Home Blog Page 289

போர்க்குற்றச்சாட்டிற்கு உள்ளான இராணுவ அதிகாரி ஓய்வுபெறுகிறார்

image_pdfPRINT

இறுதிப்போரில் இடம்பெற்ற போர்க்குற்றங்களிற்கு பொறுப்புக்கூற வேண்டியவராக அடையாளப்படுத்தப்பட்டிருந்த முக்கிய இராணுவ அதிகாரியான மேஜர் ஜெனரல் சாஜி கல்லகே, இராணுவத்தில் இருந்து ஓய்வு பெறவுள்ளார்.

அண்மைக்காலமாக சர்ச்சைகளில் சிக்கியிருந்தவர் மேஜர் ஜெனரல் சாஜி கல்லகே. இறுதிப்போரில் நடந்த மனித உரிமை மீறல்கள், போர்க்குற்றங்களிற்குப் பொறுப்புக்கூற வேண்டிய அதிகாரிகளில் ஒருவரான இவருக்கு எதிராக, பிரித்தானியாவில் சட்ட நடவடிக்கைகளை எடுக்க முயற்சிக்கப்பட்ட போது, அங்கிருந்து தப்பி வந்தார்.

அண்மையில் அவுஸ்ரேலியாவுக்கு செல்வதற்கு முற்பட்ட போது, மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுகளினால் இவருக்கு விசா மறுக்கப்பட்டிருந்தது.

இறுதிப்போரில், 58ஆவது டிவிசனின் கொமாண்டோ படைப்பிரிவை வழி நடத்தியவர் பிரிகேடியர் சாஜி கல்லகே. முல்லைத்தீவு நகரத்தை இராணுவம் கைப்பற்றிய பின்னர், 59ஆவது டிவிசனின் கட்டளை அதிகாரியாகவும் அவர் பணியாற்றினார். இந்த சமயத்தில் இடம்பெற்ற மனிதஉரிமை மீறல் குற்றச்சாட்டுக்களில் அவரது பெயரும் குறிப்பிடப்பட்டிருந்தது.

போரின் பின்னர் மேஜர் ஜெனரலாக தரமுயர்த்தப்பட்டிருந்தார்.

யாழ்ப்பாணத்தில் 51ஆவது டிவிசனின் கட்டளை அதிகாரியாக பதவி வகித்த சமயத்தில், யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்த அப்போதைய வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர, நல்லிணக்கப் பொறிமுறைக்கான செயலணி தொடர்பாக விளக்கமளித்தபோது, அவருடன் சாஜி கல்லகே முரண்பட்டு சர்ச்சைக்குள்ளாகியிருந்தார்.
இதையடுத்து மேஜர் ஜெனரல் சாஜி கல்லகே உடனடியாகவே, இராணுவத் தலைமையகத்தில் காலாட்படைகளின் தளபதியாக மாற்றப்பட்டிருந்தார். வேறு உயர் பதவிகள் அளிக்கப்படாமல் வைக்கப்பட்டிருந்த இவர் விரைவில் இராணுவத்தில் இருந்து ஓய்வுபெறவுள்ளார்.

இராணுவ புலனாய்வுத்துறையிலும் இவர் பணியாற்றியிருந்தார்.

இதனால், காலாட்படைகளின் தளபதி பதவியில் இருந்து மேஜர் ஜெனரல் சாஜி கல்லகே விடுவிக்கப்பட்டுள்ளார்.

தாமரைகோபுரத்திலிருந்து விழுந்து இறந்த கிளிநொச்சி மாணவனிற்கு 30 இலட்சம் இழப்பீடு வழங்கியது நிறுவனம்

image_pdfPRINT

தாமரைக்கோபுரத்தில் இருந்து விழுந்து உயிரிழந்த கிளிநொச்சி இளைஞனிற்கு 30 இலட்சம் ரூபா இழப்பீடு வழங்கப்பட்டுள்ளது. தாமரைக்கோபுர கட்டுமானப்பணியில் ஈடுபட்டுள்ள நிறுவனங்கள் இந்த இழப்பீட்டை வழங்கியுள்ளன என இளைஞனின் குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

தாமரைக் கோபுர கட்டுமானப்பணியில் ஈடுபட்டிருந்த கிளிநொச்சி அக்கராயன்குளத்தை சேர்ந்த கோணேஸ்வரன் நிதர்சன் கடந்த 8ம் திகதி தாமரைக்கோபுரத்தின் 16வது மாடியிலிருந்து தவறிவிழுந்து உயிரிழந்திருந்தார்.

சீன, இலங்கையை சேர்ந்த இரண்டு நிறுவனங்கள் தாமரைக்கோபுர கட்டுமானப்பணியில் ஈடுபட்டுள்ளன. உயிரிழந்த இளைஞனிற்கு அந்த நிறுவனங்கள் இணைந்து காப்புறுதி பணம் மற்றும் நிறுவன பங்களிப்பு என்பனவாக 30 இலட்சம் ரூபாவை வழங்கியுள்ளன.

அந்த பணம் நிதர்சனின் இரண்டு சகோதரிகள் மற்றும் சகோதரனின் பெயரில் தலா பத்து இலட்சம் வீதம் நிலையான வைப்பாக வங்கியில் வைப்பிலிடப்பட்டுள்ளது.

