SHARE

-தாயகன்-

தாயக, தேசிய சுயநிர்ணய உரிமைகளுக்காக எழுபது ஆண்டுகளாக பேராடி வருகின்றது தமிழினம். இந்த உரிமைகளுக்காக தமது இன்னுயிர்களை மண்ணுயிர்களாக்கியவர்களின் எண்ணிக்கை எண்ணிலடங்காதவை.

விடுதலை என்னும் வேள்வித் தீயில் தம்முயிர்களை ஈகம் செய்தவர்கள் ஏக்கம் இன்னும் தொடர்கதையாகவே உள்ளது. குறிப்பாக, விடுதலை பயணத்தின் அதியுச்சமாக முள்ளிவாய்க்காலில் தம்முயிர்களை ஈகம் செய்தவர்கள் இலட்சக்கணக்கானவர்கள்.
ராஜபக்ஷ சகோதரர்களினுடைய அரசாங்கத்தின் போலிப் பிரசாரத்தில் மயங்கிய சர்வதேசம் கூட்டிணைந்து முள்ளிவாய்க்காலில் இந்த நூற்றாண்டின் மாபெரும் மனிதப் பேரவலத்தினை நிகழ்த்தியது.

பச்சிளம் குழந்தைகள் முதல், பல்வேறுபாடுகளின்றி அந்த மண்ணில் மரணிக்கச் செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை ஆயிரமாயிரம். மனிதாபிமான நடவடிக்கை என்ற முலாமிடப்பட்ட திட்டத்தில் மனிதப் பேரவலத்தினை நடத்தின இலங்கைப் படைகள்.
மிலேச்சத்தனமான தமது நடவடிக்கைகளை மறைத்து, உயிரிழந்த அனைவரும், பங்கரவாதிகள் என்று உலகிற்கு சித்தரித்து மனிதஉரிமைகள் மற்றும் மனிதாபிமான சட்டங்கள் ஆகியவை மீறப்பட்டதை தற்போது வரையில் மறுதலித்து வருகின்றன இலங்கைப் படைகள்.
மறுபக்கம், இழைக்கப்பட்ட அநீதிகளுக்கு நீதிகோரி தசாப்தம் கடந்தும் தொடர்ச்சியாக போராடிக் கொண்டிருக்கின்றன பாதிக்கப்பட்ட தரப்பாக தற்போது இருக்கும் தமிழினம்.
இந்தப் பின்னணியில் எதிர்வரும் மே 18ஆம் திகதி முள்ளிவாய்க்கால் பேரவலம் நிகழ்த்தப்பட்டு 12ஆவது வருடங்களாகின்றன. இந்தநாளில், மனித பேரவலம் நிகழ்ந்த முள்ளிவாய்க்கால் முற்றத்தில் ஆஃகுதியாகிய அனைத்து உயிர்களுக்குமான நினைவேந்தலைச் செய்வது வழமையாகும்.

2019ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்த இந்த தற்போதைய ராஜபக்ஷ சகோதரர்களின் அரசாங்கமானது, கொரோனா கொள்ளை நோயைப் பயன்படுத்தி கடந்த ஆண்டு நினைவேந்தல் நிகழ்வினை தடுத்து நிறுத்தியது.

கட்டுப்பாடுகளை உடைத்து நினைவேந்தல் உரிமைக்காக போரடியவர்கள் மீது பொலிஸாரைப் பயன்படுத்தி திட்டமிட்ட வழக்குகளை தொடுத்தது அரசு. இன்னும் பலருக்கு எதிராக பொலிஸார் முன்கூட்டியே நீதிமன்ற தடை உத்தரவுகளைப் பெற்றும் இருந்தார்கள்
எனினும், தமிழர் தாயகத்தில் தடைகளை உடைத்து நினைவேந்தல் நிகழ்வுகள் ஆங்காங்கே நடைபெற்றன. அந்த நினைவேந்தலில் கூட தமிழ்த் தரப்பின் பாகப்பிரிவினைகள் வேறு இடம்பெற்றிருந்தமை துன்பகரமான விடயமே.

