SHARE

தமிழர் தாயகத்தில் சிறிலங்கா இராணுவத்தினரால் திட்டமிட்டு வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளை மீட்டுத்தரகோரி சிறிலங்கா அரசிடம் உண்மையை கண்டறிய சர்வதேச விசாரணையை வலியுறுத்தி லண்டனில் ஒன்று திரண்ட தமிழர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

சர்வதேச காணமல் ஆக்கப்பட்டோர் தினமான கடந்த ஆகஸ்ட் மாதம் 30 ஆம் திகதி தமிழர் தாயகத்தில் காணமல் போன உறவுகளினால் முன்னெடுக்கப்பட்ட ஆர்பாட்டத்திற்கு வலுச்சேர்க்கும் வகையில் குறித்த நாளிலேயே லண்டனில் ஆர்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.

மேற்படி ஆர்ப்பாட்டத்தில் நாடுகடந்த அரசாங்கத்தின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அதன் செயற்பாட்டார்கள் மற்றும் பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர்.

இந்த போராட்டதை முன்னின்று நடாத்திய நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் நாடாளுமன்ற உறுப்பினர் சொக்கலிங்கம் யோகலிங்கம் நமது ஈழநாட்டுக்கு கருத்து தெரிவிக்கையில்,

“சிறிலங்கா அரச படைகளினால் வலிந்து காணாமலாக்கப்பட்ட  உறவுகளின் நிலை குறித்து அரசாங்கத்தின் மொளனமும் பொறுப்புக்கூறலற்ற இழுத்தடிப்புக்கும் சர்வதேசம் இனியும் இடமளிக்கக்கூடாது. கண்முன்னே தனது பிள்ளையை கணவனை பறிகொடுத்த உறவுகள் யுத்தம் முடிவடைந்து 10 வருடங்கள் கடந்த நிலையிலும் இன்றுவரை அவர்களைத்தேடி காத்திருக்கிறார்கள். ஆனால் இலங்கை அரசு இந்த விடயத்தில் தொடர்ந்தும் எந்தவொரு பதிலையும் கூற மறுத்து வருகின்றது. எனவே காணாமல் போனோர் விடயத்தில் சர்வதேசத்தின் தலையீடு அவசியம் என்பதை இங்கு நான் வலியுறுத்துகிறேன்” என தெரிவித்தார்.

இதேவேளை குறித்த ஆர்பாட்டத்தில் கலந்து கொண்ட நாடுகடந்த அரசாங்கத்தின் செயற்பாட்டாளர்களில் சிலருடன் நமது ஈழநாடு கருத்து பகிர்வு ஒன்றை மேற்கொண்டது.

சதேந்லொயிற்றன் புயலேந்திரன்

காப்புறுதி நிறுவன ஆலோசகரும் அரசியல் செயற்பாட்டாளருமான சதேந்லொயிற்றன் புயலேந்திரன் கருத்துதெரிவிக்கையில், தற்போதைய ஜனாதிபதி கோட்டபாய பாதுகாப்பு அமைச்சராக பதவியிலிருந்த காலத்திலேயே அதிகமான ஆட்கடத்தல்களும் காணாமல் ஆக்கப்படுதல்களும் இடம்பெற்றன. வெள்ளைவான் என்றாலே அதன் மறுபெயர் கோட்டபாயவே!. பொறுப்புக்கூறலை மறுத்து இனப்படுகொலையாளர்களை பாதுகாக்க பதவி உயர்வுகளை வழங்கும் அவர்களிடம் எமக்கான நீதியை கோரி நிற்பது பயனற்றது. எனவே சர்வதேசத்தின் தலையீட்டின் மூலமே எமக்கான நீதியை பெற்றுக்கொள்ள முடியும்.

காண்டீபன் கிறிஸ்ரி நிலானி

இலண்டன் புரூணல் பல்கலைக்கழகத்தில் முதுகலைமாணி கற்கைநெறியை மேற்கொண்டுவருபவரும் இலங்கையில் அதிகரித்து வரும் மர்மக்கொலைகள் தொடர்பில் இனப்படுகொலை தடுப்பு மற்றும் வழக்கு விசாரணைக்கான சர்வதேச மையத்தினால் (ICPPG) மேற்கொள்ளப்பட்டுவரும் ஆவணப்படுத்தலை மேற்கொண்டுவருபவருமான திருமதி காண்டீபன் கிறிஸ்ரி நிலானி இது தொடர்பில் தெரிவிக்கையில்;

“ஆயுதப்போராட்டம் மொளனிக்கப்பட்ட பின்னரும் இலங்கைதீவுக்குள் சிறுபான்மையினருக்கு எதிரான அடக்குமுறை தொடர்ந்தவண்ணமே உள்ளது. தமிழர் தாயகப்பகுதிகளில் இன்றுவரை காணாமல் போதல் மர்மக்கொலைகள் நாளாந்த செய்திகளாக வெளிவந்தவண்ணம் உள்ளன. ராஜபக்ஷக்களின் ஆட்சி மீண்டும் வந்து சில மாதங்களிலேயே மர்மக்கொலைகளின் எண்ணிக்கைகள் அதிகரித்துள்ளன.