நிதர்சனின் குடும்பத்தினர் மீளக்குடியமர்ந்துள்ள நிலையில் இதுவரை இதுவரை அவர்களிற்கு வீட்டுத்திட்டமும் வழங்கப்பட்டிருக்கவில்லை.

நிதர்சனின் உடலை கிளிநொச்சிக்கு கொண்டு வருவதில், செஞ்சிலுவை சங்க வாகனத்தை வாடகைக்கு அமர்த்திய விவகாரத்தில் முன்னர் சர்ச்சை ஏற்பட்டதையும் குறிப்பிட்டிருந்தோம். இதையடுத்து, இதை ஏற்பாடு செய்த பிரதேசசபை உறுப்பினர், அந்த பகுதி பாதிரியார் ஒருவரே கட்டுமான நிறுவனத்திடமிருந்து இழப்பீட்டை பெற்று நிதி மோசடியில் ஈடுபட்டதாக பரபரப்பு குற்றம்சாட்டியிருந்தார்.

இந்தநிலையில், இழப்பீட்டை பெற்றுக்கொள்வதில் பாதிரியாரே தமக்கு உறுதுணையாக இருந்ததாக உயிரிழந்த மாணவனின் குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

காணாமல் போனோரின் குடும்பங்களை அலைக்கழிக்காமல் உடன் நஷ்ட ஈடு வழங்குவது அவசியம் – அமைச்சர் மனோ எடுத்துரைப்பு

image_pdfPRINT

காணாமல் போனோரின் குடும்பங்களை அலைக்கழிக்காமல் நஷ்ட ஈடு வழங்க வேண்டும். விசாரணை என்ற பெயரில் அவர்களை அலையவிடுவதில் எனக்கு உடன்பாடில்லை. காணாமல் போனோரின் குடும்பங்களை மேலும் மேலும் அலைகழிக்காமல் கணிசமான தொகையொன்றை நஷ்ட ஈடாக வழங்கப்பட வேண்டுமென நிதியமைச்சர் மங்கள சமரவீரவிடம் அமைச்சர் மனோ கணேசன் கேட்டுக்கொண்டுள்ளார்.

நஷ்டஈட்டு தொகை வழங்குவதால் காணாமல் போன உறவுகளை மீண்டும் கொண்டு வரமுடியாது. இழந்த உறவுகளுக்கு அது ஈடாகாது. ஆனால், இந்த கணிசமான நஷ்ட ஈட்டு கொடுப்பனவுகள் நிர்க்கதியான அந்த மக்களின் வாழ்நிலைமைகளை கொஞ்சமாவது தூக்கி நிறுத்தும் என்றும் அமைச்சர் மனோ கணேசன் அமைச்சர் மங்கள சமரவீரவிடம் தெரிவித்துள்ளார்.

காணாமற்போனோரின் குடும்பங்களுக்கு சர்வதேச சமூகமும் உதவ காத்திருக்கின்றது. அதற்கு நாம் வழிவிட வேண்டும். இனியும் தாமதிக்க வேண்டாம் என்றும் அமைச்சர் மனோ கணேசன் சுட்டிக்காட்டியுள்ளார்.

இது தொடர்பாக அமைச்சர் அனுப்பிவைத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

யுத்தம் முடிவடைந்து சுமார் பத்து வருடங்கள் நிறைவுற்றுள்ள நிலையில் இன்னமும் காணாமல் போனோர் பற்றிய விசாரணைகளை மீண்டும் மீண்டும் நடத்தி, ஏற்கனவே விரக்தியின் எல்லைக்குப் போய்விட்ட மக்களை அலையவிடுவதில் எனக்கு உடன்பாடில்லை. காணாமல் போனோர் கணக்கெடுப்புகள் எத்தனை முறை நடந்துவிட்டன?

இன்று மீண்டும் நடைபெறும் கணக்கெடுப்புடன் அதற்கு சமாந்திரமாக, குடும்ப தலைவர்களை இழந்த பல்லாயிரம், பெண்களுக்கும், நிர்க்கதியாகிவிட்ட குழந்தைகளுக்கும், முதியோருக்கும், கணிசமான நஷ்டஈட்டு தொகைகள் வழங்க வேண்டும்.

நஷ்டஈட்டு வழங்கல் தொடர்பில் சர்வதேச சமூகம் உதவ தயாராக இருக்கிறது. ஆகவே இனியும் தாமதிக்க வேண்டாம். இதை இழுத்துக்கொண்டே போனால், இன்னும் இரு வருடங்களில் எமது அரசு முடிவுக்கு வந்து, இதைக்கூட செய்ய முடியாமலேயே போய் விடும் என்றும் நிதி அமைச்சர் மங்கள சமரவீரவிடம், அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

காணாமல் போனோர் பற்றிய விசாரணைகளை வெளிப்படையாக தொடர வேண்டும். அது கட்டாயத் தேவை. ஆனால், இந்த விசாரணை, கணக்கெடுப்பு ஆகியவற்றுடன் இணைந்ததாக கணிசமான நஷ்டஈட்டு தொகைகளை வழங்கப்பட வேண்டும். துன்பத்தின் கருவறைக்கே சென்றுவிட்ட இந்த குடும்ப உறவுகளை மீண்டும், மீண்டும் அழைத்து அழவிடுவதில் அர்த்தமில்லை.

