நெருக்குதல் இல்லாவிட்டால் தீர்வைத்தர அரசு ஒருபோதும் முன்வராது- சி.வி.விக்னேஸ்வரன்
தமிழர்களுக்கு நீதியைக் பெற்றுக் கொடுக்க சர்வதேச சமூகம் இனியும் தாமதிக்கக்கூடாது என வடமாகாண முதமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
சர்வதேசத்தின் அழுத்தங்களால் மட்டுமே, இலங்கையில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்த முடியும் எனவும் முதலமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
மனித உரிமைகள் பேரவையின் கூட்டத் தொடர் ஆரம்பமாகவுள்ளமை தொடர்பில் வாரத்துக்கொரு கேள்வியில் வினவப்பட்டமைக்கு முதலமைச்சர் பதிலளித்துள்ளார்.
சர்வதேச சமூகம் இலங்கை ஆட்சியாளருக்கு சாதகமான முறையில் 30/1 தீர்மானத்தைக் கொண்டுவந்ததாக வட மாகாண முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.
ஆனாலும், அரசாங்கம் அதன் கடப்பாடுகளை நிறைவேற்றுவதில் ஆர்வம் காட்டவில்லை என முதலமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.
கடந்த ஒரு வருடத்தில் கொடுத்த வாக்குறுதிகளில் எவை நிறைவேற்றப்பட்டன என வடக்கு முதல்வர் கேள்வியெழுப்பியுள்ளார்.
காணாமல் ஆக்கப்பட்டோர் பற்றிய அலுவலகத்திற்கான சட்டமூலம் நிறைவேற்றப்பட்டு ஒன்றரை வருடங்கள் கடந்தும் இன்னும் அது செயற்படவில்லை என்பதையும் முதலமைச்சர் ஞாபகப்படுத்தியுள்ளார்.
பயங்கரவாதத் தடைச்சட்டம் இன்னும் நீக்கப்படவில்லை என்பதுடன், அந்தக் கொடூரமான சட்டத்தின் கீழ் கைதான பலர் இன்னமும் தடுப்பில் உள்ளதாகவும் முதலமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
சிறுபான்மையினருக்கு எதிரான அச்சுறுத்தல்கள் தொடர்வதாகத் தெரிவித்துள்ள முதலமைச்சர், அரசியலமைப்பு மூலமான தீர்வு முயற்சிகள் முன்னெடுக்கப்படும் நிலையும் தற்போது இல்லை என குறிப்பிட்டுள்ளார்.
உள்ளூராட்சிமன்றத் தேர்தல் முடிவுகளையடுத்து கூட்டரசாங்கம் அதனை முன்னெடுப்பதற்கான வாய்ப்புக்கள் குறைவு என்பதே யதார்த்தம் என வாராந்த கேள்விக்கு முதலமைச்சர் பதிலளித்துள்ளார்.
நெருக்குதல் இல்லாவிட்டால் உரிமைகளைத் தருவதற்கும், நியாயமான முறையில் போர்க் குற்றங்களை விசாரிக்கவும் அரசாங்கம் ஒரு போதும் முன்வராது என முதலமைச்சர் தமது நிலைப்பாட்டை வௌிப்படுத்தியுள்ளார்.
சர்வதேச குற்றவியல் நீதிமன்றுக்கு இலங்கையை ஐ.நா பாதுகாப்புச்சபை ஆற்றுப்படுத்த வேண்டும் என முதலமைச்சர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
அவ்வாறில்லாத பட்சத்தில், இலங்கையில் நடந்த சர்வதேச மனித உரிமைகள் மீறல் பற்றி ஆராய்வதற்கு, தீரப்பு மன்றம் ஒன்று நியமிக்கப்பட வேண்டும் எனவும் முதலமைச்சர் வலியுறுத்தியுள்ளார்.
ஐ.நா.வின் 37 ஆவது அமர்வு இன்று ஆரம்பம்
ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையின் 37 ஆவது பொது அமர்வு ஜெனிவாவில் அமைந்துள்ள தலைமையகத்தில் இன்று ஆரம்பமாகின்றது.
இந்த அமர்வில் இலங்கை உள்ளிட்ட 47 நாடுகள் உறுப்பு நாடுகளின் மனித உரிமைகள் முன்னேற்றம் தொடர்பில் ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையாளர செயிட் அல் ஹுசைனால் வருடாந்த அறிக்கை முன்வைக்கப்படவுள்ளது.
இந்நாட்டு மனித உரிமைகளை பாதுகாப்பதன் மூலம் இதுவரை மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகள் தொடர்பான முற்னேற்ற அறிவிப்பொன்றை ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையாளர் எதிர்வரும் மார்ச் மாதம் 21ம் திகதி ஜெனிவாவில் மேற்கொள்ளவுள்ளார்.
