Home Blog Page 278

யாழ். கல்வி வலய நடமாடும் சேவை

image_pdfPRINT

எமது மாகாணத்தை கல்வியிலும், இணைபாடவிதான செயற்பாடுகளிலும் இலங்கையில் முதல் நிலைக்கு கொண்டுவருதற்கு ஆசிரியர்கள் அளப்பெரும் சேவையாற்ற வேண்டும். ஆசிரியர்கள் அர்ப்பணிப்புடன் சேவையாற்ற வேண்டுமாக இருந்தால் அவர்களுக்கு இருக்கின்ற நிர்வாக ரீதியான பிரச்சினைகள் தீர்க்கப்பட வேண்டும். அந்த நோக்கத்தின் அடிப்படையிலேயே இந்த நடமாடும் சேவை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. என வடக்கு மாகாண கல்வி பண்பாட்டலுவல்கள் விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சர் கலாநிதி க.சர்வேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

இன்று யாழ் கல்வி வலய பாடசாலை அதிபர்கள்,ஆசிரியர்கள்,கல்வி சாரா ஊழியர்களின் நிர்வாக ரீதியிலான பிரச்சினைகளைத் தீர்க்கும் கல்வி அமைச்சின் நடமாடும் சேவை யாழ் வலயக்கல்வி அலுவலகத்தில் இடம்பெற்றது. இந்த நிகழ்வில் கலந்து கொண்டு உரை நிகழ்த்தும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில்,

நாங்கள் கடந்த 30 ஆண்டுகால போரில் எமது சொத்துக்களை இழந்திருக்கிறோம்,உயிர்களை இழந்திருக்கிறோம். எங்களுடைய மக்களி தொகையில் ஒரு மில்லியனுக்கும் அதிகமான மக்கள் நாட்டை விட்டு வெளியேறியிருக்கிறார்கள்.

15 லட்சத்திற்கும் அதிகமான மக்களை நாங்கள் எமது மாகாணத்தில் இழந்திருக்கின்றோம். இந்த 15 லட்சம் மக்களின் பிள்ளைகள்,பேரப்பிள்ளைகளை நாங்கள் இழந்திருக்கிறோம். ஆகவே இதனால் எங்களுடைய பாடசாலைகளில் இதன் தாக்கம் அதிகளவில் இருக்கிறது. இதனால் எங்களுடைய பாடசாலைகளில் மாணவர் தொகை குறைவாக இருக்கிறது.

ஆகவே குறைந்தளவு மாணவர்கள் எங்களுடைய பாடசாலைகளில் இருந்தாலும் அவர்கள் அனைவரையும் வல்லுனர்களாக்கவேண்டும். அவ்வாறான பங்களிப்பை வழங்க வேண்டியது ஆசிரியரகள். எனவே ஆசிரியர்கள் அனைவரும் அர்ப்பணிப்புடன் செயலாற்ற வேண்டும். அந்த வகையில் ஆசிரியர்கள் அனைவரிகதும் நிர்வாக ரீதியான சுமைகளைக் குறைப்பதே எமது நோக்கம்.

நாங்கள் 30 ஆண்டுகாலம் போர் புரிந்தோம் என்றால் அது எமது இனத்திற்காகத்தான்,நாங்கள் இப்பொழுதும் குரல் கொடுத்துக்கொண்டிருக்கின்றோம் என்றால், போராடிக்கொண்டிருக்கின்றோம் என்றால் அதுவும் எமது இனத்திற்காகத்தான். ஆனால் இன்று எங்களுடைய சனத்தொகை குறைந்திருக்கிறது. எங்களுடைய சமுதாயம் இந்த நாட்டில் நின்மதியாகவும் துணிச்சலுடனும் வாழ வேண்டுமாக இருந்தால் நல்ல மாணவர் சமூகத்தை உருவாக்க வேண்டும் அத்தகைய மாணவர்களை உருவாக்குகின்ற பெரும்பணி ஆசிரியர்களான உங்களையே சேரும் எனவே நீங்கள் அனைவரும் அர்ப்பணிப்புடன் செயலாற்றுங்கள்.

உங்களது அர்ப்பணிபான சேவையை பெறுவதற்காக நாங்கள் உங்களுக்கு இருக்கின்ற நிர்வாக ரீதியான பிரச்சினைகளை களைந்து நீங்கள் அனைவரும் நின்மதியாக பணிபுரிவதற்கு வேண்டிய வேலைகளை நாங்கள் மேற்கொள்வோம் என்றார்.

