Home Blog Page 274

ஊடகவியலாளரை விசாரணைக்கு அழைத்துள்ள பயங்கரவாதகுற்றத்தடுப்பு பிரிவு

image_pdfPRINT

பயங்கரவாத குற்றத்தடுப்பு விசாரணைப்பிரிவினரால் யாழ்ப்பாணத்தை சேர்ந்த ஊடகவியலாளர் உதயராசா சாளின் விசாரணைக்காக கொழும்பிற்கு அழைக்கப்பட்டுள்ளார்.

இன்று சனிக்கிழமை (11) காலை அவரது வீட்டுக்குச் சென்ற பயங்கரவாத குற்றத்தடுப்புப் பிரிவினர் கொழும்பு, இரண்டாம் மாடிக்கு வருமாறு அழைப்பு துண்டினை  கையளித்துள்ளனர்.

அத்துடன் ஆனைக்கோட்டை கண்ணகை அம்மன் ஆலய நிர்வாக சபை உறுப்பினர்கள் மற்றும் இளைஞர் மன்ற உறுப்பினர்கள் உட்பட ஐவருக்கும் இந்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

அந்தவகையில், எதிர்வரும் 16 ஆம் திகதி ஆலய உறுப்பினர்கள் விசாரணைக்காக அழைக்கப்பட்டுள்ள அதேவேளை இறுதியாக 22 ஆம் திகதி ஊடகவியலாளர் உ.சாளின் அழைக்கப்பட்டுள்ளார்.

ஆனைக்கோட்டை கண்ணகை அம்மன் ஆலயத் திருவிழா கடந்த யூன் மாதம் நடைபெற்றிருந்தது. இந்த திருவிழாவின் இறுதி நாளான பூங்காவான உற்சவத்தின் போது வடக்கு கிழக்கு மாகாணங்களை ஒன்றினைத்து தமிழீழ வரைபடத்தை ஒத்த அலங்காரத்தில் அம்மன் வலம் வந்திருந்தார்.

இது தொடர்பிலேயே விசாரணைக்காக ஊடகவியலாளர் உட்பட இந்து இளைஞர் மன்ற உறுப்பினர்கள், ஆலய நிர்வாக சபை உறுப்பினர்கள் மற்றும் ஆலய பூசகர் ஆகியோர் விசாரணைக்காக அழைக்கப்பட்டுள்ளனர்.

இதனிடையே குறித்த சம்பவம் தொடர்பில் காங்கேசன்துறை பொலிஸ் புலனாய்வுப் பிரிவினர், மானிப்பாய் மற்றும் யாழ்ப்பாணப் பொலிஸார் அத்தோடு கோப்பாய் இராணுவத்தினர் ஆகியோர் பல கட்ட விசாரணைகளை மேற்கொண்டுள்ளதாகவும், ஆலய நிர்வாகத்தினர் மற்றும் குறித்த பிரதேசத்தை சேர்ந்த மக்களையும் பல தடவைகள் பொலிஸ் நிலையங்களுக்கு அழைத்தும் விசாரணை மேற்கொண்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

ஆலய நிர்வாகத்தில் குறித்த ஊடகவியலாளர் இல்லாத போதிலும், இவ்வாறன சம்பங்களை பயன்படுத்தி ஊடகங்களை மிரட்டும் நடவடிக்கைகளை மீளவும் அரசு திட்டமிட்ட வகையில் களமிறங்கியுள்ளது.

ஆவா – தனு ரொக் குழுக்களுக்கிடையிலான மோதலே யாழில் வாள்வெட்டு சம்பவங்கள்

image_pdfPRINT

-பொலிசார் கூறியதாக முதலமைச்சர் தெரிவிப்பு

யாழில்.இடம்பெற்று வரும் வாள் வெட்டு சம்பவங்கள் இரண்டு குழுக்களுக்கு இடையிலான மோதல் சம்பவங்களே என தன்னிடம் பொலிசார் தெரிவித்துள்ளதாக வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

முதலமைச்சர் இல்லத்தில் பொலிசாருடன் நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை நடைபெற்ற சந்திப்பை தொடர்ந்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவ்வாறு தெரிவித்தார்.

அது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில் ,

யாழில்.இயங்கும் ஆவா மற்றும் தனு ரொக் குழுக்களுக்கு இடையில் ஏற்பட்டுள்ள மோதல் சம்பவங்களே வாள் வெட்டு சம்பவங்களுக்கு காரணம் என பொலிசார் எனக்கு தெரிவித்தனர்.

