SHARE

யாழ். நீதிமன்றில் அதிர்ச்சி வாக்குமூலம்

அடிக்கும் போது சுமனன் இறந்து விட்டார். அவனது மூக்கால் இரத்தம் வந்துகொண்டிருந்தது. அதன் பின்பும் பொலிஸ் உத்தியோகத்தர்களது வெறித்தனம் அடங்காமல் இறந்த பின்பும் போட்டு அடித்தார்கள். எனக்கு ஆணிகளை காலில் இறுக்கி மின்சார கம்பியால் சுட்டார்கள். எனது ஆணுறுப்பை குறட்டால் நசித்தார்கள். பின்னர் இறந்த சுமனனது உடலை சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் நின்ற புதிய ஜீப்பில் ஏற்றிக்கொண்டு போனார்கள் என யாழ்.மேல் நீதிமன்றில் சாட்சியம் அளித்துள்ளனர்.

கடந்த 2011 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 25ம் திகதி சுன்னாக பகுதியை சேர்ந்த சிறிஸ்கந்தராஜா சுமணன் எனும் இளைஞரை பொய் குற்றசாட்டின் கீழ் காவல்துறையினர் கைது செய்து சித்திரவதை செய்து படுகொலை செய்தனர் எனவும், படுகொலை செய்யப்பட்டவரின் உடலை கிளிநொச்சி இரணைமடு குளத்தில் வீசி தற்கொலை செய்து கொண்டார் என காவல்துறையினர் கூறியதாகவும் , படுகொலையானவரின் நண்பர்கள் கடந்த 2015 ஆம் ஆண்டு யூலை மாதம் 25ஆம் திகதி மல்லாகம் நீதிவான் நீதிமன்றில் நீதிவான் ஏ.யூட்சன் முன்னிலையில் சாட்சியம் அளித்து இருந்தனர்.

அதனை அடுத்து சுன்னாகம் காவல் நிலையத்தை சேர்ந்த 8 காவல்துறை உத்தியோகஸ்தர்கள் மீது குற்றம் சுமத்தப்பட்டது. அதில் 7 பேர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டு உள்ளனர். அவர்களுக்கு எதிராக நீதிமன்றங்களில் வழக்கு தொடரப்பட்டு உள்ளன.

அதில் 5 காவல்துறை உத்தியோகஸ்தர்களுக்கு எதிராக கொலை குற்றசாட்டு சுமத்தப்பட்டு கிளிநொச்சி நீதிமன்றிலும் , கொலை குற்றம் சாட்டப்பட்டு உள்ள 5 பேர் உட்பட 8 பேருக்கு எதிராக சித்திரவதை குற்ற சாட்டு சுமத்தப்பட்டு யாழ்.மேல் நீதிமன்றிலும் வழக்கு தொடரப்பட்டு வழக்கு விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

குறித்த வழக்கின் சித்திரவதை தொடர்பான வழக்கு விசாரணை யாழ்.மேல் நீதிமன்றில் நீதிபதி மா.இளஞ்செழியன் முன்னிலையில் செவ்வாய்கிழமை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

அதன் போது சாட்சி பதிவுகள் ஆரம்பமானது. அதில் குறித்த வழக்கின் முதலாவது சாட்சியமான இராசதுரை சுறேஸ் என்பவரது சாட்சி பதியப்பட்டது.

காலில் ஆணி அடித்து மர்ம உறுப்பை குறட்டால் நசித்தார்கள்

இதில் அவர், எம்மை மாவீரர் தினம் கொண்டாடியதற்காக சுன்னாகம் பொலிஸார் கைது செய்தனர். பின்னர் எம்மீது திருட்டு குற்றச்சாட்டு சுமத்தினர்.

எம்மையும் எம்முடன் சேர்த்து படுகொலை செய்யப்பட்ட சுமனன் என்பவரையும் ஒரே அறையில் அடைத்து வைத்தனர். அவ்வேளை சுமணன் என்பவரை முழங்காலில் இருத்தி கால்களுக்குள் கைகளை விட்டு கட்டி இரண்டு மேசைகளுக்கு இடையில் கட்டித் தொங்கவிட்டு அடித்தார்கள்.