இன்றைய நடமாடும் சேவையில் வடக்கு மாகாண கல்வி அமைச்சர் கலாநிதி க.சர்வேஸ்வரன்,கல்வி அமைச்சின் செயலாளர் சத்தியசீலன்,மாகாண கல்விப்பணிப்பாளர் உதயகுமார்,கல்வி அமைச்சரின் பிரத்தியேக செயலாளர் அனந்தராஜ்,யாழ் வலய கல்விப்பணிப்பாளர் சுந்தரசிவம் உள்ளிட்ட வடக்கு மாகாண கல்வி அமைச்சின் உத்தியோகத்தர்கள், மாகாண கல்வித்திணைக்கள உத்தியோகத்தர்கள், வலயக்கல்விப்பணிமனையின் உத்தியோகத்தர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர். 190 இற்கும் அதிகமான முறைப்பாடுகள் இன்றைய நடமாடும் சேவைக்கு கிடைக்கப்பெற்றிருந்த நிலையில் 170 இற்கும் அதிகமான முறைப்பாடுகளுக்கு உடனடித்தீர்வுகள் வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

அஸ்மினுக்கு எதிராக அனந்தி முறைப்பாடு

image_pdfPRINT

வடக்கு மாகாண சபை உறுப்பினர் அயூப் அஸ்மினிற்கு எதிராக மாகாண அமைச்சர் அனந்தி சசிதரன் சாவகச்சேரி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.

வட மாகாண பெண் அமைச்சர் ஒருவர் இராணுவத்தை விமர்சித்துக் கொண்டு பாதுகாப்பு அமைச்சிடம் கைத்துப்பாக்கியை வாங்கி வைத்திருப்பதாக கடந்த மாகாண சபை அமர்வின் போது உறுப்பினர் அஸ்மின் தெரிவித்திருந்தார்.

ஆயினும் அஸ்மினுடைய கருத்தை மறுதலித்திருந்த அனந்தி சசிதரன் அறிக்கையொன்றையும் வெளியிட்டிருந்தார்.

அதனைத் தொடர்ந்து சில தினங்களிற்கு முன்னர் தன்மீது அவதூறை ஏற்படுத்தும் வகையில் செயற்பட்ட அஸ்மினுக்கு எதிராக வழக்குத் தொடர போவதாகவும் ஊடகங்களிடம் அனந்தி சசிதரன் தெரிவித்திருந்தார்.

இந் நிலையிலையே  தனக்கும் தனது பிள்ளைகளுக்கும் அச்சுறுத்தல்,  தன்னை ஒரு ஆயுதப் பிரியராக காண்பிப்பது, தென்னிலங்கை மக்களிடையே தனக்கு எதிரான குரோத மனப்பான்மையை மக்களிடையே ஏற்படுத்துவது போன்ற நிலைமைள் இருப்பதால் உறுப்பினர் அஸ்மீன் மன்னிப்புக் கேட்க வேண்டுமென்றும் ஊடகங்களின் முன்னிலையில் உண்மையை வெளிப்படுத்த வேண்டுமென்றும் கோரியே சாவகச்சேரி பொலிஸ் நிலையத்தில் நேற்று முறைப்பாடு செய்துள்ளார்.

இந்த முறைப்பாட்டினையடுத்து சம்பவம் தொடர்பில்  உறுப்பினர் அஸ்மினை சாவகச்சேரி பொலிஸார் இன்றைய தினம் விசாரணைக்காக அழைத்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

கிளிநொச்சி கல்மடு குளத்திலிருந்து ஆணின் சடலம் மீட்ப்பு

image_pdfPRINT

கிளிநொச்சி, கல்மடு குளத்திலிருந்து ஆண்டு ஒருவரின் சடலம் இன்று புதன்கிழமை (18) மீட்கப்பட்டுள்ளது.

சடலமாக மீட்க்கப்பட்டவர் 63 வயதுடைய யாழ்ப்பாணம், கரவெட்டிப் பிரதேசத்தைச் சேர்ந்த சுந்தரம் புலேந்திரன் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

தொழில் நிமிர்த்தம் நேற்று (17) வெளியே சென்றவர் வீடு திருப்பவில்லை என அவரது குடும்பத்தினரால் காவல் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்ட நிலையிலேயே இன்று அவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில் குறித்த சம்பவம் தொடர்பில் தர்மபுரம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இலங்கையுடனான ஆயுத விற்பனைக்கு எதிராக பிரித்தானியாவில் வலுக்கும் எதிர்ப்பு

image_pdfPRINT

இலங்கையுடனான ஆயுத விற்பனையை பிரித்தானியா நிறுத்த வேண்டுமென்று கோரி தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் பிரித்தானியா வாழ் தமிழ் இளையோர், சௌத்தேன்ட் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் ஜேம்ஸ் டட்றியை சந்தித்து பிரித்தானியா அரசுக்கு குறித்த விடயம் தொடர்பில் அழுத்தம் கொடுக்கக்கோரிக்கை விடுத்துள்ளனர்.

