Home Blog Page 269

அய்யூப் அஸ்மீனின் கொடும்பாவி முஸ்லீம்களினால் யாழில் எரிப்பு

image_pdfPRINT

வடக்கு மாகாண சபை உறுப்பினர் அய்யூப் அஸ்மீனின் கொடும்பாவி யாழ்ப்பாண முஸ்லீம் மக்களினால் வீதியில் இழுத்து செல்லப்பட்டு எரியூட்டப்பட்டுள்ளது.

இன்றைய தினம்(7) மானிப்பாய் வீதியில் அமைந்துள்ள பெரிய முஹீதீன் ஜும்மா பள்ளிவாலில் இடம்பெற்ற தொழுகையின் பின்னர் ஒன்று கூடிய முஸ்லீம்கள் குறித்த மாகாண சபை உறுப்பினர் அண்மைக்காலமாக யாழ் முஸ்லீம் மக்கள் தொடர்பாக தெரிவித்து வரும் கருத்துக்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து இக்கொடும்பாவி எரிப்பில் ஈடுபட்டனர்.

இதன் போது இப்போராட்டத்தில் பங்கு பற்றிய மக்கள் வடக்கு மாகாண சபை உறுப்பினரனின் பதவிக்காலம் அடுத்த மாதம் நிறைவடைவதை இட்டு மீண்டும் தனக்கான அரசியலை மேற்கொள்ள வட பகுதி முஸ்லீம் மக்கள் குறித்து  முன்னுக்கு பின்னாக முரணான கருத்துக்களை நேரடியாகவும் ஊடகங்கள் வாயிலாகவும் பரப்பி வருவதாக குற்றம் சாட்டினர்.

எனவே தான் மாகாண சபை உறுப்பினர் இவ்விடயங்களில் இருந்து தவிர்ந்து கொள்ளுமாறு இப்போராட்டத்தில் கேட்டுக்கொண்டனர்.

சங்கிலி அறுத்த இராணுவ சிப்பாய்

image_pdfPRINT

வவுனியா நெடுங்குளம் பகுதியில் அமைந்துள்ள வீடொன்றினுள் அத்துமீறி நுழைந்து நகை அறுத்தார் எனும் குற்றசாட்டில் இராணுவ சிப்பாய் ஒருவர் வவுனியா பொலிசாரினால் கைது செய்யபட்டு உள்ளார்.

அது குறித்து மேலும் தெரியவருவதாவது,

வவுனியாவில் உள்ள அரச விடுதியில் தங்கியுள்ள அரச உத்தியோகஸ்தரை குறித்த இராணுவ சிப்பாய் சந்தித்து இலத்திரனியல் பொருள் ஒன்றினை வழங்கி அதனை விற்று தருமாறும் பின்னர் வந்து அதற்கு உரிய பணத்தினை பெற்றுக்கொள்வதாகவும் கூறி சென்றுள்ளார்.

பின்னர் நேற்று முன்தினம் இரவு செவ்வாய்கிழமை இரவு 10.30 மணியளவில் குறித்த விடுதியின் ஜன்னல் ஊடாக உட்புகுந்த இராணுவ சிப்பாய் அரச உத்தியோகஸ்தரின் சங்கிலி மற்றும் அவரின் பிள்ளையின் சங்கிலி என்பவற்றை அறுத்து சென்றுள்ளார்.

சங்கிலியை இராணுவ சிப்பாய் அறுத்து செல்லும் போது அவர்கள் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்துள்ளனர். தூக்கம் கலைந்த பின்னரே சங்கிலி அறுக்கப்பட்ட விடயம் தெரியவந்துள்ளது.

அதனை அடுத்து உத்தியோகஸ்தர் வவுனியா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்தார். அத்துடன் முதல் நாள் இலத்திரனியல் பொருளை விற்பனை செய்ய தந்த இராணுவ சிப்பாய் மீதே சந்தேகம் எனவும் பொலிஸ் நிலையத்தில் குறிப்பிட்டுள்ளார்.

அதனை தொடர்ந்து விசாரணைகளை முன்னெடுத்த பொலிசார் குறித்த இராணுவ சிப்பாயை நேற்றைய தினம் புதன்கிழமை கைது செய்து விசாரணைகளை முன்னெடுத்த போது அவரிடம் இருந்து சங்கிலி மீட்கப்பட்டு உள்ளது.

குறித்த சம்பவம் தொடர்பில் பொலிசார் மேலதிக விசாரனைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

யாழ். கல்வியங்காடு பகுதியில் வாள்வெட்டு; மூவர் வைத்தியசாலையில் அனுமதி

image_pdfPRINT

யாழ்ப்பாணம்- கல்வியங்காடு பகுதியில் இன்று காலை 6 மணியளவில் 3 வீடுகளுக்குள் புகுந்த வாள்வெட்டு குழு வீட்டில் இருந்தவர்கள் மீது தாக்குதல் நடாத்தியுள்ளது. இந்த தாக்குதலில் தந்தை, மகன் மற்றும் குடும்ப பெண் ஒருவரும் காயமடைந்து வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

குறித்த தாக்குதல் சம்வம் குறித்து பொலிஸார் கூறியுள்ளதாவது,

அடுத்தடுத்து மூன்று வீடுகளுக்குள் புகுந்த வாள்வெட்டுக் கும்பல் மூவர் மீது தாக்குதல் நடத்தியதுடன் வீடுகளிலுள்ள பொருள்களையும் சேதப்படுத்தி தப்பிச் சென்றுள்ளது.

