நடந்து முடிந்த இலங்கை பாராளுமன்றத் தேர்தல் பல படிப்பினைகளை மக்களுக்கும் அரசியல் கட்சிகளுக்கும் சொல்லிக்கொடுத்திருக்கின்றது என்றால் மிகையாகாது. இது தமிழ்த் தேசிய பரப்பில் மட்டுமல்ல சிங்கள தேசிய பரப்பிலும் பல செய்திகளை மக்களுக்கு எடுத்தியம்பியுள்ளது.
தெற்கில் கிட்டத்தட்ட மூன்றில் இரண்டு பெரும்பான்மையை பெற்று வெற்றி வாகை சூடியுள்ளது பிரதமர் மகிந்த ராஜபக்சவின் பொதுஜன பெரமுன கட்சி. இவர்களுடைய தேர்தல் பிரச்சாரமோ தமிழ் மக்களுக்கான சமஷ்டி தீர்வினை வழங்க முடியாது என்பதும் அத்தகைய தீர்வினை கேட்போர் சிறை செல்ல வேண்டும் என்பதும். ஆக தென்பகுதி மக்களின் இனவாதத்தை தூண்டி இத்தைகைய ஒரு வெற்றியை இவர்கள் பெற்றுள்ளார்கள் என்பது தெளிவு.
மறுபுறம் தென்பகுதியின் பிரதான கட்சியான ஐக்கிய தேசிய கட்சியோ தமக்குள் உண்டான உள்பூசலால் வரலாற்றுத் தோல்வியை தழுவியுள்ளது. கூடி கெடுப்பதில் வல்லவரான ரணில் விக்கிரமசிங்க முதல் முதலாக அதன் வலியை இத் தேர்தல் ஊடாக உணர்ந்திருப்பாரென நம்புகின்றோம். தெய்வம் நின்று கொல்லும் என்பது இதுதானோ?
வடக்கிலோ தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கொள்கை மாறி செல்கின்றது என்ற கோஷத்தில் திரு கஜேந்திர குமார் பொன்னம்பலம் தலைமையிலான அணி தமது அரசியலை முன்னெடுத்தது. அதே கொள்கையையே விக்னேஸ்வரன் ஐயாவின் தலைமையிலான அணியும் முன்னெடுத்தது. மாற்று என்ற ஒரே கொள்கை ஆனாலும் இரண்டு அணிகள், ஆக மொத்தத்தில் தமிழ்த்தேசியம் பேசுகின்ற மூன்று அணிகள் களத்தில் நின்றன. இது தமிழ்த் தேசிய கொள்கையுள்ள மக்களின் வாக்குகளை மூன்றாக சிதைத்தது மட்டுமல்லாமல் அரச ஆதரவு தரப்புக்கள் கூடுதலான வாக்குகளை பெறுவதற்கும் வழியமைத்து கொடுத்தது.
இவ்வாறு அரசு சார்பு அணிகளின் பின்னால் சென்ற மக்களின் பிரதான காரணம் தமிழ்த் தேசியம் பேசும் தலைமைகள் வெறுமனே அரசியல் உரிமைகளை மட்டுமே முன்வைத்து தமது பயணத்தை முன்னெடுக்கின்றனஇ அதுவும் ஒருவருடம் இரண்டுவருடம் அல்ல 70 வருடங்கள் இத்தகைய கோஷத்தை முன்னிறுத்தி சென்றமையே இதற்கான பிரதான காரணம். தமக்கான விடியல் வரும் என்ற நம்பிக்கை அம்மக்கள் மத்தியில் இல்லாமல் பொனதற்கு இதுவே காரணம்.
அகிம்சையோ வன்முறையோ ஒரு போராட்டத்தில் ஈடுபடும் மக்கள் தமது பொருளாதாரத்தை போராட்டத்திற்கு சமாந்தரமாக கட்டி எழுப்பவேண்டும்இ இதுவே போராட்டத்தின் முதுகெலும்பாக இருக்கும். இதனையே விடுதலைப் புலிகள் தாம் போராட்டத்தில் ஈடுபட்டபோது ஈழத்திலும் புலத்திலும் நடைமுறைப் படுத்தியிருந்தனர்.
இத்தகைய செயல் திட்டத்தை எமது தமிழ் அரசியல் வாதிகள் செயற்படுத்தாமையே இந்த பின்னடைவிற்கு காரணம். இவ் அரசியல் வாதிகள் தமக்குள் சொற்போர் புரிவதிலும் தமது தவறுகளை நியாயப்படுத்துவதிலும் பொழுதைப் போக்க, இவர்கள் தொண்டர்களோ மாறி மாறி ஒரு கட்சி உறுப்பினரை மற்றையவர் வசைபாடுவதிலும் தாம் விரும்பும் அரசியல் தலைவருக்காக பிற்பாட்டு பாடுவதிலும் காலத்தை செலவிட்டனர். சுருங்கச் சொன்னால் தமிழக அரசியலைப் பின்பற்ற தொடங்கி விட்டார்களோ என்ற அச்சமே ஈழ மக்களுக்கு தோன்றியுள்ளது.