தமிழ் தகவல் நடுவத்தின் செயற்பாட்டாளர்களான நோபல் நவீந்திரன் டேவிட் மற்றும் பிரசாத் ராசரத்தினம் ஆகியோரே மேற்படி நாடாளுமன்ற உறுப்பினரை சந்தித்து கோரிக்கையை முன்வைத்துள்ளனர்.

பிரித்தானியாவிடமிருந்து தொடர்ச்சியாக ஆயுதக்கொள்வனவை மேற்கொண்டுவரும் இலங்கை அரசு தமிழ் மக்களுக்கெதிராக இன அழிப்பை இடைவிடாது மேற்கொண்டுவருகின்றது. இவ்வின அழிப்பின் பிரதான காரணியாக பிரித்தானியாவின் ஆயத விற்பனையே பின்னணியில் அமைந்துள்ளது. தவிர, இலங்கை அரசுக்கு எதிராக கொண்டுவரப்படவிருக்கும் போர்க்குற்ற விசாரணையை மழுங்கடிக்கும் ஒரு செயலாகவும்  இவ் ஆயுத விற்பனை அமைந்துள்ளது.

அந்தவகையில், பிரித்தானியா இலங்கைக்கு ஆயுதங்கள் விற்பனை செய்வதை நிறுத்தவும் இதனால் ஈழத்தமிழர்கள் தொடர்ச்சியாக பாதிக்கப்படுவதினை சம்பத்தப்பட்ட அமைச்சுக்கு வலியுறுத்தவும் கோரி தமிழ் தகவல் நடுவத்தின் (TIC) ஏற்பாட்டில் அதன் உறுப்பினர்கள் செயற்பாட்டாளர்கள் இணைந்து சுமார் ஆறுமாத காலத்திற்கு மேலாக  பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர்களை சந்தித்து குறித்த விடயம் தொடர்பில் தெளிபடுத்தி கோரிக்கைகளை முன்வைத்து வருகின்றனர்.

இந்நிலையில், அண்மையில் சௌத்தேன்ட் தொகுதி ஆளுங்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ஜேம்ஸ் டட்றியை சந்தித்த மேற்படி செயற்பாட்டாளர்கள்,

மனித உரிமைகளை மீறும் எந்தவொரு நாட்டிற்கும் தாம் ஆயுதங்களை விற்பனை செய்வதில்லை என ஐக்கிய நாடுகளின் ஆயுத வர்த்தக ஒப்பந்தத்தில் 2013 ல் கைச்சாத்திட்ட பிரித்தானியா அதே ஆண்டு காலப்பகுதியில் இலங்கை அரசுக்கு 62 பில்லியன் பவுன்ட்ஸ் பெறுமதியான ஆயுதங்களை விற்பனை செய்திருந்தது என்பதை எடுத்து கூறினர்.

ஆதேவேளை, ஐ.நாவின் ஆயுத ஒப்பந்தத்தை மீறி இலங்கைக்கு எந்த அடிப்படையில் ஆயுதங்களை விற்பனை செய்கிறது? மற்றும் பிரித்தானியாவிடம் கொள்வனவு செய்யப்படும் ஆயுதங்கள் இலங்கையில் எவ்வாறு பயன்படுத்தப்படுகிறது? என்பது தொடர்பில் யாதேனும் கண்காணிப்புகளை பிரித்தானிய அரசு செய்கிறதா? என கேள்வி எழுப்பியிருந்தனர்.

அந்தவகையில் குறித்த விடயம் தொடர்பில் கவனம் செலுத்த நாடாளுமன்ற உறுப்பினர் ஜேம்ஸ், இவ் விடயம் தொடர்பில் வெளிவிவகார அமைச்சுக்கு  அழுத்தம் கொடுப்பதாக உறுதியளித்ததுடன் பிரித்தானிய பாராளுமன்றத்தில் குறித்த விடயம் தொடர்பில் மிக விரைவில் வரவிருக்கும் விவாதத்தின் போது தாம் ஆதரவு தெரிவிப்பதாகவும் உறுதி அளித்துள்ளார்.

