Home Blog Page 291

இந்துமத விவகார பிரதி அமைச்சராக இஸ்லாமியர்; நல்லூரில் எதிர்ப்புப் போராட்டம்

image_pdfPRINT

இந்துமத விவகார பிரதி அமைச்சராக
இந்து அல்லாத ஒருவர் நியமிக்கப்பட்டமையை எதிர்த்து இன்று பிற்பகல் 4.00 மணிக்கு நல்லூர்க் கந்தசுவாமி ஆலயத்திற்கு முன்பாக கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது

அரசாங்கத்தினால் இந்து மக்கள் அவமதிக்கப்பட்மையைக் கண்டித்து அகில இலங்கை சைவ மகா சபையினால் இந்தப் போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டது.

இந்தப் போராட்டத்தில் பொது அமைப்புக்கள், இந்து சமய பெரியவர்கள், பிரதேச சபை உறுப்பினர்கள், பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

 

புங்குடுதீவு கடலில் கரை ஒதுங்கியுள்ள இரு சடலங்கள்

image_pdfPRINT

தீவகம் புங்குடுதீவு கடற்கரைப் பகுதியில் இரு சடலங்கள் கரை ஒதுங்கியுள்ளன என ஊர்காவற்றுறைப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சடலங்கள் கரை ஒதுங்கியுள்ளன எனப் பொதுமக்களால் பொலிஸாருக்குத் தகவல் வழங்கப்பட்டமையைத் தொடர்ந்து, சம்பவ இடத்துக்கு விரைந்த பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

கடந்த வாரம் மன்னார் கடலில் மீன்பிடிக்கச் சென்ற இருவர் காணாமல் போயிருந்தனர். அத்துடன் அவர்கள் தொழிலுக்குச் சென்ற படகு புங்குடுதீவில் கரை ஒதுங்கியிருந்தது.

இந்த நிலையில் இரு சடலங்கள் கரை ஒதுங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்துக்களை பலவீனப்படுத்தும் செயற்பாடு – அமைச்சர் மனோகணேசன்

image_pdfPRINT

தமிழ் இந்துக்களை பலவீனப்படுத்த நினைக்கிறீர்களா? குளறுபடிக்கு ஜனாதிபதியும், பிரதமரும் பொறுப்பேற்க வேண்டும். என அமைச்சர் மனோகனேசன் தெரிவித்துள்ளார்.

வன்னி மாவட்ட எம்பி நண்பர் மஸ்தான், மீள்குடியேற்ற, புனர்வாழ்வு பிரதி அமைச்சராக இருக்கட்டும். அதில் பிரச்சினை இல்லை. ஆனால், மீள்குடியேற்ற, புனர்வாழ்வு அமைச்சில் இருந்து இந்து கலாச்சார அமைச்சை பிரித்தெடுத்து, அதை வேறு ஒரு பொருத்தமான அமைச்சுடன் சேர்த்து விடுங்கள்.

மீன்வள துறை அமைச்சர், மீனவராகவும், கல்வி அமைச்சர், கல்வி பேராசிரியராகவும் இருக்க வேண்டும் என்பதில்லை. ஆனால், இதே விதி மத விவகார அமைச்சுகளுக்கு பொருந்தாது.

இஸ்லாமிய மத விவகாரம், அமைச்சர் சுவாமிநாதனிடம் ஒப்படைக்கப்பட்டிருந்தாலும், நான் அதை எதிர்த்து இருப்பேன்.

மதம் என்பது ஒரு உணர்வுபூர்வமான விடயம். இதில் அரசியல் விளையாட்டு கூடாது. அவ்வந்த மத விவகாரங்கள் அவ்வந்த மதத்தை சேர்ந்தவர்களிடம் இருப்பதே பொருத்தமானது.

குறிப்பிட்ட அமைச்சர் அல்லது பிரதி அமைச்சர், அந்த அமைச்சு கையாளும் மத ஸ்தலங்களுக்குள் செல்ல வேண்டும். மத தலைவர்களுடன் உரையாட வேண்டும். மத உணர்வுகளை, முழுமையாக புரிந்துக்கொள்ள வேண்டும்.

ஆகவே இன்று நிகழ்ந்திப்பது ஒரு குளறுபடி. எங்களை அவமானப்படுத்திக்கொள்ள இந்த அரசை நாம் உருவாக்க பங்களிக்கவில்லை.

இந்து கலாச்சார அமைச்சு இதுவரை, நண்பர் டி. எம். சுவாமிநாதனிடம் இருந்தது போதும். அதை பிரித்து எடுத்து வேறு ஒரு பொருத்தமான் அமைச்சுடன் சேர்த்து விடுங்கள்.

நண்பர் மஸ்தான், மீள்குடியேற்ற, புனர்வாழ்வு பிரதி அமைச்சராக இருக்கட்டும்.

