Home Blog Page 22

வெடுக்குநாறியில் கைது செய்யப்பட்டவர்களுக்கு நீதிகோரி ஆர்ப்பாட்டம்

image_pdfPRINT

வெடுக்குநாறி மலை ஆதிசிவன் ஆலயத்தில் கைது செய்யப்பட்டவர்களுக்கு நீதி கோரி இன்று வவுனியாவில் பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.

வவுனியா பழைய பேரூந்து தரிப்பிடத்திலிருந்து தொல் பொருள் திணைக்களம் வரையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்ட பேரணியில் அரசியில் தலைவர்கள் மத குருமார்கள் சிவில் அமைப்புக்கள் மற்றும் போது மக்கள் என பெருந்திரளானோர் கலந்து கொண்டு கைதானவர்களின் விடுதலையை வலியுறுத்தி கோசங்களை எழுப்பியவாறு பேரணியாக சென்றனர்.

குறித்த ஆரப்பாரட்டத்தில் ஈடுபட்டவர்களை தடுக்கும் மற்றும் மிரட்டல் விடக்கும் நோக்கில் சிறிலங்கா அரசின் அதிரடிப்படைகளும் பொலிசாரும் குவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

கடந்த 7 ஆம் திகதி வெடுக்குநாறி மலை ஆதிசிவன் ஆலயத்தில் சிவராத்திரி வழிபடுகளில் ஈடுபட்டிருந்தவர்கள் ஆலய பூசகர் உட்பட 8 பேர் கைது செய்யப்பட்டிருந்தனர். எனினும் அவர்களை இன்றுவரையில் விடுவிக்காது தடுத்து வைத்துள்ள நிலையலேயே அவர்களை விடுவிக்க கோரி மேற்படி ஆர்ப்பாட்டம் இன்று முன்னெடுக்கப்பட்டது.

https://youtu.be/6qPyCyEcB5s

வெடுக்குநாறி மலையில் கைது செய்யப்பட்டவர்களுக்கு நீதி கோரி போராட்டத்திற்கு அழைப்பு

image_pdfPRINT

வெடுக்குநாறி மலை ஆதிசிவன் ஆலயத்தில் கைது செய்யப்பட்டவர்களுக்கு நீதி வேண்டியும், பொலிஸாரின் அராஜகத்தை கண்டித்தும் வவுனியாவில் இடம்பெறவுள்ள ஆர்ப்பாட்டத்தில் அனைவரையும் கலந்து கொள்ளுமாறு கைது செய்யப்பட்டவர்களின் உறவுகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

குறித்த போராட்டமானது நாளை சனிக்கிழமை (16.03.2024) காலை  10 மணியளவில் வவுனியா கந்தசுவாமி ஆலயத்தின் முன்பாக  இடம்பெறவுள்ளது.

சிவராத்திரி தினத்தன்று வவுனியா வடக்கு, வெடுக்குநாறிமலை ஆதிசிவன் ஆலயத்தில் வழிபாட்டில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது ஆலய பூகர் உள்ளிட்ட 8 பேரை பொலிஸார் அராஜகமாக கைது செய்து பொய் குற்றச்சாட்டு சுமத்தி விளக்கமறியலில் வைத்துள்ளனர். அவர்களில் 5 பேர் உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையிலேயே அனைத்து தரப்பினரும் கலந்து கொண்டு அவர்களின் விடுதலைக்காக குரல் கொடுக்க வேண்டும் என கைது செய்யப்பட்டவர்களின் உறவினர்கள் கோரியுள்ளனர்.

அதேவேளை வெடுக்குநாறி மலை அநீதிக்கு எதிராக வடக்கு மற்றும் கிழக்கு மக்களை அணிதிரளுமாறு வேலன் சுவாமிகளும் அழைப்பு விடுத்துள்ளார்.

