SHARE

“இலங்கைத் தமிழரின் தோற்றமும், மறைந்த வரலாறும்” என்ற தலைப்பிலமைந்த சிறப்புக் கருத்துரை எதிர்வரும் 18 ஆம் திகதி திங்கட்கிழமை பிற்பகல் 3 மணிக்கு யாழ்ப்பாண பல்கலைக்கழக கைலாசபதி கலையரங்கில் இடம்பெறவிருக்கின்றது. வரலாற்றுத்துறை வாழ் நாள் பேராசிரியரும், யாழ்ப்பாண பல்கலைக் கழகத்தின் தகைசார் வேந்தருமாகிய பேராசிரியர் எஸ். பத்மநாதன் இந்தச் சிறப்புக் கருத்துரையை வழங்கவிருக்கிறார்.

யாழ்ப்பாண சமூகத்தினரிடையே நிலவுகின்ற பழந்தமிழர் வரலாறு தொடர்பான தெளிவின்மைகளுக்கு விடை பகரும் வகையிலும், பழைய கண்ணோட்டங்களை மாற்றும் வகையில் பயனுறுதி மிக்கதாகவும் இந்தக் கருத்துரை அமையும் என்றும், ஆர்வலர்களைக் கலந்து பயன்பெறுமாறும் யாழ். பல்கலைக்கழகத் துணைவேந்தர் பேராசிரியர் இ.விக்னேஸ்வரன் அறிவித்துள்ளார்.

யாழ்ப்பாண பல்கலைக் கழக வேந்தர் பேராசிரியர் சிவசுப்பிரமணியம் பத்மநாதன் இலங்கைப் பல்கலைக்கழகத்தின் பேராதனைப் பல்கலைக்கழகத்தின் வரலாற்றுத் துறைச் சிறப்புக் கலைமாணிப் பட்டத்தைப் பெற்றபின் தென் ஆசிய வரலாறு தொடர்பிலான ஆய்வில் இலண்டன் பல்கலைக்கழகத்தில் இருந்து கலாநிதிப் பட்டத்தை 1969 ஆம் ஆண்டு பெற்றுக் கொண்டார். பேராதனைப் பல்கலைக்கழகம், கொழும்பு பல்கலைக்கழகம், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம், கிழக்கு பல்கலைக்கழகம் ஆகியவற்றில் வரலாற்றுத் துறையில் விரிவுரையாளராகவும், பேராசிரியராகவும் கடமையாற்றியிருக்கின்றார். வரலாற்றுத் துறையோடு, தமிழ், இந்து நாகரிகம், கீழைத்தேயக் கற்கைககள் போன்ற துறைகளிலும் பெரும் பங்கு வகித்துள்ளார்.

1963 ஆம் ஆண்டு இப்போதைய பேராதனைப் பல்கலைக்கழகம், இலங்கை பல்கலைக்கழக பேராதனை வளாமாக இருந்த போது உதவி விரிவுரையாளராக இணைந்து, 1969 இல் விரிவுரையாளராகவும், 1975 இல் சிரேஷ்ட விரிவுரையாளராகவும் பதவி உயர்வுகளைப் பெற்று 1981 ஆம் ஆண்டு இணைப் பேராசியரானார். பேராதனைப் பல்கலைக் கழகத்தில் பணியாற்றிய சமகாலத்திலேயே கொழும்பு பல்கலைக்கழகத்திலும், இலங்கைப் பல்கலைக்கழகத்தின் வித்யாலங்கார வளாகத்திலும் வருகை நிலை விரிவுரையாளராகக் கடமையாற்றியிருந்தார்.

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் வரலாற்றுத் துறைப் போராசிரியராக இணைந்து கொண்ட பேராசிரியர் சிவசுப்பிரமணியம் பத்மநாதன் 1995 முதல் 2006 வரைப் பணியாற்றியிருந்தார். 2001 – 2002 காலப் பகுதியில் பேராதனைப் பல்கலைக்கழக வரலாற்றுத் துறையின் தலைவராகவும் கடமையாற்றினார்.

பேராசிரியராகப் பணியாற்றிய காலங்களில் பல நூல்களை இயற்றியதுடன் வரலாறு, இந்து நாகரிகம் சார்ந்த பல ஆய்வுக் கட்டுரைகளையும் இவர் சமர்ப்பித்திருக்கிறார். கல்விப் பணி தவிர, இந்து கலாசார அமைச்சின் ஆலோசகராகவும், இலங்கை பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் உப தலைவராகவும், இலங்கை தேசிய கல்வி ஆணைக்குழுவின் அங்கத்தவராகவும் பதவிகளை வகித்தவர். 2014 முதல் யாழ்ப்பாண பல்கலைக் கழகத்தின் வேந்தராகப் பதவி வகித்து வருகிறார்.

Print Friendly, PDF & Email