தாயகன்
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 46ஆவது அமர்வு எதிர்வரும் பெப்ரவரி மாதம் 22ஆம் திகதி ஆரம்பித்து மார்ச் மாதம் 19ஆம் திகதி நிறைவுக்கு வரவுள்ளது. இந்த அமர்வின்போது ஐ.நா.மனித உரிமைகள் பேரவையின் ஆணையாளர் மிச்சல் பச்லெட் சிறிலங்கா பற்றிய பூரண மீளாய்வு அறிக்கையை சமர்ப்பிக்கவுள்ளார்.
2019ஆம் ஆண்டு ஆட்சிப்பீடமேறிய ராஜபக்ஷ சகோதரர்களின் அரசாங்கமானது 2020ஆண்டு நடைபெற்ற 44ஆவது மார்ச் மாதக் கூட்டத்தொடரிலேயே தாம் ஜெனிவா தீர்மானத்தினை ஆதரிக்க முடியாது என்று கூறிவிட்டது.
அதுமட்டுமன்றி ஜெனிவா தீர்மானத்திலிருந்து முழுமையாக வெளியேறப்போவதாகவும் அறிவித்தும் விட்டது. தீர்மானத்தில் உள்ள விடயங்கள் நாட்டின் ‘இறைமைக்கு’ எதிராக இருப்பது என்பது தான் ராஜபக்ஷ சகோதரர்களினுடைய அரசாங்கத்தின் வாதமாகவுள்ளது.
இந்த நிலைமையில், 2015ஆம் ஆண்டு சிறிலங்கா அரசாங்கத்தின் இணை அனுசரணையுடன் ஐ.நா.மனித உரிமைப் பேரவை ‘இலங்கையில் நல்லிணக்கத்தையும் பொறுப்புக்கூறலையும் ஊக்குவித்தல்’ என்பதை உள்ளடக்கி 30.1தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
பின்னர் 30.1தீர்மானத்தினை முழுமையாக நடைபெறுவதை வலியுறுத்தி நிறைவேற்றப்பட்ட 2017 மார்ச்சில் 34.1 தீர்மானமும் 2019 மார்ச்சில் 40.1 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. ஆனால் இவற்றை ராஜபக்ஷவினர் கருத்தில் கொள்ளப்போவதில்லை என்பது தெளிவாகியுள்ளது.
மேற்படி 30.1 உட்பட அதனை நடைமுறைப்படுத்துவதற்காக நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள், சிறிலங்காவில் நடைபெற்ற இனப்படுகொலைகள், மனித உரிமை மீறல்கள், மனிதாபிமானச் சட்டமீறல்கள், போர்க்குற்றங்கள் ஆகிய விடயங்களுக்கான நீதி கோரலை மலினப்படுத்துவதாக இருக்கின்றது என்ற விமர்சனங்களை வெகுவாகவே கொண்டிருக்கின்றது.
பாதிக்கப்பட்ட தரப்பாகவும், நீதியை எதிர்பார்க்கும் தரப்பாகவும் இருக்கும் தமிழ் மக்களின் அதிகளவு ஆணைபெற்ற பிரதிநிதிகளான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு 2015இல் ஆட்சிப்பீடமேறிய ‘மைத்திரி-ரணில்’ கூட்டு அரசாங்கத்துடன் கொண்டிருந்த ‘ஊடல்’ ஐ.நா.மனித உரிமைகள் பேரவையின் தீர்மானம் மலினப்படுவதற்கு பிரதான காரணமாக அமைந்திருந்தது.
அக்காலத்தில் பாதிக்கப்பட்ட தரப்பினரே நேரடியாக சாட்சியங்களையும், பகிரங்க கோரிக்கைகளையும் விடுத்தபோதும், சர்வதேச அரங்கும் செவிசாய்திருக்காத துரதிஷ்டமான நிலைமையும் காணப்பட்டது. காரணம், சிறிலங்காவின் அரசியணையில் இருந்த, அரசாங்கம், சர்வதேச சக்திகளின் நலன்களை பூர்த்தி செய்வதாக இருந்தமையாலே அவ்விதமான நிலைமை காணப்பட்டது.
ஆனால், 2019இற்கு பின்னர் மீண்டும் ராஜபக்ஷ சகோதரர்கள் ஆட்சியை கைப்பறினார்கள். இம்முறை மூன்றிலிரண்டு பெரும்பன்மை பலம் வேறு கிடைத்திருந்தது. தனிச்சிங்கள, பௌத்த வாங்கு வங்கியால் ஆட்சியையும் அமைத்திருந்தார்கள். இந்தப் பின்னணியில் ராஜபக்ஷவினரின் பிரதிபலிப்புக்கள் கடந்த ஆட்சியை விடவும் ஒருபடி மேலாகவே இருந்தது.