வடக்கு, கிழக்கில் தொழில் முயற்சியாளர்களை ஊக்கப்படுத்த அமெரிக்கா நடவடிக்கை!

image_pdfPRINT

வடக்கு கிழக்கு மாகாணங்களில் உள்ளுர் உற்பத்திகளுக்கான ஏற்றுமதி வாய்ப்புக்களை மேலும் அதிகரிப்பதற்கு அமெரிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாக இலங்கைக்கான அமெரிக்கத் தூதரகத்தின் பிரதித் தூதுவர் டக்ளஸ் சோனெக் இ.சொனெக்  தெரிவித்துள்ளார்.

யாழிற்கு விஜயம் மேற்கொண்டுள்ள அவர் இன்று ஊடகங்களை சந்தித்துக் கலந்துரையாடிய போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது” வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களுக்கு நாம் விஜயம் மேற்கொண்டுள்ளோம். இன்று யாழ்ப்பாணத்துக்கு வருகை தந்துள்ளோம். இந்நிலையில், இங்குள்ள மக்களுடன் கலந்துரையாடியிருந்தோம்.

வாழ்க்கைச் செலவு அதிகரித்துள்ளதால் தாம் பெரும் நெருக்கடிகளை எதிர்கொண்டு வருவதாக யாழ் மக்கள் தெரிவித்தனர். இளைஞர்- யுவதிகள் வேலைவாய்ப்பு இன்றி பல்வேறு சிரமங்களை எதிர்கொண்டு வருவதையும் வெளிப்படுத்தினர்.

இவ்வாறான விடயங்களை நாம் ஏற்கனவே அறிந்துள்ளோம். அதற்கேற்ப பல திட்டங்களை நடைமுறைப்படுத்தி வருகின்றோம். வடக்கு கிழக்கில் சிறிய மற்றும் நடுத்தர தொழில் முயற்சியாளர்களை ஊக்கப்படுத்துவதோடு, உள்ளுர் உற்பத்திகளுக்கான ஏற்றுமதி வாய்ப்புக்களை அதிகரிக்க அமெரிக்கா நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது” இவ்வாறு அமெரிக்கத் தூதரகத்தின் பிரதித் தூதுவர் தெரிவித்துள்ளார்.

வட்டுக்கோட்டை இளைஞன் படுகொலை: மல்லாகம் நீதவான் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

image_pdfPRINT

யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டை பகுதியில் இளைஞனைக்  கடத்திப் படுகொலை செய்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டவர்களில் நால்வரை எதிர்வரும் 28ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு மல்லாகம் நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த திங்கட்கிழமை தனது மனைவியுடன் காரைநகருக்கு மோட்டார் சைக்கிளில் சென்று விட்டு வீடு திரும்பியவர்களை பொன்னாலை பால பகுதியில் உள்ள கடற்படையின் முகாம் முன்பாக வைத்து வன்முறை கும்பல் கடத்தி சென்றது.

கணவனை ஒரு வாகனத்திலும், மனைவியை ஒரு வாகனத்திலும் கடத்திய வன்முறை கும்பல், மனைவியை சித்தங்கேணி பகுதியில் இறக்கி விட்டு சென்றது. கணவனை கடத்தி சென்றவர்கள் கணவனை கடுமையான சித்திரவதைக்கு உள்ளாக்கி படுகாயங்களுடன் வட்டுக்கோட்டை வைத்தியசாலை முன்பாக வீசி சென்றனர்.

படுகாயத்துடன் காணப்பட்டவரை வைத்தியசாலை பணியாளர்கள் மீட்டு யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதித்த நிலையில் உயிரிழந்தார்.

சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார் வட்டுக்கோட்டையில் ஒரு இளைஞனை கைது செய்தனர். அதேவேளை கிளிநொச்சியில் பதுங்கியிருந்த அராலி பகுதியை சேர்ந்த நான்கு பேரை கைது செய்தனர்.

கைது செய்யப்பட்டவர்களை கடந்த புதன்கிழமை மல்லாகம் நீதவான் நீதிமன்றில் முற்படுத்தி, கிளிநொச்சியில் கைதான நால்வரிடம் மேலதிக விசாரணைகளை முன்னெடுக்க வேண்டும். ஆகவே அவர்களை 48 மணிநேரம் பொலிஸ் தடுப்பு காவலில் வைத்து விசாரிக்க வேண்டும் என மன்றில் விண்ணப்பம் செய்தனர்.

