Home Blog Page 310

நுங்கு விற்றவரை சந்தேகத்தில் கைதுசெய்த பொலிஸார்

image_pdfPRINT
ஹெரோயின் போதைப் பொருளை உடமையில் வைத்திருந்த குற்றச்சாட்டில் நுங்கு விற்ற குடும்பத்தலைவர் ஒருவர் யாழ்ப்பாணம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டார்.
நல்லூர் பகுதியில் வைத்தே அவர் கைது செய்யப்பட்டார்.
சந்தேகநபர், யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் நேற்று முன்தினம் முற்படுத்தப்பட்டார்.
அவரிடமிருந்து ஹெரோயின் போதைப் பொருள் மீட்டதாக பொலிஸார் மன்றில் அறிக்கை தாக்கல் செய்தனர்.
“ஐயா நான் அன்றாடம் நுங்கு விற்றும் கூலி வேலை செய்தும் குடும்பத்தைப் பார்க்கிறவன். எனது நுங்கு விற்கும் இடத்துக்கு அருகே நின்ற முச்சக்கர வண்டிக்கு கீழே இருந்து சுருட்டு ஒன்றை பொலிஸார் எடுத்தனர். எனினும் அதனை ஹெரோயின் என்று சொல்லி என்னைக் கைது செய்துள்ளனர். எனக்கும் இதற்கும் சம்பந்தமில்லை” என்று சந்தேகநபர் மன்றில் தெரிவித்தார்.
வழக்கை ஆராய்ந்த பதில் நீதிவான் வி.ரி.சிவலிங்கம், சந்தேநபரை வரும் மே முதலாம் திகதிவரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டார்.

யாழ்.பல்கலையின் அதிகாரசபை வெளிவாரி உறுப்பினர்களின் பெயர் வெளியீடு

image_pdfPRINT
யாழ். பல்கலைக்கழகத்தின் ஆட்சி அதிகார சபையாகிய பேரவைக்குத் தெரிவு செய்யப்பட்டுள்ள வெளிவாரி உறுப்பினர்களின் பெயர் விபரங்களை பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு இன்று மாலை வெளியிட்டுள்ளது.
இதன் பிரகாரம் தெரிவு செய்யப்பட்ட 15 வெளிவாரி உறுப்பினர்களுடன் உள்வாரியாக பதவி வழி வரும் 14 உறுப்பினர்கள் அடங்கலாக 29 உறுப்பினர்களைக் கொண்ட புதிய பேரவையின் ஆட்சிக்காலம் தொடர்ந்து வரும் மூன்று ஆண்டுகளாகும்.
புதிய பேரவையின் முதலாவது கூட்டம் எதிர்வரும் ஏப்ரல் 29ஆம் திகதி இடம்பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பேரவைக்குத் தெரிவு செய்யப்பட்டுள்ள வெளிவாரி உறுப்பினர்களின் பெயர் விபரங்கள் வருமாறு :
1. திரு. மனோசேகரம்
2. ஏந்திரி. டி.கே.பி.யூ. குணதிலக
3. வைத்தியக்கலாநிதி பூ.லக்ஸ்மன்
4. பேராசிரியர் எஸ். சிவசேகரம்
5. பேராசிரியர் எச். எஸ். ஹிஸ்புல்லா
6. ஜனாதிபதி சட்டத்தரணி சாந்தா அபிமன்னசிங்கம்
7. பேராசிரியர் சிவயோகநாதன்
8. பேராசிரியர் ஜெயதேவ உயங்கொட
9. அதி. வண. ஜெரோ செல்வநாயகம்
10. திரு. எஸ். விஸ்னுகாந்தன்
11. வைத்தியக்கலாநிதி த. சத்தியமூர்த்தி
12. கலாநிதி ஆறு. திருமுருகன்
13. திரு. வி. கனகசபாபதி
14. திரு. நா. வேதநாயகன்
15. திரு. பி. ஈஸ்வரதாசன்.