இல்லாவிட்டால், இதை தமிழ் இந்துக்களை பலவீனப்படுத்தும் செயற்பாடாகவே நாம் கருதுவோம் என மேலும் தெரிவித்துள்ளார்.

மைத்திரிக்கு சித்த பிரமை ! -எம்.கே.சிவாஜிலிங்கம்

image_pdfPRINT

யார் தன்னை ஆதரித்து நியமித்தார்கள் என்பதை மறந்து சித்தப்பிரமை பிடித்தவர்கள் போன்று ஐனாதிபதி மைத்திரிபால சிறிசேன செயற்படுவதாக வடக மாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்தார்.

வடக்கு மாகாண சபையின் இன்றைய அமர்வு கைதடியிலுள்ள பேரவை சபா மண்டபத்தில் சபைத் தலைவர் சீ.வீ.கே.சிவஞானம் தலைமையில் நடைபெற்ற போது உரையாற்றுகையிலையே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்..

வடக்கு மாகாணத்தில் தமிழ் மக்களின் காணிகள் ஆக்கிரமிக்கப்பட்டு வளங்கள் சுரண்டப்பட்டு வருகின்றது. அதே நேரம் இங்கு வாழாத தென்னிலங்கை மக்கள் கொண்டு வந்து குடியேற்றப்பட்டு வருகின்றனர். அதற்கமைய செயலணிகளையும் உருவாக்கி நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

இதனால் தமிழ் மக்கள் பல வழிகளிலும் பாதிப்பை எதிர்நோக்கி வருகின்றனர். ஆகவே இங்கு தொடர்ந்தும் சிங்கள முஸ்லிம் மக்களை குடியேற்றும் நடவடிக்கைகள் தான் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட இருக்கின்றதென்ற கேள்வி எழுகின்றது.

அவ்வாறான செயற்பாட்டை அவர்கள் முன்னெடுத்தால் நாங்கள் என்ன செய்ய வேண்டுமென்பதை தீர்மானிக்க வேண்டி வரும்.

தமிழ் மக்கள் ஆதரித்து வாக்களித்து கொண்டு வந்த ஐனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான அரசே தமிழ் மக்களுக்கு எதிராகச் செயற்படுகின்றதை ஏற்றுக் கொள்ள முடியாது.

தமிழ் மக்கள் நியமித்த ஐனாதிபதியே அதனை மறந்து சித்தப்பிரமை பிடித்தவர்கள் போன்று செயற்படுகின்றார்.

இவ்வாறான நிலையில் தொடர்ந்தும் தமிழர் தாயகப் பகுதிகளில் தமிழர்களுக்கு எதிரான திட்டமிட்ட செயற்பாடுகள் முன்னெடுப்பதானது போராட்டப் பாதைக்கே எமது மக்களைத் தள்ளுவதாக அமையுமென சிவாஜிலிங்கம் மேலும் தெரிவித்தார்.

கேகேஎஸ் கடலில் தொழிலுக்குச் சென்ற மீனவர்கள் இருவரைக் காணவில்லை

image_pdfPRINT

காங்கேசன்துறை கடற்பரப்பில் படகில் தொழிலுக்குச் சென்ற மீனவர்கள் இருவரை நேற்று திங்கட்கிழமை (11) மாலை தொடக்கம் காணவில்லை என உறவினர்களால் பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

மாவிட்டபுரத்தைச் சேர்ந்த சின்னமணி இரத்தினசிங்கம் (வயது- 65), டேவிட் ரேகன் (வயது – 22) ஆகிய இருவரையுமே காணவில்லை என முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

காங்கேசன்துறை கடற்பரப்பில் நேற்று மாலை 4 மணிக்கு தொழிலுக்குச் சென்றனர். இன்று செவ்வாய்க்கிழமை மாலைவரை அவர்கள் கரை திரும்பவில்லை என
முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

“தற்போது காற்றின் வேகம் அதிகரித்துள்ளதால் கடலில் அவர்கள் பயணித்த படகு அடித்துச் செல்லப்பட்டிருக்கலாம். கடற்படையினரின் உதவியுடன் மீனவர்கள் இருவரையும் தேடும் பணி ஆரம்பிக்கப்பட்டுள்ளன” என்று பொலிஸார் தெரிவித்தனர்.

வடகிழக்கு மீள்குடியேற்ற செயலணியில் பங்காளராக்க கோரி வடக்கு மாகாண சபையில் தீர்மானம் நிறைவேற்றம்

image_pdfPRINT

வடக்கு – கிழக்கு மாகாணங்களுக்கான மீள்குடியேற்ற செயலணியில் தமிழ் தேசிய கூட்டமைப்பையும், முஸ்லிம் காங்கிரஸையும் இணைத்துக் கொள்வதுடன், வடக்கு மாகாண சபையையும் பங்காளராக்கவேண்டும்” என்று கோரி வடக்கு மாகாண சபையில் இன்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

வடமாகாணசபையின் 124ஆவது சபை அமர்வு கைதடியிலுள்ள பேரவைச் செயலகத்தில் இன்று நடைபெற்றது.