அத்துடன் குறித்த குழுவில் உள்ளவர்களின் ஒளிப்படங்கள் , அவர்கள் வைத்திருக்கும் ஆயுதங்களின் ஒளிப்படங்கள் , அவர்களிடம் இருந்து கைப்பற்றப்பட்ட வாகனங்களின் ஒளிப்படங்கள் எனபவற்றை எனக்கு காட்டினார்கள்.

தற்போது குறித்த குழுக்களின் செயற்பாடுகளை தாம் கட்டுக்குள் கொண்டு வந்துள்ளதாகவும் , பொதுமக்களும் பொலிசாரும் இணைந்து சிவில் பாதுகாப்பு குழுக்களை அமைப்பதற்கு இணக்கம் கண்டுள்ளதாகவும் பொலிசார் தெரிவித்துள்ளனர்.

அதேவேளை வன்முறை சம்பவங்கள் தொடர்பில் , பொலிசாரினால் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைள் குறித்து வாராந்தம் அறிக்கை சமர்பிக்க வேண்டும் என பொலிசாரிடம் கூறியுள்ளேன் என மேலும் தெரிவித்தார்.

யாழ். ரமணனின் மறைவுக்கு ஆளுநர் இரங்கல்

image_pdfPRINT

விடுதலைப்புலிகளின் பல புரட்சி பாடல்களுக்கு இசையமைத்தவரும்,  ஈழத்து இசை கலைஞருமான யாழ்.ரமணன் என அழைக்கப்படும் இராஜேந்திரன் இராஜேஸ்வரனின் மறைவுக்கு வடமாகாண ஆளூநர்   றெஜினோல்ட் குரே இரங்கல் தெரிவித்து ஊடகங்களுக்கு அறிக்கை விடுத்துள்ளார்.

குறித்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டு உள்ளதாவது , 

நீதித்துறையில் மட்டுமல்ல இசைத்துறையிலும் ஊடகத்துறையும் சாதனை படைத்த அமரர் இராஜேந்திரன் இராஜேஸ்வரன் (ரமணன்) மரணமடைந்த செய்தி யாழ் குடாநாட்டினை மட்டுமல்ல உலகெங்கும் பரந்து வாழும் தமிழ் மக்களையும் இசை ரசிகர்களையும் ஆழ்ந்த துயரத்தில் ஆற்றியுள்ளது.

ஒரு மனிதன் ஒரு துறையினையே சரிவர கையாள்வதற்கு முடியாது உள்ள தற்போதய காலத்தில் கலைஞனாக, சட்டத்தரணியாக, ஊடகவியலாளராக மூன்று துறைகளிலும் செயலாற்றி “யாழ் ரமணன்” என்றால் உலகம் அறியும் வகையில் திகழ்ந்த ஒரு நல்ல மனிதனை தமிழ் சமூகம் இழந்து இருக்கின்றது.

ஏராளமான பாடல்களுக்கு இசை அமைத்த ரமணன் ராஜன்ஸ் இசைக்குழுவின் இயக்குனராக இருந்து வடமாகாணத்தின் பல பகுதிகளிலும் இசை நிகழ்ச்சிகளை நடாத்திய பெருமைக்கு உரியவர் இலங்கை இந்திய பிரபல்யமான கலைஞர்களுக்கு இசை அமைத்த பெருமையையும் அவரையே சாரும். சிறந்த கலைஞர்களை உருவாக்கிய பெருமைக்கு உரிய ரமணனின் இழப்பு கலைத்துறைக்கு பேரிழப்பாகும்.

வடமாகாண ஆளுநர் என்ற ரீதியில் மட்டுமல்ல நானும் ஒரு கலைஞன் என்ற வகையில் சக கலைஞனின் இழப்பினால் துயர் உற்று இருக்கும் அன்னாரின் குடும்பத்தினர், நண்பர்கள் இசைப்பிரியர்கள் அனைவருக்கும் எனது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக் கொள்வதோடு அன்னாரின் ஆத்மா சாந்தி அடைய இறைவனை பிராத்திக்கின்றேன் என குறிப்பிடப்பட்டு உள்ளது.