கல்வி செலவை ஏற்றுள்ள யாழின் இலத்திரனியல் ஊடகம்

image_pdfPRINT
புத்தாண்டுக்கு அப்பா வருவார் என காத்திருந்து ஏமாற்றம் அடைதுள்ள இரு பிள்ளைகளின் கல்வி செலவை ஏற்றுக்கொள்ள யாழில் உள்ள இலத்திரனியல் ஊடக  நிறுவனம் முன்வந்துள்ளது.
வடமாகாண ஆளுநர் றெஜினோல்குரேயின் வேண்டுகோளின் பேரில் குறித்த இலத்திரனியல் ஊடக  நிறுவனம் இவர்களின் கல்விச் செலவிற்காக மாதந்தோறும் 10 ஆயிரம் ரூபாவினை வழங்க முன்வந்துள்ளது.
அரசியல் கைதியாக இருந்து தற்போது ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு உள்ள ஆனந்தசுதாகரனின் பிள்ளைகள் இருவரும் தமது தந்தைக்கு பொது மன்னிப்பு வழங்கி விடுதலை செய்யுமாறு ஜனாதிபதியை நேரில் சந்தித்து கோரிக்கை விடுத்திருந்தனர்.
அதன் போது ஜனாதிபதி புத்தாண்டுக்கு முன்னர் அதற்கு உரிய நடவடிக்கைகளை எடுப்பேன் என பிள்ளைகளுக்கு நம்பிக்கை வழங்கி இருந்தார். அதனால் புத்தாண்டுக்கு அப்பா வருவார் என எதிர்பார்ப்புடன் பிள்ளைகள் காத்திருந்தன. ஆனால் ஆனந்த சுதாகரன் இதுவரையில் விடுதலை செய்யப்படவில்லை

‘இனப்படுகொலை அரசின் தலைவரே வெளியேறு’ லண்டனில் மைத்திரிக்கு எதிராக போர்க்கொடி

image_pdfPRINT
பொதுநலவாய அரச தலைவர்கள் மாநாட்டில் பங்குற்ற பிரித்தானிய வந்துள்ள இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு எதிராக லண்டனில் இன்று மாபெரும் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்று நடைபெற்றது.
பொதுநலவாய அமைச்சுக்கள் அலுவலகத்துக்கு முன்னாள் பெரும் எண்ணிக்கையில் ஒன்றுதிரண்ட பிரித்தானியா வாழ் புலம்பெயர் தமிழர்கள் மற்றும் புலம்பெயர் தமிழ் அமைப்புக்கள் ‘இனப்படுகொலை அரசின் தலைவரே! பிரித்தானியாவை விட்டு வெளியேறு’ என்றவாறான கோசங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
 
தமிழருக்கு எதிராக சிங்கள பேரினவாதத்தின் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ள இனப்படுகொலைக்கு எதிராகவும் தற்போதைய ஆட்சியிலும் அவை தொடர்வதை கண்டித்தும் ஜனாதிபதிக்கு எதிராக இவ் எதிர்ப்பு போராட்டம் நடைபெறது.
பொதுவான எதிர்காலத்தை நோக்கி’ என்ற தொனிப்பொருளிலான பொதுநலவாய அரசதலைவர்களின் மாநாடு லண்டனில் கடந்த 16 ஆம் திகதி ஆரம்பமானது. ஏதிர்வரும் 21 ஆம் திகதிவரை நடைபெறவுள்ள இந்த மாநாட்டில் சுபீட்சம் பாதுகாப்பு நியாயம் பேண்தகுதன்மை ஆகிய அம்சங்களின் கீழ் பொதுநலவாய நாடுகளின் நோக்கங்களை அடைந்துகொள்வது தொடர்பாக விசேட கவனம் செலுத்தப்படவுள்ளது.