ஆக்க பூர்வமான பொருளாதாரத் திட்டங்களோ தூர நோக்கு சிந்தனைகளோ இவர்களிடம் இல்லை. இந்த நிலை நீடிக்குமானால் எதிர்காலங்களில் சிங்கள தேசிய கட்சிகள் எமது தாயாகப் பிரதேசங்களில் அதிகூடிய ஆசனங்களை பெற்றாலும் அதிசயப் படுவதற்கு ஒன்றுமில்லை.
மேலும் தமிழ்த் தேசியம் பேசும் தலைமைகள் தமக்குள் முரண்பட்டு நின்றதும் இம் மக்கள் அரச சார்பு அணிகளின் பின்னால் செல்வதற்கு காரணமாக அமைந்தது. தமிழருக்கான தீர்வு விடயத்தில் ஒருமித்து நிற்க முடியாதவர்கள் தமக்கான தீர்வினை எப்படி பெற்றுத்தர போகின்றார்கள் என்ற சந்தேகமும் இதற்கு பிரதான காரணமாக அமையலாம்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கொள்கை மாறி செல்கின்றது அதனை சரிப்படுத்த வேண்டும் என்று நினைப்பவர்கள்இ பின்னர் தமக்குள் முரண்பட்டு இரண்டு அணிகளாய் பிரிந்து நின்றதும் மக்களின் அதிருப்திக்கு காரணமாக அமைந்தது. அதுமட்டுமன்றி மாற்று அணி என்று கூறுபவர்களின் வாக்கு வங்கி வெறுமனே யாழ் மாவட்டத்தை மட்டுமே நோக்காக கொண்டு செயற்பட்டதால் ஏனைய இடங்களில் குறிப்பிட்டு சொல்லக் கூடிய பெறுபேறு எதனையும் இவ்வணிகளால் பெற்றுக்கொள்ள முடியவில்லை.
வடக்கு இவ்வாறு இருக்க, கிழக்கின் ஒரு பகுதி மக்களும் இவ்வாறு அரச சார்பு கொள்கையுள்ளவர்களின் பக்கம் சாய்ந்தமைக்கு மேற்கூறிய காரணங்களே பிரதான காரணங்களாக அமைந்தன.
தமிழ்த் தேசியத்தை விரும்புவோர் முதலில் மக்களை அரவணைக்க கற்று கொள்ளவேண்டும். அதுமட்டுமல்லாமல் மாற்றம் ஒன்றை விரும்பி செல்லும்போது எமது தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளுக்கு அப்பால் அனைவரையும் ஒன்றிணைத்து பயணிக்கக் கூடிய ஆளுமையை கொண்டிருத்தல் வேண்டும். அதைவிடுத்து, இவரை இணைத்தால் கட்சி தாவி விடுவாரோ என்ற சந்தேகத்தில் பயணிப்போமானால் இறுதியில் எம்மைத் தவிர எம்மை சுற்றி ஒருவரும் இருக்க மாட்டார்கள்.
யதார்த்தத்தை கூறப்போனால் இலங்கை பாராளுமன்றத்தால் தமிழ் மக்களுக்கு நீதியான தீர்வினை பெற்றுக் கொள்ளமுடியாது என்று தெரிந்தும் அனைத்து தமிழ்க் கட்சிகளையும் ஒன்றிணைத்து தமது முரண்பாடுகளை களைந்து சர்வதேச அரங்கில் பேசுசக்தியாக அவர்களை உலவ விட்ட தேசியத்தலைமையின் ஆளுமை இப்பொழுது இருக்கும் எந்த தலைமைக்கும் இல்லை என்பதையும் இத்தேர்தல் சொல்லிச்சென்றுள்ளது.
ஆகவே, கொள்கை அடிப்படையில் ஒன்றாக இணைந்து பயணிக்கும் நிலைக்கு தமிழ் தலைமைகள் ஒன்றிணைய வேண்டியது காலத்தின் கட்டாயம். இதற்குத் திரு விக்னேஸ்வரன் மற்றும் திரு கஜேந்திர குமார் பொன்னம்பலம் ஆகியோரை நோக்கிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஊடக பேச்சாளர் திரு சுமந்திரனின் அழைப்பு ஓர் ஆரம்ப புள்ளியாக இருக்கும். இந்த அழைப்பை வெறுமனே கட்சி அரசியலுக்காக பயன்படுத்தாமல் எமது அரசியல் தீர்வு விடயத்திலும் பொருளாதார அபிவிருத்தியிலும் ஒரு பொதுவான கட்டமைப்பை உருவாக்கி பயணிக்க கூடிய வகையில் இத்தகைய ஒற்றுமையை உருவாக்க வேண்டும்.