இலங்கையில் மனித உரிமைகளை பாதுகாப்பதற்கு அரசு இதுவரை மேற்கொண்டுள்ள செயற்பாடுகளின் முன்னேற்றம் குறித்த மனித உரிமைகள் ஆணையாளரின் கண்காணிப்பு தொடர்பிலான விடயங்கள் இதன்போது தெளிவுபடுத்தப்படவுள்ள நிலையில் , அவை அறிக்கைப்படுத்தப்படவுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதேவேளை, ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளரின் முன்னேற்ற
அறிக்கை தொடர்பில் இலங்கை சார்பாக விடயங்களை தெளிவுபடுத்துவதற்கு குழுவொன்று ஜெனிவா நோக்கி செல்லவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
சம்பந்தனுக்கு சுமந்திரனுக்கும் இறுதிக்கிரியை செய்த மக்கள் ; வுனியாவில் சம்பவம்
எதிர்க்கட்சித்தலைவர் இரா.சம்பந்தன் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் ஆகிய இருவரின் உருவப்பொம்மைகளுக்கு வீதியில் வைத்து இறுதிக்கிரியை ஒன்று செய்யப்பட்டுள்ளது.
காணாமல் ஆக்கப்பட்ட தமது உறவுகளை மீட்க வவுனியாவில் தொடர் போராட்டத்தி ஈடுபட்டு வரும் உறவினர்களே இன்னு தமக்கு பதிலை பெற்று தராத இவ் அரசியல் தலைவர்களுக்கு இவ்வாறு தமது எதிர்ப்பை தெரிவித்துள்ளனர்.
கடத்தப்படும் கையளிக்கப்பட்டும் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளை விடுவிக்கக்கோரி வவுனியா தபால் நிலையத்துக்கு அருகில் சூழற்சிமுறையிலான உறவுகளின் தொடர் உணவு தவிர்ப்பு போராட்டம் நேற்றுடன் ஒருவருடத்தை அடைந்துள்ளது.
அந்தவகையில் 366 ஆவது நாளான நேற்று விசேட கவனயீர்பு போராட்டம் ஒன்றை நடத்திய உறவுகள் வவுனியா கந்தசுவாமி கோவிலில் வழிபாட்டுடன் போராட்டத்தை ஆரம்பித்தனர். இதன்போது ஆலய முன்றலில் ஒன்று கூடிய உறவுகள் அங்கு வைக்கப்பட்டிருந்த தமது உறவுகளின் புகைப்படங்களைப்பார்த்து உரக்க கதறி அழுதனர்.
பின்னர் ஆலய முன்வீதி வழியாக போராட்டம் நடைபெறும் இடத்துக்கு வந்த உறவுகள் தொடர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதன்போதே சம்பந்தர் மற்றும் சுமந்திரன் ஆகியோரின் உருவப்பொம்மைகளை தாங்கியவாறு முச்சந்தி நோக்கி சென்ற அவர்கள் அங்கு அதற்கு இறுதிக்கிரியைகளை செய்து எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.
தமிழனின் கின்னஸ் சாதனை முயற்சி; 72 நாடுகளை நோக்கி யாழில் இன்று ஆரம்பம்
உலக அமைதிக்கான ஓட்டம் எனும் தொனிப்பொருளின் கீழ் 72 நாடுகளில் 4000 கிலோ மீற்றர் தூரம் ஓடி கின்னஸ் சாதனை படைக்கும் முயற்சியில் இலங்கையர் ஒருவர் ஈடுபட்டுள்ளார்.
யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகக் கொண்டவரும் கனேடியப் பிரஜாவுரிமை பெற்றவருமான சுரேஷ் ஜோகிங் என்பவரே இந்த கின்னஸ் சாதனை முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.
123 நாட்களில் 72 நாடுகளில் 4000 கிலோ மீற்றர் தூரம் ஓடி கின்னஸ் சாதனை படைப்பதே இவரது இலக்காகும்.
கடந்த நத்தார் பண்டிகையன்று பலஸ்தீனத்தில் பயணத்தை ஆரம்பித்த இவர் அவுஸ்திரேலியா, நியூஸிலாந்து, இஸ்ரேல் உள்ளிட்ட 24 நாடுகளில் இதுவரை ஓடியுள்ளார்.
நேற்று முன்தினம் கொழும்பு காலி முகத்திடலில் மாலை 4 மணிக்கு ஓட்டப் பயணத்தை ஆரம்பித்த அவர் 21.1 கிலோ மீற்றர் தூரம் ஓடினார்.
கையில் பனையோலைத் துண்டொன்றை வைத்துக்கொண்டே சுரேஸ் ஜோகிங் ஓடுகின்றார்.
பனை சகல விதத்திலும் மனிதனுக்கு பயன்படுகின்றது, அதுபோன்றே மனிதர்களும் பயனுடையவர்களாக இருக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி வருகிறார்.
