SHARE

கிளநொச்சியை சேர்ந்த இளைஞர் ஒருவர் கொழும்பு தாமரைக் கோபுரத்தின் மின் தூக்கியில் இருந்து தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் அண்மையில் நடந்தது. இந்த மரணத்திற்கான உண்மையான காரணம் கண்டறியப்பட்டுள்ளது.

கொழும்பு திடீர் மரணவிசாரணை அதிகாரி இரேஷா சமரவீர இதனை தெரிவித்துள்ளார்.

தாமரைக்கோபுரத்தில் அமைக்கப்பட்டுள்ள மின்தூக்கி இதுவரை முழுமையாக செய்து முடிக்கப்படவில்லை. மின்தூக்கி செயற்படுவதற்கான செங்குத்தான வழி மாத்திரமே அமைக்கப்பட்டுள்ளது. அந்த பகுதி கடுமையான இருள் நிறைந்ததாக காணப்படுகிறது. மின்தூக்கிக்கு பாதைக்கு செல்வதற்கான கதவுகளும் அமைக்கப்பட்டிருக்கவில்லை.

புதிதாக பணிக்கு சேர்பவர்களிற்கு இந்த ஆபத்துக்களை பற்றி அறிவுறுத்தப்படுவதும் இல்லை. மின்தூக்கிக்கு செல்வதற்கு காலடி எடுத்து வைத்தால், அல்லது உயரத்தில் வேலை செய்து கொண்டிருக்கும்போது, அந்த பகுதியில் தவறி விழுந்தால், எந்த தடையுமின்றி கீழே விழுந்து உயிரிழக்க வேண்டியதுதான்.

தாமரைக்கோபுரத்தின் 16வது மாடியில் இருந்து கிளிநொச்சி இளைஞனும் அப்படித்தான் உயிரிழந்தார். உயரிழந்த கிளிநொச்சி இளைஞனான கோணேஸ்வரனின் நண்பன், தந்தை, அவருடன் பணியாற்றிய ஒரு சீன பிரஜை ஆகியோர் மரணவிசாரணை அதிகாரியின் முன் சாட்சியமளித்தனர்.

அவருடன் பணியாற்றிய சத்தயரூபன் (28) என்பவர் சாட்சியமளிக்கையில்- கோணஸ்வரன் எனது நண்பன். நாங்கள் ஐந்து பேர் கொழும்பிற்கு தொழில் தேடி வந்தோம். நாம் பணிபுரியும் இடம் மோசமானது என கடந்த 5ம் திகதி என்னிடம் அவர் சுட்டிக்காட்டினார். இதற்கு தண்டனையாக மறுநாள் அவருக்கு வேலை வழங்கப்படவில்லை. ஒருநாள் விட்டு, அதற்கடுத்தநாள் வேலைக்கு வருமாறு அறிவித்தல் வழங்கப்பட்டது.

கடந்த 8ம் திகதி வேலைக்கு வந்த எம்மை ஒவ்வொரு இடத்தில் பணிக்கமர்த்தினார்கள். நாளாந்தம் 1,500 ரூபா சம்பளம் வழங்கப்படும். ஞாயிற்றுக்கிழமைகளில் 3,000 ரூபா சம்பளம்.

இங்கு பணிபுரியும் சீனர்கள் எம்முடன் பிரச்சனைக்கு வருவதில்லை. நண்பன் வேலை செய்யும் இடத்திற்கு நான் செல்லவில்லை. கோணேஸ்வரன் விழுந்து விட்டதாக நண்பர் ஒருவர் குறுஞ்செய்தி அனுப்பியிருந்தார். கோணேஸ்வரனின் தொலைபேசிக்கு அழைப்பேற்படுத்தினேன். அது செயலிழந்திருந்தது. அவர் விழுந்திருந்த இடத்திற்கு நான் சென்று பார்க்கவில்லை. அந்த கோலத்தை என்னால் பார்க்க முடியாது என்றார்.

கோணேஸ்வரனுடன் பணிபுரிந்த சீனரான குவே நினி (47) என்பவர் சாட்சியமளிக்கையில்- அவர் எங்களுடன் வேலை செய்து கொண்டிருந்தார். சிறிதுநேரத்தில் அவரை காணவில்லை. நாம் செய்யும் வேலைகளிற்கு அவர் உதவிகள் செய்வார். அவர் புதியவர் என்பதால் அவரை அதிகம் வேலைகளில் ஈடுபடுத்துவது கிடையாது. அவர் விழுந்துள்ளதாக ஒருவர் சொன்னார். அதன்பின்னரே நடந்ததை அறிந்தோம் என்றார்.

கோணேஸ்வரனின் தந்தை சாட்சியமளிக்கையில்- எனக்கு நான்கு பிள்ளைகள். இறந்த மகன் குடும்பத்தில் மூத்தவர். வரும் ஓகஸ்டில் உயர்தர பரீட்சையில் தோற்ற இருந்தார். அவர் நண்பர்களின் வீடுகளில் தங்கித்தான் படித்தார். அவரது நண்பர் கொழும்பில் வேலை செய்கிறார்.

பாடசாலை விடுமுறையில் நண்பருடன் கொழும்பிற்கு சென்று அங்கு வேலை செய்தார். கடந்த 7ம் திகதி தொலைபேசியில் என்னுடன் பேசினார். விடுமுறை என்பதால் கொழும்பு வந்ததாக கூறினார். நான் அவரை கண்டித்து, வெள்ளிக்கிழமை வீட்டுக்கு வரும்படி கூறினேன். வெள்ளிக்கிழமை வருவதாக மகன் கூறினார்“ என்றார்.

Print Friendly, PDF & Email