SHARE

தியாக தீபம் லெப்.கேணல் திலீபன் அவர்களின் 33 ஆவது நினைவு நாள் பிரித்தானியாவிலும் உணர்வு பூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டு திலீபனின் உன்னத தியாகத்துக்கு புலம்பெயர் தமிழர்களால் அஞ்சலி செலுத்தப்பட்டது.

இலங்கை அரசின் திட்டமிட்ட தடைகளை மீறியும் தாயகத்தில் திலீபனுக்கு அஞ்சலி நிகழ்வுகள் நடத்தப்பட்ட நிலையில் பிரித்தானியாவிலும் பிரதமர் வாசஸ்தலத்துக்கு முன்னால் அடையாள உணவு தவிர்ப்பு போராட்டம் நடத்தப்பட்டது.

தமிழர் ஒருங்கிணைப்பு குழுவின் ஏற்பாட்டில் பிரித்தானிய அரசின் கோவிட்-19 விதிமுறைகளுக்கு உட்பட்டு நண்பகல் ஆரம்பமான மேற்படி அஞ்சலி நிகழ்வில் திலீபனின் திருவுருவப்படத்திற்கு ஈகைச்சுடர் ஏற்றி அஞ்சலி செலுத்தியதுடன் 6 செயற்பாட்டாளர்கள் அடையாள உணவுதவிர்ப்பு போராட்டத்தை ஆரம்பித்தனர்.

மாலை 5 மணிவரை தொடர்ந்த இந்த அடையாள உணவுதவிர்ப்பு போராட்டம் உறுதி ஏற்புடன் நிறைவுக்கு வந்ததுடன் தொடர்ந்து தீலீபனின் தியாகத்தை நினைவுகூறும் எழுச்சி நிகழ்வுகளும் இடம்பெற்றன.

இந்நிலையில் இதில் அடையாள உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்ட செயற்பாட்டாளர்களில் கந்தலிங்கம் வினோதன் மற்றும் நாகராசா கதாதரன் ஆகியோர் நமது ஈழநாடு செய்திக்கு கருத்து தெரிவிக்கையில்

நாகராசா கதாதரன்
இந்திய வல்லாதிக்க சக்திகளுக்கு எதிராக 5 அம்சக்கோரிக்கைகளை முன்வைத்து தமிழ் இனத்தின் விடுதலைக்காக தனது இன்னுயிரை தியாகம் செய்த தியாகி திலீபன் அண்ணாவின் 33 ஆவது ஆண்டு நினைவேந்தலில் அடையாள உண்ணாவிரத்தில் நான் கலந்துகொண்டமை மனதுக்கு நிறைவைத்தருகின்றது. எமக்காக 12 நாட்கள் பசித்திருந்த அவரது தியாகத்தையும் தமிழரின் விடுதலைக்கான உன்னத தியாகங்களையும் சர்வதேசம் உணர்ந்துகொள்ள வேண்டும். எமது விடுதலைக்காக நாம் விலைமதிக்க முடியாத எவ்வளவு உயிர்களை தியாகம் செய்துள்ளோம் என்பதை அவர்கள் உணர்ந்து சிங்களப்பேரினவாத்திடமிருந்து எமக்கு ஒரு நிரந்தர தீர்வை பெற்றுத்தர வேண்டும் என அவர் தெரிவித்தார்.

வினோதன்
தியாகி திலீபன் அண்ணாவின் நினைவேந்தல் நாளில் அடையாள உணவுதவிர்ப்பு போராட்டத்தில் நாம் ஈடுபட்டதன் நோக்கம எமது விடுதலைக்கான தியாகங்களை சர்வதேசம் உணர்ந்துகொள்ளவேண்டும் என்பதே. திலீபன் அண்ணா அன்று 12 நாட்கள் பசித்திருந்த போது கண்டுகொள்ளாத இந்திய அரசு போலவே இன்றும் எமக்கெதிரான சிங்கள அரசின் இனப்படுகொலைகளை சர்வதேசம் கண்டுகொள்ளாது உள்ளது. எனவே எமக்கான தீர்வை சர்வதேசமே பெற்றுத்தரவேண்டும் என அவர் தெரிவித்தார்.

Print Friendly, PDF & Email