இதன்போதே மேற்படி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

சபையில் சிறப்பு கவனயீர்ப்பு ஒன்றை கொண்டு வந்த மாகாண சபை உறுப்பினர் அயூப் அஸ்மின் உரையாற்றுகையில்,

“சிங்கள மற்றும் முஸ்லிம் மக்களை மீள்குடியமர்த்துவதற்கான செயலணி ஒன்று உருவாக்கப்பட்டது. அந்த செயலணியில் தமிழ் மக்களும் உள்ளீர்க்கப்பட்டு அவர்களும் மீள்குடியமர்த்தப்படவேண்டும் என நாங்கள் கேட்டுவந்தோம்.

அதனை பேச்சில் அங்கீகரித்த செயலணி, பின்னர் தனியே சிங்கள, முஸ்லிம் மக்களை மட்டும் மீள்குடியமர்த்தும் பணிகளைச் செய்து வருகின்றது.

இந்த நிலையை மாற்றியமைக்க தமிழ் தேசிய கூட்டமைப்பையும், முஸ்லிம் காங்கிரஸ் கட்சியையும்
செயலணியில் இணைத்துக் கொள்ளவேண்டும்.

அதன் ஊடாகவே தமிழ் மக்களையும் மீள்குடியமர்த்துவதற்கான செயலணியாக இந்த செயலணியை மாற்ற இயலும்” என்று கூறினார்.

தொடர்ந்து கருத்து தெரிவித்த மாகாண சபை உறுப்பினர் ப.சத்தியலிங்கம்,

“அரசியல் கட்சிகளை உள்ளீர்ப்பதனால் மேற்படி செயலணி முன்னர் செய்த தவறுகள் எல்லாவற்றையும் சரி என நாங்கள் ஒத்துக் கொள்வதாக அமையும்.

ஆகவே வடக்கு மாகாண சபையை அதற்குள் உள்ளீர்க்கவேண்டும் என தீர்மானம் எடுங்கள்” என்று கூறினார்.

இதற்கமைய மேற்படி செயலணியில் தமிழ்தேசிய கூட்டமைப்பையும், முஸ்லிம் காங்கிரஸையும், வடக்கு மாகாண சபையையும் உள்ளீர்க்கவேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இந்தத் தீர்மானம் பொறுப்பு வாய்ந்தவர்களுக்கு அனுப்பிவைக்கப்படும் என்று கூறப்பட்டது.

கனிய மணல் அகழ்வை தடுத்து நிறுத்தக்கோரி வடக்கு மாகாணசபையில் பிரேரணை

image_pdfPRINT

முல்லைத்தீவு மாவட்டத்தின் எல்லை கிராமங்களில் பெருமளவு கனிய மணலை அகழ்வதற்கான முயற்சிகள் எடுக்கப்படும் நிலையில், அதனை தடுத்து நிறுத்துமாறு கோரி வடக்கு மாகாண சபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இந்த தீர்மானம் ஜனாதிபதி மற்றும் பிரதமருக்கு அனுப்பிவைக்கப்படும் என அவைத் தலைவரால் அறிவிக்கப்பட்டது.

வடக்கு மாகாண சபையின் 124ஆவது அமர்வு இன்றைய தினம் நடைபெற்றிருந்தது. இதன்போதே இந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இந்த பிரேரணையை சபைக்கு முன்வைத்து உரையாற்றிய மாகாணசபை உறுப்பினர் து.ரவிகரன்,

“முல்லைத்தீவு மாவட்டத்தினுடைய எல்லை கிராமங்களிலிருந்து 1984ஆம் ஆண்டு மக்கள் வெளியேற்றப்பட்டனர். பின்னர் மக்கள் மீள்குடியமரும் போது அவர்களுடைய காணிகள் பறிபோ யிருந்தன.

கொக்கிளாய் கிராமத்தில் சுமார் 44 ஏக்கர் நிலத்தை அபகரித்து இல்மனைட் மணல் அகழ்வுக்கான பகுதியாக அறிவிக்கப்பட்டிருந்தது. இதனை எதிர்த்து கிராம மக்கள் இராணுவ அழுத்தங்களுக்கும் மத்தியில் போராட்டங்களை நடாத்தியிருந்தார்கள்.

அப்போது நிறுத்தப்பட்ட கனியமணல் அகழ்வு நடவடிக்கைகள் 9 வருடங்கள் கழித்து மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளன.

