SHARE

யாஸ்மின் சூக்கா தலைமையிலான சர்வதேச உண்மை மற்றும் நீதித் திட்டத்தின் இயக்குனரும் 2000-2004 வரையான நோர்வேயின் மத்தியஸ்த சமாதான நடவடிக்கையின் போது கொழும்பில் பிபிசி நிருபராக பணியாற்றியவருமான பிரான்சிஸ் ஹாரிசன் விசேட கட்டுரை

தங்கள் சட்டபூர்வ அமைதிவழி அரசியல் உரிமைகளைப் பயன்படுத்துவதற்காக வடக்கு கிழக்கில் வாழும் தமிழ் இளையோரின் புதிய தலைமுறையொன்று பாதுகாப்புப் படையினரால் தேர்ந்தெடுக்கப்பட்டு சித்திரவதைக்கு உள்ளாக்கப்படுகின்றார்கள். பெற்றோர்கள், ஆசிரியர்கள், அரசியல்வாதிகள் மற்றும் சமூக அமைப்பாளர்கள் இந்த அபாயங்கள் குறித்து அதிக விழிப்புடன் இருக்க வேண்டும் என பிரான்சிஸ் ஹரிசன் குறிப்பிடுகின்றார்.

‘எந்த பிரச்சனையிலும் மாட்டிக்கொள்வேன் என்று நான் நினைக்கவில்லை’ எனக்கூறுகின்றார் வெளிநாட்டில் உள்ள ஒருவர் தனது வங்கிக் கணக்கிற்கு பணம் அனுப்ப அனுமதித்த இருபது வயதான ஒருவர். அது காணாமல் போனவர்களின் குடும்பங்களுக்கு ஆதரவளிப்பதற்கான பணம் என அவருக்குக் கூறப்பட்டது. அதற்கு அவரது பெற்றோர் கூட எதிர்ப்புத் தெரிவிக்கவில்லை. ”ஏதேனும் ஆபத்து இருக்கக்கூடும் என்று நாங்கள் அனைவரும் நினைத்தோம், ஆனால் இந்தளவு பிள்விளைவுகள் நடக்கும் என்று நாங்கள் யாரும் எதிர்பார்க்கவில்லை’ இப்போது லண்டனில் இருக்கும் அவர் கூறினார். அவரது உடல் இப்போது நிரந்தரமாக சித்திரவதையின் வடுக்களைத் தாங்கியுள்ளது.

2020ம் ஆண்டில், ஒருநாள் அதிகாலை அவரது வாழ்கையைப் புரட்டுப்போட்டது. அவரை கைது செய்ய TID இன் அதிகாரிகள் வந்தனர். ‘’நான் ஜீப்பை நோக்கி வலுக்கட்டாயமாகக் கொண்டுசெல்லப்பட்டுக்கொண்டிருந்த நேரத்தில் கடையாகப் பார்த்தது, என் அப்பா என் அம்மாவை ஆறுதல்படுத்திக் கொண்டிந்ததைத்தான்’ என்று அவர் கூறினார்.. தடுப்புக்காவலில் அவருக்கு நிகழ்ந்த பாலியல் சித்திரவதையின் விவரங்கள் மிகவும் கொடூரமானவை மற்றும் அச்சிட முடியாதவை. அவரது குடும்பத்தினர் ஒருவாறு லஞ்சம் கொடுத்து அவரை விடுவித்தனர்.

அதே வயதுடைய மற்றொரு பையன் காணாமல் போனவர்களின் குடும்பங்கள் நடத்திய போராட்டங்களுக்குச் செல்லத் தொடங்கினார். பின்னர்; 2019 ஜனாதிபதித் தேர்தல் பிரச்சாரத்தில் துண்டு பிரசுரங்களை விநியோகிக்க உதவினார். கோட்டாபய ராஜபக்சே தேர்ந்தெடுக்கப்பட்டால் வெள்ளை வாகனக் கடத்தல்கள் மீண்டும் தொடங்கும் என்று துண்டுப்பிரசுரங்கள் நகைமுரணாக எச்சரித்தன. சாதாரண உடைகளில் உளவுத்துறை அதிகாரிகள் கூட்டங்களை கவனிப்பதை அவர் கவனித்தார், ஆனால் அவற்றைப் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. ‘அந்த நேரத்தில் நான் முற்றிலும் பாதுகாப்பாக உணரவில்லை, ஆனால் நான் அதை மக்களுக்காக செய்ய விரும்பினேன்,” என்று அவர் கூறினார். அங்கே எச்சரிக்கப்பட்டிருந்தும் கூட அவர் அதைப் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை.