ஒரு வீட்டில் குடும்பப் பெண் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. மற்றொரு வீட்டில் தந்தை மற்றும் மகன் மீது தாக்குதல் நடத்தப்பட்டது.

கல்வியங்காடு ஆடியபாதம் வீதியைச் சேர்ந்த வேலுப்பிள்ளை செல்வராசா (வயது 70) செல்வராசா சஜீபன் (வயது 25) பாலேந்திரன் சரோஜினிதேவி (வயது 61) ஆகிய மூவருமே படுகாயமடைந்த நிலையில் யாழ். போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

சம்பவங்கள் தொடர்பில் கோப்பாய்  பொலிஸ் பிரிவும் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

28 வருட காலத்தின் பின் படையினர் வசமிருந்து மயிலிட்டி கலைமகள் வித்தியாலம் விடுவிப்பு

image_pdfPRINT

இராணுவத்தின் உயர்பாதுகாப்பு வலயத்தினுள் கடந்த 28 வருடகாலமாக இருந்த மயிலிட்டி கலைமகள் வித்தியாலயம் உள்ளிட்ட சில பகுதிகள் இராணுவத்தினரால் இன்று உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டு உள்ளது.

யாழுக்கு அண்மையில் விஜயம் மேற்கொண்ட ஜனாதிபதி மைத்திரி பால சிறிசேனா குறித்த பாடசாலையை மிக விரைவில் மீள கையளிக்க நடவடிக்கை எடுப்பேன் என உறுதி அளித்திருந்தார்.
அதன் பிரகாரம், இன்றைய தினம் வியாழக்கிழமை மயிலிட்டி கலைமகள் வித்தியாலயம் உள்ளிட்ட சில பகுதிகள் இராணுவத்தினரால் விடுவிக்கபப்ட்டு உள்ளது.
மயிலிட்டியில் நடைபெற்ற அந்நிகழ்வில் , யாழ் மாவட்ட இரானுவ கட்டளை  தளபதி மேஜர் ஜெனரல் தர்சன கெட்டியாராச்சி யாழ் மாவட்ட அரச அதிபர் நாகலிங்கம் வேதநாயகத்திடம் கையளித்தார்.
மேலும் பாடசாலை மாணவர்களுக்கு அரச அதிபர் மற்றும் இரானுவத் தளபதி ஆகியோரால் கற்றல் உபகரணங்களும் வழங்கி வைக்கப்பட்டன.
 இந் நிகழ்வில் வட மாகாண கல்விப் பணிப்பாளர்,இராணுவ உயர் அதிகாரிகள், அரச அதிகாரிகள், வலி வடக்கு பிரசே செயலர், பிரதேச சபைத் தவிசாளர், உறுப்பினர்கள்  பொது மக்கள் எனப் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

நீதி கோரி பிரித்தானிய நாடாளுமன்றத்தினுள் திரண்ட தமிழர்

image_pdfPRINT

காணாமல் ஆக்கப்பட்டோருக்கான அனைத்துலக நாள் நிகழ்வில் பிரித்தானிய நாடாளுமன்றில் ஒன்று திரண்ட தமிழர் சர்வதேசத்தின் நீதியை கோரிநின்றனர்.

காணமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்கு நீதி கோரியும் தமிழ் மக்களுக்கு எதிராக நடத்தப்பட்ட இனப்படுகொலைக்கு இலங்கை அரசை பொறுப்புகூற பிரித்தானிய அரசை வலியுறுத்தியும் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் ஏற்பாட்டில் காணாமல் ஆக்கப்பட்டோருக்கான அனைத்துலக நாள் மாநாடொன்று பிரித்தானிய நாடாளுமன்றத்தில் நேற்று நடைபெற்றது.

நாடாளுமன்ற கட்டட அறையில் மாலை ஆரம்பமான குறித்த மாநாட்டை பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர் Siobhain McDonagh (தமிழருக்கான அனைத்துக்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்) ஆரம்பித்து வைக்க நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் மனித உரிமைகள் அமைச்சர் மணிவண்ணன் பத்மநாதன் தொடர்ந்து வழிநடத்திச்சென்றார்

பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர்களான Paul Scully  MP, Joan Ryan MP,  Jim Cunningham MP, Sir Edward Davey Mp, Sir David Amess Mp மற்றும் சர்வதேச மனி உரிமை செயற்பாட்டாளர்கள் சட்ட வல்லுனர்கள் தமிழ் அமைப்புக்களின் பிரதிநிதிகள் செயற்பாட்டாளர்கள் என பலர் கந்து கொண்ட இம் மாநாட்டில் இலங்கையில் காணாமல் செய்யப்பட்டோர் தொடர்பான பல விடயங்கள் ஆராயப்பட்டன.