இதற்காக கடந்த முதலாம் திகதி முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தில் மாவட்ட அரச அதிகாரிகள், இராணுவத்தினர் மற்றும் இலங்கை கனிய மணல் கூட்டுத்தாபன அதிகாரிகள் கூட்டம் ஒன்றை நடாத்தியிருக்கின்றார்கள்.

இந்த கூட்டத்துக்கு மாவட்டத்தின் மக்கள் பிரதிநிதிகள் எவரும் அழைக்கப்படவில்லை. இது தொடர்பாக மாவட்ட செயலருடன் தொடர்பு கொண்டு கேட்டபோது, “அந்த கூட்டத்தை தாம் ஒழுங்கமைக் கவில்லை. இடத்தை மட்டுமே கொடுத்தேன்” என்று கூறினார்.

மக்கள் பிரதிநிதிகள் அழைக்கப்படாமை குறித்து தான் கூட்டத்தில் கேட்டதாகவும் அவர்களுக்கு பின்னர் கூட்டம் ஒன்று நடாத்தப்படும் என கூறப்பட்டதாகவும் மாவட்ட செயலர் தெரிவித்தார்.

இந்த கூட்டத்தில் கொக்கிளாய் தொடக்கம் நாயாறு வரையான மிக நீண்ட பகுதியில் சுமார் 1 மீற்றர் ஆழத்திற்கு கனிய மணல் அகழப்படவுள்ளதாக அறியக்கிடைக் கிறது.

இதனால் மக்கள் குடியிருப்பு பகுதிகளுக்குள் இலகுவாக கடல்நீரானது உள்புகும் ஆபத்து உள்ளது. சாதாரணமாகவே கடல் பெருக்கெடுக்கும் காலங்களில் மேற்படி எல்லை கிராமங்களில் கடல் நீர் உள்புகுவது வழமை.

இவ்வாறான நிலையில் கரையோரங்களில் மணலும் அகழப்பட்டால் பாதிப்பு மேலும் அதிகமாகும் வாய்ப்புக்கள் உள்ளன.

எனவே இந்த கனிய வள கொள்ளை தொடர்பாக வடமாகாணசபை உரிய நடவடிக்கை எடுத்தாகவேண்டும் – என்றார்.

கனிய மணல் அகழ்வு உடனடியாக நிறுத்தப்படவேண்டும் என வலியுறுத்தி ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோரின் கவனத்துக்கு கொண்டு செல்வது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இந்துக்கள் நாளை நல்லூரில் போராட்டம்

image_pdfPRINT

இந்துக்கள் நாளை நல்லூரில் போராட்டம்

இந்துமத விவகார பிரதி அமைச்சராக இந்து அல்லாத ஒருவர் நியமிக்கப்பட்டமையை எதிர்த்து நாளை (13) பிற்பகல் 4.00 மணிக்கு நல்லூர்க் கந்தசுவாமி ஆலயத்திற்கு முன்பாக போராட்டம் ஒன்று இடம்பெறவுள்ளது.

அரசாங்கத்தினால் இந்து மக்கள் அவமதிக்கப்பட்மையைக் கண்டித்து அகில இலங்கை சைவ மகா சபையினால் இந்தப் போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இந்தப் போராட்டத்தில் சைவ சமயிகள் அணிதிரண்டு வருகைதந்து தமது எதிர்ப்பை பதிவுசெய்யுமாறு சைவ மகா சபை கோரிக்கை விடுத்துள்ளது.

வடமராட்சி கிழக்கு மீனவர் பிரச்சினை பற்றி இரு தரப்புடனும் பேச்சு நடத்த ஜனாதிபதி பணிப்பு

image_pdfPRINT

வடமராட்சி கிழக்கு உள்பட்ட வடக்கு மாகாணத்தில் தென்னிலங்கை மீனவர்கள் அத்துமீறும் குற்றச்சாட்டுத் தொடர்பில் அனைத்து மீனவர் தரப்பையும் அழைத்து பேச்சு நடத்துமாறு மீன்பிடித் துறை அமைச்சருக்கு ஜனாதிபதி பணித்துள்ளார்.

ஜனாதிபதி தலைமையில் தற்போது இடம்பெற்று வரும் அமைச்சரவை மாநாட்டில் வைத்தே இந்தப் பணிப்புரை விடுக்கப்பட்டது என அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

“வடக்கின் கடல் வளத்தை, சட்ட விரோத மீன்பிடி உபகரணங்களை கொண்டு, பாதுகாப்பு தரப்பின் ஒத்துழைப்புடன், தென்னிலங்கை மீனவர் அபகரிப்பதாக கூறி, வடக்கில் மீனவர் நடத்தும் ஆர்ப்பாட்டங்களை அமைச்சரவையின் கவனத்திற்கு கொண்டு வந்தேன்.

இந்த மீனவர் விவகாரம், வடக்கு-தெற்கு மோதலாக மாறக்கூடியதாக இருப்பதால் நான் இதில் தலையிடுகிறேன் என்று நான் கூறினேன்.