யாழ்.பல்கலையில் அன்னை பூபதியின் நினைவு உணர்வு பூர்வமாக அனுஷ்டிப்பு

image_pdfPRINT
யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்களால் அன்னை பூபதியின் நினைவேந்தல் நிகழ்வு பல்கலைக்கழக வளாகத்தில் இன்று பிற்பகல் அனுஸ்டிக்கப்பட்டதுடன், அன்னை பூபதியின் உருவப் படத்துக்கு மாணவர்கள், ஊழியர்கள் மற்றும் பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் எனப் பலரும் உணர்வுபூர்வமாக அஞ்சலி செலுத்தினர்.
இந்தியப் படை உடனடியாகப் போர் நிறுத்தத்தை மேற்கொண்டு தமிழீழ விடுதலைப் புலிகளுடன் அமைதிப் பேச்சுக்களின் ஈடுபட வேண்டும்  எனக் கோரி மட்டக்களப்பு அன்னையர் முன்னணியின் சார்பில், கடந்த 1988ஆம் ஆண்டு மார்ச் மாதம் 19ஆம் திகதி சனிக்கிழமை காலை 10-45மணிக்கு மட்டக்களப்பு அமிர்தகழி ஸ்ரீ மாமாங்கேஸ்வரர் ஆலயத்தின் முன்றலில் அன்னை பூபதி தனது சாகும் வரையிலான உணவு ஒறுப்புப் போராட்டத்தை ஆரம்பித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

பதில் முதலமைச்சருக்கும் ஆளுநருக்கும் இடையே முறுகல்; செயலாளர்கள் மாற்றம் ஒத்திவைப்பு

image_pdfPRINT

வடக்கு மாகாண அமைச்சுக்களின் செயலாளர்களை நியமிப்பதில் மாகாண பதில் முதமைச்சர் கலாநிதி க. சர்வேஸ்வரனுக்கும் மாகாண ஆளுநர் றெஜினோல்ட் குரேவுக்கும் இடையே இன்று காலை முரண்பாடு ஏற்பட்டது.

மாகாண கல்வி அமைச்சர் செயலாளராக தெய்வேந்திரனை நியமிக்க வலியுறுத்தி மாகாண கல்வி அமைச்சரும் பதில் முதலமைச்சருமான சர்வேஸ்வரன் பிடிவாதமாக உள்ளார்.

இதனால் இன்று இடம்பெறவிருந்த செயலாளர்கள் மாற்றம் ஆளுநரால் ஒத்திவைக்கப்பட்டது.
வடக்கு மாகாண செயலாளர்கள் நியமனம் தொடர்பில் மாகாண ஆளுநரும் பதில் முதலமைச்சரும் இன்று காலை சந்தித்தனர்.
இதன்போது, மாகாண கல்வி அமைச்சின் செயலாளராக பொதுச் சேவைகள் ஆணைக்குழுவின் செயலாளர் மோகனதாஸ் மாற்றப்படுவதுடன், பொதுச் சேவைகள் ஆணைக்குழுவின் செயலாளராக பயிற்சி முகாமைத்துவத்துக்கு பொறுப்பாகவிருக்கும் சிவபாதசுந்தரம், மாகாண பொதுச் சேவைகள் ஆணைக்குழுவின் செயலாளராகவும்  பயிற்சி முகாமைத்துவத்துக்கு பொறுப்பாக  தெய்வேந்திரன் நியமிக்கப்படுவார் என்று ஆளுநரால் பதில் முதலமைச்சருக்குத் தெரிவிக்கப்பட்டது.
இந்த நியமனத்தை ஏற்க மறுத்த பதில் முதலமைச்சர், தம்மால் பரிந்துரைக்கப்படுபவர்களை மட்டுமே செயலாளர்களாக நியமிக்க முடியும் என முரண்பட்டார்.
அத்துடன், இந்தியாவில் இருக்கும் முதலமைச்சருடன் தொடர்பு கொண்டு இந்த நியமனங்கள் தொடர்பில் சர்வேஸ்வரன் பேசினார்.
கல்வி அமைச்சின் செயலாளராக தெய்வேந்திரன் நியமிக்கப்படாவிடின், அனைத்து நியமனங்களையும் உடன் நிறுத்துமாறு முதலமைச்சர் தொலைபேசியிலேயே கேட்டுக்கொண்டார்.
அதனையடுத்து ஆளுநரால் இன்று வழங்கப்படவிருந்த செயலாளர் மாற்றலை நிறுத்திவைக்குமாறு பதில் முதலமைச்சர் கேட்டுக்கொண்டார்.  அதனால் மாற்றல் கடிதங்களை வழங்குவதை ஆளுநர் பிற்போட்டார்.