பொலிஸாரின் விண்ணப்பத்தை ஏற்ற, மன்று நால்வரையும் 48 மணிநேரம் பொலிஸ் காவலில் வைத்து விசாரிக்க அனுமதி அளித்தது. மற்றைய சந்தேக நபரை எதிர்வரும் 20ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்க மன்று உத்தரவிட்டது. அத்தோடு அன்றைய தினம் அடையாள அணிவகுப்புக்கும் கட்டளையிட்டது.

அந்நிலையில் பொலிஸ் காவலில் தடுத்து வைத்து விசாரணை செய்யப்பட்ட நால்வரையும் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை மன்றில் முற்படுத்திய வேளை அவர்களை எதிர்வரும் 28ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்க மன்று உத்தரவிட்டுள்ளது.

இதேவேளை இளைஞன் கடத்தப்படும் போது கடற்படை முகாமில் இருந்த நான்கு கடற்படையினரிடம் பொலிஸார் வாக்குமூலங்களை பெற்றுள்ளதாக பொலிஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன.

வன்முறை கும்பல் தம்மை கடத்த முற்பட்ட வேளை கடற்படை முகாமினுள் தஞ்சம் கோரி தாம் சென்ற வேளை, கடற்படையினர் அடைக்கலம் கொடுக்காது, தம்மை அடித்து விரட்டி, கடத்தலுக்கு ஒரு வகையில் உதவி இருந்தனர் என உயிரிழந்தவரின் மனைவி குற்றம் சாட்டி வரும் நிலையில், கடற்படை முகாம் பகுதியில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கமராவில் கடற்படையினர் தஞ்சம் கோரி வந்தவர்களை, விரட்டுவதும், கடற்படையின் அருகில் வைத்தே, வன்முறை கும்பல் தம்பதியினரை கடத்தி செல்லும் காட்சி நேற்றைய தினம் வியாழக்கிழமை ஊடகங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தமை குறிப்பிடத்தக்கது.

வட்டுக்கோட்டை இளைஞனின் மரணத்துடன் கடற்படையினருக்கு தொடர்பு?

image_pdfPRINT

யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டை இளைஞனின் மரணத்துடன் கடற்படையினருக்கும் தொடர்பு இருப்பதாக கொலை செய்யப்பட்டவரின் மனைவி குற்றம் சுமத்தியிருந்த நிலையில், கடற்படையினரின் முன்நிலையில் இளைஞன் தாக்கப்பட்டு கடத்தப்படுகின்ற CCTV காணொளிக் காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளன.

இளைஞனை கடத்தி கொலை செய்வதற்கு கடற்படையினர் உதவி செய்திருந்தாக கொலை செய்யப்பட்டவரின் மனைவி தொடர்ந்து குற்றம் சுமத்தியிருந்தார். தற்போது வெளியாகியுள்ள வீடியோ காட்சியில் பல அதிர்ச்சி தரும் விடயங்கள் பதிவாகியுள்ளன.

கடந்த 11 ஆம் திகதி கொலை செய்யப்பட்ட இளைஞன் தனது மனைவியுடன் காரைநகர் பகுதிக்கு மோட்டார் சைக்கிளில் சென்ற பின்னர் வீடு திரும்பும்போது வானத்தில் வந்த குழுவினரால் கணவனும் மனைவியும் கடத்தப்பட்டிருந்தார். பொன்னாலை பால பகுதியில் உள்ள கடற்படை முகாமிற்கு அருகில் வைத்து கடத்தப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

எனினும் குறித்த வன்முறைக் கும்பல், கொலை செய்யப்பட்ட இளைஞனின் மனைவியை சித்தன்கேணி பகுதியில் இறக்கி விட்டு தப்பிச் சென்றிருந்தாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. வன்முறை கும்பல் தம்மை வழிமறித்து, தாக்கி கடத்த முற்பட்ட வேளை, தாம் உதவி கோரி கடற்படை முகாமிற்கு சென்றிருந்தாக கொலை செய்யப்பட்ட இளைஞனின் மனைவி குறிப்பிட்டுள்ளார்.