நேற்று மாலை 3 மணியளவில் தாம் பிறந்த இடமான வவுனியா சூசைப்பிள்ளையார் குளத்தில் ஓட்டப் பயணத்தை ஆரம்பித்த சுரேஸ் ஜோகிங், கிளிநொச்சியூடாக யாழ்ப்பாணம் இளவாலை பகுதிக்கு சென்று பயணத்தை முடித்துக்கொண்டார்.
யாழ்ப்பாணத்தில் இன்று (24) ஓடத் தயாராகவுள்ள அவர் தாம் கல்வி பயின்ற புனித பத்திரிசியார் கல்லூரிக்கு செல்வதுடன் இலங்கைக்கான ஓட்டப் பயணத்தை முடிக்கவுள்ளதாகவும் தெரிவித்தார்.
தனி நாடு வேண்டுமா ? என கேட்டு தாக்கினார்கள்; மர்ம உறுப்பை குறட்டால் நசித்து மின்சாரத்தால் சுட்டார்கள்
யாழ். நீதிமன்றில் அதிர்ச்சி வாக்குமூலம்
அடிக்கும் போது சுமனன் இறந்து விட்டார். அவனது மூக்கால் இரத்தம் வந்துகொண்டிருந்தது. அதன் பின்பும் பொலிஸ் உத்தியோகத்தர்களது வெறித்தனம் அடங்காமல் இறந்த பின்பும் போட்டு அடித்தார்கள். எனக்கு ஆணிகளை காலில் இறுக்கி மின்சார கம்பியால் சுட்டார்கள். எனது ஆணுறுப்பை குறட்டால் நசித்தார்கள். பின்னர் இறந்த சுமனனது உடலை சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் நின்ற புதிய ஜீப்பில் ஏற்றிக்கொண்டு போனார்கள் என யாழ்.மேல் நீதிமன்றில் சாட்சியம் அளித்துள்ளனர்.
கடந்த 2011 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 25ம் திகதி சுன்னாக பகுதியை சேர்ந்த சிறிஸ்கந்தராஜா சுமணன் எனும் இளைஞரை பொய் குற்றசாட்டின் கீழ் காவல்துறையினர் கைது செய்து சித்திரவதை செய்து படுகொலை செய்தனர் எனவும், படுகொலை செய்யப்பட்டவரின் உடலை கிளிநொச்சி இரணைமடு குளத்தில் வீசி தற்கொலை செய்து கொண்டார் என காவல்துறையினர் கூறியதாகவும் , படுகொலையானவரின் நண்பர்கள் கடந்த 2015 ஆம் ஆண்டு யூலை மாதம் 25ஆம் திகதி மல்லாகம் நீதிவான் நீதிமன்றில் நீதிவான் ஏ.யூட்சன் முன்னிலையில் சாட்சியம் அளித்து இருந்தனர்.
அதனை அடுத்து சுன்னாகம் காவல் நிலையத்தை சேர்ந்த 8 காவல்துறை உத்தியோகஸ்தர்கள் மீது குற்றம் சுமத்தப்பட்டது. அதில் 7 பேர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டு உள்ளனர். அவர்களுக்கு எதிராக நீதிமன்றங்களில் வழக்கு தொடரப்பட்டு உள்ளன.
அதில் 5 காவல்துறை உத்தியோகஸ்தர்களுக்கு எதிராக கொலை குற்றசாட்டு சுமத்தப்பட்டு கிளிநொச்சி நீதிமன்றிலும் , கொலை குற்றம் சாட்டப்பட்டு உள்ள 5 பேர் உட்பட 8 பேருக்கு எதிராக சித்திரவதை குற்ற சாட்டு சுமத்தப்பட்டு யாழ்.மேல் நீதிமன்றிலும் வழக்கு தொடரப்பட்டு வழக்கு விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
குறித்த வழக்கின் சித்திரவதை தொடர்பான வழக்கு விசாரணை யாழ்.மேல் நீதிமன்றில் நீதிபதி மா.இளஞ்செழியன் முன்னிலையில் செவ்வாய்கிழமை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
அதன் போது சாட்சி பதிவுகள் ஆரம்பமானது. அதில் குறித்த வழக்கின் முதலாவது சாட்சியமான இராசதுரை சுறேஸ் என்பவரது சாட்சி பதியப்பட்டது.
காலில் ஆணி அடித்து மர்ம உறுப்பை குறட்டால் நசித்தார்கள்
இதில் அவர், எம்மை மாவீரர் தினம் கொண்டாடியதற்காக சுன்னாகம் பொலிஸார் கைது செய்தனர். பின்னர் எம்மீது திருட்டு குற்றச்சாட்டு சுமத்தினர்.
எம்மையும் எம்முடன் சேர்த்து படுகொலை செய்யப்பட்ட சுமனன் என்பவரையும் ஒரே அறையில் அடைத்து வைத்தனர். அவ்வேளை சுமணன் என்பவரை முழங்காலில் இருத்தி கால்களுக்குள் கைகளை விட்டு கட்டி இரண்டு மேசைகளுக்கு இடையில் கட்டித் தொங்கவிட்டு அடித்தார்கள்.