ராஜபக்ஷவினரின் ‘சீனாவை மையங்கொண்ட எடுத்தெறிந்த எகத்தாளப் போக்கு’ இயல்பாகவே அமெரிக்கா, கனடா உள்ளிட்ட மேற்குலகத்துடன் பகைமையை தோற்றுவித்தது. தனது தேச நலன் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படுகின்றது என்ற பதற்றம் இந்தியாவுக்கும் ஏற்பட்டது.
ஆகவே, இந்தியா, தனது மேற்குலக நண்பர்களான அமெரிக்கா உள்ளிட்டவர்களுடன் கைகோர்த்து ராஜபக்ஷவினருக்கு ‘கடிவாளம்’ இடும் செயற்பாடுகளை ஆரம்பித்திருக்கின்றது.
இவ்வாறு பூகோள அரசியல் மாறுபட்டமையானது தாயக, புலம்பெயர் தமிழர்களைப் பொறுத்தவரையில் இனப்படுகொலை, போர்க்குற்றங்கள், உரிமை மீறல்கள் என்று அனைத்துக்கும் நேரடியாக ‘பொறுப்புக்கூற வேண்டியவர்கள்’ ராஜபக்ஷவினரை ‘பொறிக்குள்’ கொண்டுவருவதற்கான ஒரு சந்தர்ப்பமாகவே பார்கின்றனர்.
ஆகவே ஐ.நா.அரங்கில் ராஜபக்ஷவினரை பதிலளிக்கச் செய்யவைப்பதிலும், சர்வதேச குற்றவியல் நீதிமன்றில் அல்லது விசேட தீர்ப்பாயத்தில் நிறுத்துவதற்கும் பகிரதப்பிரயத்தனத்தினை எடுத்து வருகின்றார்கள்.
இந்த நிலையில் நடைபெற்று நிறைவடைந்த பாராளுமன்ற தேர்தலில் மும்முனையில் களமிறங்கியிருந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, தமிழ் தேசிய மக்கள் முன்னணி, தமிழ் மக்கள் தேசியக் கூட்ணி ஆகிய மூன்று தரப்புக்களும் பிரதிநிதித்துவங்களைப் பெற்றிருக்கின்றன.
இந்த மூன்று தரப்புக்களும் இப்போது தமிழ் மக்களுக்கான பொறுப்புக்கூறலை ராஜபக்ஷவினரிடத்திலிருந்து பெற்றுக் கொள்ள வேண்டும் என்பதில் தீவிரமாகவே உள்ளன. அதற்காக அடுத்த ஜெனிவா அமர்வை மையப்படுத்தி தனித்தனியாக செயற்படவும் ஆரம்பித்திருந்தன.
இருப்பினும், இம்மூன்று தரப்பிற்குள்ளும் காணப்படும் சிறுசிறு வேறுபாடுகள், தனிநபர் முரண்பாடுகளால் ஒட்டுமொத்த தமிழினமும் பாதித்துவிடக்கூடாது. இம்மூன்று தரப்பும் அணிதிரண்டு பொதுவான நிலைப்பாட்டை ஐ.நா.மனித உரிமைகள் பேரவைக்கு அறிவிக்க வேண்டும் என்ற சிந்தனை பல மட்டங்களில் எழுந்தது.
ஏனென்றால், இம்முறை சிறிலங்கா தொடர்பாக பிரித்தானியா, தலைமையில் இணை அனுசரணை நாடுகளே புதியதொரு தீர்மானத்தினை கொண்டுவரவுள்ளன. புதிய தீர்மானத்திற்கு சிறிலங்கா அனுசரணை வழங்குவதில்லை என்பதையும் அறிவித்துவிட்டது. சில சமயங்களில் அதனை நிராகரிக்கும் போக்கிலும் உள்ளது.
ஆகவே புதிதாக கொண்டுவரப்படும் பிரேரணையானது, சிறிலங்காவின் பொறுப்புக்கூறலை வலுவாக எடுத்துரைப்பதாக இருக்க வேண்டும் என்பது அனைவரினதும் எதிர்பார்ப்பானது. அதற்கு அமைவாக, வி.எஸ்.சிவகரன் தலைமையிலான தமிழ்த் தேசிய வாழ்வுரிமை இயக்கம் மற்றும் சிவில் பிரதிநிதிகளின் ஒத்துழைப்பில் தமிழ்த் தேசிய தளத்தில் உள்ள அரசியல் கட்சிகள் ஒருங்கிணைக்கப்பட்டன.
