Home Blog Page 12

நிரந்தர அரச அதிபர்களை நியமிக்குமாறு கோரிக்கை

image_pdfPRINT

-ஜனாதிபதிக்கு சி.வி. விக்னேஷ்வரன் கடிதம்

யாழ்ப்பாணம், கிளிநொச்சி மாவட்டங்களுக்கான நிரந்தர அரச அதிபர்களை உடனடியாக நியமிக்குமாறு கோரி, அவசர கடிதமொன்று நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்னேஸ்வரனால் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம், கிளிநொச்சி மாவட்டங்களுக்கான நிரந்தர அரச அதிபர்களின் நியமனம் தொடர்பில் ஏற்கனவே விக்னேஸ்வரனால் ஜனாதிபதிக்குக் கடிதம் எழுதப்பட்டிருந்த போதும் அதனை நிறைவேற்றாது தரம் போதாமை காரணமாகப் பதில் அரச அதிபர்கள் நியமிக்கப்பட்டனர்.

இந்த நிலையில் இன்று வெள்ளிக்கிழமை முதல் 3 நாள் பயணமாக வடக்கு வந்துள்ள ஜனாதிபதி ரணிலை அங்குள்ள பல நாடாளுமன்ற உறுப்பினர்கள் சந்திக்க உள்ளதுடன், தீர்க்கமான பேச்சுகளிலும் ஈடுபட உள்ளனர்.

ஜனாதிபதித் தேர்தல் நெருங்கிகயுள்ளதால் அவசரமாக நிறைவேற்றக் கூடிய சில கோரிக்கைகளை ஜனாதிபதியிடம் இவர்கள் முன்வைக்கவுள்ளதாக தெரியவருகிறது.

இந்தப் பின்புலத்திலேயே நிரந்தர அரச அதிபர்களை நியமிக்குமாறு கோரியே இந்த அவசர கடிதம் சி.வி.விக்னேஸ்வரனால் ஜனாதிபதிக்கு இரண்டாவது தடவையாகவும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதித் தேர்தல்: ஐவர் கட்டுப்பணம் செலுத்தியுள்ளனர்!

image_pdfPRINT

2024 ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்காக இதுவரை ஐவர் கட்டுப்பணம் செலுத்தியுள்ளனர்.

ஜனாதிபதி ரணில்விக்ரமசிங்க மற்றும் சரத் கீர்த்தி ரத்ன ஆகியோர் சுயாதீன வேட்பாளர்களாக கட்டுப்பணம் செலுத்தியுள்ளதுடன் சிவில் சமூகசெயற்பாட்டாளர் ஓஷல ஹேரத் மற்றும் வர்த்தகர் ஏ எஸ் பி லியனகே ஆகியோரும் ஜனாதிபதி தேர்தல் வேட்பாளர்களாக ஏற்கனவே கட்டுப்பணம் செலுத்தியுள்ளனர்.

இந்த நிலையில் 2024 ஆம் ஆண்டுக்கான ஜனாதிபதித் தேர்தலில் ஐக்கிய மக்கள் கூட்டணியின் வேட்பாளராக எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாஸ இன்றைய தினம் கட்டுப்பணம் செலுத்தியுள்ளார்.

சஜித் பிரேமதாஸ சார்பில் ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்துமபண்டார, தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு சென்று இன்று கட்டுப்பணம் செலுத்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

கிளிநொச்சியில் காணி அபகரிப்பு: பொதுமக்கள் போராட்டம்

image_pdfPRINT

கிளிநொச்சி கனகாம்பிகைக்குளப்  பகுதியை  ஆக்கிரமிப்பதைத்  தடுக்குமாறு கோரி அப்பிரதேச மக்கள் ஆக்கிரமிப்புப் பகுதிக்கு முன்பாக கவனயீர்ப்புப்  போராட்டமொன்றை முன்னெடுத்திருந்தனர்.