அதன்போது அவர் தாம் மருத்து பாவிப்பவர் எனவும் தம்மை அடிக்க வேண்டாம் என கூறினார். ஆனால் அதனை கருத்திலெடுக்காத பொலிஸார் தொடர்ந்து அவரை போட்டு அடித்தார்கள். இவ்வாறு (அவர் கூறும்போது குறித்த கொலை செய்யப்பட்ட நபர் கைகள் கால்கள் கட்டப்பட்ட நிலையில் எப்படி இருந்தார் என்பதை சாட்சி நீதிபதிக்கு தனது உடலால் செய்து காண்பித்திருந்தார்.)
இவ்வாறு அடிக்கும் போது சுமனன் இறந்து விட்டார். அவனது மூக்கால் இரத்தம் வந்துகொண்டிருந்தது. அதன் பின்பும் பொலிஸ் உத்தியோகத்தர்களது வெறித்தனம் அடங்காமல் இறந்த பின்பும் போட்டு அடித்தார்கள். எனக்கு ஆணிகளை காலில் இறுக்கி மின்சார கம்பியால் சுட்டார்கள். எனது ஆணுறுப்பை குறட்டால் நசித்தார்கள். பின்னர் இறந்த சுமனனது உடலை சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் நின்ற புதிய ஜீப்பில் ஏற்றிக்கொண்டு போனார்கள்.
இதன்போது உமக்கும் சுமனன் என்பவருக்கும் அடித்த சித்திரவதை செய்த பொலிஸ் உத்தியோகத்தர்கள் யார் யார் என்பதை அடையாளம் காட்ட முடியுமா? என பிரதி மன்றாதிபதி வினாவியபோது சாட்சி எதிரி கூண்டில் நின்று குறித்த பொலிஸ் உத்தியோகத்தர்களை முறையே அவர்கள் என்ன என்ன செய்தார்கள் என்று கூறியிருந்தார். அத்துடன் தற்போது இதில் ஒரு பொலிஸ் உத்தியோகத்தர் நீதிமன்றில் இல்லை எனவும் கூறியிருந்தார்.
அவற்றை தொடர்ந்து அவரது சாட்சியங்களும் எதிரி தரப்பு சட்டத்தரணிகளால் குறுக்கு விசாரனை செய்யப்பட்டது.
அடுத்து, இரண்டாவது சாட்சியமான துரைராசா லோகேஸ்வரனது சாட்சியம் பதிவு செய்யபட்டது.
தனி நாடு வேணுமா ? என கேட்டு தாக்கினார்கள்
தாம் கடந்த 2011.11.21ஆம் திகதி தமது புன்னாலைகட்டுவன் சித்தி விநாயகர பாடசாலையில் கற்கும் தாய் தந்தையை இழந்த, போரால் பாதிக்கப்பட்ட சிறுவர்களுக்கு புத்தகப்பைகளை வழங்கினோம். இதன்போது அங்கு வந்த ஊரேழு இராணுவ முகாமை சேர்ந்த பிரசாத் என்பவர் நீங்கள் மாவீரர் நிகழ்வா கொண்டாடுகிறீர்கள் என கேட்டனர். அதற்கு நாம் இல்லையென பதிளித்தோம்.
இதன்பின்பு அன்றைய தினம் இரவு எனது வீட்டிற்கு வந்த சுன்னாகம் பொலிஸ் நிலையத்தை சேர்ந்த சிந்திக்கபண்டார, மயூரன், பிரசாந் ஆகியோர் என்னை திருட்டு குற்றச்சாட்டு ஒன்றில் கைது செய்து சென்றனர்.
அதன் பின்னர் 24.11.2011 அன்று சுமனன் என்பவரை சிந்திக்க , மயூரன் ஆகிய பொலிஸ் உத்தியோகத்தர்கள் கைது செய்து காலை 9க்கும் 10க்கும் இடைப்பட நேரத்தில் கொண்டு வந்திருந்தனர்.
அதன்போது சுமனது நெற்றிப் பகுதியில் இரத்தம் வடிந்துகொண்டிருந்தது. அத்துடன் தனிநாடு வேண்டுமா என கேட்டு கேட்டு எம்மை அடித்து. எமக்கு மின்சார கம்பியினால் சுடுவைத்தனர். என சாட்சியம் அளித்தார்.
இதனை தொடர்ந்து அரச தரப்பு விசாரனையில் உங்களையும் சுமனனையும் கைது செய்த பொலிஸ் உத்தியோகத்தர்களை அடையாளம் காட்ட முடியுமா என வினவியபோது குறித்த சாட்சி அவர்களை எதிரி கூண்டில் நின்றவாறு சுட்டு விரலால் அடையாளம் காட்டி அவர்களில் இருவரது பெயர்களையும் சரியாக குறிப்பிட்டிருந்தார்.