திருமுருகன் காந்தி கைதை கண்டித்து யாழில் ஆர்ப்பாட்டம்

image_pdfPRINT

திருமுருகன் காந்தி உள்ளிட்டவர்கள் கைது செய்யப்பட்டமையினை கண்டித்து தமிழ்தேசிய மக்கள் முன்னணியின் ஒழுங்கமைப்பில் இன்று மாலை யாழ்.நகரில் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று நடத்தப்பட்டது.

ஈழ தமிழர்கள் மீது இடம்பெற்ற இன அழிப்புக்கான சர்வதேச நீதிகோரி ஐ.நா மனித உரிமைகள் பேரவைக்கு சென்று வலியுறுத்தி வருவதுடன், தமிழக மக்களுடைய உரிமைகளுக்காக தொடர்ந்து குரல் கொடுத்தும் வரும் திருமுருகன் காந்தி தூத்துக்குடியில் தமிழக மக்களுடைய பிரச்சினைகளுக்காக போராடியமைக்காக கைது செய்யப்பட்டுள்ளார். அவருடைய கைதை கண்டித்தே போராட்டம் நடாத்தப்பட்டுள்ளது.

இதன்போது “இந்திய அரசசே அரச பயங்கரவாதத்தை நிறுத்து”, “இந்திய அரசே தூத்துக்குடியில் நீதிகேட்டு போராடிய அனைத்து செயற்பாட்டாளர்களையும் விடுதலை செய்”, போன்ற கோஷங்களை எழுப்பியவாறும் பதாகைகளை தாங்கியவாறும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த போராட்டத்தில் பொதுமக்கள் தமிழ்தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மற்றும் கட்சி உறுப்பினர்கள் கலந்து கொண்டுள்ளனர்.

ஐ.நா. வின் புதிய ஆணையாளராக சிலியின் முன்னாள் ஜனாதிபதி

Michele Bachelet, Presidente of Chile speaks during Special Session of the Human Rights Council. 29 March 2017.
image_pdfPRINT

ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையகத்தின் புதிய ஆணையாளராக சிலி நாட்டின் முன்னாள் ஜனாதிபதி மிசெல் மிசெல் பாச்ஷேலெட் நியமிக்கப்பட்டுள்ளார்.

இன்று வெள்ளிக்கிழமை ஐ.நா. பொதுச் சபை கூடிய போது இந்த நியமனத்திற்கு அங்கீகரிக்காரம் வழங்கப்பட்டுள்ளது.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் தற்போதைய ஆணையாளராக இருக்கும் செய்யித் ராத் அல் ஹுஸைன் இந்த மாத இறுதியில் பதவி விலகுவதாக அறிவித்துள்ள நிலையிலேயே இந்தப் புதிய நியமனம் வழங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் எதிர்வரும் செப்டம்பர் மாதம் முதலாம் திகதி அமுலுக்கு வரும் வகையில் புதிய தலைவர் மிசெல் பாச்ஷேலெட் தனது கடமைகளை ஆரம்பிப்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

வடமாகாண சபை உறுப்பினர் ரவிகரன் கைது

image_pdfPRINT

வடமாகாண சபை ஆளும் கட்சி உறுப்பினர் து. ரவிகரன் முல்லைத்தீவு பொலிசாரினால் இன்று வெள்ளிக்கிழமை மாலை கைது செய்யப்பட்டுள்ளார்.

முல்லைத்தீவு கடற்தொழில் நீரியல் வளத்துறை அலுவலகத்தின் ஜன்னல் கண்ணாடிகள் உள்ளிட்ட அரச சொத்துக்களை சேதமாக்கிய குற்ற சாட்டின் கீழ் கைது செய்யபட்டுள்ளதாக முல்லைத்தீவு பொலிசார் தெரிவிக்கின்றனர்.

முல்லைத்தீவு மாவட்டத்தில் ,சட்டவிரோத மீன் பிடியில் ஈடுபட்டுள்ள தென்னிலங்கை மீனவர்களை வெளியேற்றுமாறும் , அவர்களின் சட்டவிரோத தொழில் நடவடிக்கையை தடுக்க கோரியும் முல்லைத்தீவு மாவட்ட மீனவர்கள் பெரும் கண்டன போராட்டம் ஒன்றினை கடந்த 02ஆம் திகதி முன்னெடுத்திருந்தனர்.