இலங்கையில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள காணமால் ஆக்கப்பட்டோருக்கான அலுவலகம் (OMP) பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதியை பெற்றுக்கொடுக்குமா ? இலங்கை அரசு அதிகாரத்தை பயன்படுத்தி காணாமல் செய்யப்பட்டோர் மற்றும் இனப்படுகொலை ஆகிய விடயங்களின் கீழ் இந் நிகழ்வில் உரைகள் நிகழ்த்தப்பட்டன.

இதேவேளை இலங்கை அரசாங்கத்தினால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் உறவுகளை தொலைத்த சிலரது நேரடி சாட்சிகளும் இதில் பகிரப்பட்டது. குறித்த சாட்சியங்களை பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அதிதிகள் முன் வெளிப்படுத்திய ICPPG நிறைவேற்று பணிப்பாளர் அம்பிகை சீவரத்தினம், இவர்களுக்கான பதிலை பிரித்தானிய அரசோ ஐ.நா. வோ விரைந்து பெற்றுக்கொடுக்க முடியும் என்ற கேள்வியை முன்வைத்தார்.

அதேவேளை நேரடி சாட்சியங்கள் பலர் இன்றும் இலங்கை அரசினால் தேடப்படுபவர்களாகவே இருக்கிறார்கள் எனவும் அவர் குறிப்பிட்டார்.

இறுதியாக இந்நிகழ்வில் பொறுப்புக்கூறலை மறுத்து வரும் இலங்கை அரசை குற்றவியல் நீதிமன்றில் நிறுத்தும் பிரேரணையை பிரித்தானிய நாடாளுமன்றம் நிறைவேற்ற முன்பிரேரணையை கொண்டுவரும் பொருட்டில் ஆரம்பிக்கப்பட்டுள்ள கையெழுத்து மனுவில் அனைவரையும் கையொப்பமிட இம்மாநாட்டில்கோரிக்கை விடுக்கப்பட்டது.

இலங்கை அரசு குற்றவியல் நீதிமன்றில் நிறுத்தப்படவேண்டும்!

image_pdfPRINT

பிரித்தானிய பாராளுமன்றில் ரமேஷ்கரன் தெரிவிப்பு

இறுதி யுத்தத்தின் போது இலங்கை இராணுவத்தினரால் பிடித்து செல்லப்பட்ட தனது சகோதரன் தொடர்பில் இதுவரை எந்த தகவலும் தெரியாது என சாட்சியமளித்த ரமேஷ்கரன் மாணிக்கம் இலங்கை அரசிற்கு எதிராக சர்வதேச ரீதியில் வழக்குகள் தொடரவும் சாட்சியங்கள் அளிக்கவும் தயாராக உள்ளதாக என தெரிவித்தார்.

காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்கான நீதி கோரியும் தமிழ் மக்கள் மீதான இனப்படுகொலைக்கு இலங்கை அரசின் பொறுப்புக்கூறலை வலியுறுத்தக்கோரியும் பிரித்தானிய பாராளுமன்றில் இன்று நடைபெற்ற காணாமல் ஆக்கப்பட்டோருக்கான அனைத்துலக நாள் மாநாட்டில் கலந்து கொண்டு சாட்சியம் அளித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,

இலங்கையில் நடைபெற்ற இறுதி யுத்தத்தின் போது எனது சகோதரன் சிறிலங்கா படையினரால் கைது செய்யப்பட்டு கொண்டுசெல்லப்பாட்டார். அதன் பின்னர் அவர் தொடர்பில் இதுவரையில் நாங்கள் எந்த தகவலையும் பெறமுடியாது உள்ளோம். இலங்கை அரசு எம்மை தொடர்ந்து எமாற்றி வருகின்றது. காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான அலுவலகம் மீதும் எமக்கு நம்பிக்கை இல்லை. அது சர்வதேசத்துக்கான இலங்கை அரசாங்கத்தின் கண்துடைப்பே.

எனவே இலங்கை அரசு எனது சகோதரன் தொடர்பில் பதில் தரும் வரை நான் எங்கு வேண்டுமானாலும் அரசுக்கு எதிராக சாட்சியமளிக்கவோ வழக்கு தொடரவோ தயாரகா உள்ளேன். காணாமல் ஆக்கப்பட்டோர் விடயத்தில் இழுத்தடிப்பு செய்யும் அவர்கள் சர்வதேச குற்றவியல் நீதிமன்றில் நிறுத்தப்படவேண்டும் என அவர் தெரிவித்தார்.

அங்கு அவர் அளித்த சாட்சியத்தின் ஒருபகுதி பின்வருமாறு ,

https://www.youtube.com/watch?v=oEQ4-60VJVU&feature=youtu.be

இலங்கைக்கான ஆயுத விற்பனையை நிறுத்தும் ஈ.டி.எம். மனுவில் கையொப்பமிட்டார் வெஸ் ரீட்டிங்

image_pdfPRINT

செயற்பாட்டாளர் றேமியன் ரூபராஜனின் முயற்சிக்கு கிடைத்த வெற்றி

இலங்கையுடனானா ஆயுத விற்பனையை பிரித்தானியா நிறுத்தவெண்டுமென்ற கோரிக்கையை ஏற்கொண்ட பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர் Wes Streeting நாடாளுமன்ற விவாத முன்பிரேரணைக்கான (Early Day Motion) மனுவில் கையொப்பமிட்டுள்ளார்.