குறித்த சந்த்திப்பின் போது இலங்கை அரசின் போர்க்குற்ற மீறல் மற்றும் இரும்புக்கரம் ஓங்கிய இராணுவமயமாக்கல் குறித்த விபரண நூல் ஒன்றும் நாடாளுமன்ற உறுப்பினரிடம் கையளிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

மனித எலும்புக் கூடுகளுடன் மணல் ஏற்றிச்சென்ற சாரதிகள்; பின்னணியில் வட்டுக்கோட்டை பொலிஸ்?

image_pdfPRINT

சுழிபுரம் – திருவடிநிலையில் உள்ள மயானத்தில் மணல் அகழ்ந்த டிப்பர் மற்றும் ஜே.சி.பி வாகனங்களும் அவற்றின் இரு சாரதிகளும் அப்பிரதேச மக்களால் மடக்கிக் பிடிக்கப்பட்டு வட்டுக்கோட்டைப் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். இன்று செவ்வாய்க்கிழமை மாலை  6.00 மணியளவில் இச்சம்பவம் இடம்பெற்றது.

சடலங்களைப் புதைக்கும் புதைகுழிகள் அமைந்துள்ள இடத்தில் மணல் அகழப்பட்டமையால் எலும்புக் கூடுகள் வெளியே வந்துள்ளன. எலும்புக் கூடுகளின் எச்சங்களுடன் சேர்த்தே மணல் ஏற்றிச் செல்லப்பட்டுள்ளது எனவும் மக்கள் தெரிவித்தனர்.

திருவடிநிலை புனித கடற்கரையோரத்தில் உள்ள இந்து மயானத்திற்கு சமீபமாக சடலங்களைப் புதைக்கும் இடத்தில் நேற்றுக் காலை முதல் இரு டிப்பர்களில் மணல் ஏற்றிச் செல்லப்பட்டுள்ளது. இதை அறிந்த வலி.மேற்கு பிரதேச சபை உறுப்பினர் து.சுஜிந்தன் உடனடியாக வலி.மேற்கு பிரதேச சபைத் தவிசாளர் த.நடனேந்திரனின் கவனத்திற்கு கொண்டுவந்தார். இவ்விடயத்தை பிரதேச செயலாளருக்கு அறிவிக்குமாறு தவிசாளர் கூறினார் என சுஜிந்தன் தெரிவித்தார்.

எனினும், குறித்த டிப்பர் வாகனங்கள் தொடர்ந்தும் மணல் அகழ்ந்து சென்றதை அவதானித்த காட்டுப்புலம் – பாண்டவெட்டை இளைஞர்கள் மாலை 6.00 மணியளவில் உடனடியாக அந்த இடத்திற்குச் சென்று ஒரு டிப்பரையும் ஒரு ஜே.சி.பி வாகனத்தையும் மடக்கிப் பிடித்தனர்.

இது தொடர்பாக அறிந்த வலி.மேற்கு பிரதேச சபை உறுப்பினர்களான ந.பொன்ராசா, செ.கிருஸ்ணராசா ஆகியோர் உடனடியாக சம்பவ இடத்திற்குச் சென்றனர். இந்த விடயம் வலி.மேற்கு பிரதேச சபைத் தவிசாளருக்கு மீண்டும் தெரியப்படுத்தப்பட்டது. அவர் வட்டுக்கோட்டைப் பொலிஸாருக்கு அறிவித்தார். சம்பவ இடத்திற்குச் சென்ற பொலிஸார் சாரதிகள் இருவரையும் கைது செய்தனர். அவர்களையும் வாகனங்களையும் பொலிஸ் நிலையத்திற்குக் கொண்டு சென்றனர்.

இரு சாரதிகளும் நாளை நீதிமன்றில் முற்படுத்தப்படுவர் எனவும் வாகனங்களும் நீதிமன்றில் பாரப்படுத்தப்படும் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.

 கடந்த காலங்களிலும் இவர்கள் இந்த இடத்தில் மணல் அகழ்ந்தனர். அப்போது நாம் பிடித்து வட்டுக்கோட்டைப் பொலிஸாரிடம் ஒப்படைத்தோம். பொலிஸார் அவர்களை நீதிமன்றில் முற்படுத்தவில்லை. டிப்பரையும் சாரதிகளையும் விடுவித்தனர். இந்தத் தடவையும் அவர்கள் உரியவாறு செயற்படுவார்களா என எமக்குச் சந்தேகமாக உள்ளது’ என வாகனங்களை மடக்கிப் பிடித்த இளைஞர்கள் தெரிவித்தனர்.