விடுவிக்கப்பட்ட பிரதேசத்தில் மோட்டார் குண்டுகள் மீட்பு

image_pdfPRINT

உயர் பாதுகாப்பு வலயமாக இருந்து அண்மையில் விடுவிக்கப்பட்ட கட்டுவான் சந்திக்கு அருகில் உள்ள வீட்டு கிணற்றடியில் இருந்து மோட்டார் குண்டுகள் மீட்கப்பட்டு உள்ளன. 

கடந்த 28 வருடகாலமாக இராணுவத்தினரின் உயர் பாதுகாப்பு வலயமாக இருந்த வலி.வடக்கில் 683 ஏக்கர் நிலப்பரப்பு கடந்த 13ஆம் திகதி இராணுவத்தினரால் காணி உரிமையாளர்களிடம் மீள கையளிக்கப்பட்டது.
அவ்வாறு கையளிக்கப்பட்ட கட்டுவான் சந்திக்கு அருகில் உள்ள வீடொன்றின் கிணற்றடியில் உள்ள தண்ணீர் தொட்டிக்குள் மோட்டார் குண்டுகள் காணப்பட்டன. அவை தொடர்பில் அருகில் இருந்த இராணுவ முகாமுக்கு வீட்டின் உரிமையாளர் தெரிவித்ததை அடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற இராணுவத்தினர் அவற்றை பார்வையிட்டனர்.
பின்னர் மோட்டார் குண்டுகள் தொடர்பில் வெடிபொருட்கள் அகற்றும் பிரிவினருக்கு அறிவித்துள்ளனர்.
 

பிரித்தானியா வந்துள்ள இலங்கை ஜனாதிபதிக்கு எதிராக நாளை மாபெரும் ஆர்ப்பாட்டம்

image_pdfPRINT

பொதுநலவாய அரச தலைவர்கள் மாநாட்டில் பங்குற்ற பிரித்தானிய வந்துள்ள இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு எதிராக நாளை லண்டனில் மாபெரும் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்று நடைபெறவுள்ளது.

தமிழருக்கு எதிராக சிங்கள பேரினவாதத்தின் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ள இனப்படுகொலைக்கு எதிராகவும் தற்போதைய ஆட்சியிலும் அவை தொடர்வதை கண்டித்தும் ஜனாதிபதிக்கு எதிராக இவ் எதிர்ப்பு போராட்டம் நடைபெறவுள்ளது.

பிரித்தானிய தமிழர் ஒருங்கிணைப்பு குழுவின் ஏற்பாட்டில் Marlborough House, Pall Mall,London எனும் இடத்தில் மதியம் 13.00 மணிக்கு ஆரம்பமாகும் மேற்படி ஆர்ப்பாட்டத்தில் பெரும் திரளாய் ஒன்று திரண்டு எதிர்ப்பை வெளிப்படுத்த பிரித்தானியா வாழ் அனைத்து தமிழ்த்தரப்பினருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

‘பொதுவான எதிர்காலத்தை நோக்கி’ என்ற தொனிப்பொருளிலான பொதுநலவாய அரசதலைவர்களின் மாநாடு லண்டனில் நேற்று முன்தினம் (16) ஆரம்பமானது. ஏதிர்வரும் 21 ஆம் திகதிவரை நடைபெறவுள்ள இந்த மாநாட்டில் சுபீட்சம் பாதுகாப்பு நியாயம் பேண்தகுதன்மை ஆகிய அம்சங்களின் கீழ் பொதுநலவாய நாடுகளின் நோக்கங்களை அடைந்துகொள்வது தொடர்பாக விசேட கவனம் செலுத்தப்படவுள்ளது.