செயற்பாட்டாளர் றேமியன் ரூபராஜன் மின்னஞ்சல் மூல னின் மின்னஞ்சல் மூல கோரிக்கையை ஏற்று கொண்டே அவர் குறித்த பிரேரணைக்கான மனுவிலும் நேற்றதினம் கையொப்பமிட்டுள்ளார்.

இல்போர்ட் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் Wes Streeting யை கடந்த டிசம்பர் மாதம் சந்தித்திருந்த றேமியன் ரூபராஜன், இலங்கைக்கான பிரித்தானியாவின் ஆயுத விற்பனை குறித்தும் அதனால் தமிழ் மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் குறித்தும் எடுத்துக்கூறி பிரித்தானியாவின் இலங்கைக்கான ஆயுத விற்பனையை தடைசெய்ய அரசை வலியுறுத்த கோரிக்கை விடுத்திருந்தார்.

இதனிடையே குறித்த விவகாரம் தொடர்பில் பிரித்தானிய நாடாளுமன்றில் முன்பிரேரணை கொண்டுவர கையெழுத்து மனு ஒன்று பாராளுமன்ற உத்தியோகபூர்வ இணையத்தளத்தில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையிலேயே குறித்த மனுவிற்கு ஆதரவு வழங்குமாறு Wes Streeting க்கு றேமிஜன் மின்னஞ்சல் ஒன்றினை அனுப்பிவைத்திருந்தார்.

இதனையடுத்து குறித்த மின்னஞ்சலுக்கு பதில் அளித்த நாடாளுமன்ற உறுப்பினர், வடக்கு கிழக்கு பிரதேசங்களில் 2 இலட்சத்திற்கு அதிகமான இராணுவத்தினரும் பொலிஸார் மற்றும் பயங்கரவாத தடுப்பு பிரிவினர் நிலைகொண்டுள்ளதால் அது அங்கு வாழும் தமிழ் மக்களுக்கு பெரும் அச்சுறுத்தலாக அமையும் என்பதை தான் உணருவதாகவும். எனவே முன்பிரேரணை மனுவில் கையொப்பமிடுவதாகவும் தெரிவித்திருந்தார்.

அந்தவகையில் நேற்றுதினம் முன் பிரேரணைக்கான இணையத்தள மனுவில் நாடாளுமன்ற உறுப்பினர் Wes Streeting கையொப்பமிட்டுள்ளார்.

ஐ.நா ஆயுதவர்த்தக ஒப்பந்தத்தில் மனித உரிமைகளை மீறும் நாடுகளுக்கு ஆயுத விற்பனைகளை செய்வதில்லையென கைச்சாத்திட்ட பிரித்தானியா, தமிழினப்படுகொலை செய்த பேரினவாத இலங்கை அரசுக்கு தொடர்ச்சியாக ஆயுதவிற்பனை செய்துவருகின்றது.

அந்தவகையில் இதனை தடுத்துநிறுத்தும் முயற்சியில் தமிழ் தகவல் நடுவத்துடன் இணைந்து பிரித்தானியா வாழ் தமிழ் இளையோர் சுமார் 6 மாத காலங்களைக்கடந்து தொடர் போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர்.
இதன் பலனாககவே  குறித்த விவகாரம் பாராளுமன்ற விவாதத்திற்குட்படுத்தும் முன்பிரேணைக்கான (EMD) 1480 எனும் இலக்கத்தை கொண்ட வாக்குகோரும் தளம் ஒன்று பாராளுமன்ற இணையத்தளத்தில் இணைக்கப்பட்டுள்ளது.

ஆறுமாதகாலமாக தேடப்பட்டு வந்த ஆவா குழு உறுப்பினர் யாழில் கைது

image_pdfPRINT

ஆறு மாதமாக யாழ் பொலிசாரால் தேடப்பட்டுவந்த சட்டவிரோத வாள்வெட்டு கும்பலான ஆவா குழுவின் முக்கிய உறுப்பினர் நேற்று மாலை மானிப்பாய் பொலிசாரால் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார்.

கொக்குவில் பகுதியை சேர்ந்த குமாரசாமி நிலோஜன் என்னும் 23 வயதுடைய இந்த நபரை பொலிசார் கடந்த ஆறு மாதகாலமாக தேடிவந்ததால் இவர் கிளிநொச்சி,முல்லைத்தீவு ஆகிய பகுதிகளில் கடந்த ஆறுமாதங்களாக தலைமறைவாக இருந்துவந்துள்ளார்.

இவர் ஆவா குழுவின் தனுரொக் என்பவருடன் நெருங்கி செயற்பட்டதுடன் யாழ் குடாநாட்டில் இடம்பெற்ற பல்வேறு வாள்வெட்டு வன்முறை சம்பவங்களுடன் இந்த இளைஞனுக்கு தொடர்புள்ளதாக பொலிசார் தெரிவித்தார்.

