SHARE

யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டை இளைஞனின் மரணத்துடன் கடற்படையினருக்கும் தொடர்பு இருப்பதாக கொலை செய்யப்பட்டவரின் மனைவி குற்றம் சுமத்தியிருந்த நிலையில், கடற்படையினரின் முன்நிலையில் இளைஞன் தாக்கப்பட்டு கடத்தப்படுகின்ற CCTV காணொளிக் காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளன.

இளைஞனை கடத்தி கொலை செய்வதற்கு கடற்படையினர் உதவி செய்திருந்தாக கொலை செய்யப்பட்டவரின் மனைவி தொடர்ந்து குற்றம் சுமத்தியிருந்தார். தற்போது வெளியாகியுள்ள வீடியோ காட்சியில் பல அதிர்ச்சி தரும் விடயங்கள் பதிவாகியுள்ளன.

கடந்த 11 ஆம் திகதி கொலை செய்யப்பட்ட இளைஞன் தனது மனைவியுடன் காரைநகர் பகுதிக்கு மோட்டார் சைக்கிளில் சென்ற பின்னர் வீடு திரும்பும்போது வானத்தில் வந்த குழுவினரால் கணவனும் மனைவியும் கடத்தப்பட்டிருந்தார். பொன்னாலை பால பகுதியில் உள்ள கடற்படை முகாமிற்கு அருகில் வைத்து கடத்தப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

எனினும் குறித்த வன்முறைக் கும்பல், கொலை செய்யப்பட்ட இளைஞனின் மனைவியை சித்தன்கேணி பகுதியில் இறக்கி விட்டு தப்பிச் சென்றிருந்தாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. வன்முறை கும்பல் தம்மை வழிமறித்து, தாக்கி கடத்த முற்பட்ட வேளை, தாம் உதவி கோரி கடற்படை முகாமிற்கு சென்றிருந்தாக கொலை செய்யப்பட்ட இளைஞனின் மனைவி குறிப்பிட்டுள்ளார்.

ஆனால் அங்கிருந்த கடற்படையினர் தம்மை தாக்கி விரட்டியிருந்தாகவும் இளைஞனின் மனைவி தெரிவித்துள்ளார். இந்நிலையில் பொலிஸார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். இந்நிலையில், கடற்படை முகாமில் பொருத்தப்பட்டிருந்த CCTV காணொளிகளை புலனாய்வாளர்கள் பெற்று தற்போது விசாரணைகளை தீவிரப்படுத்தியுள்ளனர்.

காணொளியில், இளைஞனும் மனைவியும் தஞ்சம் கோரி முகாமுக்கு ஓடி வருவதும், அங்கு கடற்படையினர் அவர்களை தாக்குவதும், வன்முறை கும்பல் கடற்படையின் முன்நிலையில் கணவன் மற்றும் மனைவியை கடத்தி செல்வதும் பதிவாகியுள்ளது.

கடற்படையினர் துப்பாக்கிகளுடன் கடத்தல் காரர்களுக்கு உதவி செய்வது காணொளியில் தெளிவாக பதிவாகியுள்ள நிலையில் கடத்தலுக்கு கடற்படையினர் உதவினார்கள் என மனைவியின் குற்றச்சாட்டுக்கு காணொளி வலு சேர்ந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Print Friendly, PDF & Email