இந்த நிலையில் இம்முறை நினைவேந்தலைத் தடுப்பதற்கு ராஜபக்ஷவினரின் அரசாங்கம் சுமார் ஒருமாதத்திற்கு முன்னதாகவே தனது கைங்கரியங்களை மேற்கொள்ள ஆரம்பித்து விட்டது.
போர் நிறைவுக்கு வந்ததாக அப்போது ஆட்சியில் இருந்த ராஜபக்ஷவினரின் அரசாங்கம் அறிவித்த நாளிலிருந்து தற்போது வரையில் ஒன்றரை இலட்சம் படைகள் தமிழர் தாயகத்தில் தங்கியிருக்கின்றன.

இதனைவிடவும், முப்படைகளின் புலனாய்வாளர்கள், தேசிய புலனாய்வாளர்கள், பங்கரவாத தடுப்பு பிரிவினர், பொலிஸார் உள்ளிட்ட தரப்பினரும் கடமையில் ஈடுபடுத்தப்பட்டிருக்கின்றனர்.
இவ்வளவு படைபலத்தையும் தமிழர் தயாகத்தில் நிறுத்தி கிட்டத்தட்ட போர்க்கள பூமிபோன்று இன்று வரையில் வைத்திருக்கும் அரசாங்கம் தற்போது ~புலி பூச்சாண்டிகளை| காண்பிக்க ஆரம்பித்துள்ளது.

அண்மையில் யாழ்ப்பாணத்தில் தமிழீழ விடுதலைப்புலிகளை மீளுருவாக்கம் செய்ய முனைந்தார்கள் என்ற குற்றச்சாட்டில் நால்வரையும், முல்லைத்தீவில் அதே குற்றச்சாட்டில் முன்னாள் போராளியையும் பொலிஸார் கைது செய்தனர்.

இதனைவிடவும், வடக்குகிழக்கில் உள்ள, இளைஞர் யுவதிகள், சமுகச் செயற்பாட்டாளர்கள், சிவில் சமுகத்தினர் ஆகியோர் கண்காணிப்பு வளையத்திற்குள் கொண்டுவரப்பட்டுள்ளனர்.
அனைவரினதும், முகநூல்கள், சமூக ஊடகங்கள் அனைத்தும் கடுமையான கண்காணிப்புக்குள் உட்படுத்தப்பட்டுள்ளன. இதில் தமது அன்புக்குரியவர்களுக்காக போராடும் உறவுகளுக்கு வேறு அச்சுறுத்தல்கள் விடுக்கப்பட்டுள்ளன.

இந்த நிகழ்வுகள் அனைத்தும் ஒன்றுடன் ஒன்று தொடர்பற்றதாக இடம்பெற்றிருந்தாலும் இவை அனைத்தினதும் இலக்கு ஒன்று தான். அதாவது, வடக்கிலும், கிழக்கிலும் தமிழீழ விடுதலைப்புலிகள் மீள் உருவாகுகின்றார்கள் என்று கூறி தேசிய பாதுகாப்பை வலுவாக்குகின்றோம் என்ற அடிப்படையில் ஒன்று கூடல்களை தவிர்த்து விடுதல் அல்லது தடுத்து விடுதல் என்பதாகும்.

அதாவது, தமிழ் மக்களின் நினைவேந்தல் உரிமையை முழுமையாக மறுதலித்து அவர்களை அன்புக்குரியவர்களுக்காக ஒரு துளி கண்ணீர் கூட சிந்துவதற்கு இடமளிக்காது முழுமையான அடக்குமுறைக்குள் வைத்திருத்தலே ராஜபக்ஷ சகோதரர்களினுடைய அரசாங்கத்தின் ஒட்டுமொத்த நிலைப்பாடும் இலக்குமாகும்.

ஏற்கனவே இந்திய படைகள் இலங்கையிலிருந்து வெளியேற வேண்டும் என்று வலியுறுத்தி அஹிம்சைப் போராட்டம் நடத்தி ஆஃகுதியான அன்னை பூபதியின் 33ஆவது நினைவேந்தலைக் கூட நடத்துவதற்கு அனுமதி வழங்கப்பட்டிருக்கவில்லை. அதுமட்டுமன்றி, அன்னை பூபதியின் புதல்வி அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டார். அவரை சுற்றி கண்காணிப்பு நடவடிக்கைள் இடம்பெற்றன. இந்த நிகழ்வுகளே ராஜபக்ஷ சகோதரர்களின் மனோநிலையை அப்பட்டமாக வெளிப்படுத்திவிட்டது.