தற்போது கொக்குவிலில் உள்ள தனது காதலியை பார்ப்பதற்கென நேற்று வருகை தந்தபோது மானிப்பாய் பொலிசாரால் புகையிரத நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டார்

இந்நபர் வருவதை இரகசிய தகவலொன்றின் மூலம் அறிந்துகொண்ட மனிப்பாய் பொலிசார் விரைவாக செயற்பட்டு இவரை கைது செய்ததுடன் இவரிடமிருந்து கூரிய ஆயதம் ஒன்றையும் பறிமுதல் செய்துள்ளனர்.

இவர் இன்று யாழ் மல்லாகம் நீதவான் நீதிமன்றில் முற்படுத்தப்படவுள்ளார். என பொலிஸார் தெரிவித்தார்

சூடு சுரணை இருந்தால் சுமந்திரனுக்கு எதிராக நடவடிக்கை எடுங்கள் – ரெலோ , புளெட்டுக்கு சுரேஷ் சவால்

image_pdfPRINT

சமஸ்டி என்றால் என்ன என்று தெரியுமா? என கேட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரனுக்கு எதிராக  சூடு, சுரணை இருந்தால் புளொட் மற்றும் ரெலோ ஆகிய கட்சிகள்  நடவடிக்கை எடுக்கட்டும் பார்க்கலாம். என  ஈ.பி.ஆர்.எல்.எவ். கட்சியின்  தலைவர் சுரேஸ் பிறேமச்சந்திரன்  சவால் விடுத்துள்ளார்.

யாழ்.நீர்வேலியில் அமைந்துள்ள அவருடைய அலுவலகத்தில் இன்று காலை  இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவ்வாறு தெரிவித்தார்.

மேலும் தெரிவிக்கையில் ,

தமிழ் மக்கள் சமஸ்டியை கோரவில்லை. 13ஆம் திருத்தில் மேலதிகமாக சில விடயங்களை செய்தாலே போதும் என என்ற தொனியில் சுமந்திரன் காலியில் பேசியுள்ளார்.

இது இவர் இப்போது கூறிய கருத்தில்லை. ஏற்கனவே ஒருமுறை ‘புதிய அரசியலமைப்பு சிங்கள கட்சிகளது ஒப்புதலுடனேயே வருகின்றது. எனவே தமிழ் மக்கள் எதிர்பார்க்கின்ற விடயங்கள் முழுமையாக இருக்காது ‘ என கூறியிருந்தார்.

இவ்வாறான நிலையிலே இப்போது இக் கருத்தை தெரிவித்துள்ளார்;. ஆரம்பத்தில் இடைக்கால அறிக்கை வெளிவந்த போது அதில் சமஸ்டி பற்றி பேசப்படவில்லை அது ஒற்றையாட்சி பற்றியே பேசுகின்றது என பல்கலைகழக விரிவுரையாளர்களும் சிவில் சமூகத்தினரும் என

அனைத்து தரப்பினருமே கூறிய போதும் அதில் சமஸ்டி இருப்பதாக சுமந்திரன் கூறி வந்தார்.

இவ்வாறான நிலையில் சுமந்திரனது இச் செயற்பாடுகள் கருத்துக்கள் என்பது வர இருக்கும் அரைவேட்காட்டுதனமான புதிய அரசியலமைப்பை தமிழ் மக்கள் ஏற்றுக்கொள்ள வைக்கும் வகையிலேயே உள்ளது.

இந்நிலையில் அத்தகைய சுமந்திரனது கருத்துக்கள் அவரது தனிப்பட்ட கருத்துக்கள் என கூட்டமைப்பின் பங்காளி கட்சிகளான புளொட் சித்தார்த்தன் மற்றும் செல்வம் அடைக்கலநாதன் ஆகியோர்  கூறியிருக்கும் நிலையில் அவர்களை பார்த்து சுமந்திரன் ‘ பங்காளி கட்சியினருக்கு சமஸ்டி என்றால் என்னவென்று தெரியுமா அதன் உள்ளடக்கம் என்னவென்று தெரியுமா ‘ என அதி மேதாவி தனமாக கேள்வி எழுப்பியுள்ளார்.

அத்தகைய நிலையில் அப் பங்காளி கட்சியினருக்கு உண்மையிலேயே வெட்கம், சூடு சுரனை எதாவது இருந்தால் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரனின் கருத்து தொடர்பாக சரியான பதிலடியை கொடுக்கட்டும் பார்க்கலாம்.

மேலும் சுமந்திரனது செயற்பாடுகள் கூட்டமைப்புக்கும் தமிழரசு கட்சிக்கும் மாறுபட்டதாக உள்ள நிலையில், அவரது கருத்துக்கள் கூட்டமைப்பின் கருத்துக்கள் இல்லை என கூறி வரும் நிலையில் எந்த அடிப்படையில் சுமந்திரனை

கூட்டமைப்பின் பேச்சாளராக வைத்திருக்க முடியும் என்பதும் அவரது நடவடிக்கை எந்தளவு தூரம் சரியானது என்ற கேள்வியெழுந்துள்ளது என்றார்.

சுமந்திரன் அரசை பாதுகாக்கிறார்..

தற்போது இந்த ஆட்சியில் கூடுதலான மக்களது காணிகள் விடுவிக்கப்பட்டுள்ளது. முல்லை தீவில் எந்தவிதமான சிங்கள குடியேற்றங்களும் நடைபெறவில்லை என்பது போன்றதான பிரச் சாரங்கள் அதிகரித்துள்ளது.