இந்நாட்டில் வடகிழக்கில் இத்தகைய கைம்பெண்கள் சுமார் 70,000 பேருக்கு மேல் இருப்பது வரலாற்று கொடுமை. தங்கள் கணவன்மாரை இழந்த இவர்கள், கடந்த பத்து வருடங்களுக்கு மேலாக, எந்த அளவு சவால் மிக்க வாழ்நிலைமைகளை சந்திக்கிறார்கள் என்பதை அரசாங்கம் கணக்கில் எடுக்க வேண்டும். அதேபோல் பிள்ளைகளை இழந்த வயதான பெற்றோர் இன்று பெரும் துன்பங்களை எதிர்கொள்கிறார்கள். அவர்களையும் கணக்கில் எடுக்க வேண்டும்.

சர்வதேச சமூகம் இந்த மக்களுக்கு உதவ காத்திருக்கின்றது. அதற்கு நாம் வழிவிட வேண்டும். இனியும் தாமதிக்க வேண்டாம். எவ்வளவு நஷ்ட ஈடு வழங்கப்பட்டாலும், அது காணாமல் போன உறவுகளை மீண்டும் கொண்டு வராது. அது அடிப்படை உண்மை. ஆனால், அது இந்த நிர்க்கதியாகிவிட்ட மக்களின் வாழ்வாதாரத்தை கொஞ்சமாவது தூக்கி நிறுத்தும் என நான் நம்புகிறேன் என்றும் அமைச்சர் மனோ தெரிவித்துள்ளார்.

அடுத்த முதலமைச்சர் மாவை சேனாதிராசாவே ! -சிறிதரன் எம்.பி.

image_pdfPRINT

வடக்கு மாகாண சபையின் அடுத்த முதலமைச்சர் வேட்பாளராக தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசாவே போட்டியிட வேண்டுமென பலரும் விருப்பம் கொண்டுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் தெரிவித்துள்ளார்.

கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகள் இணைந்து கோருமிடத்தே தான் வடக்கு மாகாண முதலமைச்சர் வேட்பாளராக போட்யிட தயாரென தமிழரசுக் கட்சித் தலைவர் மாவை சேனாதிராசா தெரிவித்திருக்கின்ற கருத்து தொடர்பில் வினவிய போதே சிறிதரன் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பாக அடுத்து வரும் வட மாகாண சபைத் தேர்தலிலே யார் முதலமைச்சர் வேட்பாளராகப் போட்டியிடுவதென்பதில் நாங்கள் ஒரு முடிவிற்கு வந்திருக்கிறோம். எங்களுடைய கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசா போட்டியிட வேண்டுமென பலரும் விருப்பங்களையும் கொண்டிருக்கின்றார்கள்.

இது பற்றிய ஆய்வுகள் கருத்துக்கள் வெளிவந்தமிண்ணமிருப்பதும் யாவரும் அறிந்ததே. இது தொடர்பான விடயங்கள் இருக்கையில் பல்வேறு கருத்துக்கள் வரலாம் ஐனநாயக முறைப்படி கட்சிகள் தங்களுடைய கருத்தக்களை முன்வைக்கக் கூடும். அதற்கு நாங்கள் எதிர் அல்ல. ஆனால் மாகாண சபைக்கான தேர்தல்கள் இன்னமும் அறிவிக்கப்படவில்லை.

மாகாண சபை எந்த தேர்தல் முறையில் நடாத்தப்படும். ஏந்த திகதியில் நடத்தப்படுமென்பது கூட கேள்விக்குறியாக இருக்கிறது. ஆயினும் இந்த வருடத்தில் நடாத்தப்படுமென அரசியல் தலைவர்கள் ஆளுக்காள் மாறி அறிக்கைகளை விட்டாலும் கூட இந்த வருட இறுதிக்குள் மாகாண சபைத் தேர்தல் நடைபெறுவதற்கான வாய்ப்புக்கள் மிகக் குறைவு.

அனேகமாக அடுத்த வருடத்தில் நடைபெற இருக்கின்ற மாகாண சபைத் தேர்தலில் போட்டியிடுவதற்கான சூழ்நிலைகளில் மாவை சேனாதிராசாவின் பங்களிப்பு அவருடைய கடந்த கால அரசியல் வாழக்கை, மூப்புடைய தலைவர் என்ற வகையில் அவரை எல்லோரும் விரும்புகிறார்கள். அந்த விருப்பத்திற்கு யாரும் மறுப்புத் தெரிவித்ததாகவும் இல்லை. என்றும் அவர் தெரிவித்தார்.

நான் இருக்கும் அரசு தொடர்ந்து இருக்கும். இந்த அரசு இருக்குமா? – மனோ, மங்களவுக்கு சூசகமாக பதில்

image_pdfPRINT

அமைச்சர் மனோ கணேசனின் அதிகாரப்பூர்வ முகநூல் பக்கத்தில் அமைச்சர் எழுதியிருப்பதாவது,

இந்து பிரதி அமைச்சர் சந்தடியில், அமைச்சரவையில் காத்திரமாக சுவாரசியமாக நடந்த இன்னொரு சம்பவம் மறந்து விட்டது.