கவனயீர்ப்பு போராட்டத்தில் கனகாம்பிகைக்குள கமக்காரர் அமைப்பினர்  கிராம மக்கள் இரணைமடு கமக்காரர் அமைப்புக்களின் பிரதிநிதிகள் எனப் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

இதேவேளை கவனயீர்ப்பு போராட்டம் இடம்பெற்ற பகுதியைப் பார்வையிடுவதற்காக மாவட்ட அரசாங்கதிபர் எஸ் -முரளீதரன் கரைச்சி பிரதேச செயலாளர். முகுந்தன் ஆகியோர் வருகை தந்திருந்தனர்.

இதன்போது காணி ஆக்கிரமிப்பவரின்  ஆவணத்தை கோரியிருந்தனர். எனினும் உரிய ஆவணம் இன்மையால் பொலிஸாரிடம்,  பரவப்பட்டுள்ள கிரவல்களை அகற்றுமாறு மாவட்ட அரசாங்கதிபர்  அறிவுறுத்தியிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

வடக்கு – கிழக்கில் தமிழர்களின் வரலாற்றை சிதைக்க தென்னிலங்கை திட்டம் – செல்வம் அடைக்கலநாதன்

image_pdfPRINT

வடக்கு – கிழக்கில் தமிழர்கள், பூர்வீகமாக வாழ்ந்தார்கள் என்கின்ற வரலாற்றை சிதைக்கும் வகையில், இன்று தென்னிலங்கை திட்டமிட்டு பல விடயங்களை அரங்கேற்றி வருவதாக வவுனியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் குற்றஞ்சாட்டியுள்ளார்.

வெலிக்கடை சிறைச்சாலை படுகொலையின் 41 ஆவது நினைவேந்தல் நிகழ்வு, மன்னாரில், தமிழீழ விடுதலை இயக்கம் ரெலோ கட்சியின் அலுவலகத்தில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில், கலந்துக்கொண்டு உரையாற்றிய செல்வம் அடைக்கலநாதன், எமது ஒற்றுமை இன்மை காரணமாக எமது மக்களையும் மண்ணையும் நாம் இழந்து விடக்கூடாது என வலியுத்தியுள்ளார்.

மேலும், ஒர் இன அழிப்பின் ஆரம்ப இடம் வெலிக்கடை சிறைச்சாலை எனவும், ஒரு இனத்தின் மீது வன்முறைகள் ஆரம்பிக்கப்படுவது தான் இலங்கை வரலாற்றில் கூறப்படுகின்ற மிக மோசமான வன்முறையாகும் என தெரிவித்துள்ளார்.

1983 ஆம் ஆண்டு இளைஞர் யுவதிகள் தமது உயிரை எமது தேசத்திற்காக தியாகம் செய்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் குறிப்பிட்டுள்ளார்.

தற்போது, ஆயுதப்போராட்டம் மௌனிக்கப்பட்டு, மீண்டும் அகிம்சை ரீதியான போராட்டங்களினூடாக எமது இனத்தின் பிரச்சினைகளை வெளிக்கொண்டு வரும் கால கட்டத்தில் தாம் இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். அத்துடன், எமது மக்களின் நிலங்கள், கடல் வளம், மண் அபகரிக்கப் படுவதாகவும் அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.

மேலும், எமது ஒன்றுமை இன்மையால், தென்னிலங்கையில் உள்ளவர்கள், வடக்கு கிழக்கில் ஆட்சி நடத்தக்கூடிய அல்லது அவர்களின் செயல்பாட்டை இங்கு திறம்பட செயற்படுத்தக்கூடிய வாய்ப்பை வழங்கி வரும் நிலைப்பாட்டிலேயே தாம் இருந்து வருவதாக தெரிவித்துள்ளார்.

எனவே, அனைத்து கட்சிகளும் ஒன்றிணைந்து மக்களின் விடுதலைக்காகவும், மக்கள் விரும்புகின்ற ஒற்றுமையை பேணி மக்களுக்காக குரல் கொடுக்கும் எமது மண்ணை மீட்டெடுக்கும் தார்மீக செயல்பாட்டை முன்னெடுக்க வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

மட்டக்களப்பில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் போராட்டம்!

image_pdfPRINT

காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் கவன ஈர்ப்பு போராட்டம் இன்று புதன்கிழமை மட்டக்களப்பு காந்திப் பூங்காவில் நடைபெற்றது.