இந்த உத்தியோக பூர்வ விஜயத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பிரித்தானிய பிரதமர் தெரேசாமேயை சந்திக்கவுள்ளதுடன் மாநாட்டில் கலந்துகொள்ளும் அரச தலைவர்களையும் சந்திக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

தமிழர் கடல் பிரதேசத்தை ஆக்கிரமித்துள்ள தென்னிலங்கை மீனவர்

image_pdfPRINT
முல்லைத்தீவு கரையோர பிரதேசங்களில் தமிழர்களுக்கு சொந்தமாக  உள்ள பல கரைவலைபாடுகளில் இப்போது தென்னிலங்கை மீனவர்கள் தொழில் செய்துவருகிறார்கள்.
தென்னிலங்கையிலிருந்து வந்து கட்டைக்காடு முதல் நாயாறு, கொக்கிளாய், முகத்துவாரம் வரையிலான கரையோர பகுதிகளில் வாடிகள் அமைந்து, அங்கு தங்கியிருந்து தென்னிலங்கை மீனவர்கள் கரைவலை தொழில் செய்கின்றனர். அதுவும் இயந்திர வலுவை (உழவு இயந்திரம்) பயன்படுத்தி தொழில் செய்கின்றார்கள்.
அது மட்டுமின்றி தடை செய்யப்பட்ட தொழில் முறைமையான  சுருக்கு வலைகள் பாவித்தும் , வெளிச்சம் பாய்ச்சியும் தொழில் செய்வதுடன் கடலட்டைகளையும் பிடிக்கின்றனர்.
இதனால் தமிழ் மீனவர்கள் பாதிக்கப்படுவதாகவும் தென்னிலங்கையிலிருந்து வந்து இராணுவத்தினரின் பாதுகாப்புடன் சட்டவிரோதமான முறைமைகளில் மீன் பிடியில் ஈடுபடுவதாகவும் வடமாகாண சபையில் பல தடவைகள் பிரஸ்தாபிக்கப்பட்டுள்ளன.
அது தொடர்பில் கடந்த 10ஆம் திகதி வடமாகாணசபை உறுப்பினர்கள்,  தென்னிலங்கை மீனவர்கள் தமிழர்களுக்கு சொந்தமான பகுதிகளில் வாடிகள் அமைத்து இயந்திர வலுவை பயன்படுத்தி கரை வலை தொழில் செய்வதனை நேரில் சென்று வேடிக்கை பார்த்து திரும்பினர்.
இதனிடையே நேற்றைய தினம் வடமராட்சி ஆழியவளை கடற்பரப்பில் கரைவலை தொழில் செய்த தமிழ் மீனவர் ஒருவரின் வலையில் 20 ஆயிரம் கிலோ பாரை மீன்கள் அகபட்டு உள்ளன. அவற்றின் சந்தை பெறுமதி ஒன்றரை கோடி ரூபாய் பெருமதியாகும்.
இந்நிலையில் வடக்கு கடல்களை தென்னிலங்கை மீனவர்கள் ஆக்கிரமித்துவருவதால் இவ்வாறன பெரும் தொகை வருமானங்கள் தமிழரிடமிருந்து பறிபோகின்றான. தமிழ் மீனவர்களின் வாய்ப்புக்களை அவர்கள்  கொள்ளையடித்து செல்கிறார்கள்.
எனவே இதுதொடர்பில் சம்பந்தப்பட்ட அமைச்சுகள் மற்றும் தமிழ் தலைமைகள் உரிய கவனம் கொண்டு தமிழ் மீனவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த  நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென தமிழ் மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
படம் :- முல்லைத்தீவு கொக்கிளாய் பகுதியில் உழவு இயந்திரம் பயன்படுத்தி கரை வலை தொழில் செய்யும் தென்னிலங்கை மீனவர்கள். (மயூர பிரியன்) 

அள்ளிக்கொடுத்த கடல் அன்னை; ஒருநாளில் இலட்சாதிபதியான யாழ்.மீனவன்

image_pdfPRINT

யாழ்.வடமராட்சி கடற்பரப்பில் கரை வலை தொழில் செய்த மீனவர் ஒருவருக்கு இன்றைய தினம் 20 ஆயிரம் கிலோ மீன்கள் அகப்பட்டு உள்ளன. 

வடமராட்சி கிழக்கு ஆழியவளை கடற்பரப்பில் கரைவலை தொழில் செய்யும் மீனவருக்கே அவ்வாறு மீன்கள் அகப்பட்டன.
குறித்த மீன்கள் பாரை இனத்தை சேர்த்தவைகள் எனவும் அவற்றின் இன்றைய சந்தை பெறுமதி சுமார் ஒரு கோடியே 50இலட்ச ரூபாய்  என தெரிவிக்கப்படுகின்றது.
அதேவேளை இன்றைய தினமே குறித்த மீனவரிடம் இருந்து 30 இலட்சம் ரூபாய்க்கு மீன்கள் கொள்வனவு செய்யப்பட்டு விட்டன என்பது குறிப்பிடத்தக்கது.