இதனைவிடவும், போர்க்குற்றச்சட்டுக்களுக்கு உள்ளாகியுள்ளவரும், இலங்கை இராணுவத்தின் தளபதியுமாக இருப்பவருமான ஜெனரல் சவேந்திர சில்வா கொரோனா தடுப்பு தேசிய செயலணியின் தலைவராகவும் இருக்கின்றார்.

இவர் நினைவேந்தல் நாளுக்கு சுமார் மூன்று வாரங்களுக்கு முன்னதாக ஊடகங்கள் வாயிலாக கருத்தொன்றை பிரஸ்தாபிக்கின்றார். அதாவது, ~அடுத்து வரும் மூன்று வாரங்கள் மிகவும் ஆபத்தானவை. அந்த நாட்கள் சிக்கலானவையாக இருக்கும். ஆகவே கொரோனா பாதுகாப்பு விதிமுறைகளை கடுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும| என்பதே அவருடைய கருத்தாகும்.
இந்தக் கருத்துக்கள் வெறுமனே பொதுமக்கள் மீதான அக்கறையின் பால் வெளிப்படுத்தப்பட்டதன்று. இதன் பின்னணியில் நினைவேந்தலில் தமிழ் மக்கள் ஒன்று கூடுவதை சட்ட ரீதியாக தடுத்துவிடும் இலக்கே காணப்படுகின்றது.

அதற்கவே முற்கூட்டியே ~நல்லபிள்ளையாக| உலகிற்கு காண்பிக்கும் செயற்றிட்டத்தை படைகளைப் பயன்படுத்தி கொரோனாவின் பெயரால் அரங்கேற்ற ஆரம்பித்து விட்டது ராஜபக்ஷவினரின் அரசாங்கம். நினைவேந்தல் என்பது அடிப்படை உரிமை, தமிழர்களைப் பொறுத்தவரையில் அது கலாசார, மரபியல் ரீதியான உரிமையும் கூட. அத்தகையை உரிமையைப் பறித்தலென்பது திட்டமிட்ட மனித உரிமை மீறலாகும்.

மேலும், தற்போது ஆட்சியில் உள்ள ராஜபக்ஷ சகோதரர்களின் ஆட்சிக்காலத்திலேயே பொத்துவில் முதல் பொலிகண்டி வரையிலான தமிழினத்தின் தன்னெழுச்சியான பெரும் பேரணி தடைகளை உடைத்து வீறுகொண்டு எழுந்து வெற்றி பெற்றது.

தமிழினத்தின் உரிமைக்கான எழுச்சிக்கு பொத்துவில் முதல் பொலிகண்டி வரையிலான பேரணி மிகக் கிட்டிய உதாரணம் என்பதை ராஜபக்ஷ சகோதரர்கள் நிச்சயம் புரிந்திருப்பார்கள்.
எனவே, மீண்டும் அவ்விதமானதொரு உரிமைக்கான எழுச்சியை தடைசெய்வதற்கு அதியுச்சமாக நடவடிக்கைகளை முற்கூட்டியே எடுப்பார்கள். ஆனால் அத்தனை தடைகளையும் கடந்து, தமிழினம் தன் உரிமைகளை வென்றிட பேதங்களை மறந்து அணிதிரள்வதே தற்போதைய தேவை.
தற்போதைக்கு முள்ளிவாய்க்கால் பொதுக்கட்டமைப்பு கொரோனா சுகாதார விதிகளை பின்பற்றி நினைவேந்தல் நிகழ்வை முன்னெடுப்பதற்கான அறிவித்தலை விடுத்துள்ளது.

இந்த அறிவிப்பின் பின்னால் அனைத்து உறவுகளும் அணி திரண்டால் அடக்கு முறையை அமுலாக்க முனையும் அரசாங்கத்தின் திட்டம் கானல் நீராகும் என்பது திண்ணம்.

Print Friendly, PDF & Email