கறுப்பு ஜூலை 41, வது ஆண்டு நினைவாக இந்த கவன ஈர்ப்பு போராட்டத்தை வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களின் ஏற்பாட்டில் முன்னெடுத்திருந்தனர்.

கையில் ஒப்படைத்த எமது பிள்ளைகளுக்கு என்ன நடந்தது, காணாமல் ஆக்கப்பட்ட எமது உறவுகளுக்கு என்ன நடந்தது, என்பதை கண்டறிய சர்வதேச விசாரணை வேண்டும் எனக் கூறி போரட்டத்தை முன்னெடுத்தனர்.

பொலிஸ்மா அதிபர் நியமணத்தில் குளறுபடி!

image_pdfPRINT

நாட்டின் பொலிஸ் மா அதிபரை நியமிப்பது தொடர்பான நியமனக் கடிதம் திரிபுபடுத்தப்பட்ட பின்னரே சபாநாயகரால் ஜனாதிபதிக்கு அனுப்பி வைக்கப்பட்டதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று சபையில் குற்றம் சுமத்தியிருந்தார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது” தேசபந்து தென்னகோனின் நியமனம் முற்றிலும் தவறானது. சபாநாயகரால் அனுப்பப்பட்ட கடிதம் திரிபுபடுத்தப்பட்ட கடிதமே.

இதன் அடிப்படையில் அரசியலமைப்பை ஜனாதிபதி அப்பட்டமாக மீறியுள்ளார். அரசியலமைப்பை மீறியே பொலிஸ் மா அதிபரை ஜனாதிபதி நியமித்துள்ளார். அரசியலமைப்பு பேரவையின் தீர்மானத்தை திரிபுபடுத்தி சபாநாயகர் ஜனாதிபதிக்கு அனுப்பிய கடிதத்தை இந்த சபைக்கு சமர்ப்பிக்கின்றேன்.

இது அரசியலமைப்புச் சட்டத்தை அப்பட்டமாக மீறுவதாகும். இந்த மோசடி கடிதத்தின் அடிப்படையில் ஜனாதிபதி பொலிஸ் மா அதிபரை நியமித்தது சட்டவிரோதமானது. ஜனாதிபதியும் அரசியல் சட்டத்தை அப்பட்டமாக மீறியுள்ளார்.

இது பிரதமருக்குத் தெரியும்.பிரதமரால் இதற்கு பதில் சொல்ல முடியாது. சபாநாயகரும் அரசியல் சட்டத்தை அப்பட்டமாக மீறியுள்ளார். அதற்கு என்ன நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன?ஜனாதிபதி இந்த விடயத்தை நன்கு அறிந்தவர் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை” இவ்வாறு எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்துள்ளார்.

பிரித்தானியா பாராளுமன்றின் முன் சற்று முன்னர் திரண்ட தமிழர்கள் !

image_pdfPRINT

கறைபடிந்த கறுப்பு யூலை தமிழினப்படுகொலையின் 41 ஆவது ஆண்டு நினைவு நாளினை முன்னிட்டு தமிழினத்திற்கு இழைக்கட்ட அநீதிக்கு நீதி கோரி பிரித்தானியாவில் புலம் பெயர் தமிழர்கள் பெரும் ஆர்ப்பாட்டத்தில் சற்றுமுன்னர் ஈடுபட்டு வருகின்றனர்.

பிரித்தானிய பாராளுமன்றம் முன்பாக பெருமளவில் ஒன்று திரண்ட புலம்பெயர் தமிழர்கள், 1983 ஆம் ஆண்டு கலவரத்தை தொடர்ந்து தமிழினம் மீதும் தொடர்ந்தும் நிகழ்த்தப்பட்டு வரும் இனப்படுகொலையை நிறுத்தக்கோரியும் குற்றவாளிகளை சர்வதேச நீதிமன்றில் நிறுத்தக்கோரியும் பிரித்தானிய அரசை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