கனடாவை அதிரவைத்துள்ள மர்ம கொலைகளில் ஈழத்தமிழனும் பலி; 3 வருடங்களின் பின் வெளிச்சம்

image_pdfPRINT
சிங்களத்தின் இனஅழிப்பிலிருந்து தப்பி கொலைவெறியனின் கையில் அகப்பட்டு கனடாவில் கொலையுண்ட ஈழத்தமிழனின் பேரவலம்
கனடா ரொரன்ரோவை உலுக்கிக் கொண்டிருக்கும் மனிதக் கொலையாலியின் மர்ம முடிச்சுக்கள் ஒவ்வொன்றாக அவிழ்க்கப்பட அவனது கொலை வெறிக்கு பலியான 8வது நபராக மேலும் ஒரு ஈழத்தமிழர் அடையாளம் காணப்பட்டுள்ளார்.
யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த 37 வயது நிரம்பிய கிருஸ்ணகுமார் கனகரத்தினமே கொலையுண்ட 8வது நபராக அடையாளம் காணப்பட்டுள்ளார். இதற்கு முன்னர் கொலையுண்டவர்களில் ஒருவராக 40 வயது நிரம்பிய ஸ்கந்தா நவரட்ணம் அடையாளம் காணப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
கடந்த ஆண்டின் பிற்பகுதியில் 66 வயது நிரம்பிய புரூஸ் மக்காத்தர் என்பவர் கொலைச் சந்தேகநபராக கைது செய்யப்பட்டிருந்தார். நிலங்களை ஒருங்கமைத்து அழகுபடுத்தும் தொழிiலை செய்து வந்த இவரின் தொழில் கூடங்களை சோதனையிட்ட பொலிசாருக்கு அதிர்ச்சி காத்திருந்தது.
பூங்கன்றுகளை நடுவதற்காக இவர் தயாரித்து வைத்திருந்த சாவடிகளுக்குள் கொலைசெய்து துண்டாடப்பட்டு புதைத்து வைக்கப்பட்டிருந்தவர்களின் எச்சங்கள் கிடைத்தன. அவற்றை அடையாளம் காணும் பணி தொடங்கியது. ஒவ்வொன்றாக ஏழு பேரை அடையாளம் கண்ட பொலிசாருக்கு சிலரை அடையாளம் காணுவது சிக்கலாகவே இருந்தது.
இந்நிலையில் தான் கொலை செய்தவர்களின் படங்களை மக்காதர் தனது கண்ணியல் சேகரித்து வைத்திருந்ததாக சொல்லப்படுகிறது. அதில் ஒரு படத்தையே பொலீசார் சமீபத்தில் வெளியிட்டனர். அதில் கிடைத்த தரவின் அடிப்படையிலேயே மேற்படி கிருஸ்ணகுமார் அடையாளம் காணப்பட்டுள்ளார்.
பல விடயங்களை உடனடியாக வெளியிட பொலிசார் மறுத்துவிட்டாலும் கிடைக்கப்பட்ட விபரங்களின்படி 2010இல் சன் சீ கப்பல் மூலம் கனடாவை வந்தடைந்த 492 ஈழத்தமிழ் அகதிகளில் ஒருவரே கிருஸ்ணகுமார். இவரது அகதிக் கோரிக்கை நிராகரிக்கப்பட்டுள்ளதாகவும் சொல்லப்படுகிறது. இதனால் மனமுடைந்தே காணப்பட்டுள்ளராம்.
இதிலும் அவலம் என்னவென்றால் இவர் 2015 பிற்பகுதியில் கொலை செய்யப்பட்டுள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது. ஆனால் இவர் காணாமல் போயுள்ளதாக எவரும் பொலிசாருக்கு அறிவித்திருக்கவில்லை. இதனாலேயே இவரை அடையாளம் காண்பதில் இழுபறி நிலை இருந்திருக்கிறது.
இவரது நெருங்கிய உறவினர்கள் யாரும் கனடாவில் இல்லாத நிலையில் இலங்கையில் உள்ள இரத்த உறவுகளிடமிருந்து மரபணுக்கள் பெறப்பட்டே இவரது கொலை உறுதிப்படுத்தப்பட்டிருக்கலாம் எனவும் கருதப்படுகிறது.
கொலை செய்யப்பட்டு இதுவரை அடையாளம் காணப்பட்டுள்ள பலரும் ஓரினச்சேர்கையாளர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் கிருஸ்ணகுமார் அவ்வாறானவராக அடையாளம் காணப்படவில்லை என பொலிசார் தெரிவிக்கின்றனர். அதனால் மக்காதரால் கொலை செய்யப்படவர்களாக கருதப்படுவோர் குறித்த பட்டியல் மேலும் விரிவாக்கம் காணலாம் எனக் கருகப்படுகிறது.
ரொரன்ரோவில் குளிர்காலம் முடிவடைந்ததும் மேலும் 70 இடங்களில் தேடுதல்களை நடாத்த பொலிசார் தயாராகி வருகின்றனர். அத்துடன் 1975 முதல் காணாமல் போயுள்ளோர் பட்டியலையும் தூசு தட்ட ஆரம்பித்துள்ளனர். கனடாவின் பெரு நகரத்திலேயே ஒரு மனிதக் கொலையாளி வெறிகொண்டு தொடர் கொலைகளை செய்துவிட்டு இவ்வளவுகாலம் சுதந்திரமாக வாழ்ந்திருக்கிறார் என்பது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அதேவேளை கிருஸ்ணகுமார் கொலை புலம்பெயர் தமிழிரிடத்திலும் புலம் பெயர் தமிழ் அமைப்புக்கள் இடத்தேயும் பலகேள்விகளை எழுப்பியுள்ளது. புலம்பெயர் வாழ்வில் உள்ள உறவுமுறை சிதைந்துவிட்டதா?