மினி முகாமைத்தான் இராணுவம் புதிதாக மாற்றுகிறார்களாம்

image_pdfPRINT

-தொல்லியல் திணைக்கள தகவல்கள்

யாழ்ப்பாண கோட்டைக்குள் இருந்த மினி முகாமை தான் இராணுவத்தினர் புதிதாக மாற்றி அமைத்து வருகின்றனர் என தொல்லியல் திணைக்கள தகவல்கள் தெரிவிக்கின்றன.

யாழ்.கோட்டை பகுதியினை இராணுவத்தினர் முகாம் அமைப்பதற்கு தருமாறு கோரிக்கை விடுத்து இருக்கின்றமை உண்மையே. ஆனால் அதற்குள் இராணுவ முகாம் அமைப்பதற்கு இதுவரையில் அனுமதி எதுவும் வழங்கப்படவில்லை.

கோட்டை பகுதி யுத்த காலத்தின் போது இராணுவ வசம் இருந்த போதிலும் யுத்தம் முடிவடைந்த பின்னர் 2010ஆம் ஆண்டு கால பகுதியில் கோட்டையை விட்டு பெருமளவான இராணுவத்தினர் வெளியேறி இருந்தனர்.

இருந்த போதிலும் அதற்குள் மினி முகாம் ஒன்றினை அமைத்து அதனுள் சுமார் பத்து தொடக்கம் பதினைந்து வரையிலான இராணுவத்தினர் கோட்டைப்பகுதிக்குள் நிலை கொண்டுள்ளனர்.

இந்நிலையில் தற்போது இராணுவத்தினர் கோட்டைக்குள் பாரிய இராணுவ முகாம் அமைப்பதற்கு தொல்லியல் திணைக்களத்திடம் அனுமதி கோரியுள்ளனர்.

அது தொடர்பில் கேட்ட போதே தொல்லியல் திணைக்கள அதிகாரி அவ்வாறு கூறினார்.

மேலும் தெரிவிக்கையில் , கோட்டைக்குள் பாரிய இராணுவ முகாம் அமைப்பதற்காக இராணுவத்தினர் அனுமதி கோரி இருந்தனர். அதற்கான எந்தவிதமான அனுமதியும் வழங்கப்படவில்லை.

தற்போது இராணுவத்தினர் முகாம் அமைப்பதாக கூறப்படும் செய்தி , இராணுவத்தினர் தாம் இருந்த மினி முகாமை மாற்றி வேறு இடத்தில் அமைக்கின்றனர்.

கோட்டைக்குள் இராணுவத்தினர் மினி முகாம் அமைத்திருந்த கட்டடத்தை கையளிக்க கோரி இருந்தோம். அதானால் அந்த கட்டடத்தை எம்மிடம் கையளித்து விட்டு அருகில் தற்காலிக கட்டடங்களை அமைக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டு உள்ளனர்.

ஏற்கனவே இராணுவ தரப்பினருக்கு சொல்லப்பட்டு உள்ளது. மிக குறைந்த அளவிலான இராணுவத்தினர் தங்கும் மினி முகாம் ஒன்றே கோட்டைக்குள் இருக்கலாம் என அதனால் தற்போது அமைக்கப்பட்டு வரும் இராணுவ முகாம் ஒரு மினி முகாமே என தெரிவித்தார்.

‘கவனமாக சென்று வாருங்கள்‘

image_pdfPRINT

யாழ் குடாநாட்டில் அண்மைக்காலமாக விபத்துக்கள் அதிகரித்துள்ளன. கடந்த 6 மாத காலப்பகுதியில் யாழ் போதனா வைத்தியசாலையில் மட்டும் 42 பேர் விபத்தினால் மரணமடைந்தும் 2045 பேர் வீதி விபத்தினால் காயமடைந்தும் உள்ளனர். மக்கள் மத்தியில் வீதி ஒழுங்கு தொடர்பில் விழிப்புணர்வு இல்லாமையே இதற்கு காரணம் என பொலிஸாரால் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனை சரி செய்யும் வகையில் வட மாகாண ஆளுநர் றெஜினோல்ட் குரே அவர்களின் ஆலோசனையின் பேரில் வடமாகாண ஆளுநர் செயலகம் முதலமைச்சர் அமைச்சு பொலிஸ் தலைமையகம் ஆகியன இணைந்து “கவனமாக சென்று வாருங்கள்” நிகழ்ச்சித்திட்டத்தினை ஆரம்பித்து வைத்துள்ளன.