அதன் நேரலை காட்சிகளை எமது நமது ஈழநாடு YouTube வழியாக காணலாம்

https://www.youtube.com/live/gMrsOjWdL_E?si=7-7ch_c1gyb25OJO

இராஜாங்க அமைச்சரால் உயிா் அச்சுறுத்தல் – சாணக்கியன்!

image_pdfPRINT

இராஜாங்க அமைச்சர் ஒருவர் தன்னை கொலை செய்ய திட்டம் தீட்டியுள்ளார் என்று தகவல் கிடைத்துள்ளதாகவும் இதுதொடர்பாக சபாநாயாகர் உரிய விசாரணை நடத்தி உண்மையை வெளிக்கொண்டுவர வேண்டும் என்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்தார்.

நாடாளுமன்றில் இன்று உரையாற்றியபோதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். இவ்விடயம் தொடா்பாக அவா் மேலும் தொிவிக்கையில்,

”லங்கா ஈ நியுஸ் என்ற தளத்தில், என்னை கொலை செய்ய திட்டம் தீட்டப்பட்டுள்ளதாகவும் இதுதொடர்பாக சர்வதேச புலனாய்வுப் பிரிவினர் ஊடாக தகவல் கிடைத்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆளும் தரப்பிலுள்ள இராஜாங்க அமைச்சர் ஒருவரே என்னை கொலை செய்ய திட்டம் தீட்டியுள்ளார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த இராஜாங்க அமைச்சர் இதற்கு முன்னரும், கொலைக் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளாகியிருந்தார்.

அத்தோடு, ஈஸ்டர் தாக்குதல் விவகாரத்திலும் இவருக்கு தொடர்பு உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, இதுதொடர்பாக விசாரணையொன்றை நடத்த வேண்டும்.

இந்தச் செய்தியின் உண்மைத் தன்மை எனக்கு தெரியாது என்றாலும், இதுதொடர்பாக தேடிப்பார்க்க வேண்டும்.

ஏனெனில், குறித்த இராஜாங்க அமைச்சர் இதற்கு முன்னரும் கொலை குற்றச்சாட்டுகளுக்கு உள்ளாகியுள்ளார் என்பதால், சபாநாயகர் ஊடாக இதனை ஆராய்ந்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நான் கேட்டுக் கொள்கிறேன்” என அவா் மேலும் தொிவித்தாா்.

பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்க வேண்டும்! -மீனாக்ஷி கங்குலி

image_pdfPRINT

”வெளிநாடுகளிலுள்ள இலங்கை பிரஜைகள்,  பயங்கரவாதத் தடைச்சட்டத்தை நீக்குமாறு  வலியுறுத்த வேண்டும்” என சர்வதேச மனித உரிமை கண்காணிப்பகத்தின் ஆசியாவிற்கான பிரதி இயக்குநர் மீனாக்ஷி கங்குலி (Meenakshi Ganguly)  வேண்டுகோள் தெரிவித்துள்ளார்.

நாட்டில் பயங்கரவாதத்  தடைச்சட்டத்தை பயன்படுத்துவதை முடிவிற்கு கொண்டுவருவதாக, அரசாங்கம் உறுதியளித்துள்ள போதிலும் இலங்கை அதிகாரிகள் தொடர்ந்தும் பயங்கரவாத தடைச்சட்டத்தினை தமது எதிராளிகளுக்கு எதிராகப்  பயன்படுத்துவதாகவும்  மீனாக்ஷி கங்குலி இதன்போது  குற்றம் சுமத்தியுள்ளார்.

குறிப்பாக நாட்டின் சிறுபான்மை சமூகத்தினருக்கு எதிராகவே பயங்கரவாத தடைச்சட்டம் பயன்படுத்தப்படுவதாகத் தெரிவித்த அவர் கடந்த காலத்தில்  சர்வதேச அழுத்தங்கள் காரணமாக நாட்டில்  சிறியளவு முன்னேறங்கள் ஏற்பட்டிருந்தாகவும் குறிப்பிட்டுள்ளார்.

