SHARE

காணாமல் ஆக்கப்பட்டோருக்கான அனைத்துலக நாள் நிகழ்வில் பிரித்தானிய நாடாளுமன்றில் ஒன்று திரண்ட தமிழர் சர்வதேசத்தின் நீதியை கோரிநின்றனர்.

காணமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்கு நீதி கோரியும் தமிழ் மக்களுக்கு எதிராக நடத்தப்பட்ட இனப்படுகொலைக்கு இலங்கை அரசை பொறுப்புகூற பிரித்தானிய அரசை வலியுறுத்தியும் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் ஏற்பாட்டில் காணாமல் ஆக்கப்பட்டோருக்கான அனைத்துலக நாள் மாநாடொன்று பிரித்தானிய நாடாளுமன்றத்தில் நேற்று நடைபெற்றது.

நாடாளுமன்ற கட்டட அறையில் மாலை ஆரம்பமான குறித்த மாநாட்டை பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர் Siobhain McDonagh (தமிழருக்கான அனைத்துக்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்) ஆரம்பித்து வைக்க நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் மனித உரிமைகள் அமைச்சர் மணிவண்ணன் பத்மநாதன் தொடர்ந்து வழிநடத்திச்சென்றார்

பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர்களான Paul Scully  MP, Joan Ryan MP,  Jim Cunningham MP, Sir Edward Davey Mp, Sir David Amess Mp மற்றும் சர்வதேச மனி உரிமை செயற்பாட்டாளர்கள் சட்ட வல்லுனர்கள் தமிழ் அமைப்புக்களின் பிரதிநிதிகள் செயற்பாட்டாளர்கள் என பலர் கந்து கொண்ட இம் மாநாட்டில் இலங்கையில் காணாமல் செய்யப்பட்டோர் தொடர்பான பல விடயங்கள் ஆராயப்பட்டன.

இலங்கையில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள காணமால் ஆக்கப்பட்டோருக்கான அலுவலகம் (OMP) பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதியை பெற்றுக்கொடுக்குமா ? இலங்கை அரசு அதிகாரத்தை பயன்படுத்தி காணாமல் செய்யப்பட்டோர் மற்றும் இனப்படுகொலை ஆகிய விடயங்களின் கீழ் இந் நிகழ்வில் உரைகள் நிகழ்த்தப்பட்டன.

இதேவேளை இலங்கை அரசாங்கத்தினால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் உறவுகளை தொலைத்த சிலரது நேரடி சாட்சிகளும் இதில் பகிரப்பட்டது. குறித்த சாட்சியங்களை பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அதிதிகள் முன் வெளிப்படுத்திய ICPPG நிறைவேற்று பணிப்பாளர் அம்பிகை சீவரத்தினம், இவர்களுக்கான பதிலை பிரித்தானிய அரசோ ஐ.நா. வோ விரைந்து பெற்றுக்கொடுக்க முடியும் என்ற கேள்வியை முன்வைத்தார்.

அதேவேளை நேரடி சாட்சியங்கள் பலர் இன்றும் இலங்கை அரசினால் தேடப்படுபவர்களாகவே இருக்கிறார்கள் எனவும் அவர் குறிப்பிட்டார்.

இறுதியாக இந்நிகழ்வில் பொறுப்புக்கூறலை மறுத்து வரும் இலங்கை அரசை குற்றவியல் நீதிமன்றில் நிறுத்தும் பிரேரணையை பிரித்தானிய நாடாளுமன்றம் நிறைவேற்ற முன்பிரேரணையை கொண்டுவரும் பொருட்டில் ஆரம்பிக்கப்பட்டுள்ள கையெழுத்து மனுவில் அனைவரையும் கையொப்பமிட இம்மாநாட்டில்கோரிக்கை விடுக்கப்பட்டது.

Print Friendly, PDF & Email