அதன்போது அவர் தாம் மருத்து பாவிப்பவர் எனவும் தம்மை அடிக்க வேண்டாம் என கூறினார். ஆனால் அதனை கருத்திலெடுக்காத பொலிஸார் தொடர்ந்து அவரை போட்டு அடித்தார்கள். இவ்வாறு (அவர் கூறும்போது குறித்த கொலை செய்யப்பட்ட நபர் கைகள் கால்கள் கட்டப்பட்ட நிலையில் எப்படி இருந்தார் என்பதை சாட்சி நீதிபதிக்கு தனது உடலால் செய்து காண்பித்திருந்தார்.)

இவ்வாறு அடிக்கும் போது சுமனன் இறந்து விட்டார். அவனது மூக்கால் இரத்தம் வந்துகொண்டிருந்தது. அதன் பின்பும் பொலிஸ் உத்தியோகத்தர்களது வெறித்தனம் அடங்காமல் இறந்த பின்பும் போட்டு அடித்தார்கள். எனக்கு ஆணிகளை காலில் இறுக்கி மின்சார கம்பியால் சுட்டார்கள். எனது ஆணுறுப்பை குறட்டால் நசித்தார்கள். பின்னர் இறந்த சுமனனது உடலை சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் நின்ற புதிய ஜீப்பில் ஏற்றிக்கொண்டு போனார்கள்.

இதன்போது உமக்கும் சுமனன் என்பவருக்கும் அடித்த சித்திரவதை செய்த பொலிஸ் உத்தியோகத்தர்கள் யார் யார் என்பதை அடையாளம் காட்ட முடியுமா? என பிரதி மன்றாதிபதி வினாவியபோது சாட்சி எதிரி கூண்டில் நின்று குறித்த பொலிஸ் உத்தியோகத்தர்களை முறையே அவர்கள் என்ன என்ன செய்தார்கள் என்று கூறியிருந்தார். அத்துடன் தற்போது இதில் ஒரு பொலிஸ் உத்தியோகத்தர் நீதிமன்றில் இல்லை எனவும் கூறியிருந்தார்.

அவற்றை தொடர்ந்து அவரது சாட்சியங்களும் எதிரி தரப்பு சட்டத்தரணிகளால் குறுக்கு விசாரனை செய்யப்பட்டது.

அடுத்து, இரண்டாவது சாட்சியமான துரைராசா லோகேஸ்வரனது சாட்சியம் பதிவு செய்யபட்டது.

தனி நாடு வேணுமா ? என கேட்டு தாக்கினார்கள்

தாம் கடந்த 2011.11.21ஆம் திகதி தமது புன்னாலைகட்டுவன் சித்தி விநாயகர பாடசாலையில் கற்கும் தாய் தந்தையை இழந்த, போரால் பாதிக்கப்பட்ட சிறுவர்களுக்கு புத்தகப்பைகளை வழங்கினோம். இதன்போது அங்கு வந்த ஊரேழு இராணுவ முகாமை சேர்ந்த பிரசாத் என்பவர் நீங்கள் மாவீரர் நிகழ்வா கொண்டாடுகிறீர்கள் என கேட்டனர். அதற்கு நாம் இல்லையென பதிளித்தோம்.

இதன்பின்பு அன்றைய தினம் இரவு எனது வீட்டிற்கு வந்த சுன்னாகம் பொலிஸ் நிலையத்தை சேர்ந்த சிந்திக்கபண்டார, மயூரன், பிரசாந் ஆகியோர் என்னை திருட்டு குற்றச்சாட்டு ஒன்றில் கைது செய்து சென்றனர்.

அதன் பின்னர் 24.11.2011 அன்று சுமனன் என்பவரை சிந்திக்க , மயூரன் ஆகிய பொலிஸ் உத்தியோகத்தர்கள் கைது செய்து காலை 9க்கும் 10க்கும் இடைப்பட நேரத்தில் கொண்டு வந்திருந்தனர்.

அதன்போது சுமனது நெற்றிப் பகுதியில் இரத்தம் வடிந்துகொண்டிருந்தது. அத்துடன் தனிநாடு வேண்டுமா என கேட்டு கேட்டு எம்மை அடித்து. எமக்கு மின்சார கம்பியினால் சுடுவைத்தனர். என சாட்சியம் அளித்தார்.