ஐந்து வழக்குகளில் வைத்தியர் அர்ச்சுனாவிற்கு எதிராக நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு

image_pdfPRINT

வைத்தியர் அர்ச்சுனா இராமநாதனுக்கு எதிராக சாவகச்சேரி நீதவான் நீதிமன்றில் ஐந்து வழக்குகள் தொடரப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சாவகச்சேரி ஆதார வைத்தியசாலை அலுவலகங்களுக்குள் நுழைய தடை விதித்து வைத்தியர் இராமநாதன் அர்ச்சுனாவிற்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

எனினும், வைத்தியசாலை விடுதியில் தங்குவதற்கு மட்டும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

அதேவேளை, சமூக ஊடகங்களில் ஏனைய வைத்தியர்கள் மீது சுமத்திய குற்றச்சாட்டுக்களிற்கான ஆதாரங்களுடன் சாவகச்சேரி பொலிஸில் முன்னிலையாகி வாக்கு மூலம் வழங்குமாறும் உத்தரவிடப்பட்டுள்ளது.

மேலும், வைத்தியர் முன்வைத்த குற்றச்சாட்டுக்களுக்கு நாளை ஆதாரங்களை சமர்ப்பிக்காவிட்டால், அவர் மீது வழக்கு தொடரலாம் என்றும் பொலிஸாருக்கு உத்தரவிடப்பட்டது.

சாவகச்சேரி நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்டுள்ள வழக்குகளுக்கு அமைய இன்று இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், தனக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டுள்ளதை வைத்தியர் அர்ச்சானா உறுதிப்படுத்தி, தனது சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார்.  சாவகச்சேரி வைத்தியர்களுக்கு எதிரான அவதூறு உள்ளிட்ட விவகாரங்களில் சாவகச்சேரி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.

இது தொடர்பான 3 முறைப்பாடுகளில் இன்றையதினம் (16.07.2024) வைத்தியர் அர்ச்சுனாவை நீதிமன்றத்தில் முன்னிலையாக நீதவான் உத்தரவிட்டிருந்தார்.

இன்றைய வழக்கு விசாரணையில் முறைப்பாடளித்த வைத்தியர்கள் சார்பில் சட்டத்தரணிகள் திருக்குமரன், குருபரன் ஆகியோர் முன்னிலையாகியிருந்தனர்.

இதன்படி ,நீதிவான் நீதிமன்றம் 75 ஆயிரம் ரூபா ஆள் பிணை மற்றும் நிபந்தனைகளுடன் விடுவித்துள்ளது.

சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையின் முன்னாள் பதில் வைத்திய அத்தியட்சகர் வைத்தியர் இராமநாதன் அர்ச்சுனாவுக்கு எதிராக சாவகச்சேரி நீதிவான் நீதிமன்றத்தில் 5 வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

அவற்றின் மீதான விசாரணைகள் இன்று மன்றில் நடைபெற்றன. அதன்போது, வைத்தியர் மன்றில் முன்னிலையாகி இருந்துள்ளார்.

இதன் போது வழக்குத் தொடுநர்கள் சார்பாக ந.குருபரன், திருக்குமரன் உள்ளிட்ட நான்கு சட்டத்தரணிகள் முன்னிலையாகி இருந்தனர். எதிராளி சார்பாக சட்டத்தரணிகள் எவரும் முன்னிலையாகவில்லை.

வைத்தியர் அர்ச்சுனாவே தன் பக்க நியாயங்களை முன்வைக்க சந்தர்ப்பம் வழங்கப்பட்டது. இருபக்க வாதங்களையும் செவிமடுத்த நீதவான், வைத்தியர்கள் தொடர்பாக முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளுக்கான ஆதாரங்களுடன் சாவகச்சேரி பொலிஸ் நிலையத்தில் முன்னிலையாகி வாக்குமூலம் அளிக்குமாறு வைத்தியர் அர்ச்சனாவுக்கு உத்தரவிட்டதோடு ஒவ்வொரு வழக்கிலிருந்தும் தலா 75 ஆயிரம் ரூபாய் சரீரப் பிணையில் அவரை விடுவித்தார்.