வடக்கு கிழக்கின் நில தொடர்பினை துண்டாடும் வகையில் கொக்கிளாய், கொக்குத் தொடுவாய், நாயாறு போன்ற பகுதிகளில் சிங்கள குடியேற்றங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

இந்நிலையில் இத்தகைய மாகாவலி அதிகார சபையின் சிங்கள குடியேற்றத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து சில நாட்களுக்கு முன்னர் முல்லைதீவில் பாரிய போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

குறிப்பாக விடுதலைப் புலிகள் அப் பகுதியில் பலமாக இருந்த காலத்தில் அங்கு தமது திட்டமிட்ட குடியேற்றங்களை செய்ய முடியாதிருந்த அரசு தற்போது விடுதலைப்புலிகள் இல்லாத காலத்தில் தமது திட்டங்களை செயற்படுத்தி வருகின்றார்கள்.

இவ்வாறான நிலையிலேயே கூட்டமைப்பின் பேச்சாளர் சுமந்திரன் இந்த ஆட்சியில் அவ்வாறு எதுவும் நடக்கவில்லை என்ற ஒரு கருத்தை கூறிவருகின்றார். ஆனால் உண்மையில் சுமந்திரனுக்கு இதில் இருக்கும் உண்மை என்ன என்பது தெரியும்.

ஆனாலும்  இந்த அரசாங்கத்தை பாதுகாப்பதற்காக அரசுக்கு ஆதரவாக, தமிழ் மக்களை அவர்களது சொந்த பிரதேசத்திலேயே வாழ்வதற்கு ஆப்பு வைக்கும் வகையில் கருத்துக்களை கூறி வருகின்றார்.

குறிப்பாக அன்றைய தினம் இடம்பெற்ற போராட்டத்தில் கலந்துகொள்ளாத சுமந்திரன் இவ்வாறு கருத்துக்களை கூறுவது எந்த விதத்தில் நியாயமானது என்பதை தமிழ் தேசிய கூட்டமைப்பு தெளிவுபடுத்த வேண்டும்.

வடக்கில் விடுவிக்கப்பட்ட மக்களது காணிகள் என்பது அம் மக்களின் நீண்ட கால தொடர் போராட்டத்தினால் கிடைக்கப்பட்டதே தவிர அரசாங்கத்தின் அக்கறையினால் கிடைத்தது இல்லை.

இவ்வாறான நிலையில் சுமந்திரன் கூறும் கருத்துக்களானது தமிழ் மக்களது இருப்பினை, உரிமைகளை பாதுகாப்பதாக இல்லை என்பதுடன் அது தமிழ் மக்களுக்கு எதிரான அரசாங்கத்திற்கு ஆதரவான கருத்துக்களாகவே உள்ளது.

எனவே இது தொடர்பாக சுமந்திரனது கருத்துக்கள் கூட்டமைப்பின் கருத்தா அல்லது இதுவும் சுமந்திரனது தனிப்பட்ட கருத்தா என்பதை கூட்டமைப்பு பகிரங்கமாக தெளிவுபடுத்த வேண்டும் என்றார்.

 சிறுப்பிள்ளைதனமாக கருத்தக்கள் வேண்டாம்..

தமிழ் தேசிய மக்கள் முன்னனியானது நாம் அவர்களுக்கு முதுகில் குத்தி விட்டதாக கூறியிருந்தார். நாம் அவ்வாறு யார் முதுகிலும் குத்த வேண்டிய அவசியமில்லை. வேண்டுமானால் அவர்களுக்கும் எமக்கும் இடையில் ஓர் இணக்கப்பாடு எட்டப்பட்ட நிலையில் அந்த இணக்கப்பாட்டை நாம் மீறியிருந்தால் அவர் கூறுவதை ஏற்றுக்கொள்ளலாம்.

ஆனால் பல வருடங்களாக பேசப்பட்ட போதும் அவ் இணக்கப்பாடு எதுவும் எட்டபடவில்லை. இந்நிலையில் தமிழ் மக்களுக்கான மாற்றுத் தலமை தொடர்பாக சிந்தித்து வரும் நிலையில் சிறுபிள்ளை தனமான கருத்துக்களை கூறுவது தமிழ் மக்களது எதிர் காலத்திற்கு ஆரோக்கியமற்றதாகும். இங்கு ஒரு கட்சி மாத்திரம் தான் புனிதமானது ஏனைய கட்சிகள் துரோகிகள் என பேசுவதனை  ஏற்றுக்கொள்ள முடியாது.

யுத்தம் நடந்த காலத்தில் இருந்த நிலை வேறு, தற்போதிருக்கிற நிலை வேறு. இப்போது தமிழ் மக்களது உரிமைகளை எவ்வாறு வென்றெடுப்பது அதனை பெற்றுக்கொள்வதற்கான உபாயங்கள் என்ன என்பதை தெளிவாக புரிந்துகொள்ளவேண்டும்.