இதன்பின்பு அவரது சாட்சியமானது எதிரி தரப்பு சட்டத்தரணிகளால் குறுக்குவிசாரனை செய்யப்பட்டது. இதன்போது அவரது மன்றில் வழங்கிய சாட்சியில் இரு விடயங்கள் பொலிஸ் தரப்பினது வாக்குமூலப் பதிவில் வேறுபட்டிருந்த நிலையில் அது மன்றால் அடையாளமிடப்பட்டிருந்தது. அதனை தொடர்ந்து அவர் சாட்சிப் பதிவில் இருந்து நீக்கப்பட்டிருந்தார்.
6ஆம் மற்றும் 8ஆம் சாட்சியும் பதிவு.
இதன் பின்னர் 6ஆம் மற்றும் 8ஆம் சாட்சிகளும் மன்றால் பதிவு செய்யப்பட்டது.
புதிய சாட்சியங்களை அணைக்க அனுமதி.
அதனை தொடர்ந்து இவ் வழக்கை நெறிப்படுத்தும் பிரதி மன்றாதிபதி குமார்ரட்ணம் இவ் வழக்கின் குற்றப் பத்திரிகையில் 30ஆம் 31ஆம் 32ஆம் சாட்சிகளாக மூன்று பொலிஸ் உத்தியோகத்தர்களை அணைப்பதற்கு மன்றின் அனுமதியை கோரியிருந்தார். அத்துடன் இவ் வழக்கின் சாட்சியில் இருந்து 2ஆம் 4ஆம் 5ஆம் சாட்சிகளை நீக்குவதற்கான அனுமதியையும் கோரியிருந்தார்.
இவ்விரு விண்ணப்பங்களும் மன்றானது அனுமதியளித்துடன் இவ் வழக்கின் மீதி சாட்சிப்பதிவுகளை பதிவு செய்வதற்காக எதிர்வரும் மாதம் 14ஆம் திகதி வரை ஒத்திவைத்ததுடன் அதுவரை குறித்த பொலிஸ் உத்தியோகத்தர்களை விளக்கமறியலில் வைக்கவும் யாழ்.மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன் உத்தரவிட்டிருந்தார்.
குறித்த வழக்கு விசாரணையில் சட்டமா அதிபர் சார்பில் அரச சட்டத்தரணி நாகரட்ணம நிஷாந்துடன் பிரதி மன்றாதிபதி குமார் ரட்ணம் முன்னிலையாகியிருந்தார்.
எதிரிகள் சார்பில் முன்னிலையாகியிருந்த சட்டத்தரணிகள் குறித்த வழக்கில் பாதிக்கப்பட்ட நபர் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் பொலிஸ் நிலையத்தில் முறையிடவோ அல்லது அவராலோ இவ் வழக்கு தொடுக்கப்படாதுடன் அவர் தற்போது இல்லையெனவும் குறிப்பிட்டிருந்தனர்.
அத்துடன் பாதிக்கப்பட்டதாக குறிப்பிடப்படுகின்ற சாட்சி இருந்தாலேயே அவரை எதிரி தரப்பு சட்டத்தரணிகள் குறுக்கு விசாரனை செய்கின்ற போதே குற்றச் சம்பவத்தின் உண்மை தன்மை மன்றுக்கு தெரியவரும். எனவே இவ் வழக்கில் அவ்வாறானதொரு சந்தர்ப்பம் இல்லையென குறிப்பிட்டிருந்தனர்.
உயிரிழந்தவரின் உடலில் 20க்கும் மேற்பட்ட காயங்கள் காணப்பட்டன.
இதனை தொடர்ந்து இவ் வழக்கினை நெறிப்படுத்தும் அரச சட்டத்தரணியும் பிரதி மன்றாதிபதியுமான குமார் நாகரட்ணம், குறித்த சித்திரவதைக்குள்ளாகி உயிரிழந்த நபரது மரண விசாரனையில் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது குறித்த நபரது உடலில் 20க்கு மேற்பட்ட காயங்கள் உள்ளதாகவும், அவர் சித்திரவதை செய்யப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
ரணிலின் அமைச்சுக்களை பறித்து மைத்திரி அதிரடி
அமைச்சரவை மாற்றம் குறித்து அரசாங்கத்திற்குள் கருத்து வேறுபாடுகள் நிலவிவருவதாக அரசாங்க தரப்பு தகவல்கள் வெளியாகியுள்ளன.
அமைச்சரவையில் இன்று பெரும்பாலும் மாற்றங்கள் நிகழலாம் என பரவலாக எதிர்பார்க்கப்பட்டு வந்த நிலையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார விவகார அமைச்சு, மங்கள சமரவீரவின் நிதியமைச்சு, கபீர் ஹரிமின் அரச தொழில்முயற்சிகள் அபிவிருத்தி அமைச்சு, மலிக் சமரவிக்ரமவின் சர்வதேச வர்த்தக அமைச்சு ஆகிய நான்கு அமைச்சுக்களிலும் மாற்றங்கள் நிகழவுள்ளதாக அரசாங்க தரப்பு தகவல்கள் வெளியாகியிருந்தன.