குறித்த பேரணி முல்லைத்தீவு மாவட்ட கடற்தொழில் நீரியல் வளத்துறை அலுவலகத்தை சென்றடைந்து , அலுவலகத்தை முற்றுகையிட்டு மீனவர்கள் போராட்டத்தை முன்னெடுத்தனர்.

அதன் போது நீரியல் வளத்துறை அதிகாரிகள் தம்மை சந்தித்து தமது கோரிக்கைகளை கேட்க வேண்டும் என மக்கள் குரல் எழுப்பினார்கள். அதன் போது அதிகாரிகள் மக்களை சந்திக்க வராததால் பொறுமை இழந்த மக்கள் பொலிஸ் தடைகளை மீறி அலுவலகத்திற்குள் உட்புக முயன்றனர்.

அதன் போது ஏற்பட்ட குழப்பத்தில் அலுவலகத்தின் கண்ணாடிகள் , வேலிகள் என்பன சேதமடைந்தன. அது தொடர்பில் நீரியல் வளத்துறை அதிகாரிகள் முல்லைத்தீவு பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்தனர்.

முறைப்பாட்டின் பிரகாரம் விசாரணைகளை முன்னெடுத்த முல்லைத்தீவு பொலிசார்,  இன்றைய தினம் வெள்ளிகிழமை வடமாகாண சபை ஆளும் கட்சி உறுப்பினர் து. ரவிகரனை நீரியல் வளத்துறை அலுவலகம் சேதமாக்கப்பட்டமை தொடர்பிலான விசாரணைக்கு என அழைத்திருந்தனர்.

அந்நிலையில் இன்றைய தினம் விசாரணைக்கு சென்ற உறுப்பினர் ரவிகரனை விசாரணைகளின் பின்னர் பொலிசார் கைது செய்துள்ளனர்.

மேலதிக விசாரணைகளின் பின்னர் முல்லைத்தீவு நீதிவான் நீதிமன்ற நீதிவான் முன்னிலையில் முற்படுத்த நடவடிக்கை எடுப்போம் என பொலிசார் தெரிவித்தனர்.

ஆளுங்கட்சிக்குள் எதிர்க்கட்சி ; வெளியேறினர் எதிர்க்கட்சியினர்

image_pdfPRINT

வடமாகாணசபையில் ஆளுங்கட்சிக்குள்ளேயே எதிர்கட்சி இருப்பதால் நாங்கள் சபையில் இருக்க வேண்டிய அவசியம் இல்லை. என கூறிய எதிர்கட்சி உறுப்பினர்கள் சிலர் சபையிலிருந்து வெளிநடப்பு செய்திருந்த நிலையில், அமைச்சர்சபை குறித்து தீர்மானம் ஒன்று எடுக்கப்பட்டு முதலமைச்சர் மற்றும் ஆளுநருக்கு அனுப்பி வைப்பதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

வடமாகாணசபையின் 129வது அமர்வு நேற்றைய தினம் பேரவை செயலகத்தின் சபா மண்டபத்தில் நடைபெற்றிருந்தது. இதன்போது மாகாண அமைச்சர்கள் குறித்த கருத்து ஒன்றை எதிர்கட்சித் தலைவர் சி.தவராசா சபைக்கு முன்வைத்தார். அதனை தொடர்ந்து ஆளுங்கட்சி உறுப்பினர்கள் சிலர் தொடர்ந்து கருத்துக்களை கூறிக்கொண்டிருந்தனர்.

இதனையடுத்து சபையில், எதிர்கட்சி உறுப்பினர் அலிக்கான் ஷெரிவ் எழுந்து இந்த அவையில் ஆளுங்கட்சிக்குள்ளேயே எதிர்கட்சி இருப்பதனால் எதிர்கட்சியினராகிய நாங்கள் இந்த சபையில் இருக்கவேண்டிய அவசியம் இல்லை. ஆகவே நாங்கள் இந்த சபையிலிருந்து வெளிநடப்பு செய்கிறோம். என கூறினார்.

இதனையடுத்து எதிர்கட்சி தலைவர் சி.தவராசா உள்ளிட்ட எதிர்கட்சி உறுப்பினர்கள் சிலர் சபையிலிருந்து வெளிநடப்பு செய்தனர்.