இந்நிலையில் எமக்கான தீர்வை இனப்படுகொலை ஆட்சியாளர்களிடமே எதிர்பார்ப்பது என்பது பயனற்றது. எனவே சர்வதேசமே எமக்கான தீர்வை பெற்றுத்தரும் வழி என்பதை உணரவேண்டும்”. 

கந்தலிங்கம் வினோதன்

இலங்கை இராணுவத்தின் சித்திரவதையிலிருந்து தப்பி லண்டனில் உயிர்த்தஞ்சம் கோரியுள்ள கந்தலிங்கம் வினோதன் இது குறித்து தெரிவிக்கையில்,

தாயகத்தில் எமது உறவுகளின் போராட்டத்திற்கு வலுச்சேர்க்கும் வகையில் புலம்பெயர் தேசத்தில் சர்வதேசத்தை நோக்கி நாங்கள் போராட்டங்களை முன்னெடுத்துள்ளோம். இன்றும் பல இளைஞர்கள் அரசினால் கடத்தப்பட்டும் சித்திரவதைக்கும் உள்ளாக்கப்படுகிறார்கள். இராணுவத்தினால் சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டவன் என்பதில் அதன் வலியை நான் உணர்கிறேன். எனவே சர்வதேசம் எமக்கான நீதியை பெற்றுத்தரவேண்டும்.

பிரவின்ரன் ஜோச்கமில்ட்ரன்

யுத்தக்குற்றம் தொடர்பிலான வீடியோ ஆதாரத்தினை இராணுவ வீரர் ஒருவரின் தொலைபேசியிலிருந்து திருடிய சந்தேகத்தில் கடத்தப்பட்டு சித்திரவதைக்கு உள்ளாக்ப்பட்டு தப்பிவந்த, பிரவின்ரன் ஜோச்கமில்ட்ரன் கருத்து தெரிவிக்கையில்

“தமிழர்களுக்கு எதிரான இனப்படுகொலையை நிகழ்த்திய இலங்கை அரசு வலிந்து காணாமல் ஆக்கிய எமது உறவுகள் குறித்து இன்றுவரை எந்தவிதமான பதிலையும் கூறவில்லை. அதேவேளை தமிழர்களுக்கு எதிரான ஆட்கடத்தல்களும் மர்மக்கொலைகளும் இன்றுவரை இலங்கையில் நடந்தவண்ணமே உள்ளன.

இதனாலேயே என்னைப்போல பல இளைஞர்கள் உயிரைப்பாதுகாக்க உறவுகளைப் பிரிந்து புலம்பெயர்நாடுகளுக்கு தஞ்சம்புகும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

சதீஸ் குலசேகரம்

நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் செய்யற்பாட்டாளரான சதீஸ் குலசேகரம் கருத்து தெரிவிக்கையில்

இனப்படுகொலையாளர்களே மீண்டும் ஆட்சிக்கு வந்துள்ளனர். அவர்கள் ஆட்சிக்கு வந்ததுமே இனப்டுகொலை புரிந்த அதிகாரிகளுக்கு பதவி உயர்வுகளை வழங்கி அவர்களை பாதுகாக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுவருகின்றனர்.

எனவே யுத்தக்குற்றவாளிகளை சர்சவதேச குற்றவியல் நீதிமன்றில் நிறுத்தும் வரை சர்வதேசத்தை நோக்கிய எமது போராட்டங்கள் நின்றுவிடக்கூடாது”.