மரணித்தோருக்கு நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என்ற விவகாரம் பேசப்படும் போது, நான் இடைமறித்து, நிதியமைச்சர் மங்களவிடம் ஒன்றை சொன்னேன்.

“…யுத்தம் முடிந்து ஏறக்குறைய பத்து வருடங்கள் முடிந்து விட்டன. இன்னமும் இந்த காணாமல் போனோர் அலுவலக விசாரணைகளை நடத்தி கொண்டிருக்கிறீர்கள். ஏற்கனவே விரக்தியின் எல்லைக்கு போய்விட்ட இந்த மக்கள், இப்போது மீண்டும் அலைகழிக்கப்படுகிறார்கள். இந்த காணாமல் போனோர் கணக்கெடுப்புகள் எத்தனை முறை நடந்துவிட்டன?…”

“…எனவே இன்று விசாரணை / கணக்கெடுப்பு ஆகியவற்றுடன் சமாந்திரமாக, குடும்ப தலைவர்களை இழந்த பல்லாயிரம், கைம் பெண்களுக்கு, நிர்க்கதியாகிவிட்ட குழந்தைகள், முதியோருக்கு, கணிசமான நஷ்டஈட்டு தொகைகளை வழங்குங்கள். இது அவர்களது உறவுகளை மீண்டும் கொண்டு வராவிட்டாலும் கூட, அவர்களது வாழ்வாதாரங்களையாவது கொஞ்சம் தூக்கி நிறுத்தும்…”

“… இதை இழுத்துக்கொண்டே போனால், இன்னும் இரு வருடங்களில் எமது அரசு முடிவுக்கு வந்துவிடும். இதைக்கூட செய்ய முடியாமலேயே போய் விடும்…” என்றேன்.

அப்போது, “…இதை விரைவில் செய்வோம். ஆனால், என்ன,… எமது அரசு இத்துடன் முடிந்து விடுமென்று நீங்களே சொல்கிறீர்கள்…” என மங்கள சமரவீர என்னிடம் திருப்பி கேட்டார்.

“…இல்லை, நான் இருக்கும் அரசு, இன்னும் பல ஆண்டுகளுக்கு தொடரும். ஆனால், இந்த அரசின் இம்முறையிலான ஐந்து வருட ஆயுள் இன்னும் இரண்டு வருடத்தில் முடியப்போகிறதே..” என்று அவருக்கு நான் பதில் சொன்னேன்.

மங்கள என்னை பார்த்து சிரித்தார். அவர் அறிவாளி. நான் சொன்னது அவருக்கு புரிந்திருக்க வேண்டும்.

கிளிநொச்சி மாணவன் எப்படி உயிரிழந்தார்? உண்மைக்காரணம் வெளியானது!

image_pdfPRINT

கிளநொச்சியை சேர்ந்த இளைஞர் ஒருவர் கொழும்பு தாமரைக் கோபுரத்தின் மின் தூக்கியில் இருந்து தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் அண்மையில் நடந்தது. இந்த மரணத்திற்கான உண்மையான காரணம் கண்டறியப்பட்டுள்ளது.

கொழும்பு திடீர் மரணவிசாரணை அதிகாரி இரேஷா சமரவீர இதனை தெரிவித்துள்ளார்.

தாமரைக்கோபுரத்தில் அமைக்கப்பட்டுள்ள மின்தூக்கி இதுவரை முழுமையாக செய்து முடிக்கப்படவில்லை. மின்தூக்கி செயற்படுவதற்கான செங்குத்தான வழி மாத்திரமே அமைக்கப்பட்டுள்ளது. அந்த பகுதி கடுமையான இருள் நிறைந்ததாக காணப்படுகிறது. மின்தூக்கிக்கு பாதைக்கு செல்வதற்கான கதவுகளும் அமைக்கப்பட்டிருக்கவில்லை.

புதிதாக பணிக்கு சேர்பவர்களிற்கு இந்த ஆபத்துக்களை பற்றி அறிவுறுத்தப்படுவதும் இல்லை. மின்தூக்கிக்கு செல்வதற்கு காலடி எடுத்து வைத்தால், அல்லது உயரத்தில் வேலை செய்து கொண்டிருக்கும்போது, அந்த பகுதியில் தவறி விழுந்தால், எந்த தடையுமின்றி கீழே விழுந்து உயிரிழக்க வேண்டியதுதான்.

தாமரைக்கோபுரத்தின் 16வது மாடியில் இருந்து கிளிநொச்சி இளைஞனும் அப்படித்தான் உயிரிழந்தார். உயரிழந்த கிளிநொச்சி இளைஞனான கோணேஸ்வரனின் நண்பன், தந்தை, அவருடன் பணியாற்றிய ஒரு சீன பிரஜை ஆகியோர் மரணவிசாரணை அதிகாரியின் முன் சாட்சியமளித்தனர்.