இதையடுத்து ஜனாதிபதி, இது தொடர்பில் மீன்பிடி அமைச்சர் விஜிதமுனி சொய்சாவை உடனடியாக, அனைத்து தரப்பையும் கூட்டி பேசுமாறு பணித்தார்” என்று அமைச்சர் மனோ கணேசன் தனது கீச்சகத்தில் பதிவிட்டுள்ளார்.

இந்துக் கலாசார அமைச்சின் பிரதி அமைச்சராக காதர் மஸ்தான்; சிவசேனை அமைப்பு கடும் கண்டணம்

image_pdfPRINT

நாட்டின் இந்துக் கலாசார அமைச்சின் பிரதி அமைச்சராக காதர் மஸ்தான் ஜனாதிபதியால் நியமிக்கப்பட்டதற்கு சிவசேனை அமைப்பு கடும் கண்டணம் வெளியிட்டுள்ளது.

இந்துக் கலாசார அமைச்சுக்குள் புற்றுநோயக் கருவைப் புகுத்தி அணு அணுவாக இந்துக்களை வதைப்பதைவிட, இந்துக் கலாசார அமைச்சை இழுத்து மூடுங்கள் என சிவசேனை அமைப்பின் தலைவர் மறவன்புலே சச்சிதானந்தம் தெரிவித்துள்ளார்.

அதேவேளை நாட்டில் நடப்பது நல் ஆட்சியா? இந்துக்களை கொல்லும் கொல் ஆட்சியா ? என கேள்வி எழுப்பியுள்ளார்.

இராஜாங்க அமைச்சர்கள் இருவர் மற்றும் பிரதி அமைச்சர்கள் ஜவருக்கான நியமனக் கடிதங்கள் இன்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனாவால் வழங்கப்பட்டது. இதில் காதர் மஸ்தான் மீள்குடியேற்றம் புனர்வாழ்வளிப்பு வடக்கு அபிவிருத்தி மற்றும் இந்து சமய அலுவல்கள் ஆகியவற்றின் பிரதி அமைச்சராக நியமிக்கப்பட்டார்.

இந்நிலையிலேயே இது தொடர்பில் சிவசேனை அமைப்பின் தலைவர் இன்றைய தினம் வெளியிட்ட ஊடக அறிக்கையில் மேற்கண்டவாறு  தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவ்வறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:-

இஸ்லாமியரைத் துணை அமைச்சராக்கிய கொடுமையை இந்துக்களை நசுக்கும் முயற்சியாகவே பார்க்கிறோம். மாண்புமிகு துணை அமைச்சர் நீறணிந்து சந்தனமிட்டுச் சிவராத்திரி விழாவுக்கு வருராவாரா?

ஏனைய சமயத்தவர்களைக் காபீர்கள் (நீசர்கள்) எனக் கற்றவர், உருவ வழிபாட்டையே ஒத்துக்கொள்ளதவர், இந்துக்களை இஸ்லாமுக்கு மத மாற்றுவதையே இலக்காகக் கொண்ட குழு சார்ந்தவர், இந்துக்கள் வழிபடும் மாடுகளைக் கொன்று உண்பவர், இந்து ஒருவர் தன் சட்டைப் பைக்குள்ளேயேனும் இந்துக் கடவுளரின் படத்தை வைத்திருத்தலைக் கொடும் குற்றமாகக் கருதித் தண்டிக்கும் சவூதி அரேபிய நாட்டிற்குப் புனித வழிபாட்டுப் பயணம் மேற்கொள்பவர், மட்டக்களப்புக் கல்லடியில் அம்பாறைக் கல்முனைக்குடியில் இந்துக் கோயில்களின் மேல் இஸ்லாமியப் பள்ளிவாயில்களைக் கட்டியெழுப்பியதை எப்பொழுதும் கண்டிக்காதவர், அத்தகையவர் இந்துக் கலாசார அமைச்சின் மாண்புமிகு துணை அமைச்சர்.

இந்துக் கலாசார அமைச்சுக்குள் புற்றுநோயைக் கருவைப் புகுத்தி அணு அணுவாக இந்துக்களை வதைப்பதைவிட, மாட்சிமை தங்கிய குடியரசுத் தலைவரே, இந்துக் கலாசார அமைச்சை இழுத்து மூடுங்கள். என மேலும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டு உள்ளது.

பாவப்பட்ட பணம் வடமாகாண எதிர்க்கட்சித்தலைவர் வீட்டு வாசலில்

image_pdfPRINT

-ஏற்க மறுத்த வடமாகாணசபை

முள்ளிவாய்க்கால் நினைவேந்தலுக்காக வழங்கிய பணத்தை திருப்பித்தருமாரு கேட்டிருந்த வடமாகாணசபை எதிர்க்கட்சி தலைவர் சி.தவராசா வின் வீட்டு வாசலில் அப்பணத்தினை கிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள் இன்று வைத்தனர்.