துவாரகன் குமாரகுலசிங்கம்

இலங்கையில் அரசியல் போராட்டங்களை முன்னெடுத்த காரணத்தால், 2019 இல் கைதுசெய்யப்பட்டு சித்திரவதை அனுபவித்த துவாரகன் குமாரகுலசிங்கம் அவர்களிடம் கேட்டபோது,

“ஐ.நா.வினால் பிரகடணப்படுத்திய சர்வதேச காணாமல் போனோருக்கான தினத்திலேயே எமது காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளை மீட்டுத்தரக்கோரி நாங்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளோம். எனவே சர்வதேசம் எமது கோரிக்கைகளை ஏற்று எமக்கான தீர்வினைப்பெறுத்தரவேண்டும். உறவுகளை தேடி நாளாந்தம் வீதியில் பசியோடு போராடும் உறவுகளுக்கு ஒரு நிரந்தர தீர்வினை இலங்கை அரசிடமிருந்து பெற்றுத்தர வேண்டும்” என்று குறிப்பிட்டார்.

கபிலன் அன்புரெத்தினம்

அரபுநாடு ஒன்றில் கனிம அளவையாளராக பணியாற்றி தற்போது பர்மிங்கம் சிற்றி பல்கலைக்கழகத்தில் முதுமாணி கற்றைக்கா லண்டன் வந்திருக்கும் கபிலன் அவர்களிடம் கேட்டபோது,

 இனப்படுகொலையாளர்களின் ஆட்சியின் கீழ் எமக்கான தீர்வு அல்லது தமிழ் தலைமைகள் அவர்களிடம் தீர்வு குறித்து பேசமுடியும் என்பது பயனற்ற முயற்சியே. இனப்படுகொலையாளிகளுக்கு உயர்பதவி வழங்கி பாதுகாக்கும் அரசு எமக்கான தீர்வை வழங்காது. காணாமல் போன எமது உறவுககள் குறித்த எந்தவித பதில்களையும் கூறாது இழுத்தடிப்பு செய்யும் இலங்கை அரசை குற்றவியல் நீதிமன்றில் நிறுத்த வேண்டும்” என தெரிவித்தார்.

புவனேந்திரன் சிவராம்

விடுதலைப்புலி முன்னாள் உறுப்பினரும் புனர்வாழ்வின் பின்னர் இலங்கை இராணுவத்தினரால் தேடப்பட்டு வருபவருமான புவனேந்திரன் சிவராம் கருத்து தெரிவிக்கையில்

“இராணுவத்தினரால் காணாமல் ஆக்கப்பட்ட எமது உறவுகள் குறித்து இலங்கை அரசின் பொறுப்புகூறலை சர்வதேசம் வலியுறுத்தவேண்டும். இன அழிப்பை மேற்கொண்டுள்ள ராஜபக்ஷ அரசு மீண்டும் பதவிக்கு வந்துள்ள நிலையில் அவர்களிடமிருந்து இதற்கான தீர்வை எதிர்பார்ப்பது பொருத்தமற்றது. எனவே சர்வதேசத்தின் தலையீடே எமக்கான தீர்வை பெற்றுத்தரும்” என்றார்.

இவ்வாறு இனப்படுகொலையாளர்களிடமே எமக்கான நீதியை கோரிநிற்பது பயனற்றது எனவே சர்வதேசத்தின் தலையீடு இதில் இடம்பெற வலியுறுத்தும் வகையில் எமது போராட்ட வடிவங்கள் மாறவேண்டும் எனம் கருத்தை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் வலியுறுத்தினர்.

சிறிலங்கா இராணுவத்தினால் திட்டமிட்டு வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தற்போதுவரையில் உறுதிப்படுத்தப்பட்டதாக இல்லை.

ஆவ்வாறிருக்க தங்களது பிள்ளைகள் சகோதரர் என்று அன்புக்குரியவர்களை தொலைத்துவிட்டு ஆண்டுகள் பல கடந்தும் அல்லல்களுக்கு மத்தியில் சிறிலங்கா தீவு முழுவதும் தேடியலைந்து கொண்டிருக்கிறார்கள் அவர்களின் சொந்தங்கள்.

ஆகவே,  எந்தவிதமான தாமதங்களுமின்றி நீதி நிலைநாட்டப்படவேண்டும். நீதி வழங்களில் ஏற்படும் தாமதங்களும் புறக்கணிப்பும் தமிழ் இனத்தின் எதிர்கால சந்ததியின் அகிம்சை மீதான நம்பிக்கையை கேள்விக்குறியாக்கும்.

எனவே சர்வதேச சமூகத்தின் பிரசன்னத்தினூடாக விரைவான நீதிப்பொறிமுறை அமைக்கப்பட்டு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்காக போராடும் சொந்தங்களுக்கான நிதி வழங்கப்படவேண்டும். தாமதிக்கப்படும் நீதி மறுக்கப்பட்ட நீதிக்கு சமனாகும்.

Print Friendly, PDF & Email