ஆனால் அங்கிருந்த கடற்படையினர் தம்மை தாக்கி விரட்டியிருந்தாகவும் இளைஞனின் மனைவி தெரிவித்துள்ளார். இந்நிலையில் பொலிஸார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். இந்நிலையில், கடற்படை முகாமில் பொருத்தப்பட்டிருந்த CCTV காணொளிகளை புலனாய்வாளர்கள் பெற்று தற்போது விசாரணைகளை தீவிரப்படுத்தியுள்ளனர்.

காணொளியில், இளைஞனும் மனைவியும் தஞ்சம் கோரி முகாமுக்கு ஓடி வருவதும், அங்கு கடற்படையினர் அவர்களை தாக்குவதும், வன்முறை கும்பல் கடற்படையின் முன்நிலையில் கணவன் மற்றும் மனைவியை கடத்தி செல்வதும் பதிவாகியுள்ளது.

கடற்படையினர் துப்பாக்கிகளுடன் கடத்தல் காரர்களுக்கு உதவி செய்வது காணொளியில் தெளிவாக பதிவாகியுள்ள நிலையில் கடத்தலுக்கு கடற்படையினர் உதவினார்கள் என மனைவியின் குற்றச்சாட்டுக்கு காணொளி வலு சேர்ந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

யாழ். வலிகாமம் வடக்கு பகுதியில் இராணுவத்தினர் வசமுள்ள காணிகள் விடுவிப்பு

image_pdfPRINT

யாழ்ப்பாணம் வலிகாமம் வடக்கு பகுதியில் இராணுவத்தினர் வசமுள்ள மேலும் 67 ஏக்கர் காணி நாளை உரிமையாளர்களிடம் கையளிக்கப்படவுள்ளது

சுமார் 33 வருடகாலமாக இராணுவத்தின் உயர்பாதுகாப்பு வலயமாக காணப்பட்ட குறித்த காணிளே இவ்வாறு விடுவிக்கப்படவுள்ளது

இதற்கமைய காங்கேசன்துறை தெற்கு பகுதியில் 235 கிராம சேவகர் பிரிவில் 20.3 ஏக்கர் காணிகளும்.வறுத்தலைவிளானில் 241 கிராம சேவகர் பிரிவில் 23 ஏக்கர் காணிகளும் விடுவிக்கப்படவுள்ளது

மேலும் மயிலிட்டி தெற்கில் 240 கிராமசேவகர் பிரிவில் 24 ஏக்கர் காணிகளும் விடுவிக்கப்படவுள்ளதாக தெரியவந்துள்ளது

விடுவிக்கப்படவுள்ள காணிகளின் உரிமையாளர்கள் நாளைய தினம் யாழ்ப்பாணம் மாவட்ட செயலகத்திற்கு வருகைதருமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது

வெடுக்குநாரி மலையில் பொலிஸார் அடாவடி ; 7 பேரை கைது

image_pdfPRINT

– பொங்கல் பொருட்களையும் அள்ளிச் சென்ற பொலிசார்

https://youtu.be/DJxJz-mxgqQ

வெடுக்குநாரிமலை ஆதிசிவன் ஆலய சிவராத்திரி வழிபாடுகளில் கலந்துகொண்டவர்களில் 07 பேர் நெடுங்கேணி பொலிஸ் நிலையத்தில் தற்போது தடுத்துவைக்கப்பட்டுள்ளனர்.

நேற்று (7) கைதுசெய்யப்பட்டு, இன்று மதியம் பிணையில் விடுதலையான ஆலய பூசகர் மதிமுகராசா, ஆலய நிர்வாக செயலாளர் தமிழ்ச்செல்வன், தமிழ்தேசிய மக்கள் முன்னணியின் வவுனியா மாவட்ட அமைப்பாளர் தவபாலன், முல்லைத்தீவு மாவட்ட இணைப்பாளர் கிந்துஜன் உள்ளிட்டவர்களே இவ்வாறு தடுத்துவைக்கப்பட்டுள்ளனர்.