இதனைவிடுத்து பல வருடங்களுக்கு முற்பட்ட விடயங்களை இப்போது கிழறி வரட்டு வாதங்களை முன் வைத்துக் கொண்டிருந்தால் தமிழ் மக்களது உரிமை தொடர்பான பிரச்சனை அடிபட்டு அது கட்சிகளுக்கிடையிலான போட்டியாகிவிடும். எனவே இது தற்போது உகந்ததில்லை என்பதை சம்மந்தப்பட்ட தரப்பினர் உணர்ந்துகொள்ள வேண்டும் என மேலும் தெரிவித்தார்.

விகாரை அமைக்க புத்தர் சிலையுடன் வந்த பிக்குகள் மக்களால் மடக்கி பிடிப்பு

image_pdfPRINT

முல்லைத்தீவு தண்ணிமுறிப்பு- குருந்தூர் மலையில் பௌத்த விகாரை அமைக்கும் நோக்கில் வந்த பௌத்த பிக்குகள் உட்பட 12 பேர் பொதுமக்களால் மடக்கி பிடிக்கப்பட்டு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

குறித்த சம்பவம் இன்று செவ்வாய்க்கிழமை மாலை இடம்பெற்றுள்ளது. இது குறித்து மாகாணசபை உறுப்பினர் து.ரவிகரன் ஊடகங்களுக்கு தகவல் தருகையில்,

முல்லைத்தீவு மாவட்டத்தின் எல்லைப்பகுதிதயில் உள்ள தண்ணிமுறிப்பு கிராமத்தில் தமிழ் மன்னர்கள் வாழ்ந்த வரலாற்று எச்சங்களுடன் குருந்தூர் மலை காணப்படுகின்றது.

இந்த மலையை ஆக்கிரமிப்பதற்கு பல தடவைகள் முயற்சிக்கப்பட்ட நிலையில் அங்குள்ள பழமையான சிவன் ஆலயத்தை மக்கள் பராமரிக்க ஆரம்பித்தனர்.

இந்நிலையில், 4 வாகனங்களில் பௌத்த பிக்குகள் உள்ளிட்ட 12 பேர் தங்குமிடம் அமைப்பதற்கான வசதிகள், விகாரை அமைப்பதற்கான கட்டிட பொருட்கள், புத்தர் சிலை ஆகியவற்றுடன் குருந்தூர் மலைப்பகுதிக்கு வருவதை ஊர் மக்கள்  அவதானித்துள்ளனர்.

இதனையடுத்து ஒன்றுதிரண்ட மக்கள் தண்ணிமுறிப்பு கிராமத்திற்கு சென்று அங்கு தேடுதல் நடவடிக்கையில் இறங்கியுள்ளார்கள். இதனையடுத்து தண்ணிமுறிப்பு பகுதியை அண்டியுள்ள தண்டுவான் என்ற இடத்தில் வைத்து

விகாரை அமைக்கவந்தவர்களை பொதுமக்கள் மடக்கிப்பிடிக்க முயற்சித்தபோது சிலர் தப்பி ஓடியுள்ளனர்.

எனினும் 4 வாகனங்களில் வந்த பௌத்த பிக்குகள் உள்ளிட்ட 12 பேர் மக்களால் பிடிக்கப்பட்டு தண்ணிமுறிப்பு குளத்திற்கு அருகில் கொண்டுவரப்பட்டனர்.

இதனையடுத்து சம்பவத்தை அறிந்த ஒட்டுசுட்டான் பொலிஸார் தண்ணிமுறிப்பு குளப்பகுதிக்கு வந்தனர். எனினும் தாம் விகாரை அமைக்கப்போவதாகவும், அங்கே இதற்கு முன்னர் விகாரை அமைந்திருந்ததாகவும் அவர்கள் கூறிக்கொண்டிருந்த நிலையில் பொதுமக்கள் ஆத்திரமடைந்தனர்.

எனினும் பொலிஸார் வந்ததால் அமைதி காத்தனர். இதனையடுத்து மக்களால் பிடிக்கப்பட்ட 12 பேரும் அவர்களுடைய வாகனங்களும், உடமைகளும் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டன.

பொலிஸார் அவர்களை நாளை புதன்கிழமை நீதிமன்றில் முற்படுத்துவதாக உறுதியளித்துள்ளனர். நாங்களும் அவர்களை நாளை நிதிமன்றில் முற்படுத்தவேண்டும் என்பதையும், தண்ணிமுறிப்பு கிராமம் தமிழ் மக்கள் வாழும் பகுதி இங்கே ஒரு பௌத்தர் கூட இல்லாத நிலையில் விகாரை அமைப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது என்பதையும் கூறியிருக்கின்றோம்.

இந்நிலையில் தாம் நீதிமன்றில் முற்படுத்துவோம். என பொலிஸார் உறுதியாக கூறி பௌத்த பிக்கு உள்ளிட்ட 12 பேரையும் பொலிஸ் நிலையத்திற்கு அழைத்து சென்றனர். இதனையடுத்து மக்கள் கலைந்து சென்றுள்ளனர்.என தெரிவித்தார்.

யாழில் போராட்டம்

image_pdfPRINT

வடமாகாணத்தில் அதிகரித்து வரும் பெண்களுக்கு எதிரான வன்முறைகளை கண்டித்து யாழ்.மாவட்ட அரச சார்பற்ற நிறுவனங்களின் இணையத்தின் ஏற்பாட்டில் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.