அவருடன் பணியாற்றிய சத்தயரூபன் (28) என்பவர் சாட்சியமளிக்கையில்- கோணஸ்வரன் எனது நண்பன். நாங்கள் ஐந்து பேர் கொழும்பிற்கு தொழில் தேடி வந்தோம். நாம் பணிபுரியும் இடம் மோசமானது என கடந்த 5ம் திகதி என்னிடம் அவர் சுட்டிக்காட்டினார். இதற்கு தண்டனையாக மறுநாள் அவருக்கு வேலை வழங்கப்படவில்லை. ஒருநாள் விட்டு, அதற்கடுத்தநாள் வேலைக்கு வருமாறு அறிவித்தல் வழங்கப்பட்டது.

கடந்த 8ம் திகதி வேலைக்கு வந்த எம்மை ஒவ்வொரு இடத்தில் பணிக்கமர்த்தினார்கள். நாளாந்தம் 1,500 ரூபா சம்பளம் வழங்கப்படும். ஞாயிற்றுக்கிழமைகளில் 3,000 ரூபா சம்பளம்.

இங்கு பணிபுரியும் சீனர்கள் எம்முடன் பிரச்சனைக்கு வருவதில்லை. நண்பன் வேலை செய்யும் இடத்திற்கு நான் செல்லவில்லை. கோணேஸ்வரன் விழுந்து விட்டதாக நண்பர் ஒருவர் குறுஞ்செய்தி அனுப்பியிருந்தார். கோணேஸ்வரனின் தொலைபேசிக்கு அழைப்பேற்படுத்தினேன். அது செயலிழந்திருந்தது. அவர் விழுந்திருந்த இடத்திற்கு நான் சென்று பார்க்கவில்லை. அந்த கோலத்தை என்னால் பார்க்க முடியாது என்றார்.

கோணேஸ்வரனுடன் பணிபுரிந்த சீனரான குவே நினி (47) என்பவர் சாட்சியமளிக்கையில்- அவர் எங்களுடன் வேலை செய்து கொண்டிருந்தார். சிறிதுநேரத்தில் அவரை காணவில்லை. நாம் செய்யும் வேலைகளிற்கு அவர் உதவிகள் செய்வார். அவர் புதியவர் என்பதால் அவரை அதிகம் வேலைகளில் ஈடுபடுத்துவது கிடையாது. அவர் விழுந்துள்ளதாக ஒருவர் சொன்னார். அதன்பின்னரே நடந்ததை அறிந்தோம் என்றார்.

கோணேஸ்வரனின் தந்தை சாட்சியமளிக்கையில்- எனக்கு நான்கு பிள்ளைகள். இறந்த மகன் குடும்பத்தில் மூத்தவர். வரும் ஓகஸ்டில் உயர்தர பரீட்சையில் தோற்ற இருந்தார். அவர் நண்பர்களின் வீடுகளில் தங்கித்தான் படித்தார். அவரது நண்பர் கொழும்பில் வேலை செய்கிறார்.

பாடசாலை விடுமுறையில் நண்பருடன் கொழும்பிற்கு சென்று அங்கு வேலை செய்தார். கடந்த 7ம் திகதி தொலைபேசியில் என்னுடன் பேசினார். விடுமுறை என்பதால் கொழும்பு வந்ததாக கூறினார். நான் அவரை கண்டித்து, வெள்ளிக்கிழமை வீட்டுக்கு வரும்படி கூறினேன். வெள்ளிக்கிழமை வருவதாக மகன் கூறினார்“ என்றார்.

“இலங்கைத் தமிழரின் தோற்றமும், மறைந்த வரலாறும்” – சிறப்புக் கருத்துரை

image_pdfPRINT

“இலங்கைத் தமிழரின் தோற்றமும், மறைந்த வரலாறும்” என்ற தலைப்பிலமைந்த சிறப்புக் கருத்துரை எதிர்வரும் 18 ஆம் திகதி திங்கட்கிழமை பிற்பகல் 3 மணிக்கு யாழ்ப்பாண பல்கலைக்கழக கைலாசபதி கலையரங்கில் இடம்பெறவிருக்கின்றது. வரலாற்றுத்துறை வாழ் நாள் பேராசிரியரும், யாழ்ப்பாண பல்கலைக் கழகத்தின் தகைசார் வேந்தருமாகிய பேராசிரியர் எஸ். பத்மநாதன் இந்தச் சிறப்புக் கருத்துரையை வழங்கவிருக்கிறார்.

யாழ்ப்பாண சமூகத்தினரிடையே நிலவுகின்ற பழந்தமிழர் வரலாறு தொடர்பான தெளிவின்மைகளுக்கு விடை பகரும் வகையிலும், பழைய கண்ணோட்டங்களை மாற்றும் வகையில் பயனுறுதி மிக்கதாகவும் இந்தக் கருத்துரை அமையும் என்றும், ஆர்வலர்களைக் கலந்து பயன்பெறுமாறும் யாழ். பல்கலைக்கழகத் துணைவேந்தர் பேராசிரியர் இ.விக்னேஸ்வரன் அறிவித்துள்ளார்.