குறித்த பணத்தினை வடமாகாண முதலமைச்சர் சீ.வி. விக்னேஸ்வரன் மற்றும் அவைத்தலைவர் சீ.வி.கே. சிவஞானம் ஆகியோர் பெற்றுகொள்ள மறுத்ததினையடுத்து எதிர்க்கட்சிதலைவர் தவராசாவின் வீட்டுக்கே சென்ற மாணவர்கள் சேகரித்த பணத்தை ஒரு மூட்டையில் கட்டி அவரது வீட்டு வாசலில் வைத்தனர்.

இவ்வாண்டு நடைபெற்ற முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுக்கான செலவுகளிற்காக வடமாகாணசபை மாகாணசபை உறுப்பினர்களிடமிருந்து 7,500 ரூபாவினை அறவீடு செய்திருந்தது.

இந்நிலையில் ”முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வினை வடமாகாணசபை செய்யவில்லை. அதனை கறுப்பு உடை அணிந்த சிலரே நடாத்தினார்கள். நாங்கள் எல்லோம் வெளியில் நிற்கவைக்கப்பட்டோம் எமக்குரிய மரியாதை அங்கு இல்லை” என கூறிய எதிர்க்கட்சி தலைவர் சி.தவராசா, தம்மிடம் பெறப்பட்ட பணத்தை திருப்பித் தருமாறு கடந்த மாகாணசபை அமர்வில் கேட்டிருந்தார்.

ஆனாலும் மரண வீட்டில் மேளதாள மாலை வரவேற்பை எதிர்பார்க்கக்கூடாது என கூறிய முதலமைச்சர் விக்னேஸ்வரன் அந்த பணத்தினையும் சேர்த்தே நினைவேந்தல் செய்யப்பட்டது என பதிலளித்திருந்தார். அவைத் தலைவர் சீ.வி.கே.சிவஞானமும் அதனையே கூறியிருந்தார்.

இதனையடுத்து குறித்த செய்தி ஊடகங்களில் வெளியானதினையடுத்து பாவப்பட்ட பணத்தினை திருப்பி கொடுக்க வேண்டும் என முடிவு செய்த கிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள் ஆளுக்கு ஓரு ரூபா எனும் வீதம் அந்தப்பணத்தை சேகரித்து வந்தனர்.

இந்நிலையில் 7 ஆயிரம் பேரிடம் சேகரித்த பணத்தை கிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள் இன்று வடமாகாணசபைக்கு கொண்டு வந்தனர். எனினும் எனினும் அவை தலைவர் சீ.வி.கே. சிவஞானம் அந்த பணத்தை வாங்க மறுத் துவிட்டார்.

இதன் பின்னர் முதலமைச்சர் சீ.வி.விக்னேஷ்வரனிடம் அந்த பணத்தை வழங்க மாணவர்கள் முயன்றபோது அவை தலைவருடன் பேசிவிட்டு மீண்டும் மாணவர்களுடன் பேசிய முதலமைச்சர் மேற்படி விடயம் தொடர்பாக கடந்த அமர்வில் பேசிவிட்டோம் ஆகவே இந்த பணத்தை வாங்கி கொள்ளமாட்டோம்.

ஆகவே நீங்கள் எதிர்கட்சித் தலைவருடன் பேசுங்கள் என பதிலளித்துள்ளார்.

இந்நிலையில் குறித்த பணத்தை பாவப்பட்ட பணம் என்னும் பெயர் எழுத்தப்பட்ட மூட்டையில் கொண்டு வந்த மாணவர்கள் அதனை எதிர்க்கட்சி தலைவர் தவராசாவின் வீட்டு வாசலில் வைத்தனர்.

https://youtu.be/-42nHTbKUrs

குடியேற்றவாசிகளுக்கு பொது மன்னிப்பு வழங்க மறுத்த பிரித்தானிய அரசு!

image_pdfPRINT

– புலம்பெயர் அமைப்புக்களின் செயலின்மையே காரணம்: மனித உரிமை செயற்பாட்டாளர் கீத் குலசேகரம்! 

சட்டவிரோதமாக 10 ஆண்டுகளிற்கு மேல் பிரித்தானியாவில் வசித்துவரும் குடியேற்றவாசிகளுக்கு பொது  மன்னிப்பு வழங்கி அவர்களுக்கு குடியுரிமை வழங்கும் திட்டம் எதுவும் இல்லை என பிரித்தானியா அரசு அறிவித்துள்ளது.

