SHARE

நமது ஈழநாட்டிற்கு வழங்கிய விசேட நேர்காணலில் Hon.Dean Russell MP தெரிவிப்பு

சிறிலங்காவின் இராணுவத்தளபதி சவேந்திர சில்வா உள்ளிட்ட போர்க்குற்றவாளிகளை பிரித்தானியா தடை செய்ய வேண்டு மென்ற கோரிக்கைக்கு ஆதரவளிப்பதாக பிரித்தானியாவின் Watford தொகுதிக்கான பாராளுமன்ற உறுப்பினர் Hon.Dean Russell MP அவர்கள் தெரிவித்தார்.

நமது ஈழநாட்டிற்கு வழங்கிய விசேட நேர்காணலின் போதே அவர் இவ்வாறு கூறினார்.

எதிர்வரும் பொதுத் தேர்தலை முன்னிட்ட ஆளும் கட்சி பாராளுமன்ற உறுப்பினரான Hon. Dean Russell MP எம்.பி. அவர்களின் தேர்தல் பிரச்சாரப் பணியில் பிரித்தானியாவாழ் தமிழ் இளையோர் செயற்பாட்டாளர்கள் அவரது தொகுதியில்
கடந்த ஞாயிற்றுக்கிழமை செயலாற்றினர்.

சிறிலங்காவில் நடைபெற்றது இனப்படுகொலை என்பதை பிரித்தானியா ஏற்றுக்கொள்ள வேண்டுமென்றும் யுத்தக்குற்றவாளிகளில் ஒருவரான இராணுவத்தளபதி பிரிகேடியர் சவேந்திர சில்வா மீது பிரித்தானிய தடை விதிக்க அரசை வலியுறுத்த வேண்டுமென்றும் நிபந்தனையின் அடிப்படையிலேயே மேற்படி இளையோர் எம்.பி.க்கு ஆதரவு வழங்கியிருந்தனர்.

இதன்போதே பாராளுமன்ற உறுப்பினர் அவர்களிடம் நமது ஈழநாடு சிறு நேர்காணலை மேற்கொண்டது. அதில், போர் குற்றங்கள் மற்றும் இனப்படுகொலைகளின் அங்கமாக இருந்தவர்களின் ஒருவரான பிரிகேடியர் சவேந்திர சில்வா சுதந்திரமாக நடமாடிக்கொண்டிருக்கிறார். அவரை பிரித்தானியா தடை செய்ய வேண்டும் என்ற தமிழ் இளையோரின் கோரிக்கைக்கு நீங்களும் உங்களது தொகுதியும் ஆதரவு வழங்குவீர்களா என கேட்பட்டது.

அதற்கு அவர், சிறிலங்காவில் நடைபெற்ற இறுதி யுத்தம் போன்றதொரு கொடூரமான சம்பவம் இனியும் நடக்கக்கூடாது. அரசாங்க அமைச்சராக நான் இல்லாத போதிலும் அரசாங்க கண்ணோட்டத்தில் இது குறித்து நாம் என்ன செய்ய முடியும் எவ்வாறான அழுத்தங்களை அரசுக்கு வழங்க முடியும் என்பதை எண்ணியுள்ளேன். தமிழ் இளையோர் முன்வைக்கும் கோரிக்கைகளுக்கும் அவர்களின் குரல் எமது அரசாங்கத்திடம் கேட்கப்படுவதையும் உறுதி செய்வதுடன் சவேந்திர சில்வா மீதான தடை கோரிக்கைக்கு ஆதரவிளிக்கிறேன் என்று பதிலளித்தார்.

Print Friendly, PDF & Email