வெடுக்குநாறி மலையில் சிவராத்திரி உற்சவம் நடைபெற்றுகொண்டிருந்த நிலையில் மாலை ஆறு மணியுடன் அனைத்து வழிபாடுகளையும் முடிவுக்கு கொண்டுவருமாறும் இ பொலிஸாரின் கட்டளையை மீறும் பட்சத்தில் குறித்த நபர்கள் கைது செய்யப்படுவார்கள் என பொலிஸார் எச்சரிக்கை விடுத்திருந்தனர்.

இந்நிலையில் ஆலய நிர்வாகத்தினர் பூஜை நிகழ்வுகளை தொடர்ந்தும் முன்னெடுத்து வந்த நிலையில் அன்னதானம்இ பொங்கல் மற்றும் பூஜை பொருட்களை பொலிஸார் எடுத்து சென்றதோடு பலரை அடாவடியாக கைது செய்திருந்தனர்.

வெடுக்குநாறிமலை ஆலய பூசகர் கைது..! பொருட்களும் பறிமுதல்

image_pdfPRINT

வெடுக்குநாறிமலை ஆலய பூசகர் மதிமுகராசா கைதுசெய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிவராத்திரி விழாவுக்கான ஏற்பாடுகளை செய்த வேளையிலேயே அவர் இன்று (07.03.2024) பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.   

அதேவேளை, விழாவுக்காக கொண்டு செல்லப்பட்ட தோரணங்கள், வாழைமரங்கள், தண்ணீர் பெளசர் போன்றன பொலிஸாரால் தடுத்துவைக்கப்பட்டுள்ளன.

அத்துடன், ஒழுங்குபடுத்தல்களுக்கு சென்றவர்களின் தேசிய அடையாள அட்டைகள், சாரதி அனுமதிப் பத்திரங்கள், தொலைபேசிகள் போன்றனவும் பொலிஸாரால் பறிக்கப்பட்டுள்ளன.

சவேந்திர சில்வாவை பிரித்தானியா தடை செய்ய ஜெரெய்ன்ட் டேவிஸ் எம்.பி முழு ஆதரவு

image_pdfPRINT

ஜெரெய்ன்ட் டேவிஸ் எம்.பி உடனான இராஜதந்திர சந்திப்பின் வெற்றி

இலங்கை இராணுவத்தளபதி ஜெனரல்சவேந்திர சில்வா உள்ளிட்ட யுத்தகுற்றவாளிகளை பிரித்தானியாவின் உலகளாவிய மனித உரிமைகள் தொடர்பான தடைவிதிப்பு அதிகாரசபையின் கீழ் (Global Human Rights Sanction Regime) தடைசெய்வதற்கு பிரித்தானிய அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்தி, பிரித்தானியாவின் சுவான்சீ மேற்கு (Swansea West ) பகுதி பாராளுமன்ற உறுப்பினர் மதிப்பிற்குரிய ஜெரெய்ன்ட் டேவிஸ் எம்.பி (Hon. Geraint Davies MP ) அவர்களுடன் இராஜதந்திர சந்திப்பு ஒன்று செவ்வாய்க்கிழமை (05/03/2024) மதியம் 12.00 மணியளவில் மெய்நிகர் வழியாக இடம்பெற்றுள்ளது.

