முள்ளிவாய்க்கால் டயரி
மே-12
இன்று (12) பரவலாக எறிகணைகள் வீழ்ந்து வெடிக்கிறது. காயமடைந்தவர்களின் தொகை தெரியவில்லை. கொல்லப்படுபவர்களின் தொகை தெரியவில்லை. “ஈழநாதம் செய்திஆசிரியரின் குடும்பத்தில் ஏழு பேர் கொல்லப்பட்டுவிட்டார்களாம்” இப்படி எல்லாரும் வந்து சொல்லினம்.
எனக்கு நெஞ்சில இருந்து ஊனம் வடிய ஆரம்பித்துவிட்டிருந்தது. என்னை பார்த்திட்டு போறவர்கள் “சுரேன் இறக்கப்போரான் போல” என்று தங்களுக்குள் பேசிக்கொள்வதை கேட்கமுடிகிறது.”
முள்ளிவாய்க்கால் இறுதியாக இருந்த வைத்தியசாலைக்கு மீண்டும் கொண்டுசெல்லப்பட்டேன். திடீரென எறிகணைகள் வீழ்ந்து வெடிக்கின்றது. வைத்தியசாலை முற்றத்தில் விழுந்த எறிகணையில் பலர் கொல்லப்பட்டார்கள். “அருகில் நின்ற பெண் வைத்தியர் எங்களை பங்கருக்குள் இருக்கசொல்லிட்டு வெளில நிண்டவா” இப்ப அவா ஊரில இருக்கிறாவாம் என்று கேள்விப்பட்டனான். மனதிற்குள் ஒரு திருப்தி. பலருடய முயற்சியில் நான் காப்பாற்றப்பட்டதன் விளைவு… பல்லாயிரம் கடல்மைல்களுக்கு அப்பால் இருந்தாலும் “போரின் சாட்சியங்களில் ஒருவராக இருக்கின்றேன்” என்பதைவிட, சிறிலங்கா படையினருக்கு எதிராக சாட்சியம் அளிக்கும் மனதோடு இருக்கின்றேன்” எங்கள் மக்களை கண்முன்னே கொன்றவர்களுக்கு என்னால் இதைமட்டும் தான் செய்யமுடியும்…
“இப்புகைப்படத்தில் நான் அணிந்திருக்கும் சேட் இப்பவும் என்னிடம் இருக்கின்றது” அதைவிட என் உடலில் இருந்து எடுக்கப்பட்ட எறிகணையின் சிறிய இரும்புப்புகுதி என்னிடம் இருக்கின்றது. நெஞ்சில் இருந்து எடுக்கபட்ட குண்டின் ஒரு சிறுபகுதியினை விட ஆங்காங்கே எனக்கு சிறிய இரும்புத்துண்டுகள் தற்பொழும் இருக்கின்றது. அது எப்படி என் உடம்பில் வந்தது என்று தெரியாது.
-இறுதிப்போரின் சாட்சி சுரேன் கார்த்திகேசு