குறித்த அமைச்சுக்களின் அமைச்சர்கள் மாத்திரமின்றி செயலாளர்களும் மாற்றமடைய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்படன.
பொருளாதார மேலாண்மையில் தற்போது காணப்படும் பலவீனங்களை சமாளிக்கும் நோக்கிலேயே இந்த மாற்றங்கள் ஏற்படுத்தப்படவுள்ளதாகவும் செய்திகள் வெளியானமை குறிப்பிடத்தக்கது.
கொலைமிரட்டல் அதிகாரி மீள அழைக்கப்பட்டு கைது செய்யப்படவேண்டும்; அதிகரிக்கும் அழுத்தங்கள்
பிரித்தானியாவை விட்டு தப்பிச்சென்றுள்ள இலங்கை தூதரகத்தின் சர்ச்சைக்குரிய கொலைமிரட்டல் அதிகாரி பிரியங்கா பெர்ணான்டோ மீள அழைக்கப்பட்டு கைது செய்யப்பட வேண்டும் என நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதி விளையடுத்துறை அமைச்சர் சொக்க லிங்கம் யோகலிங்கம் கோரிக்கை விடுத்துள்ளார்.
இறுதி யுத்தின் போது ஒன்றரை இலட்சத்துக்கும் மேற்பட்ட அப்பாவி பொதுமக்களை கொன்றழித்தவர்களின் மனநிலை இன்னும் மாறவில்லை என அவர் மேலும் தெரிவித்தார்.
பிரித்தனியாவில் தமிழர்களுக்கு எதிராக கொலை அச்ச்சுறுத்தல் விடுத்திருந்த இலங்கை தூதரக பாதுகாப்பு அதிகாரி பிரியங்கா பெர்ணான்டோவை கைது செய்ய வேண்டும் என பிரித்தானிய பொலிஸிலும் நீதிமன்றிலும் வழக்குகள் தொடரப்பட்டிருந்த நிலையில், குறித்த அதிகாரி தற்போது பிரித்தானியாவை விட்டு தப்பி சென்றுள்ள நிலையிலேயே அமைச்சர் இதனை தெரிவித்துள்ளார்.
இதனிடையே, குறித்த அதிகாரியின் கொலை அச்சுறுத்தலுக்குள்ளாகி அவருக்கு எதிராக பொலிஸில் முறைப்பாடுகளை பதிவு செய்தோர்களில் இரு செயற்பாட்டாளர்கள் அவர் எங்கிருந்தாலும் கைது செய்யப்படவேண்டிய போர்க் குற்றவாளி என கூறியுள்ளனர்.
இந்நிலையில் பிரித்தானிய செயற்பாட்டாளரும் இரு மாவீரர்களின் சகோதரனும் மற்றும் முதற் பெண் கடற் கரும்புலி கப்படன் அங்கயற்கண்ணியின் மைத்து னருமான நரேஷ் குமார் பொன்னுத்துரை இதுதொடர்பில் கருத்து தெரிவிக்கையில்,
இலங்கையின் கடந்த சுதந்திர எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தின் போது நானும் ஈடுபட்டிருந்தேன். அதில் என்னை பார்த்தபடி கொலை சமிக்ஞை காண்பித்த குறித்த அதிகாரி தனது கமராவில் வீடியோவும் எடுத்தார். இதனால் நான் மிகவும் அச்சுறுத்தல் அடைந்து அவரை கைது செய்ய வேண்டும் என கூறி பொலிஸில் முறைப்பாடு ஒன்றை பதிவுசெய்தேன்.
விடுதலைப் போராட்டத்தில் எனது குடும்பத்தில் இரு சகோதரர் மாவீரர் ஆகியுள்ளனர். அந்த நிலையில் குறித்த அதிகாரி வீடியோவினை வைத்து என்னையும் இலகுவாக அடையாளம் கண்டுகொள்ளுவர்.
இதனாலேயே அவர் பிரித்தானியாவில் கைது செய்யப்பட வேண்டும் என நான் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகிறோன். அவர் யுத்த குற்றவாளி என்பதற்கான ஆதாரங்கள் இருந்தும் அவர் பிரித்தானியாவை விட்டு வெளியேற இங்குள்ள அதிகாரிகள் அனுமதித்தமை விசனதுக்குரியதே. எனவே அவர் எங்கிருந்தாலும் கைது செய்யப்பட வேண்டும் என அவர் தெரிவித்தர்.