சட்ட ஆலோசகரும் மனித உரிமைசெயற்பாட்டாளுமான திரு கீத் குலசேகரம் அவர்கள் தலைமையில் இடம்பெற்ற இந்த முக்கிய சந்திப்பில், இனப்படுகொலையை தடுப்பதற்கும் தண்டிப்பதற்குமாக சர்வதேச மையத்தின் (ICPPG) சார்பில் திரு. றோய் ஐக்‌ஷான் மற்றும் திரு. விஷ்வா றமேஸ் ஆகியோர் கலந்துகொண்டார்கள். அத்துடன் இனப்படுகொலையின் நேரடி சாட்சியங்கள் மற்றும் சித்திரவதையால் பாதிக்கப்பட்டவர்களான திரு. டிலான் சசிகரன், திரு. மரியசேகரன் ஜனிஸ்ரன், திரு. சசிகரன் செல்வசுந்தரம், மற்றும் திரு. செல்வராஜ் இலங்கநாதன் ஆகியோரும் கலந்து கொண்டு, தங்கள் அனுபவங்களை பகிர்ந்து கொண்டனர்.

கீத் குலசேகரம் அவர்கள் தனது தலைமை உரையின் போது, இலங்கையில் இடம்பெறும் இனப்படுகொலைக்கு வரலாற்று ரீதியாக பிரித்தானியாவே பொறுப்பு என்பதை விளக்கி, தமிழ்மக்களுக்கு நீதி வழங்க வேண்டிய கடமைப்பாட்டையும் எடுத்துரைத்தார். ITJP மற்றும் ICPPG ஆகிய அமைப்புக்கள் பிரித்தானிய வெளிவிவகார அமைச்சிற்கு (FCDO) போதுமான ஆதாரங்களை சமர்பித்த போதும் இன்னும் உரிய நடவடிக்கை எடுக்க தவறியிருப்பதனை சுட்டிக்காட்டினார்.

அத்துடன் இறுதி யுத்தத்தில் இடம்பெற்ற யுத்த குற்றங்கள் மட்டுமன்றி, தற்போது இலங்கையில் தொடரும் ஆள்கடத்தல் மற்றும் சித்திரவதைகளும் சவேந்திர சில்வாவின் கட்டுப்பாட்டில் உள்ள ஆயுத படைகளே மேற்கொண்டுவருவதால் அதற்கும் சவேந்திர சில்வாவே பொறுப்பு என்றும், சந்திப்பில் கலந்துகொண்ட சித்திரவதைக்குள்ளானவர்கள் இதற்கு நேரடிசாட்சி என்றும்தெரிவித்தார். சவேந்திர சில்வா யுத்தகுற்றங்களில் ஈடுபட்டிருப்பதைஐக்கிய நாடுகள் சபையின் அறிக்கையில் குறிப்படப்பட்டிருப்பதையும், அவர்மீது ஏற்கனவே அமெரிக்கா, கனடா பயணத்தடை விதித்துள்ளதையும் எடுத்துக்காட்டிய அவர், அமெரிக்கா, கனடாவின் வழியை பின்பற்றி பிரித்தானியாவும் தடை விதிக்கவேண்டும் என்று கோரி பிரித்தானிய புலம்பெயர் தமிழ் செயற்பாட்டாளர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர் என்பதையும் விவரித்தார்.

இந்த தகவல்களை மிகவும் ஆர்வத்துடன் கேட்டு உள்வாங்கிய பாராளுமன்ற உறுப்பினர் தனது சந்தேகங்களை கேட்டு தெளிவடைந்துடன், ஈழத் தமிழர்களுக்கு இடம்பெற்ற இனப்படுகொலையே என்பதை ஏற்றுக்கொண்டதுடன், சவேந்திர சில்வா உட்பட்ட யுத்தகுற்றவாளிகள் தடைசெய்யப்படவேண்டும் என்றும் இலங்கைக்கான ஆயுத விற்பனை நிறுத்தப்பட வேண்டும் என்றும் தனது முழுமையான ஆதரவை தெரிவித்தார். தனது பகுதியில் வாழும் பாதிக்கப்பட்டவர்கள் சார்பில் தான் பிரித்தானிய அரசிற்கு எடுத்துரைப்பதாகவும், FCDO இதுவரை நடவடிக்கை எடுக்காமைக்கு காரணத்தை கேட்டு கடிதம் அனுப்புவதாகவும் வாக்களித்தார்.