யாழ் வீரசிங்கம் மண்டபத்தில் நடைபெற்ற நிகழ்வில் 1500க்கு மேற்பட்ட பாடசாலை மாணவர்கள் மற்றும் வாகனச்சாரதிகள் கலந்து கொண்டனர். கொழும்பிலிருந்து வருகை தந்திருந்த வீதி போக்குவரத்து பொலிஸாரின் செயல்முறை காட்சி நாடகங்களும் வீதியில் அரங்கேற்றப்பட்டன

வீதிகளில் பயணிக்கும் வாகனங்களுக்கான விழிப்புணர்வு ஸ்ரிக்கர்களை வட மாகாண ஆளுநர் றெஜினோல் குரே ஒட்டி நிகழ்வுகளை ஆரம்பித்து வைத்திருந்தார்.

ஊடகவியலாளர்களிடம் வாக்குமூலம் பெற்ற விசேடபொலிஸ்

image_pdfPRINT

மகளீர் சிறுவர் விவகார இராஜாங்க அமைச்சரின் உரை தொடர்பில் வடமாகாண முதலமைச்சர் , ஊடகவியலாளர்களிடம் வாக்கு மூலங்கள் பெறப்பட்டு உள்ளன. 

யாழில். நடைபெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றும் போது , விஜயகலா மகேஸ்வரன் “விடுதலைப்புலிகள் மீள் உருவாக வேண்டும்” என தெரிவித்திருந்தார்.

அது தொடர்பில் தெற்கில் ஏற்பட்ட அரசியல் குழப்பங்களை அடுத்து விஜயகலா மகேஸ்வரனின் உரை தொடர்பில் முறைப்பாடுகள் செய்யப்பட்டதுடன் , அது தொடர்பிலான விசாரணைகளும் முன்னெடுக்கப்படுகின்றன.

இந்நிலையில் யாழில் தங்கி நின்று திட்டமிட்ட குற்றங்களை தடுக்கும் பொலிஸ் பிரிவினர் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

அந்த பிரிவினர் இன்றைய தினம் காலை வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனின் உத்தியோகபூர்வ இல்லத்திற்கு சென்று அவரின் வாக்கு மூலத்தினை பதிவு செய்தனர்.

பின்னர் அன்றைய தினம் நிகழ்வில் கலந்து கொண்டு செய்தி அறிக்கையிட்ட ஊடகவியலாளர்களை யாழ்.பொலிஸ் நிலையத்திற்கு அழைத்து அவர்களின் வாக்கு மூலங்களையும் பெற்றுக்கொண்டனர்.

இளம் பெண் தற்கொலை வழக்கு; சட்டத்தரணி மீதான குற்றச்சாட்டை விசாரிக்க குற்றப்புலனாய்வுக்கு உத்தரவு

image_pdfPRINT

இளம் பெண் ஒருவரின் தற்கொலைக்கு சட்டத்தரணி ஒருவர் மீது சாட்டப்பட்ட குற்றசாட்டு தொடர்பில்  விசாரிக்க குற்றப் புலனாய்வுத் திணைக்களத்துக்கு யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்று இன்று திங்கட்கிழமை உத்தரவிட்டது.

சட்டத்தரணி மீதான குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் எந்தவொரு ஆதாரங்களும் இல்லை என யாழ்ப்பாணம் தலைமையக பொலிஸ் நிலைய குற்ற விசாரணைப் பிரிவு முன்வைத்த விசாரணை அறிக்கை தொடர்பில் அதிருப்தியை வெளியிட்ட யாழ்ப்பாணம் நீதிமன்ற நீதிவான் சின்னத்துரை சதீஸ்தரன், இந்த உத்தரவை வழங்கினார்.

யாழ்ப்பாணம் அரியாலையைச் சேர்ந்த  நாகேஸ்வரன் கௌசிகா (வயது -23) என்ற இளம் பெண் கடந்த மார்ச் மாதம் 21ஆம் திகதி தற்கொலை செய்துகொண்டார்.

யாழ்ப்பாணம் மருதடியிலுள்ள தனது நண்பியின் இல்லத்தில் யாரும் இல்லாத வேளை  அவர் தற்கொலை செய்து கொண்டார்.

தற்கொலை செய்வதற்கு முன்னர் இளம் பெண் எழுதியதாக கூறப்படும் கடிதம் ஒன்றை யாழ்ப்பாணம் தலைமையகப் பொலிஸார் மீட்டனர்.