இதேவேளை அதிகாரியின் அச்சுறுத்தலுகுள்ளான மற்றுமொரு செயற்பட்டாளர், முல்லைத்தீவு வைத்தியசாலை தாக்குதலில் படைத்தளபதியாக செயற்பட்ட அப்பாவி பொது மக்களை கொன்றொளித்த போர்க்குற்றவாளியான பிரியங்கா பெர்ணான்டோ உலகின் எப்பகுதியில் இருந்தாலும் கைதுசெய்யப்படவேண்டும் என தெரிவித்தார்.
நாடு திரும்புகிறார் கொலை மிரட்டல் அதிகாரி
கொலை அச்சுறுத்தல் விடுத்த இலங்கை உயர்ஸ்தானிக அதிகாரி பிரியங்கா பெர்ணான்டோ நாடு திரும்பவுள்ளார்.
உலகவாழ் தமிழர் தரப்பிடமிருந்து எழுந்த பெரும் எதிர்ப்புக்களை தொடர்ந்து பணி நீக்கம் பின்னர் பணி அமர்த்தல் என குழப்பநிலைகளின் முடிவில் குறித்த அதிகாரி இலங்கைக்கு திரும்ப அழைக்கப்பட்டுள்ளார்.
இலங்கையின் கடந்த சுதந்திர தினத்தன்று பிரித்தானியாவின் இலங்கை தூதரகத்திற்கு முன்னால் நடைபெற்ற எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தின் போது பிரியங்கா பெர்ணான்டோ தமிழர்களின் கழுத்தை அறுப்பேன் என கொலைமிரட்டல் விடுத்தார். இதனை ஒளிப்பதிவு செய்த முன்னாள் போராளியான சபேஸ்ராஜ் சத்தியமூரத்தி அதனை வெளியிட குறித்த இராணுவ அதிகாரிக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க விரைந்து செயற்பட்ட மனித உரிமைகள் சட்டத்தரணி கீத் குலசேகரம் குறித்த காணொளி தொடர்பில் அனைத்துக்கட்ட நகர்வுகளையும் மேற்கொண்டார்.
இதனால் சர்ச்சைக்குரிய காணொளி சர்வதேச ஊடகங்கள் உட்பட சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவியதினையடுத்து உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் இலங்கை வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சினால் குறித்த அதிகாரி இருநாட்களுக்குள் (6.02.2017)பதவி நீக்கப்பட்டார். எனினும் ஐனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவரை மீண்டும் பணியில் அமர்த்தி பணிநீக்கத்தை தடுத்தார்.
அதேவேளை குறித்த அதிகார தவறு ஒன்றும் செய்யவில்லை என இலங்கை இராணுவத்தரப்பு அதிகாரிகளிடமிருந்தும் தெரிவிக்கப்பட்டது.
இவ்வாறு இதனை மூடிமறைக்க இலங்கை அரசு முற்பட்ட வேளை கடந்த வாராம் பிரியங்கா பெர்ணான்டோவுக்கு எதிராக லண்டனில் பாரிய ஆர்ப்பாட்டம் வெடித்தது. முதல் தடவையாக பிரித்தானியாவின் அனைத்து தமிழ் தரப்பும் ஒன்றிணைந்து பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்றை செய்தனர்.
இந்நிலையிலேயே தமிழர்களின் தொடர்ச்சியான ஒட்டுமொத்த எதிரப்புக்களையடுத்து பிரியங்கா பெர்ணான்டோ நாட்டுக்கு திரும்ப அழைக்கப்ட்டுள்ளார்.
குறித்த அதிகாரி பாதுகாப்பு ஆலோசனைகளை பெறும் பொருட்டு இலங்கைக்கு அழைக்கப்படுகிறார் என இலங்கையின் இராணுவப்பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
அரசை பாதுகாக்கும் எதிர்க்கட்சி இலங்கையில் மட்டுமே : டலஸ்
கூட்டு எதிரணியின் பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்த ராஜபக்ஷவுக்கு கட்டாயம் எதிர்க் கட்சித் தலைவர் பதவியை வழங்க வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகபெரும தெரிவித்துள்ளார்.
உலகத்திலேயே எதிர்க் கட்சி ஒன்று அரசாங்கத்தை பாதுகாப்பது இலங்கையில் தான் நடக்கின்றது. எதிர்க் கட்சி என்ற பேரில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அரசாங்கத்துக்கு ஆதரவு வழங்கி வருகின்றது எனவும் குறிப்பிட்டார்.
கூட்டு எதிரணியின் பாராளுமன்ற உறுப்பினர் சமல் ராஜபக்ஷ தலைமையில், பாராளுமன்ற கட்டிடத் தொகுதியில் 4ஆம் அறையில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே டலஸ் அழகபெரும இதனைத் தெரிவித்தார்.