அத்துடன் திரு. கீத் குலசேகரம் கேட்டுக்கொண்டபடி தமிழருக்கான அனைத்துக்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் குழு (APPGT) மற்றும் மக்நெட்ஸ்கை தடைகளுக்கான அனைத்துக்கட்சி பாராளுமன்ற குழுக்களில் (APPG for Magnitsky Sanctions) இணைந்து செயற்பட சம்மதித்ததுடன், FCDO விற்கு தமிழ்மக்கள் சார்பில் இராணுவத்தளபதி சவேந்திர சில்வாவினை தடைசெய்யக் கோரி தன்னாலான வகையில் அழுத்தம் கொடுப்பதாகவும் வாக்களித்தார்.

சவேந்திர சில்வா மீதான தடைக் கோரிக்கைக்கு ஆதரவளிப்பதாக பிரித்தானிய பாராளுமன்ற உறுப்பினர் உறுதி

image_pdfPRINT

நமது ஈழநாட்டிற்கு வழங்கிய விசேட நேர்காணலில் Hon.Dean Russell MP தெரிவிப்பு

https://youtu.be/RtD5NhmliTw

சிறிலங்காவின் இராணுவத்தளபதி சவேந்திர சில்வா உள்ளிட்ட போர்க்குற்றவாளிகளை பிரித்தானியா தடை செய்ய வேண்டு மென்ற கோரிக்கைக்கு ஆதரவளிப்பதாக பிரித்தானியாவின் Watford தொகுதிக்கான பாராளுமன்ற உறுப்பினர் Hon.Dean Russell MP அவர்கள் தெரிவித்தார்.

நமது ஈழநாட்டிற்கு வழங்கிய விசேட நேர்காணலின் போதே அவர் இவ்வாறு கூறினார்.

எதிர்வரும் பொதுத் தேர்தலை முன்னிட்ட ஆளும் கட்சி பாராளுமன்ற உறுப்பினரான Hon. Dean Russell MP எம்.பி. அவர்களின் தேர்தல் பிரச்சாரப் பணியில் பிரித்தானியாவாழ் தமிழ் இளையோர் செயற்பாட்டாளர்கள் அவரது தொகுதியில்
கடந்த ஞாயிற்றுக்கிழமை செயலாற்றினர்.

சிறிலங்காவில் நடைபெற்றது இனப்படுகொலை என்பதை பிரித்தானியா ஏற்றுக்கொள்ள வேண்டுமென்றும் யுத்தக்குற்றவாளிகளில் ஒருவரான இராணுவத்தளபதி பிரிகேடியர் சவேந்திர சில்வா மீது பிரித்தானிய தடை விதிக்க அரசை வலியுறுத்த வேண்டுமென்றும் நிபந்தனையின் அடிப்படையிலேயே மேற்படி இளையோர் எம்.பி.க்கு ஆதரவு வழங்கியிருந்தனர்.

இதன்போதே பாராளுமன்ற உறுப்பினர் அவர்களிடம் நமது ஈழநாடு சிறு நேர்காணலை மேற்கொண்டது. அதில், போர் குற்றங்கள் மற்றும் இனப்படுகொலைகளின் அங்கமாக இருந்தவர்களின் ஒருவரான பிரிகேடியர் சவேந்திர சில்வா சுதந்திரமாக நடமாடிக்கொண்டிருக்கிறார். அவரை பிரித்தானியா தடை செய்ய வேண்டும் என்ற தமிழ் இளையோரின் கோரிக்கைக்கு நீங்களும் உங்களது தொகுதியும் ஆதரவு வழங்குவீர்களா என கேட்பட்டது.

அதற்கு அவர், சிறிலங்காவில் நடைபெற்ற இறுதி யுத்தம் போன்றதொரு கொடூரமான சம்பவம் இனியும் நடக்கக்கூடாது. அரசாங்க அமைச்சராக நான் இல்லாத போதிலும் அரசாங்க கண்ணோட்டத்தில் இது குறித்து நாம் என்ன செய்ய முடியும் எவ்வாறான அழுத்தங்களை அரசுக்கு வழங்க முடியும் என்பதை எண்ணியுள்ளேன். தமிழ் இளையோர் முன்வைக்கும் கோரிக்கைகளுக்கும் அவர்களின் குரல் எமது அரசாங்கத்திடம் கேட்கப்படுவதையும் உறுதி செய்வதுடன் சவேந்திர சில்வா மீதான தடை கோரிக்கைக்கு ஆதரவிளிக்கிறேன் என்று பதிலளித்தார்.