யாழ்ப்பாண பல்கலைக் கழக வேந்தர் பேராசிரியர் சிவசுப்பிரமணியம் பத்மநாதன் இலங்கைப் பல்கலைக்கழகத்தின் பேராதனைப் பல்கலைக்கழகத்தின் வரலாற்றுத் துறைச் சிறப்புக் கலைமாணிப் பட்டத்தைப் பெற்றபின் தென் ஆசிய வரலாறு தொடர்பிலான ஆய்வில் இலண்டன் பல்கலைக்கழகத்தில் இருந்து கலாநிதிப் பட்டத்தை 1969 ஆம் ஆண்டு பெற்றுக் கொண்டார். பேராதனைப் பல்கலைக்கழகம், கொழும்பு பல்கலைக்கழகம், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம், கிழக்கு பல்கலைக்கழகம் ஆகியவற்றில் வரலாற்றுத் துறையில் விரிவுரையாளராகவும், பேராசிரியராகவும் கடமையாற்றியிருக்கின்றார். வரலாற்றுத் துறையோடு, தமிழ், இந்து நாகரிகம், கீழைத்தேயக் கற்கைககள் போன்ற துறைகளிலும் பெரும் பங்கு வகித்துள்ளார்.

1963 ஆம் ஆண்டு இப்போதைய பேராதனைப் பல்கலைக்கழகம், இலங்கை பல்கலைக்கழக பேராதனை வளாமாக இருந்த போது உதவி விரிவுரையாளராக இணைந்து, 1969 இல் விரிவுரையாளராகவும், 1975 இல் சிரேஷ்ட விரிவுரையாளராகவும் பதவி உயர்வுகளைப் பெற்று 1981 ஆம் ஆண்டு இணைப் பேராசியரானார். பேராதனைப் பல்கலைக் கழகத்தில் பணியாற்றிய சமகாலத்திலேயே கொழும்பு பல்கலைக்கழகத்திலும், இலங்கைப் பல்கலைக்கழகத்தின் வித்யாலங்கார வளாகத்திலும் வருகை நிலை விரிவுரையாளராகக் கடமையாற்றியிருந்தார்.

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் வரலாற்றுத் துறைப் போராசிரியராக இணைந்து கொண்ட பேராசிரியர் சிவசுப்பிரமணியம் பத்மநாதன் 1995 முதல் 2006 வரைப் பணியாற்றியிருந்தார். 2001 – 2002 காலப் பகுதியில் பேராதனைப் பல்கலைக்கழக வரலாற்றுத் துறையின் தலைவராகவும் கடமையாற்றினார்.

பேராசிரியராகப் பணியாற்றிய காலங்களில் பல நூல்களை இயற்றியதுடன் வரலாறு, இந்து நாகரிகம் சார்ந்த பல ஆய்வுக் கட்டுரைகளையும் இவர் சமர்ப்பித்திருக்கிறார். கல்விப் பணி தவிர, இந்து கலாசார அமைச்சின் ஆலோசகராகவும், இலங்கை பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் உப தலைவராகவும், இலங்கை தேசிய கல்வி ஆணைக்குழுவின் அங்கத்தவராகவும் பதவிகளை வகித்தவர். 2014 முதல் யாழ்ப்பாண பல்கலைக் கழகத்தின் வேந்தராகப் பதவி வகித்து வருகிறார்.

பறிக்கப்பட்ட உரிமைகளை திருப்பி கேட்பது இனவாதமாகாது- முதலமைச்சர் சீ.வி.விக்னேஷ்வரன்

image_pdfPRINT

தமிழ் மக்களிடமிருந்து பறிக்கப்பட்ட உரிமைகளை திருப்பி தாருங்கள் என கேட்பது இனவாதமாகாது. அதனை இனவாதம் என கூறினால் அது சிங்கள அமைச்சர்களின் அறியாமை என வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஷ்வரன் தெரிவித்துள்ளார்.

வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் ஒரு இனவாதிபோல் செயற்படுகிறார். என அமைச்சர் ராஜித சேனாரத்ன கூறியிருந்த கருத்து தொடர்பாக நேற்றைய தினம் வியாழக்கிழமை ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்வி ஒன்றுக்கு பதிலளிக்கும்

போதே முதலமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இதன்போது மேலும் தெரிவிக்கையில் ,

போருக்கு பின்னர் வடகிழக்கு தமிழ் மக்களிடம் உரிமை கேட்பதற்கு வலுவற்ற தன்மை இருந்தது. ஆனாலும் மக்கள் தங்களுக்கான உரிமைகளை கேட்பதற்கு ஆரம்பித்தார்கள்.

இவ்வாறு தமிழ் மக்கள் உரிமை கேட்கும் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் தெற்கிலிருந்து இவ்வாறான கருத்து வந்திருக்கின்றது. தமிழ் மக்கள் தங்களிடமிருந்து பறிக்கப்பட்ட உரிமைகளை மீளவும் தாருங்கள் என கேட்பது இனவாதம் ஆகாது.

இல்லை அது இனவாதமே என கூறினால். அது தெற்கில் உள்ள அமைச்சர்களின் விளக்க மற்ற தன்மையே ஆகும். மேலும் தமிழ் மக்கள் உரிமை கேட்பது சிங்கள மக்களுக்கு எதிரான நிலைப்பாடு அல்ல. ஆனால் அந்த உரிமைக்குரல் சிங்கள மக்களுக்கு எதிரான நிலைப்பாடகவே காட்டப்படுகிறது என மேலும் தெரிவித்தார்.

