டிலக்ஷன் மனோரஜன்
பிரித்தானியாவின் ஓவல் மைதானத்திற்கு முன்பாக இன்று தமிழீழ சுயநிர்ணய அமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்ட இலங்கை துடுப்பாட்ட அணிக்கு எதிரான கண்டன போராட்டம் எழுச்சியுடன் இடம்பெற்றது.
புலம் பெயர்ந்து தமிழர்கள் வாழும் வெளிநாடுகளிற்கு கிரிக்கெட் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இலங்கை கிரிக்கெட் தேசிய அணி தொடர்ச்சியான போட்டிகளில் விளையாடி வருகின்றது. இதன் மூலம் சர்வதேச நாடுகளுடன் நெருங்கிய உறவை கையாழும் தந்திரத்தை மேற்கொள்ளும் சிறிலங்கா அரசு தமிழர்களுக்கு எதிரான இனப்படுகொலையை மூடிமறைத்து வருகின்றது.
இந்நிலையிலேயே கிரிக்கெட் விளையாட்டை வைத்து இலங்கை தமிழர்களுக்கு மேலான இனப்படுகொலையை மறைக்க நினைக்கின்ற இலங்கை பௌத்த பேரினவாத அரசுக்கும் மேற்கத்திய நாடுகளுக்கு எதிராகவும் கண்டனத்தை தெரிவிக்கும் வகையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தமிழ் மக்கள் இறந்தவர்களுக்கு அஞ்சலி செய்யகூடாது ஆனால் வெற்றி கொண்டாட்டத்தில் பங்கெடுக்க வேண்டும் மற்றும் இறந்த இராணுவத்திற்கு அஞ்சலி செலுத்தவேண்டும் என்று துன்புறுத்தப்படுகிறார்கள். தமிழர்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்றால் நாம் இலங்கை அணியை புறக்கணித்து, இலங்கைக்கு எதிராக போராடியாக வேண்டும். இலங்கை அணியை புறக்கணித்து ஈழ தமிழர்களுக்கு எதிராக நடக்கும் இனப்படுகொலையை உலகுக்கு எடுத்து சொல்லும் முகமாகவே கண்டன போராட்டம் ஆனது இன்று இடம்பெற்றது.
இக் கண்டன போராட்டத்தின் போது இலங்கை அரசுக்கு எதிரான கோஷங்களும், இலங்கை கிரிக்கெட் அணிக்கு எதிரான கோஷங்களும் பலமாக எழுப்பப்பட்டது. கண்டனப் போராட்டத்தில் புலம்பெயர்ந்து வாழும் ஈழத் தமிழர்கள் பங்கேற்றனர்.