2020 இல் ஒரு இரவு அவர் அந்தி வேளையில் வீட்டுக்கு சைக்கிளில் சென்று கொண்டிருந்தபோது ஒரு வெள்ளை வாகனத்தை கவனித்தார். அவர் கடந்து செல்லும்போது, மூன்று பேர் வெளியே குதித்து அவர் பெயரைக் கேட்டனர். ஒருவர் அவரது கழுத்தைப் பிடித்தார், மற்ற இருவர் அவரை வாகனத்தின் பின்பகுதிக்குள் தள்ளி, முகத்தை கீழே வைத்து, கண்களை மறைத்துக் கட்டியதுடன் கயிற்றால் கைகளைப் பிணைத்தனர். அவர் உதவிக்காக அலற முயன்றபோது, அவர்கள் அவரது வாயை மூடினர். “அவர்கள் என்னைக் கொன்றுவிடுவார்கள் என்று நான் நினைத்தேன். நான் மிகுந்த அச்சத்தில் உறைந்தேன், அனைத்தும் மிகவும் வேகமாக நிகழ்ந்ததால் என்ன நடக்கிறது என்று எனக்குப் புரியவில்லை. நான் மிகுந்த அதிர்ச்சியடைந்தேன்” என்றார். வாகனத்தின் பின்புறத்தில் ஆண்கள் சிங்களத்தில் கதைத்தவாறு அவரை உதைத்தனர் அவரை “தமிழ் நாய்” என்று அழைத்தனர். அவர்கள் ஓரிடத்தை வந்தடைந்தபோது, அவர் ஒரு இருண்ட துர்நாற்றம் வீசும் அறைக்குள் தள்ளப்பட்டார்.

முதல்நாள் இரவில் கதவைத் திறந்து, அவர்மீது நீரை ஊற்றி அவரது நித்திரையைத் தடுத்தனர். மறுநாள் அவர் சுவரில் இரத்தக் கறைகளுடன் காணப்பட்ட ஓர் அறைக்குக் கொண்டு செல்லப்பட்டார். அங்கே மூலையில் குழாய்கள், மட்டைகள், கம்பிகள் மற்றும் நைலான் கயிறு என்பன இருந்தன. ஒரு சிங்களவர் ஏன் பிரிவினைவாதத்தை புதுப்பித்து மக்களை அரசுக்கு எதிராக திருப்பிவிட முயற்சிக்கிறாய் என்று கேட்டார். பின்னர் அவருக்கான சித்திரவதை தொடங்கியது. “அவர்களில் ஒருவர் என் தலையில் பெட்ரோல் ஊறிய பாலிதீன் பையால் மூடி மூச்சுத் திணறலை ஏற்படுத்தினார். என்னால் மூச்சு விட முடியவில்லை, என் முகத்தில் கடுமையான எரிச்சல் ஏற்பட்டது. நான் சுயநினைவை இழந்து கீழே விழுந்தேன்” என்றார். மறுநாள் காணாமல் போன போராட்டங்களில் ஈடுபட்ட மற்றவர்களையும் ‘ஜனாதிபதிக்கு எதிராக வேலை செய்பவர்களையும்” அடையாளம் காணும்படி அவரிடம் கேட்கப்பட்டது.

விசாரணையாளர்கள் அவரது முகத்தைக் கீழ் நோக்கி ஒரு வாங்கிலில்; கட்டி, பிரம்பால் உள்ளங்கால்ளில் அடித்தனர், அது அவரது உடலில் மின்சாரத் தாக்கத்தை ஏற்படுத்தியது. அவரை அடித்து, சிகரட்டுக்களால் எரிகாயம்வைத்து, பாதித்தண்ணீரில் மூச்சுணத்திணறடிப்புச்செய்து, அடித்துச் சித்திரவதைசெய்து பின்னர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கின்றார். இவற்றுடன் சேர்த்து இப்பத்திரிகை இங்கே வெளியிட முடியாத வார்த்தைப் பிரயோகங்களால தமிழர்களை அசிங்கமாகத் திட்டி அவமதித்தார்கள். இவ்விளைஞன் அப்போதுதான் வாழத்தொடங்கியிருந்தால், ஆனால் அன்றைய நாளில் இறப்பது மேல் என்ற எண்ணத்தில் ஒரு தடுப்பறையில் நிர்வாணநிலையில் படுத்துக்கிடந்தான்.