ஐ.நா.அமைதிப்படையில் இணைக்கப்படவிருந்த இலங்கையின் போர்க்குற்றவாளி நீக்கம்
-தமிழரர் தரப்பின் முறைப்பாடுகளை தொடர்ந்து ஐ.நா. அதிரடி முடிவு
ஐக்கிய நாடுகள் அமைதிகாக்கும் படையின் நடவடிக்கைகளில் இணையவிருந்த இலங்கை இராணு அதிகாரி லெப்டினன் கேர்ணல் ரத்னபுலி வசந்தகுமாரவை ஐக்கியநாடுகள் சபை அதிரடியாக தடுத்து நிறுத்தியுள்ளது.
அமைதிகாக்கும் பணிக்காக லெபனான் செல்லவிருந்த நிலையில் போர் குற்றவாளியான குறித்த அதிகாரிக்கு எதிராக தமிழர் தரப்பினரிடமிருந்தும் கண்காணிப்பு குழுவினரிடமிருந்தும் ஐ.நா.வுக்கு கிடைக்கப்பட்ட ஏராளமான முறைப்பாடுகளின் அடிப்படையிலேயே அவர் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளார்.
இந்நிலையில், குறித்த இராணுவ அதிகாரியின் நிலைப்பாடு குறித்து ஐ.நா.விசாரணைகள் மேற்கொள்ளும் என தெரிவித்துள்ள ஐ.நா. செயலாளர் நாயகத்தின் பேச்சாளர் பர்ஹான் ஹக்கின், அவர் குறித்த மீளாய்வுகள் முடியும் வரை லெபனானுக்கு அனுப்பப்படுவது இடைநிறுத்தப்பட்டுள்ளது எனவும் முழுமையான மீளாய்வின் பின்னரே அவரை அங்கு நிறுத்துவதா என்பது குறித்து முடிவு செய்யப்படும் என தெரிவித்துள்ளார்.
மேலும், இந்த இராணுவ அதிகாரியின் பின்னணி தொடர்பாக நாம் இலங்கையின் அதிகாரிகளுடன் தொடர்புகொண்டுளோம். அவர்கள் எமது விசரணைக்கு முழுமையாக ஒத்துழைக்கிறார்கள்.
மனித உரிமை மீறல்கள் குறித்த அறிக்கைகளை ஐ.நா. தீவிரமாக எடுத்துக்கொள்ளும் எனவும் அவர் தெரிவித்தார்.
இதனிடையே, இராணு அதிகாரி ரத்னபுலி வசந்தகுமாரவுக்கு எதிராக ஐ.நா.வின் அமைதிகாக்கும் பிரிவுக்கு அனுப்பி வைக்கப்பட்ட முறைப்பாட்டு கடிதங்களில் பெரும்பாலானவை, அவர் 2009 ஆம் ஆண்டு புதுக்குடியிருப்பு தாக்குதலில் பிரதான வீரராகவும் மேஜர் ஜெனரல் ஜகத் டயஸ் தலைமையிலான 57 பிரிவின் கீழ் செயல்பட்ட 4 படைப்பிரிவின் செயல்பாட்டு தளபதியாக கிளிநொச்சியில் இரத்தம் தோய்ந்த இராணுவத் தாக்குதலில் அவர் தீவிரமாக பங்குபற்றியவர் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வடக்கில் மாபெரும் அமைதிப்போராட்டம்
காணமல் ஆக்கப்பட்ட தமது உறவுகளின் உண்மை நிலையினை இனியும் காலம்தாழ்த்தாது வெளிப்படுத்துமாறு கோரி கிளிநொச்சியில் இன்று மாபெரும் அமைதிப்போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
காணாமல் போன தமது உறவுகளை மீட்டுத்தருமாறு கோரி கிளிநொச்சி கந்தசுவாமி கோவில் முன்றலில் கடந்த ஆண்டு பெப்ரவரி மாதம் 20 ஆம் திகதி உறவுகளால் ஆரம்பிக்கப்பட்ட சுழற்சி முறை தொடர் எதிர்ப்பு போராட்டம் தீர்வின்றி இன்றுடன் ஒருவருடத்தை எட்டியுள்ளது.
இந்நிலையிலேயே, இதனை முன்னிட்டு இன்று செவ்வாய்க்கிழமை கிளிநொச்சி கந்தசுவாமி கோவில் முன்றலில் பாரிய அமைதிப்போராட்டமொன்றினை காணமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் முன்னெடுத்துள்ளனர்.
காலை 10 மணிக்கு ஆரம்பமாகும் இப்போராட்டத்துக்கு அனைத்து தரப்பினருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, இன்றைய இப்போராட்டத்துக்கு கடைகளை மூடி ஒத்துழைப்பு அளிக்குமாறு ஊடகங்களினுடாக காணமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் முன்னதாகவே கோரிக்கை விடுத்திருந்த போதிலும் தாம் கடைகளை மூடாது இன்றய போராட்த்துடக்கு ஆதரவு தருவதாக கிளிநொச்சி வர்த்தகர்களால் தெரிவிக்கப்படிருந்தமை குறிப்பிடத்தக்கது.

































