SHARE

வவுனியா நெடுங்குளம் பகுதியில் அமைந்துள்ள வீடொன்றினுள் அத்துமீறி நுழைந்து நகை அறுத்தார் எனும் குற்றசாட்டில் இராணுவ சிப்பாய் ஒருவர் வவுனியா பொலிசாரினால் கைது செய்யபட்டு உள்ளார்.

அது குறித்து மேலும் தெரியவருவதாவது,

வவுனியாவில் உள்ள அரச விடுதியில் தங்கியுள்ள அரச உத்தியோகஸ்தரை குறித்த இராணுவ சிப்பாய் சந்தித்து இலத்திரனியல் பொருள் ஒன்றினை வழங்கி அதனை விற்று தருமாறும் பின்னர் வந்து அதற்கு உரிய பணத்தினை பெற்றுக்கொள்வதாகவும் கூறி சென்றுள்ளார்.

பின்னர் நேற்று முன்தினம் இரவு செவ்வாய்கிழமை இரவு 10.30 மணியளவில் குறித்த விடுதியின் ஜன்னல் ஊடாக உட்புகுந்த இராணுவ சிப்பாய் அரச உத்தியோகஸ்தரின் சங்கிலி மற்றும் அவரின் பிள்ளையின் சங்கிலி என்பவற்றை அறுத்து சென்றுள்ளார்.

சங்கிலியை இராணுவ சிப்பாய் அறுத்து செல்லும் போது அவர்கள் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்துள்ளனர். தூக்கம் கலைந்த பின்னரே சங்கிலி அறுக்கப்பட்ட விடயம் தெரியவந்துள்ளது.

அதனை அடுத்து உத்தியோகஸ்தர் வவுனியா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்தார். அத்துடன் முதல் நாள் இலத்திரனியல் பொருளை விற்பனை செய்ய தந்த இராணுவ சிப்பாய் மீதே சந்தேகம் எனவும் பொலிஸ் நிலையத்தில் குறிப்பிட்டுள்ளார்.

அதனை தொடர்ந்து விசாரணைகளை முன்னெடுத்த பொலிசார் குறித்த இராணுவ சிப்பாயை நேற்றைய தினம் புதன்கிழமை கைது செய்து விசாரணைகளை முன்னெடுத்த போது அவரிடம் இருந்து சங்கிலி மீட்கப்பட்டு உள்ளது.

குறித்த சம்பவம் தொடர்பில் பொலிசார் மேலதிக விசாரனைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Print Friendly, PDF & Email