இளம் பெண்  கடந்த வருடம் பல்கலைக்கழகத்திற்கு தெரிவான போதிலும் வீட்டின் வறுமை சூழ்நிலை காரணமாக பல்கலைக்கழகம் செல்லவில்லை என குடும்பத்தினர் தெரிவிக்கின்றனர்

இந்நிலையில் யாழ் மாவட்ட விழப்புலன்ற்றவர் சங்கத்தில் கடமையாற்றி வந்த கௌசிகா, எழுதியுள்ள கடித்த்தில் அந்த சங்கத்தின் தலைவரும் சட்டத்தரணியுமாக செயற்படுபவர்தான் தனது தற்கொலைக்கு காரணம் என குறிப்பிடப்பட்டிருந்தார்.

பல்லேறு ஊழல் தொடர்பான விடயங்களில் அந்த சட்டத்தரணி என்னை கட்டாயப்படுத்தி வந்ததார். பெரும் தொகையான பணத்தை நான் திருடிவிட்டதாக  தெரிவித்து என்னை அச்சுறுத்தினார். எனவேதான் தற்கொலை செய்துகொள்ள தீர்மானித்தேன்” என்று இளம் பெண் எழுதிய கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்தச் சம்பவம் தொடர்பில் குற்றஞ்சாட்டப்பட்ட சட்டத்தரணியிடம் விசாரணைகளை மேற்கொள்ளுமாறும் இளம் பெண்ணின் குற்றச்சாட்டுத் தொடர்பில் உண்மைத் தன்மையை ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு யாழ்ப்பாணம் நீதிமன்ற நீதிவான் சி.சதீஸ்தரன் உத்தரவிட்டிருந்தார்.

இந்த நிலையில் இளம் பெண்ணின் தற்கொலை குறித்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது.

யாழ்ப்பாண தலைமையக பொலிஸ் நிலைய குற்ற விசாரணைப் பிரிவு பொறுப்பதிகாரி மன்றில் தோன்றி விசாரணை அறிக்கையை முன்வைத்தார்.

இளம் பெண்ணின் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் ஆதாரங்கள் இல்லை என்றும் அவை தொடர்பில் உண்மைத் தன்மை இல்லை எனவும் பொலிஸாரின் அறிக்கையில் கூறப்பட்டது.

அந்த அறிக்கையில் வெளிப்படுத்தப்பட்ட விடயங்களில் மன்று அதிருந்தியடைந்தது. உரிவாறு விசாரணை நடத்தப்படவில்லை என்று பொலிஸ் பொறுப்பதிகாரியை மன்று கண்டித்தது.

“இந்த விசாரணை அறிக்கை தொடர்பில் மன்று அதிருப்தி கொளகிறது. இளம் பெண்ணால் சட்டத்தரணி மீது முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் விரிவாக விசாரணைகளை மேற்கொண்டு வழக்கை முன்னெடுக்குமாறு கொழும்பு குற்றப் புலனாய்வுத் திணைக்களத்துக்கு உத்தரவிடப்படுகிறது” என்று யாழ்ப்பாணம் நீதிமன்ற நீதிவான் சி்ன்னத்துரை சதீஸ்தரன் கட்டளை வழங்கினார்.

வடமாகாணசபை நிர்வாகம் பூரணமாக முடங்கும் அபாயம்; அவசர தீர்மானம்

image_pdfPRINT

வடமாகாணசபை நிர்வாகம் பூரணமாக முடங்கும் நிலையில் இருப்பதனால் அரசியலமைப்பு மீறல் ஒன்று இடம்பெறும் அபாயம் உள்ளமையினால் வடமாகாணசபை அமைச்சரவை ஒன்றை உருவக்க ஆளுநருக்கு உடனடி ஆலோணையை வழங்குங்கள். என முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரனிடம் கோரும் வகையிலான தீர்மானம் ஒன்று இன்று சபையில் நிறைவேற்றப்பட்டுள்ளது.

அமைச்சர்கள் விவகாரம் குறித்து ஆராய்வதற்காக இன்று நடைபெற்ற வடமாகாணசபையின் விசேட அமர்விலேயே மேற்படி தீர்மானம் எடுக்கப்பட்டது.

இத் தீர்மானத்தில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

“இலங்கை சனநாயக சோசலிஷ குடியரசின் மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் வழக்கு இலக்கம் Ca/ writ/285/2017இல்  வழங்கப்பட்ட இடைக்கால கட்டளை மூலம் எழுந்துள்ள நிலமையை கருத்தில் கொண்டும்

குறித்த கட்டளை வழங்கப்பட்ட திகதியான 29.07.2018ல் இருந்து முறைப்படியான அமைச்ச ரவை சபை ஒன்று வடமாகாணசபைக்கு முழுமையாக பொறுப்புக் கூறக்கூடிய வகையில் இல்லாத நிலையொன்று உருவாகியுள்ளது.