அரசிடமிருந்து எப்படிப்பெறுவது!

image_pdfPRINT

-கல்வி இராஜாங்க அமைச்சர் – முதலமைச்சர் ஆராய்வு

கல்வி இராஜாங்க அமைச்சர் வே.இராதகிருஸ்ணன் இன்றைய தினம் வடமாகாண முதலமைச் சர் சீ.வி.விக்னேஸ்வரனை அவரது அலுவலகத்தில் சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.

இதன்போது மாகாணத்தின் கல்வி தொடர்பாக பல விடயங்கள் ஆராயப்பட்டுள்ளது.

மேற்படி சந்திப்பு குறித்து சந்திப்பின் நிறைவில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த கல்வி இரா ஜாங்க அமைச்சர் வே.இராதாகிருஸ்ணன் மற்றும் முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் ஆகியோர், இன்றைய சந்திப்பு சிநேகபூர்வமான சந்திப்பாக இடம்பெற்றிருக்கின்றது.

இதன் போது வடமாகாணத்தில் உள்ள பாடசாலைகளில் நிலவும் குறைபாடுகள் தொடர்பாக வும் ஆசிரிய வள பற்றாக்குறை மற்றும் பௌதீக வளப்பற்றாக்குறை தொடர்பாகவும் பேசி அவற்றுக்கான தீர்வினை பெறும் வழிகள் தொடர்பாகவும் ஆராய்ந்திருக்கின்றோம்.

இதனடிப்படையில் வடமாகாணத்தின் கல்வியில் மறுமலர்ச்சியை ஏற்படுத்துவதற்கு தேவையான வளங்களை நல்லாட்சி அரசாங்கத்திடமிருந்து எப்படி பெற்றுக் கொள்வது என்பதையும் நாங்கள் விளக்கமாக ஆராய்ந்திருக்கின்றோம்.

இதன்படிடையில் விசேட கூட்டம் ஒன்றை அடுத்த மாதம் 5ம் திகதி நடாத்தப்படவுள்ளது. அந்த கூட்டத்தில் மாகாணசபை சார்பிலும் அதிகாரிகள் கலந்து கொண்டு தேவைகள் மற்றும் பிரச்சினைகள் தொடர்பில் ஆராய்ந்து நடவடிக்கை எடுக்கப்படும்.  என இருவரும் கூறியிருக்கின்றனர்.

மேலும் முதலமைச்சருடனான இந்த சந்திப்பின்போது மலையக மக்கள் முன்னணியின் பிரதிநிதிகளும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

யாழில் பாடசாலை மாணவன் தூக்கிட்டு தற்கொலை !

image_pdfPRINT

யாழ்பாணம் தீவக கல்வி வலயத்திற்குட்பட்ட வேலணை மத்திய கல்லூரி மாணவன் ஒருவர் பாடசாலை விடுதியில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார்.

குறித்த பாடசாலையில் தரம் ஒன்பதில் கல்வி கற்றுவரும் மயூரன் மதுபன் (வயது 14) என்ற மாணவனே குறித்த பாடசாலை விடுதியின் மலசல கூடத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார்.

நேற்றைய தினம் தனது வீட்டிற்கு சென்று பின்னர் விடுதிக்கு திரும்பிய நிலையிலேயே குறித்த மாணவன் தற்கொலை செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
எனினும் மாணவனின் தற்கொலைக்கான காரணங்கள் எதுவும் இதுவரையில் வெளியாகாத நிலையில் இது கொலையா அல்லது தற்கொலையா என்ற கோணத்தில் மர்மம் நிலவுகின்றது.

மாணவிகளை சீரழித்தவர் சிறையில்

image_pdfPRINT

பதின்ம வயது சிறுமிகள் மூவருக்கு பாலியல் தொல்லை வழங்கிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட ஆசிரியரை 14 நாள்களுக்கு விளக்கமறியலில் வைக்க மல்லாகம் நீதிவான் நீதிமன்று இன்று உத்தரவிட்டது.

வட்டுக்கோட்டையிலுள்ள தனியார் கல்வி நிலையத்தில் கற்பிக்கும் ஆசிரியர், அவரிடம் கற்கச் செல்லும் பதின்ம வயது மாணவிகள் சிலரை பாலியல் வன்கொடுமைக்கு உள்படுத்தப்படுகின்றார் என சங்கானை பிரதேச சிறுவர் பாதுகாப்பு அலுவலகருக்கு முறைப்பாடுகள் வழங்கப்பட்டன.

அவர் தனக்கு கிடைத்த முறைப்பாடுகள் தொடர்பில் விசாரணை செய்ய மாணவிகளின் பெற்றோர்கள் ஒத்துழைப்பு வழங்கவில்லை. அதனால் சிறுவர் அலுவலகருடன் பொலிஸார் இணைந்து முன்னெடுத்த விசாரணையில் மாணவிகள் மூவரின் வாக்குமூலங்கள் பெறப்பட்டன.