யாழ்.மாவட்ட செயலகம் முன்பாக இன்று காலை காலை 10 மணியளவில் குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

வடக்கில் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் அதிகரித்து செல்வதாக குற்றம் சாட்டிய போராட்ட காரர்கள். வன்முறைகளை கட்டுக்குள் கொண்டு வர வேண்டும் எனவும் குற்றவாளிகளை விரைந்து கைது செய்து அவர்களுக்கு எதிராக சட்டநடவடிக்கைகளை துரித கெதியில் முன்னெடுத்து அவர்களை தண்டிக்க வேண்டும் என கோரி இருந்தார்கள்.

இனிவரும் காலங்களில் பரதநாட்டியத்தை எவரும் தெருவில் ஆட முடியாது!

image_pdfPRINT

இனிவரும் காலங்களில் பரதநாட்டியத்தை தெருவிலே ஆட முடியாது அதற்கான சுற்று நிருபத்தினை வடக்கு மாகாண கல்வி அமைச்சு விரைவில் வெளியிட உள்ளது என வடக்கு மாகாண கல்வி பண்பாட்டலுவல்கள் விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சர் கலாநிதி க.சர்வேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

வடக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களமும் இந்திய துணைத்தூதரகமும் இணைந்து நடாத்தும் ‘ தெய்வீக சுகானுபவம்’; -7 இன்று யாழ் பல்கலைக்கழக கைலாசபதி கலையரங்கில் இடம்பெற்றுவருகின்றது. இந்த நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்

பரத நாட்டியத்தினை யாரையும் வரவேற்பதற்காக தெருவிலே ஆடக்கூடாது. பரதநாட்டியத்தினை தெருவிலே ஆடுகின்ற நிலைமை இருக்கக்கூடாது. நாங்கள் எமது மாகாணத்திற்குற்பட்ட எல்லா பாடசாலைகளுக்கும்,நிறுவனங்களுக்கும் சுற்றுநிருபம் அனுப்ப இருக்கின்றோம். கடந்தகாலங்களில் விழாக்கள் இடம்பெறும் போது அதிதிகளை அழைத்து வருவதற்கு தெருவிலே பரதநாட்டியம் ஆடப்பட்டதை பல இடங்களிலே அவதானித்திருக்கின்றோம். விழாக்களிலே இராணுவத்தை வரவேற்பதற்கு கூட இந்த பரதநாட்டியம் தெருவிலே ஆடப்பட்டிருக்கிறது. கண்டிய நடனத்தை வேண்டுமென்றால் அவர்கள் தெருவிலே ஆடட்டும். ஆனால் பரதநாட்டியம் என்பது மேடையிலே மக்களுக்கு செய்தியை சொல்லக்குடிய வகையிலே ஆடப்படவேண்டும். சில முன்பள்ளிகள் கூட இவ்வாறான செயற்பாட்டினை மேற்கொண்டிருக்கின்றன.

அதே போன்று இந்த பரதநாட்டிய கலையை மேலும் வளர்த்தெடுப்பதற்கு வட இலங்கை சங்கீத சபை ஊடாக மிகச்சிறந்த ஒரு நூலகத்தை உருவாக்குவது தொடர்பிலும் செயற்பட்டுக்கொண்டிருக்கிறோம். கலைகளை வளர்ப்பது தொடர்பில் நாங்கள்(கல்வி அமைச்சு) பல்வேறு செயற்திட்டங்களை முன்னெடுத்து வருகின்றோம். அந்த வகையில் வருடாவருடம் நாங்கள் கொண்டுவருகின்ற இந்த தெய்வீக சுகானுபவம் ஒரு முக்கியமான விடயமாகும்.

தமிழக கலைஞர்களுக்கும் எங்களுடைய கலைஞர்களுக்கும் இடையிலான ஒரு நல்ல பரிமாற்றத்தினையும் வளர்ச்சியையும் ஏற்படுத்தும் களமாக அமையும். என்றார்.

தெய்வீக சுகானுபவம் -7 இந்தியாவின் பிரபல பரதநாட்டியக்கலைஞர் கலைமாமணி,நிருத்திய சூடாமணி,நாட்டிய இளவரசி ஸ்ரீமதி ஊர்மிளா சத்தியநாராயணன் அவர்களும் அவரது குழுவினரும் இணைந்து வழங்கும் பரதநாட்டிய பயிற்சிப்பட்டறை தற்போது யாழ் பல்கலைக்கழக கைலாசபதி கலையரங்கில் நடைபெற்று வருகின்றது.

இதில் பாடசாலை மாணவர்கள்,பல்கலைக்கழக மாணவர்கள்,பாடசாலை ஆசிரியர்கள்,நடன கலைஞர்கள் என பெருமளவானோர் கலந்து கொண்டு பயிற்சி பெற்று வருகின்றனர். இன்று யாழ்ப்பாணத்தில் இடம் பெறும் இந்த பயிற்சிப்பட்டறை நாளை மறுதினம் (06.09.2018) வவுனியா நகரசபை மண்டபத்தில் காலை 10.00 மணிக்கு இடம்பெற இருக்கின்றது என்பதும் குறிப்பிடத்தக்கது.

error: Content is protected !!