எனினும் 2 எதிர்கட்சி உறுப்பினர்கள் தொடர்ந்தும் சபையில் இருந்தனர். அதனையடுத்து வடமாகாண அமைச்சர்கள் விவகாரம் குறித்து இறுதியான தீர்மானம் ஒன்றை எடுக்கவேண்டும். என கூறிய அவை தலைவர் அரசியலமைக்கு அமைவாக அமைச்சர்கள் தொடர்பில் தீர்மானம் ஒன்றை எடுக்கவேண்டும் என முதலமைச்சர் சீ.வி.விக்னேஷ்வரன் மற்றும் ஆளுநர் றெஜினோல்ட் கூரே ஆகியோரை கோருவதென தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

நல்லூரில் 30 கமராக்கள்; ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது

image_pdfPRINT

வரலாற்று சிறப்பு மிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலய மகோற்சவ காலத்தில் ஆலய சுற்றாடலை கண்காணிப்பதற்காக 30 சி.சி.ரி.வி. கமராக்கள் பொருத்தப்படவுள்ளதாக , யாழ்.மாநகர சபை வட்டார தகவல்கள் தெரிவிகின்றன.

நல்லூர் ஆலய மகோற்சவம் எதிர்வரும் 16ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி , தொடர்ந்து 25 நாட்கள் மகோற்சவ திருவிழாக்கள் நடைபெறவுள்ளன.

மகோற்சவ காலத்தில் உள்நாட்டில் பல பாகங்களில் இருந்தும் வெளிநாடுகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொள்வார்கள் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.

இந்நிலையில் ஆலய சுற்றாடலில் குற்ற செயல்கள் இடம்பெறாதவாறும் , ஏனைய விடயங்களை கண்காணிக்கும் நோக்குடனும் 30 அதிசக்தி வாய்ந்த சி.சி.ரி.வி. கமராக்கள் பொருத்தப்படவுள்ளன.

அத்துடன் ஆலய சூழலில் மாநகர சபையின் சிறப்பு சேவை நிலையம் , பரியோவான் முதலுதவி படை பிரிவு ,செஞ்சிலுவை சங்கம் , சாரணர்களின் சேவை நிலையங்களும் ஆலய சுற்றாடலில் அமைக்கப்பட உள்ளன.

இதேவேளை பக்தர்கள் இளைப்பாறும் கொட்டகைகள் ஆலய சூழலில் அமைக்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கபட்டு வருகின்றன. அத்துடன் ஆலய சுற்றாடல் வீதிகளில் அதிக ஒளி தர கூடிய வீதி மின் விளக்குகள் பொருத்தும் நடவடிக்கையும் முன்னெடுக்கப்பட்டு உள்ளது.

நினைவுதூபிக்கு பின்னாலுள்ள பிரமாண்ட விளம்பரத்தை அகற்ற கோரிக்கை

image_pdfPRINT

நல்லூரில் தியாக தீபம் திலீபனின் நினைவுத்தூபி அமைந்துள்ள இடத்தில் காட்சிப்படுத்தப்பட்டுள்ள விளம்பரப்பலகையை அகற்ற நடவடிக்கை எடுக்குமாறு யாழ். முhநகரசபையிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

நினைவுதூபி அமைந்துள்ள பகுதியின் புனிதத்தன்மையை பேணும்பொருட்டே குறித்த பிரமாண்ட விளம்மபப்பலகையை அகற்றுமாறு தமிழ் தேசிய மக்கள் முன்னணி சார்பு யாழ்.மாநகர சபை உறுப்பினர் வரதராஜன் பாத்திபன் இன்று மேற்படி கோரிக்கை கடிதத்தை யாழ். மாநகர சபைக்கு அனுப்பி வைத்துள்ளார்.

நினைவுதூபியின் புனிதத்தன்மையை பேணும் பொருட்டு நேற்றய தினம் தூபினை சுற்றி கம்பி வேலிகள் அமைக்கப்பட்ட நிலையிலேயே இன்று விளம்பரபலகையை அகற்றவும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

திலீபனின் நினைவுத்தூபிக்கு பின்னால்; அமைக்கப்பட்டுள்ள குறித்த பிரமாண்ட விளம்பர பலகை அவ்விடத்தின் புனிதத்தன்மைக்கு இடையூறு எற்படுத்துவதாக உள்ளது என மக்களலும் பிரதிநிதிகளாலும் பலதடவைகள் விசனம் வெளிப்படுத்தப்பட்டு வந்தமை குறிப்பிடத்தக்கது.