இதனால் உடனடியாக அரசியலமைப்பு மீறல் ஒன்று உருவாகும் என நியாயமான அச்சம் எழுந்துள்ளமையினையும், மக்களுக்கு சேவையாற்ற கூடிய நிறைவேற்று தீர்மானங்களை எடுக்க முடியாதவாறு வடமாகாணசபை நிர்வாகம் முழுமையாக

முடங்ககூடிய ஆபத்தான நிலமை ஏற்பட்டுள்ளதாலும், மாகாணசபையினது பிரதான கடமையான சட்டவாக்க தத்துவத்தை பிரயோகிக்கும் நியதிச்சட்டங்களை ஆக்க முடியாத தேக்க நிலை ஒன்று உருவாகியுள்ளதாலும் அதன் விளைவாக மாகாண செயற்பாடுகளிற்கு

மத்தியின் சட்டவாக்கங்களே பிரயோகமாகி அதிகாரப் பகிர்வுக் கோட்பாடே அர்த்தமற்றதாகி போய்விடுகின்ற சூழ்நிலை உருவாகியுள்ளதாலும், முதலமைச்சர் சீ.வி.விக்னேஷ்வரன் அரசியலமைப்பின் உறுப்புரை 154 F (5) இனால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள அவரது தத்துவத்தை முறையாகப் பயன்படுத்தி வடமாகாணசபைக்கு ஓர் முழுமையான அமைச்சர் சபையை உருவாக்குவதற்கான ஆலோசனையை எந்த தாமதமும் இல்லாமல் மாகாண ஆளுநருக்கு வழங்கவேண்டும். என சபை தீர்மானிக்கின்றது என குறிப்பிட்பட்டுள்ளது.

இந்த தீர்மானம் சபையில் இருந்த 19 மாகாணசபை உறுப்பினர்களாலும் ஏகமனதாக அங்கீகரிக்கப்பட்டுள்ளதுடன், முதலமைச்சரின் கவனத்திற்கும் உடனடியாக அனுப்பவைக்கப்படவுள்ளது.

‘அனந்தியிடம் துப்பாக்கி’

image_pdfPRINT

தமிழ் தேசியம் பேசும் வடமாகாண பெண் அமைச்சர் பாதுகாப்பு அமைச்சிடம் சென்று தனக்கு பாதுகாப்பு இல்லை என கூறி , தனது பாதுகாப்புக்கு என கைத்துப்பாக்கி ஒன்றினை பெற்றுக்கொண்டு உள்ளார் என வடமாகாண ஆளும் கட்சி உறுப்பினர் அயூப் அஸ்மீன் தெரிவித்துள்ளார்.

வடமாகாண சபையின் விசேட அமர்வு இன்றைய தினம் திங்கட்கிழமை வடமாகாண பேரவை செயலகத்தில் நடைபெற்றது. அதன் போதே அவ்வாறு தெரிவித்தார்.

மேலும் தெரிவிக்கையில் ,

இராணுவத்தையும் , அரசாங்கத்தையும் விமர்சித்து வரும் வடமாகாண பெண் அமைச்சர் தனக்கு பாதுகாப்பு இல்லை என கூறி கைத்துப்பாக்கியை பெற்றுக்கொண்டுள்ளார். என தெரிவித்தார்.

மாகாண சபை உறுப்பினர் அஸ்மீன் அதனை கூறும் போது அமைச்சரின் பெயரை பாவிக்காது , இங்குள்ள வடமாகாண பெண் அமைச்சர் என்றே விழித்து கூறினார்.

வடமாகாண அமைச்சர்களில் அனந்தி சசிதரன் மாத்திரமே பெண் அமைச்சர் என்பது குறிப்பிடத்தக்கது. அதேவேளை இன்றைய அமர்வில் அனந்தி சசிதரன் கலந்து கொள்ளவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

தூக்கில் தொங்கிய நிலையில் மாணவியின் சடலம் மீட்பு

image_pdfPRINT

வவுனியா மாவட்டம், உக்கிளாங்குளம் பகுதியில் இன்று காலை, பாடசாலை மாணவியின் சடலமொன்று மீட்கப்பட்டுள்ளது.

உக்கிளாங்குளம் பகுதியில் வசித்து வந்த யோ.மிதுன்ஜா எனும் 17 வயது மாணவியே சடலமாக மீட்கப்பட்டுள்ளார் என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

குறித்த மாணவி அவரது வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையிலேயே சடலமாக மீட்கப்பட்டார் என காவல்துறையினர் கூறியுள்ளனர்.

error: Content is protected !!