டிக்கு ஆதரவு வழங்குகின்றீர்கள் என்று கேட்டேன். அதற்கு அவர்கள் ஒரு முறை சந்தர்ப்பம் வழங்கிப் பார்ப்போம் என்று விடையளித்தார்கள்.

நான் மீண்டும் கேட்டேன், நீங்கள் எதிர்க்காலத்திடமும் இவ்வாறு சந்தர்ப்பம் கேட்பீர்களா என்று கேட்டேன். இதற்கான விடையை தான் மக்கள் வழங்க வேண்டும். இது சந்தர்ப்பம் வழங்கிப் பார்க்கும் தருணம் கிடையாது. ஐ.எம்.எப். அமைப்பின் ஒத்துழைப்பினால்தான் நாம் இன்று பயணித்துக் கொண்டிருக்கிறோம்.

இந்த ஒத்துழைப்பு இல்லாவிட்டால், டொலருக்கு நிகரான ரூபாயின் பெறுமதி 500 ரூபாயாக உயர்வடைந்திருக்கும். 2022 இல், ரூபாயின் பெறுமதியை ஸ்தீரப்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு அழைப்பு விடுக்கப்பட்டபோது, யாரும் முன்வரவில்லை.

எரிவாயு, எரிபொருள், மருந்துகளுக்கு அன்று வரிசை ஏற்பட்டபோது, அதனை நிவர்த்தி செய்ய யாரும் முன்வரவில்லை. இப்படியான நபர்களுக்கு ஏன் மக்கள் வாக்களிக்க வேண்டும்? நாம் யார் மீதும் சேறுபூச வில்லை. இந்த நாட்டை இந்த நிலைமைக்கு நாம் மிகவும் சிரமப்பட்டுதான் கொண்டுவந்துள்ளோம்.

இதற்காக சில கடினமான முடிவுகளை எடுக்க வேண்டியிருந்தது. பொருளாதாரம் வளர்ச்சியடையும்போது, அதன் பலனை மக்களுக்கு நாம் வழங்க தயாராகவே உள்ளோம். இப்போது நாம் ஆரம்பித்துள்ள பொருளாதார அபிவிருத்தி செய்றபாடுகளை, இடைநிறுத்தி மீண்டும் பின்நோக்கி செல்லப் போகின்றோமா என்பதை மக்கள் தான் தீர்மானிக்க வேண்டும்” இவ்வாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

Print Friendly, PDF & Email