அரசியல் தீர்வு என்னும்போது ஒற்றை ஆட்சியை வலியுறுத்தாத மத சார்பற்ற ஓர் நாட்டினை உருவாக்க கூடிய சமஷ்டி முறையிலான ஒரு தீர்வினை வலியுறுத்தி இத் தரப்புகள் ஒன்றிணைய வேண்டும். ஒருவேளை எமக்கு கிடைக்க வேண்டிய நியாயமான தீர்வினை பேரினவாதம் மறுக்கும் சந்தர்ப்பத்தில் எமது இலக்கை அடைவதற்கு இவர்கள் எந்த எல்லையையும் எட்டும் மன உறுதியுடன் பயணிக்க கூடியவர்களாக இருக்க வேண்டும்.
இதை விடுத்து, நாம் இலங்கையர்கள் ஆகவே இலங்கைக்கு எதிராக நாம் சர்வதேசத்தில் எந்த அழுத்தங்களையும் கொண்டுவர மாட்டோம் என்று இத் தருணத்திலும் கூறுவார்களானால் இவர்கள் எம்மண்ணில் மடிந்த ஐந்து இலட்சத்திற்கும் மேலான பொது மக்களின் ஆன்மாக்களுக்கும் நாற்பதனாயிரத்திற்கும் மேற்பட்ட மாவீரர்களின் ஆன்மாக்களுக்கும் செய்யும் துரோகமாகவே தமிழ் மக்கள் கருதுவார்கள்.
பொருளாதார கட்டமைப்பு என்னும்போது எமது மக்களின் அன்றாட பிரச்சனைகளில் இருந்து நீண்ட கால பிரச்சனைகளை தீர்க்கும் வகையில் ஒரு நிலையான நிர்வாக கட்டமைப்பை கட்சி வேறு பாடுகள் கடந்து உருவாக்க வேண்டும். இதனை தமிழ் மக்களின் ஒரு நிழல் அரசாங்கம் போன்று செயற்படுத்தவேண்டும். இவ்வாறு உருவாக்கப்படும் கட்டமைப்பு தொழிற் சாலைகளை உருவாக்கி எமது மக்களுக்கான வேலை வாய்ப்புக்களை வழங்குதல், உள்ளூர் உற்பத்திகளை அதிகரித்து அதனை சந்தைப் படுத்தல், ஒரு குடும்பத்தில் மூன்றுக்கு மேற்பட்ட பிள்ளைகள் இருப்பின் அவர்கள் கல்வி மற்றும் அன்றாட தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் உதவிகளை வழங்குதல், விளையாட்டுத் துறையை உருவாக்கி வடக்கு கிழக்கில் உள்ள இளைஞர் மற்றும் யுவதிகளுக்கான பயிற்சிகளை வழங்கி அவர்களை சர்வதேச மட்டத்தில் மிளிர வைத்தல், சர்வதேச தரத்திலான ஒரு விளையாட்டு மைதானத்தை எமது பகுதியில் உருவாக்கி துடுப்பாட்டம் போன்ற பயிற்சிகளை சர்வதேச பயிற்றுவிப்பாளர்கள் ஊடாக வழங்குதல் போன்ற பல்வேறு பட்ட திட்டங்களை இந்த பொது கட்டமைப்பினூடாக கொண்டுவரலாம்.
தனிப்பட்ட முறையில் பலர் பலவகை சேவைகளை செய்தாலும் பொதுவான ஒரு கட்டமைப்பின் ஊடாக இவற்றை செயற்படுத்தினால் மட்டுமே மக்கள் சக்தியை ஒன்றிணைக்க முடியும். இவற்றை நாம் செய்யத் தவறும்போது மக்கள் திசை மாறி பயணிக்க தொடங்குவார்கள்.
சிங்கள தேசம் அனுபவிக்கும் இத்தகைய சலுகைகள் எம் மக்கள் கடந்த 70 வருடங்களாக இழந்தவை என்பதை இனியாவது புரிந்து தமிழ்த் தலைமைகள் ஒன்றிணையவேண்டும். இந்த ஒற்றுமை புலம் பெயர் தேசங்களில் பிரிந்திருக்கும் பல தமிழ் அமைப்புக்களையும் ஒன்றிணைக்கும் கருவியாக மாறும். இத்தகைய ஒற்றுமை மீண்டும் தமிழ் இனம் தலை நிமிர வழி வகுக்கும்.
அரசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்றாகும் !