நாங்கள் பார்த்த பாதிக்கப்பட்டவர்களில் மிக இளையவரின் வயது 19 மட்டுமே. போரில் இறந்தவர்கள் நினைவு நிகழ்வுகள், காணாமல் போனோர் போராட்டங்கள், P2P அணிவகுப்பு அல்லது தமிழ் அரசியல் கட்சிகளுக்கு உதவுதல் என்பவற்றில் பங்கெடுக்க முன்வந்த போது சித்திரவதைக்கு ஆளாக நேரிடும் என்று அவர்களில் யாரும் உணரவில்லை. பலருக்கு இது அரசியல் விழிப்புணர்வின் ஒரு பகுதியாக இருந்தது. ‘ஒரு பெரிய எதிர்ப்புப் போராட்டத்தில் இது எனது முதல் அனுபவம்” என்று இருபதுகளில் இருந்த மற்றொரு இளைஞன் கூறினார், “இந்த விடயத்தில் நான் மிகவும் ஆர்வமாக இருந்தேன்.

காணாமல் போனவர்களின் குடும்பங்கள் தங்கள் அன்புக்குரியவர்களை எண்ணி அழுவதைப் பார்ப்பது ஒரு உணர்ச்சிபூர்வமான அனுபவம்; அது நீதிக்காக வேலை செய்ய வேண்டும் என்ற என்னுடைய நிலைப்பாட்டை மேலும் தீவிரமாக்கியது” என்றார். அவர் பதாகைகள் மற்றும் அட்டைகளை அச்சிடுவதில் ஈடுபட்டார் – அரசுக்கு எவ்வகையிலும் அச்சுறுத்தலாக இல்லை. ஒரு வருடம் கழித்து, கடத்தப்பட்டு சித்திரவதையால் சீரழிக்கப்பட்டு, உலகின் மிகப்பரபரப்பான கடற்போக்குவரத்துப்பாதையான ஆங்கில கால்வாயின் அலைகடலில், எரிபொருள் இல்லாத சிறிய திறந்த இறப்பர் படகில் மேலும் முப்பத்தியொரு மக்களுடன் மேலும் கீழும் எறியப்பட்டபடி பயணம் செய்தார். அவர் உயிருடன் கரை சேர்ந்தது அதிஸ்டமே.

“2020 மற்றும் 2021இல் இங்கிலாந்திற்கு வந்த எனக்குத் தெரிந்த ஏழு தமிழ் ஆண்கள் தற்கொலைக்கு முயன்றுள்ளனர். பிரிட்டனில் அகதியாக இருப்பது ஆரம்பத்தில் இருந்து இறுதி வரை ஒரு கடினமான சோதனையாகும். இந்த நாட்டில் நாங்கள் மட்டுமே அவரை மரியாதையுடன் நடத்தினோம்” என்று ஒருவர் கூறினார். ஒரு சிலருக்கு அவர்களைப் பராமரிக்க நெருங்கிய குடும்பம் உள்ளது, ஆனால் மற்ற தமிழர்கள் அறிமுகமானவர்களுடன் தங்கியிருக்கிறார்கள் அத்துடன் இங்கு தஞ்சம் வழங்கும் செயல்முறை பல ஆண்டுகளாக இழுக்கப்படுவதால், அவர்களது குடும்பங்கள் கடனில் தள்ளப்படுகின்றன. “நான் இதுவரை என் குடும்பத்தை விட்டு விலகியதில்லை” என்று பணம் பெற்ற சிறுவன் கூறினார். “நான் வீட்டிற்கு செல்வது பாதுகாப்பானது அல்ல என்பதால் எனக்கு இப்போது வேறு வழியில்லை என்று எனக்குத் தெரியும், ஆனால் அவர்கள் இல்லாமல் நான் கஸ்டப்படுகிறேன். என்னுள் எந்த நம்பிக்கையும் கொள்வது கடினமாகவுள்ளது” என்றான்.

Print Friendly, PDF & Email