கிளிநொச்சியில் ஆரம்பமான இந்த முயற்சி வவுனியா, கொழும்பு மீண்டும் கிளிநொச்சி என்று தொடர்ச்சியான சந்திப்புக்கள் கலந்துரையாடல்களை அடுத்து வெற்றி கண்டது. தமிழ்த் தேசியத் தளத்தில் உள்ள கூட்டுக்கள் மற்றும் சிவில், மத அமைப்புக்கள் ஒன்றிணைந்து, ஐ.நா.வைக் கோரும் ‘பொது ஆவணம்’ தயரிப்பதென்று முடிவானது.
அதற்கு அமைவாக,
1) சிறிலங்காவை இனப்படுகொலை, மனிதாபிமானத்துக்கு எதிரான குற்றங்கள், யுத்த குற்றங்கள் உள்ளிட்ட குற்றங்களை விசாரிப்பதற்காக சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கும் வேறு பொருத்தமானதும் செயற்படுத்தக்கூடியதுமான சர்வதேச பொறுப்புக்கூறல் பொறிமுறைகளுக்கும் பாரப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை ஐ. நா. பொதுச்சபை, ஐ. நா. பாதுகாப்புச்சபை போன்றவை எடுக்க வேண்டுமென்று இப்புதிய தீர்மானத்தில் உறுப்பு நாடுகள் வலியுறுத்த வேண்டும்.
2) ஐ. நா.மனித உரிமைப் பேரவையின் தலைவர் இவ்விடயத்தை மேல் கூறப்பட்டபடி நடவடிக்கைக்காக மீளவும் செயலாளர் நாயகத்திற்கு அனுப்பி வைக்க வேண்டும்.
3) ஐ. நா. மனித உரிமை உயர்ஸ்தானிகரின் அலுவலகம் இலங்கையில் தொடர்ந்து நடைபெறுகிற மீறுதல்களை கண்காணிக்கவும் இலங்கையில் அவ்வலுவலகமொன்றை ஸ்தாபித்தல் வேண்டும்.
4) மேலே 1) இல் கூறியதற்கு பங்கமில்லாமல் ஐ. நா. பொதுச் சபையின் உப பிரிவாக, சீரியா சம்பந்தமாக உருவாக்கப்பட்ட சாட்சிகளை சேகரிக்கிற பொறிமுறை போன்றதொன்றை (ஐஐஐஆ) கடுமையான 12 மாத அவகாச நிபந்தனையோடு ஏற்படுத்துதல்
ஆகிய நான்கு பிரதான கோரிக்கைகளுடன் உறுப்பு நாடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இந்தச் செயற்பாட்டில் பல வாதப்பிரதிவாதங்கள், விட்டுக்கொடுப்புக்கள், கொள்கை முரண்நகைகள், கையொப்பமிடுவதில் முரண்பாடுகள் என்றெல்லாம் காணப்பட்டிருந்தாலும், சிங்கள, பௌத்த தேசியவாதம் கூர்மைப்படுத்தப்பட்டுள்ள இந்த சூழலில் மூன்று தரப்புக்களும் ஒருங்கிணைந்தமை ‘பொறுப்புக்கூறலுக்கான நீண்ட பயணத்தில்’ விமர்சனங்களுக்கு அப்பாலான ஒரு மைல் கல்லாகும்.
இத்தோடு நின்றுவிடாது, மூன்று அரசியல் கூட்டுக்களும் ஜெனிவா விடயத்தில் நேர்மையுடன் ஈடுபட்டுக்கொண்டிருக்கும் புலம்பெயர் அமைப்புக்களுடன் கரம்கோர்த்து தொடர்ச்சியாக ‘இயங்குநிலை சக்திகளாக’ செயற்பட வேண்டியதும் ஒருங்கிணைந்து முன்வைத்துள்ள கோரிக்கைகளை நடைமுறைச்சாத்தியமாக்குவதற்காக முனைப்புடனான அழுத்தங்களை வழங்குவதும் காலத்தின் கட்டாயமாகின்றது.
மேலும் ஜெனிவா விடயத்தில் மட்டுமன்றி தமிழ் மக்களை சூழ்ந்திருக்கும் ஒவ்வொரு பிரச்சினைகளுக்குமான தீர்வுகளை நோக்கிய பயணத்திலும் இவ்வாறான ஒருங்கிணைவு அவசியமாகின்றது என்ற புரிதலும் இத்தரப்புக்களுக்கு ஏற்பட வேண்டியதும் அவசியமாகின்றது.