தியாக தீபம் திலீபனின் நினைவிட புனிதத்தை பேண பாதுகாப்பு

image_pdfPRINT

நல்லூரில் அமைந்துள்ள தியாக தீபம் திலீபனின் நினைவிடத்தினை சுற்றி பாதுகாப்பு வேலிகள் யாழ்.மாநகர சபையினால் அமைக்கப்பட்டு உள்ளது.

நல்லூர் ஆலயத்திற்கு அருகாமையில் பருத்தித்துறை வீதியில் அமைந்திருந்த தியாக தீபம் திலீபனின் நினைவிடம் போர்க் காலத்தில் இராணுவத்தினரால் உடைத்து அழிக்கப்பட்டு இருந்தது.

அந்நிலையில் அழிக்கப்பட்ட நினைவிடத்தில் எஞ்சியுள்ள பகுதியில் கடந்த காலத்தில், திலீபனின் நினைவு தின வாரத்தில்  அஞ்சலி நிகழ்வுகள் இடம்பெற்று வந்தன.

நினைவு தினம் நிறைவடைந்த பின்னர் , நினைவிடத்தினை பாதுகாப்பது இல்லை என அதனால் அதன் புனித தன்மை இல்லாமல் போவதாகவும் குறிப்பாக நல்லூர் ஆலய மகோற்சவ காலங்களில் அவ்விடத்தில் வியாபாரத்தில் ஈடுபடுவோர் , ஆலயத்திற்கு வருவோர் நினைவிடத்தின் புனித தன்மையை பேணாது நடப்பதாக பரவலான குற்றசாட்டுக்கள் எழுந்திருந்தன.

இந்நிலையில் எதிர்வரும் 16 ஆம் திகதி நல்லூர் ஆலய மகோற்சவம் ஆரம்ப மாக உள்ள நிலையில் திலீபனின் நினைவிடத்தின் புனித தன்மையை பேணும் நோக்குடன் மாநகர சபையினால் , நினைவிடத்தினை சுற்றி பாதுகாப்பு வேலிகள் அமைக்கப்பட்டு உள்ளன.

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் யாழ்.மாநகர் சபை உறுப்பினர் வ. பார்த்திபன் நினைவிடத்தினை சுற்றி வேலி அமைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்து இருந்தமை குறிப்பிடத்தக்கது.

கொள்ளையில் ஈடுபடும் பொலிசார்

image_pdfPRINT

-வடமாகாணசபை உறுப்பினர் ஜவாஹிர்

சட்டரீதியான அனுமதிகள் வழங்கப்பட்டு, சீருடைகள் வழங்கப்பட்டு வீதியில் நிற்கும் சில பொலிஸார், கொள்ளையர்கள் போன்று செயற்படுவதனையும் ,  லஞ்சம் பெறுவதனையும்  நிறுத்தும் வரை வடமாகாணத்தில் வீதி விபத்துக்களையும், அதனால் உண்டாகும் பாரிய உயிர் சேதங்களையும் ஒருபோதும் தடுக்க இயலாது என வடமாகாணசபை உறுப்பினர் ஜவாஹிர் தெரிவித்தார்.

வடமாகாணசபையின் 129வது அமர்வு நேற்றைய தினம் வியாழக்கிழமை பேரவை செயலகத்தின் சபா மண்டபத்தில் நடைபெற்றது.

அதன்போது அவை தலைவர் சீ.வி.கே.சிவஞானம் பிரேரணை ஒன்றை சபையில் சமர்பித்தார். குறித்த பிரேரணையை சமர்பித்து அவை தலைவர் உரையாற்றுகையில்,

ஏ.9 வீதியில் இரவு நேரங்களில் நிறுத்திவைக்கப்படும் வாகனங்களினால் அதிகளவு வாகன விபத்துக்கள் இடம்பெறுகின்றன. கடந்த சில நாட்களுக்கு முன்னரும் கூட வெளிநாட்டிலிருந்து வந்தவர்கள் வீதியில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த வாகனத்துடன் மோதி விபத்துக்குள்ளானதில் சிலர் உயிரிழந்திருக்கிறார்கள்.  இவ்வாறு பல சம்பவங்கள் இடம்பெற்றிருக்கின்றன.

