SHARE

விடுதலைப்புலிகள் மீதான பிரித்தானிய அரசின் தடையை நீக்கக்கோரி பிரித்தானிய அரசுக்கு அழுத்தம் கொடுக்கும் மக்கள் ஆதரவுக் கையெழுத்து போராட்டத்திற்கான வேல்ஸிலிருந்து வெஸ்மினிஸ்டர் வரை யிலான நீண்டதூர நடை பயணம் 5 ஆவது நாளான இன்று Henley-on-Themes RG9 6DB எனும் இடத்திலிருந்து லண்டன் மாநகரை நோக்கி நடைபெற்று வருகின்றது.

ஆரம்பமான முதலாவது நாளிலிருந்து சுமார் 112 மைல்களை இதுவரை நடந்து கடந்து வந்துள்ள தமிழ் இளையோர் நாளை வெஸ்மினிஸ்டரில் உள்ள பிரதமர் வாசல்ஸ்தத்தின் முன்றலில் வந்தடைவர் என எதிர்பார்க்கப்படுகின்றது.

பிரித்தானியாவில் தமிழீழ விடுதலைப்புலிகள் மீதான தடைக்கு எதிராக நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் முன்னெடுத்திருந்த சட்டப்போராட்டத்தினில் தடையினை மறுபரிசீலனை செய்ய உள்துறை அமைச்சிற்கு சிறப்பு தீர்ப்பாயம் 90 நாட்கள் காலக்கெடு வழங்கியிருந்தது.

இந்தக்காலக்கெடு நெருங்கி வருகின்ற நிலையில் பிரித்தானியா வாழ் மக்கள் தடை நீக்கத்துக்கான அழுத்தத்தினை பிரித்தானிய அரசுக்கு முன்வைக்க வேண்டுமென்ற நோக்கிலும் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு அழுத்தங்களை வழங்கவேண்டுமென்ற நோக்கிலும் இந்த மாபெரும் நீண்ட தூர பரப்புரை நடைபயணம் இடம்பெற்று வருகின்றது.

இந்நிலையில் கடந்த 23 ஆம் திகதி வேல்ஸில் (CF99 1SN) ஆரம்பமான இந்த பரப்புரரை நடைபயணம் சுமார் 112 மைல்கள் கடந்து வந்துள்ள நிலையில் இன்றைய 5 ஆவது நாளில் Henley-on-Themes RG9 6DB எனும் இடத்திலிருந்து காலை ஆரம்பமாகியுள்ளது.

இதில் நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் செயற்டபாட்டாளர்கள் என பலர் கலந்துகொண்டு தொடர் நடைபயணம் மேற்கொண்டுவருவதுடன் வரும் வழிகளில் தடை நீக்கம் குறித்தும் அதற்கு ஆதரவு வழங்கக்கோரியும் பிரச்சாரங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதேவேளை இந்த நடைபயணம் மேற்கொள்ளப்பட்டு வரும் பிரதேசங்களில் வசிக்கும் புலம்பெயர் தமிழர்கள் நீண்டதூரமாக நடந்து வரும் அவர்களுக்கு ஆதரவு வழங்குமாறும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்த நடைபயணம் இலண்டன் மாநகரை வந்தடைந்து நாளை 28 ஆம் திகதி பிரித்தானிய பிரதமர் வாசல்ஸ்தலத்தின் முன்றலில் நிறைவடையவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Print Friendly, PDF & Email