பிரித்தானிய பாராளுமன்று நோக்கிய இணைய கையெழுத்து போராட்டத்தை  செயல்படுத்திய மனித உரிமை செயற்பாட்டாளர் மற்றும் சட்ட ஆலோசகர் கீத் குலசேகரம் அவர்களுக்கு பிரித்தானிய அரசு அளித்த மின்னஞ்சல் வழியான பதிலிலேயே மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

அண்மையில் பிரித்தானியாவில் இடம்பெற்ற “வின்ட்ரஸ்” விவகாரம் இரண்டாம் உலக யுத்தத்தின் போது குடியேறிய ஆபிரிக்க-கரிபியன் இன மக்களின் குடியுரிமைகள் பறிக்கப்படும் நிலையை ஏற்படுத்தியது. எனினும் இது தவறு என்பதை ஏற்றுக்கொண்டு பிரித்தானிய குடிவரவு அமைச்சர் அம்பரூட் பதவிவிலகியிருந்தார்.

பிரித்தானிய முன்னாள் உள்விவகார அமைச்சின் ஒழுங்கின்மை மற்றும் இனவிரோத செயற்பாடுகளே இதற்கு காரணம் என்பதும் அறியப்பட்டது.

இதனையடுத்து 10 ஆண்டுகளுக்கு மேலாக பிரித்தானியாவில் சட்டவிரோதமாக வசித்துவரும் குடியேற்றவாசிகளுக்கு பொதுமன்னிப்பு அடிப்படையில் குடியுரிமை வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை ஒரு மனித உரிமை செயற்பாட்டாளர் முன்வைத்திருந்தார். இதனை பிரித்தானிய பாராளுமன்றுக்கான கையெழுத்து போராட்டமாக இணைய தளம் மூலம் ஆரம்பித்து வைத்தார்.


இலங்கைத் தமிழர்கள் பலர் அரசியல் தஞ்சம் நிராகரிக்கப்பட்ட நிலையில் பல ஆண்டுகளாக தவித்து வருவதால் அவர்களுக்கு இது வரப்பிரசாதமாக அமையும் என்ற அடிப்படையில் கீத் குலசேகரம் அவர்கள் இந்த போராட்டத்துக்கு முழு ஆதரவு தரும்படி பொது அமைப்புக்கள் மற்றும் அனைவரையும் கேட்டிருந்தார்.

ஜரோப்பிய ஒன்றியத்தினை விட்டு பிரித்தனியா வெளியேற வாக்களித்துள்ள நிலையில் தேசிய வளர்ச்சிக்கு பங்களிக்க அனைத்துக் கரங்களும் தேவை. எனவே, ஏற்கனவே குடியுரிமை பெறாது சட்டவிரோதமாக 10 ஆண்டுகள் அல்லது அதற்கு மேல் நாட்டில் தங்கியிருப்போருக்கு பொது மன்னிப்பு வழங்கப்படவேண்டும். அவ்வாறு அவர்களுக்கு குடியுரிமை வழங்கப்பட்டால் நாட்டில் வளர்ச்சியில் ஒரு முக்கிய பங்கினை கொள்வார்கள். அதுமட்டுமல்லாது இதனால் வருமான வரி மற்றும் காப்புறுதியில் வருடத்திற்கு மேலதிகமாக ஒரு மில்லியன் ஸ்ரேலிங் பவுண்களை பெற்றுக்கொள்ளலாம்.

இவ்வாறு பல காரணங்கள் அடிப்படையில் மேற்படி கோரிக்கை முன்வைக்கப்பட்டு பொதுமன்னிப்பு கோரி ஒரு இலட்சம் கையொப்பம் இணையவழியாக பெறப்பட்டு வருகின்றது. இதில் இங்கிலாந்து குடிமக்கள் அல்லது இங்கிலாந்து குடியுரிமை பெற்றவர்கள் மாத்திரமே கையொப்பமிடமுடியும்.

எனினும் இதுவரையில் 36,785  கையொப்பங்கள் மட்டுமே இடப்பட்டுள்ளன.

இந்நிலையில் மின்னஞ்சல் வாயிலாக பதிலளித்துள்ள இற்கிலாந்து அரசு மற்றும் பாராளுமன்றம்; பொதுமன்னிப்பளிக்கும் திட்டம் எதுவும் இல்லை என குறிப்பிட்டுள்ளது.

அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

“10 ஆண்டுகளுக்கு மேலாக சட்டவிரோதமாக தங்கியுள்ளவர்களுக்கு பொதுமன்னிப்பு வழங்கி அவர்களுக்கு சட்டபூர்வ குடியுரிமை வழங்கும் திட்டம் எதுவும் இல்லை. எமது குடிவரவுக் கொள்கைகள் சட்டபூர்வமான குடியெற்றக்காரர்களுக்கு நியாயமான நியமங்களை அடிப்படையாகக் கொண்டவை”.