எதிராளி ஆதாரங்களுடன் வாக்குமூலம் வழங்காவிட்டால் அவர் மீது வழக்கு தொடரலாம் எனவும் பொலிஸாருக்கு நீதவான் அறிவுறுத்தினர்.

மேலும், சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையின் சுமுகமான செயற்பாட்டிற்காக, முன்னாள் பதில் வைத்திய அத்தியட்சகர் அர்ச்சுனாவை வைத்தியசாலையின் நிர்வாக செயல்பாடுகளில் தலையிடவும், வைத்தியசாலைக்குள் நுழையவும் தடை உத்தரவு பிறப்பித்தார்.

இருந்தபோதிலும் வைத்தியசாலையின் விடுதிக்குள் தங்குவதற்கு மட்டும் அனுமதி வழங்கினார்.

அதனைத்தொடர்ந்து வழக்கு விசாரணை இம்மாதம் 31ஆம் திகதிக்கு தவணையிடப்பட்டள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஒலிம்பிக் ஜோதியை ஏந்திச் சென்றார் சாதனைத் தமிழன் தர்ஷன்

image_pdfPRINT

சாதனைத் தமிழன் தர்ஷன் செல்வராஜா பிரான்ஸ் ஒலிம்பிக் போட்டிக்கான ஒலிம்பிக் சுடரினை சற்று முன்னர் பிரான்சின் பெருநகரில் ஏந்திச் சென்றார்.

பிரான்சில் ஒலிம்பிக் போட்டிக்கள் ஆரம்பமாவதற்கு இன்னும் 10 நாட்களே மீதமுள்ள நிலையில் ஒலிம் போட்டியின் அடையாளமான ஒலிம்பிக் சுடர் ஆரம்பவிழா அரங்கை நோக்கி பலரால் எடுத்துச் செல்லப்படுகின்றது.

இந்நிலையிலேயே இந்த ஒலிம்பிக் சுடரை ஏந்திச் செல்லும் நபர்களில் ஒருவராக தெரிவு செய்யப்பட்டிருந்த ஈழத்தமிழன் தர்ஷன் செல்வராஜா இன்று திங்கட்கிழமை (15) மாலை ஒலிம்பிக் ஜோதியை ஏந்திச்சென்றார்.

கடந்த 2023 ஆம் ஆண்டு பிரான்சில் சிறந்த பாண் தயாரிப்புக்கான முதலிடத்தை பெற்ற தர்சன் செல்வராஜ் அந்த வெற்றியின் மூலம் அவ்வாண்டு முழுவதும் பிரான்ஸ் ஜனாதிபதி மாளிகைக்கு அவரின் வெதுப்பகத்திலிருந்தே காலை உணவை வழங்கும் வாய்ப்பை பெற்றார்.

அதேவேளை எதிர்வரும் 26 ஆம் திகதி பிரான்சில் ஆரம்பமாகவுள்ள ஒலிம்பிக் போட்டிக்கான ஒலிம்பிக் சுடரை ஏற்திச் செல்லும் வாய்ப்பும் அவரை தேடி வந்தது.

ஒலிம்பிக்கின் தாயகமான கிரீசில் ஏற்றப்பட்ட ஒலிம்பிக் ஜோதி பல நாடுகளுடாக பயணித்து இறுதியாக ஒலிம்பிக் நடைபெறும் நாடான பிரான்சை வந்தடைந்தது. பின்னர் பிரான்சின் புற நகரங்களினூடாக ஏந்திவரப்பட்ட ஒலிம்பிக் ஜோதி தற்போது பிரான்சின் தலைநகரை வந்தடைந்துள்ளதுடன் ஒலிம்பிக் போட்டி ஆரம்பமாகவுள்ள அரங்கை நோக்கி எடுத்துச் செல்லப்படுகின்றது.

இந்நிலையிலேயே ஒலிம்பிக் ஜோதியின் இன்றைய பயணத்தின் தர்சன் செல்வராஜா பெருமை மிகு ஒலிம்பிக் ஜோதியை தனது கரங்களில் ஏந்தி பெரு வீதியில் பயணித்தார்.

படங்கள் – சொக்கலிங்கம் விஜிதன்

error: Content is protected !!