குழந்தையின் கழுத்தில் கத்தி வைத்து 15 பவுண் நகை கொள்ளை-யாழ்.அளவெட்டியில் சம்பவம்

image_pdfPRINT
யாழ்.அளவெட்டி பகுதியில் அத்துமீறி வீட்டுக்குள் உள்நுழைந்த கொள்ளையர்கள் குழந்தையின் கழுத்தில் கத்தி வைத்து 15 பவுண் நகையை கொள்ளையடித்து தப்பி சென்றுள்ளனர்.
அளவெட்டி பகுதியில் நேற்று முன்தினம் இரவு குறித்த கொள்ளை சம்பவம் இடம்பெற்று உள்ளது. இது குறித்து தெரிய வருவதாவது ,
அளவெட்டி மகாத்மா வீதியில் உள்ள வீடொன்றினுள்  நள்ளிரவு 12 மணியளவில் குளியறை யன்னல் கம்பிகளை வளைத்து  மூன்று கொள்ளையர்கள் உட்புகுந்துள்ளனர். மூவரும் தலைக்கவசம் அணிந்து முகத்திற்கு கறுப்பு துணி கட்டி இருந்துள்ளார்கள்.
வீட்டினுள் புகுந்த கொள்ளையர்கள் வீட்டில் இருந்த குழந்தையின் கழுத்தில் கத்தி வைத்து வீட்டில் இருந்தவர்களை மிரட்டி சத்தம் போட கூடாது என கூறி வீட்டினை சல்லடை போட்டு தேடுதல் நடத்தியுள்ளனர்.
தேடுதலின் போது வீட்டில் இருந்த தாலிக்கொடி சங்கிலி மோதிரம் என 15 பவுண் பெறுமதியுடைய நகைகளை கொள்ளையடித்து தப்பி சென்றுள்ளனர்.
கொள்ளையர்கள் தப்பி செல்லும் போது மிளகாய் தூளினை வீடு முழுவதும் விசிறி சென்றுள்ளனர்.
சம்பவம் தொடர்பில் தெல்லிப்பளை பொலிசாருக்கு வீட்டார் அறிவித்ததை அடுத்து , சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றார்கள்.
error: Content is protected !!