அவற்றை அடிப்படையாக வைத்து பதின்ம வயது சிறுமியை வன்புணர்ந்த மற்றும் சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை வழங்கினார் என்ற குற்றச்சாட்டில் ஆசிரியர் நேற்று புதன்கிழமை கைது செய்யப்பட்டார்.

விசாரணைகளின் பின்னர் அவர், மல்லாகம் நீதிவான் நீதிமன்றில் இன்று முற்படுத்தப்பட்டார்.

அத்துடன், பாதிக்கப்பட்டவர்கள் என வாக்குமூலம் பெறப்பட்ட மூன்று மாணவிகளும் இன்று வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டு மருத்துவ சோதனைக்குட்படுத்தப்பட்டனர். மருத்துவ அறிக்கையை பொலிஸார் நீதிமன்றில் முன்வைத்தனர்..

அதனை ஆராய்ந்த நீதிவான், சந்தேகநபரை 14 நாள்களுக்கு விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.

இதேவேளை, வட்டுகோட்டையில் இயங்கிய தனியார் கல்வி நிலையத்தில் சிறுமிகள் மீதான பாலியல் வதைகளுக்கு வேறு ஒரு ஆசிரியருக்கும் தொடர்பிருப்பதாக தகவல் கிடைத்துள்ளது.

அந்தத் தகவல் குறித்தும் விசாரணைகள் முன்னெடுக்கப்படுள்ளன என்று பொலிஸார் தெரிவித்தனர்.

பாடசாலையிலிருந்து
ஆசிரியர் இடைநீக்கம்

குற்றஞ்சாட்டப்பட்டுள்ள ஆசிரியர் வட்டுக்கோட்டையில் பிரபல பாடசாலையில் கற்பிக்கின்றார்.

இந்தக் குற்றச்சாட்டுகளிலிருந்து ஆசிரியர் நீதிமன்றால் விடுவிக்கப்படும்வரை பாடசாலையிலிருந்து இடைநிறுத்துவதாக பாடசாலை அதிபர் நேற்று உத்தியோகபூர்வமாக அறிவித்திருந்தார்.

விடுதலைப்புலிகள் குற்றவியல் அமைப்பு அல்ல; சுவிஸ் நீதிமன்றம் தீர்ப்பு

image_pdfPRINT

விடுதலைப்புலிகள் மீது ‘குற்றவியல் அமைப்பு’ எனச் சுமத்தப்பட்ட குற்றத்தை மறுதலித்த சுவிற்சர்லாந்து நீதிமன்றம் விடுதலைப்புலிகள் குற்றவியல் அமைப்பு இல்லை என அதிரடித் தீர்ப்பளித்துள்ளது.

அதேவேளை, கட்டாய நிதி சேகரிப்பு மற்றும் மிரட்டிப் பணம் பறிப்பு என்பவற்றின் கீழ் குற்றம் சுமத்தப்பட்ட மனிதாபிமான செயற்பாட்டாளர்களும்  விடுதலை செய்யப்பட்டனர்.

சுவிற்சர்லாந்து வரலாற்றில் பெரும் வழக்கென குறிப்பிடப்படும் உலகத்தமிழர் ஒருங்கிணைப்புக் குழு செயற்பாட்டாளர்கள் உட்பட தமிழ் மனிதாபிமான செயற்பாட்டாளர்கள் மீது தொடுக்கப்பட்ட கட்டாய நிதி சேகரிப்பு மிரட்டிப் பணம் பறித்தல் போன்ற வழக்கின் இறுதித் தீர்ப்பு வழக்கு பெலின்சோனாவில் அமைந்துள்ள சுவிற்சர்லாந்து நடுவன் அரசின் குற்றவியல் நீதிமன்றில் இன்று நடைபெற்றது.

இந்நிலையில், விடுதலைப்புலிகள் குற்றவியல் அமைப்பு இல்லை என அறிவித்த நீதிமன்றம், விடுதலைப்புலிகள் அமைப்பு எந்த ஒரு சந்தர்ப்பத்திலும் குற்றவியல் அமைப்பாகவோ குற்றத்தை தூண்டும் அல்லது ஊக்குவிக்கும் அமைப்பாக இருந்ததற்கான ஆதராம் எதுவுமில்லையென தனது தீர்ப்பில் தெரிவித்துள்ளது.

அதேவேளை, சுவிஸ் அரச தரப்பு வழக்கறிஞர் இலங்கையிலும் சுவிசிலும் விடுதலைப்புலிகள் ஒரு குற்றவியல் அமைப்பு என திரட்டிச் சமர்ப்பித்த ஆதாரங்களை நீதிமன்றம் நிராகரித்துள்ளது.

தவிர, செயற்பாட்டாளர்கள் நால்வர் மீது சுமத்தப்பட்ட அனைத்துக்குற்றங்களிலிருந்தும் பூரணமாக விலக்கப்பட்டுள்ளனர். சிலர் மீது வங்கி மோசடி பற்றி அறிந்து உதவியமைக்காக தண்டப்பணமும் இரண்டு ஆண்டுகளுக்கு ஒத்தி வைக்கக்கூடிய சிறைத் தண்டனையும் வழங்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!