இதனை தொடர்ந்து அரச தரப்பு விசாரனையில் உங்களையும் சுமனனையும் கைது செய்த பொலிஸ் உத்தியோகத்தர்களை அடையாளம் காட்ட முடியுமா என வினவியபோது குறித்த சாட்சி அவர்களை எதிரி கூண்டில் நின்றவாறு சுட்டு விரலால் அடையாளம் காட்டி அவர்களில் இருவரது பெயர்களையும் சரியாக குறிப்பிட்டிருந்தார்.

இதன்பின்பு அவரது சாட்சியமானது எதிரி தரப்பு சட்டத்தரணிகளால் குறுக்குவிசாரனை செய்யப்பட்டது. இதன்போது அவரது மன்றில் வழங்கிய சாட்சியில் இரு விடயங்கள் பொலிஸ் தரப்பினது வாக்குமூலப் பதிவில் வேறுபட்டிருந்த நிலையில் அது மன்றால் அடையாளமிடப்பட்டிருந்தது. அதனை தொடர்ந்து அவர் சாட்சிப் பதிவில் இருந்து நீக்கப்பட்டிருந்தார்.

6ஆம் மற்றும் 8ஆம் சாட்சியும் பதிவு.

இதன் பின்னர் 6ஆம் மற்றும் 8ஆம் சாட்சிகளும் மன்றால் பதிவு செய்யப்பட்டது.

புதிய சாட்சியங்களை அணைக்க அனுமதி.

அதனை தொடர்ந்து இவ் வழக்கை நெறிப்படுத்தும் பிரதி மன்றாதிபதி குமார்ரட்ணம் இவ் வழக்கின் குற்றப் பத்திரிகையில் 30ஆம் 31ஆம் 32ஆம் சாட்சிகளாக மூன்று பொலிஸ் உத்தியோகத்தர்களை அணைப்பதற்கு மன்றின் அனுமதியை கோரியிருந்தார். அத்துடன் இவ் வழக்கின் சாட்சியில் இருந்து 2ஆம் 4ஆம் 5ஆம் சாட்சிகளை நீக்குவதற்கான அனுமதியையும் கோரியிருந்தார்.

இவ்விரு விண்ணப்பங்களும் மன்றானது அனுமதியளித்துடன் இவ் வழக்கின் மீதி சாட்சிப்பதிவுகளை பதிவு செய்வதற்காக எதிர்வரும் மாதம் 14ஆம் திகதி வரை ஒத்திவைத்ததுடன் அதுவரை குறித்த பொலிஸ் உத்தியோகத்தர்களை விளக்கமறியலில் வைக்கவும் யாழ்.மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன் உத்தரவிட்டிருந்தார்.

குறித்த வழக்கு விசாரணையில் சட்டமா அதிபர் சார்பில் அரச சட்டத்தரணி நாகரட்ணம நிஷாந்துடன் பிரதி மன்றாதிபதி குமார் ரட்ணம் முன்னிலையாகியிருந்தார்.

எதிரிகள் சார்பில் முன்னிலையாகியிருந்த சட்டத்தரணிகள் குறித்த வழக்கில் பாதிக்கப்பட்ட நபர் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் பொலிஸ் நிலையத்தில் முறையிடவோ அல்லது அவராலோ இவ் வழக்கு தொடுக்கப்படாதுடன் அவர் தற்போது இல்லையெனவும் குறிப்பிட்டிருந்தனர்.

அத்துடன் பாதிக்கப்பட்டதாக குறிப்பிடப்படுகின்ற சாட்சி இருந்தாலேயே அவரை எதிரி தரப்பு சட்டத்தரணிகள் குறுக்கு விசாரனை செய்கின்ற போதே குற்றச் சம்பவத்தின் உண்மை தன்மை மன்றுக்கு தெரியவரும். எனவே இவ் வழக்கில் அவ்வாறானதொரு சந்தர்ப்பம் இல்லையென குறிப்பிட்டிருந்தனர்.

உயிரிழந்தவரின் உடலில் 20க்கும் மேற்பட்ட காயங்கள் காணப்பட்டன.

இதனை தொடர்ந்து இவ் வழக்கினை நெறிப்படுத்தும் அரச சட்டத்தரணியும் பிரதி மன்றாதிபதியுமான குமார் நாகரட்ணம், குறித்த சித்திரவதைக்குள்ளாகி உயிரிழந்த நபரது மரண விசாரனையில் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது குறித்த நபரது உடலில் 20க்கு மேற்பட்ட காயங்கள் உள்ளதாகவும், அவர் சித்திரவதை செய்யப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Print Friendly, PDF & Email