யாழில் வலுக்கும் மீனவர்களின் போராட்டம்!

image_pdfPRINT

இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபடும் இந்திய மீனவர்களை தடுத்து நிறுத்த வலியுறுத்தி யாழில் மீனவர்கள் போராட்டமொன்றை முன்னெடுத்தனர்.

வட மாகாண கடற்தொழிலாளர் இணையம் மற்றும் தேசிய மீனவர் ஒத்துழைப்பு இயக்கம் மற்றும் இலங்கை மீனவர் மக்கள் தொழிற்சங்கம் உள்ளிட்ட மீனவ அமைப்புக்கள் இணைந்து யாழ் மாவட்டச் செயலகம் முன்பாக கவனயீர்ப்பு போராட்டத்தை ஆரம்பித்தனர்.

இதனைத் தொடர்ந்து யாழிலுள்ள இந்திய துணைத் தூதரகம் வரை பேரணியாகச் சென்றனர். இதன் போது இந்திய துணை தூதரகத்திற்கு செல்லும் வழியில் பொலிஸார் இடைமறித்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

தூதரகம் முன்பாக பேரணியை செல்லவிடாது, பொலிஸார் இடைமறித்ததுடன் மீனவ அமைப்புக்களின் எட்டு பிரதிநிதிகளை சந்திப்பதற்கு அனுமதி வழங்கினர். இதற்கமைய தூதரகத்திற்குள் சென்ற பிரதிநிதிகள் தங்களது கோரிக்கைகள் அடங்கிய மகஜர் ஒன்றினைக்  கையளித்தனர்.

இந்நிலையில் பொலிஸாரால் இடைமறிக்கப்பட்ட போராட்டகார்ர்கள் இலங்கை மீனவர்களின் கடல் வளத்தை அழிக்காதே, தமிழக மீனவர்களின் அத்துமீறலை தடுத்து நிறுத்து, மீனவர்களின் வாழ்வாதாரத்தை அழிக்காதே உள்ளிட்ட பல்வேறு வாசகங்கள் எழுதப்பட்ட பதாகைகளைத் தாங்கியவாறு போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

மாவீரர் துயிலும் இல்லத்தில் புதைக்கப்பட்டது சாந்தனின் வித்துடல்

image_pdfPRINT

சாந்தனின் உடல் வடமராட்சி எள்ளங்குளம் மாவீர்ர் துயிலும் இல்லத்தில் பெருமளவிலான மக்களின் கண்ணீர் கதறலுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது.

சாந்தன் இந்தியாவின் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு முப்பது வருடங்களுக்கு மேலாக சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட போதும் தொடர்ந்து சிறப்புமுகாமில் தடுத்து வைக்கப்பட்டு தாயகம் திரும்ப இருந்த நிலையில் திடிரென உயிரிழந்திருந்தார்.

சாந்தனின் உயிரிழப்பு தாயகத்திலும் புலம்பெயர் தேசங்களிலும் உள்ள ஈழத் தமிழ் மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும் கொந்தழிப்பையும் ஏற்படுத்தியிருந்தது.

இந்நிலையில் உடுப்பிட்டியில் உள்ள அவரது சொந்த வீட்டில் இறுதிக் கிரியைகள் நடைபெற்று தலைவர் பிரபாகரனின் வீட்டில் இறுதி அஞ்சலி செலுத்தப்பட்டது.

இதனைத் தொடர்ந்து பெருமளவிலான மக்கள் புடைசூழ நல்லடக்கத்திற்காக உடல் தூயிலும் இல்லத்திற்கு எடுத்து வரப்பட்டு நல்லடக்கம் செய்யப்பட்டது.

error: Content is protected !!