இது தொடர்பாக வவுனியா, யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களுக்கான பிரதி பொலிஸ்மா அதிபர்கள் கவனம் செலுத்தி வாகனங்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளமை தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் எனவும், உள்ளுராட்சி மற்றும் போக்குவரத்து அமைச்சர் என்றவகையில் வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் இந்த விடயம் தொடர்பாக கவனம் செலுத்தி வாகனங்களை தரித்து விடுவதற்கான இடங்களை உள்ளுராட்சி மன்றங்கள் ஊடாக எடுக்கவேண்டும் எனவும், வாகனம் பழுதடைந்தால் வீதியில் வாகனம் தரித்து விடப்பட்டுள்ளது. என்பதை அடையாளப்படுத்தும் வகையில் உரிய சமிக்ஞைகள் ஒளிரவிடப்படவேண்டும். எனவும் கூறினார்.

அதனை தொடர்ந்து கருத்து தெரிவித்த மாகாணசபை உறுப்பினர் ப.சத்தியலிங்கம்,

கிளிநொச்சி, யாழ்ப்பாணம் மாவட்டங்களை சேர்ந்த சாரதிகளே அதிகளவான விபத்துக்களை சந்திக்கிறார்கள். இதற்கு பிரதான காரணகளில் ஒன்றாக குறித்த சாரதிகள் சுமார் 16 மணித்தியாலங்களுக்கும் மேலாக ஓய்வு எடுக்காமல் தொடர்ந்தும் வாகனம் செலுத்துகிறார்கள். அதனால் நித்திரை கொள்வதாலேயே விபத்துக்கள் உண்டாகின்றன.

எனவே தூர பயணங்கள் மேற்கொள்ளும் தனியார் பயணிகள் வாகனங்களுக்கு 2 சாரதிகள் பயன்படுத்தவேண்டும் என்பதை சட்டமாக்க வேண்டும். மேலும் பயணிகளை ஏற்றி இறக்கும் பணியில் ஈடுபடும் ஹயஸ் வாகனங்களை பதிவு செய்யவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். அதனை போக்குவரத்து நியதிச்சட்டத்தின் கீழாவது பதியவேண்டும் என்றார்.

தொடர்ந்து மாகாணசபை உறுப்பினர் வி. தவநாதன் உரையாற்றுகையில் வடக்கில் கால்நடைகளாலேயே அதிகளவான விபத்துக்கள் இடம்பெறுவதாக சுட்டிக்காட்டினார்.

தொடர்ந்து மாகாணசபை உறுப்பினர் ஜவாஹீர் உரையாற்றுகையில்

சட்டரீதியாக அங்கீகரிக்கப்பட்டு, சீருடை வழங்கப்பட்டுள்ள சில  பொலிஸார் கொள்ளையர்கள் போன்று செயற்பட்டு ,  லஞ்சம் வாங்கும் வரை வீதி விபத்துக்களையும், அதனால் ஏற்படும் உயிரிழப்புக்களையும் தடுக்க இயலாது.

வெளிநாட்டில் இருந்து வருகிறவர்களிடம் லஞ்சம் வாங்குவதற்காக எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். சில ஹயஸ் வாகனங்களில் ஐந்திற்கும் மேற்பட்டவர்கள் பயணிக்கிறார்கள். ஆனால் சட்டத்தின்படி அவர்கள் அவ்வாறு பயணிக்க இயலாது. எனவே அதனை இறுக்கமாக நடைமுறைப்படுத்தவேண்டும் என்றார்.

யாழில் ஜோதிடர்கள் கைது

image_pdfPRINT

இந்தியாவில் இருந்து வருகை தந்து யாழில் தங்கியிருந்த 5 ஜோதிட கலைஞர்களை குடிவரவு திணைக்களம் அதிகாரிகள் இன்று (09) கைதுசெய்துள்ளனர்.

யாழ்.நகரில் உள்ள பிரபல தங்குமிடத்தில் வைத்தே இன்று நிலையத்தில் உள்ள குடிவரவு திணைக்கள அதிகாரிகள் ஐந்து பேரையும் கைதுசெய்துள்ளனர்.

இந்தியாவில் இருந்து வருகை தந்த இவர்கள் ஐந்து பேரும், கடவுச் சீட்டு காலம் நிறைவடைந்த பின்னரும் யாழில் தங்கியிருந்த குற்றச் சாட்டினர் பேரிலேயே கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட ஐந்து பேரையும், விசாரணையின் பின்னர் நீதிமன்றில் ஆஜர்ப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளவுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்

error: Content is protected !!