“இங்கிலாந்தில் சட்டபூர்வமாக குடியேறியுள்ளவர்களையும் சட்டவிரோதமாக குடியேறியவர்களையும் நாம் வேறுபடுத்திப்பார்ப்பது அவசியம். சட்டவிரோதமாக இங்கு தங்கியிருப்பவர்கள் குடியுரிமை பெற விரும்புவது சரியான அணுகுமுறை என அரசு நம்பவில்லை. அவ்வாறு அவர்களிற்கு பொதுமன்னிப்பு வழங்கி குடியுரிமை வழங்கினால் அது சட்டவிரோத குடியேற்றத்தை மேலும் ஊக்கிவிப்பதாக அமையும். தவிர, தனிநபரையோ அல்லது குடும்பத்தையோ சட்டவிரோதமாக நாட்டிற்குள் கொண்டுவரும் கடத்தல்காரர்களிடம் கையளிக்க ஊக்குவிப்பாக கூட அமையும்”.

“அதேவேளை, குடும்பம் தனிப்பட்ட வாழ்க்கை அல்லது தனிமனித உரிமை அடிப்படையில் தங்குவதற்கான உரிமையை பெறுவதற்கு வழிகள் உள்ளன. அவர்கள் குடியுரிமை  விதிகளின் கீழ் விண்ணப்பித்து வழக்குகள் அடிப்படையில் பெற்றுக்கொள்ளலாம்.

அதே நேரத்திரத்தில் பல ஆண்டுகளுக்கு முன்னரே இங்கு பலர் குடியேறியிருப்பதை நாம் அறிவோம். அவர்களிடம் குடியேற்ற நிலைமையை உறுதிப்படுத்தும் ஆவணங்கள் இல்லை. இதனால் அவர்கள் தமது வேலைக்கான உரிமையை நிரூபிப்பதற்கும் சலுகைகளை பெறுவதிலும் சிரமங்களை எதிர்கொண்டார்கள்.  இந்நிலையில் அவர்கள் தமது ஆவனங்களைப் பெற உதவுவதற்கு அரசு உறுதிப்பாட்டை கொண்டுள்ளது” எனவும் அதில் மேலும் தெரிவிக்கப்பட்டள்ளது.

இந்நிலையில், இது தொடர்பாக கருத்து தெரிவித்த கீத் குலசேகரம் அவர்கள், இது ஒரு தற்காலிக பின்னடைவே தவிர தோல்வி அல்ல என்றும் ஒரு இலட்சம் கையொப்பங்கள் பெறப்பட்டால் குறித்த விடயம் தொடர்பில் இங்கிலாந்து பாராளுமன்றத்தில் விவாதிக்கப்பட்டு தீர்மானம் எடுக்கப்படும் எனவும் தெரிவித்தார்.

மேலும் இந்த முயற்சியை நாம் கைவிடாமல் தொடரவேண்டும் என கேட்டுக்கொண்டார். அகதிகள் நலனை முன்னெடுப்பதாக கூறிக்கொள்ளும் பல அமைப்புக்கள் இவ்வாறான முயற்சிகளை முன்னெடுப்பதை விட்டு தங்களை வாழவைக்கும் முயற்சிகளிலேயே முக்கியத்துவம் காட்டிவருகிறார்கள். அது மட்டுமல்லாது சட்டத்தரணிகள் மீது வீண் பழி சுமத்திவருவதுடன் அகதிகளுக்கு மேலும் பல இடர்களை ஏற்படுத்தி வருகிறார்கள்.

அவர்கள் உண்மையில் அகதிகள் மீது அக்கறை கொண்டவர்களாயின் இவ்வாறான முயற்சிகளை அவர்களே முன்னெடுத்து ஒரு இலட்சம் வாக்குகளை மிக இலகுவாக பெற்றுத்தர வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

இந்த முயற்சியை முன்னைய அரசாங்கங்கள் மனிதவுரிமை அடிப்படையில் Legacy என்ற திட்டங்களை அறிமுகம் செய்து பலருக்கு குடியுரிமை வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது. அதுபோல இந்த அரசும் பொது மன்னிப்பு வழங்கி நிரத்த வதிவுரிமை வழங்க முடியும்.

குறித்த இணையவாயிலான கையொப்பம் எதிர்வரும் நவம்பர் மாதம் 8 ஆம் திகதி முடிவுக்கு வருகின்றது. இதற்கிடையில் இதில் ஒரு இலட்சம் கையொப்பங்கள் பெறப்பட்டால் குறித்த விடயம் தொடர்பில் இங்கிலாந்து பாராளுமன்றத்தில் விவாதிக்கப்பட்டு தீர்மானம் எடுக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

நீங்களும் இதில் பங்காளிகளாகி உங்கள் கையொப்பத்தை பதிவு செய்ய இங்கே அழுத்துங்கள்

Amnesty for illegal immigrants who have been in UK for 10 years

error: Content is protected !!