Home Blog Page 11

கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழி விடயத்தை மூடிமறைக்க வேண்டாம்! கவனயீர்ப்பு போராட்டம்

image_pdfPRINT

கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழி விடயத்தை மூடிமறைக்க வேண்டாம் எமக்கு உண்மையும் நீதியும் வேண்டுமென கோரியும் கொக்குத்தொடுவாய் உள்ளிட்ட மனிதப் புதைகுழிகளுக்கு நீதி விசாரணை கோரியும் காணாமல் போனோர் அலுவலகம் ( OMP) வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் மீதான மேற்கொள்ளும் அச்சுறுத்தல் அழுத்தம் வழங்கும் செயற்ப்பாடுகளை கண்டித்தும் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று இன்று20) கொக்குத்தொடுவாய் மனித புதைகுழிக்கு அருகில் இடம்பெற்றது .

முல்லைத்தீவு மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளினால் ஏற்ப்பாடு செய்யப்பட்ட குறித்த போராட்டத்தில் வடக்கு கிழக்கின் பல்வேறு மாவட்டங்களினை சேர்ந்த வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் பாராளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் மற்றும் முன்னாள் மாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் உள்ளிட்ட மக்கள் பிரதிநிதிகள் சமூக செயற்ப்பாட்டாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டுள்ளனர்.

குறித்த போராட்டத்தில் ஈடுபட்ட காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள், உண்மையை மௌனமாக்காதே: கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழியின் சாட்சிகளை அச்சுறுத்தாதே ! ,கொக்குத்தொடுவாய் மனித புதைகுழிக்கு நீதி: ஸ்ரீ லங்கா இராணுவமே பொறுப்புக்கூற வேண்டும்! ,OMP ஒரு ஏமாற்று வேலை: காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு இன்னும் நீதி இல்லை! , கொக்குத்தொடுவாய் மனித புதைகுழியில் இலங்கை இராணுவத்தின் பங்கை அம்பலப்படுத்துங்கள்!, வட்டுவாகலில் இராணுவத்தினரிடம் ஒப்படைக்கப்பட்ட எமது அன்புக்குரியவர்களை எங்கே கொன்று புதைத்தீர்கள் ? உள்ளிட்ட பல்வேறு கோசங்கள் எழுதப்பட்ட பதாதைகளை தாங்கியவாறும் கோசங்களை எழுப்பியவாறு ம் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

https://youtu.be/ntAUDZGLaBA

இன்னொரு வேட்பாளரை வெல்ல வைப்பதற்காகவே தமிழ்ப் பொது வேட்பாளர் – சாணக்கியன்

image_pdfPRINT

தெற்கிலேயுள்ள வாக்குகள் சிதறிச் சின்னாபின்னமாகக் கூடிய நிலை உருவாகலாம் எனவும் இம்முறை தமிழ் மக்களுடைய வாக்குகளுக்கே கூடிய பெறுமதி காணப்படும் எனவும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்தார்.

மட்டு.ஊடக அமையத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

இதேவேளை தற்போதைய சூழ்நிலையில், தமிழ் பொதுவேட்பாளர் தேவையற்ற விடயம் என்பதில் இலங்கை தமிழரசு கட்சியின் பெரும்பாலான உறுப்பினர்கள் ஒருமித்த கருத்துடன் இருப்பதாகவும், இன்னொரு வேட்பாளரை வெல்ல வைப்பதற்காகவே தமிழ்ப் பொது வேட்பாளர் என்ற விடயம் அரங்கேற்றப்பட்டுள்ளது எனவும், இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார்.

இவ்வாறான நிலையில் கட்சி உறுப்பினர்கள், எந்தவொரு வேட்பாளரையும் ஆதரிக்கும் வகையில் கூட்டங்களில் கலந்து கொள்வதைத் தவிர்த்தல் வேண்டும் எனவும் தமிழரசுக் கட்சியின் செயற்குழு உறுப்பினர் ஒருவர் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதால் கட்சி உறுப்பினர்களிடையே குழப்பநிலை உருவாகலாம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை ரணில் விக்கிரமசிங்க தனக்கெதிராக நாமல் ராஜபக்ச களம் இறங்குவார் என எதிர்பார்க்கவில்லை எனவும் ஜனாதிபதி தேர்தலில் மொட்டுக்கட்சி தமக்கு ஆதரவளிக்குமென்ற உணர்வே ஜனாதிபதியிடம் காணப்பட்டதாகவும் சாணக்கியன் தெரிவித்தார்.

தமிழ்ப் பற்றாளர்கள் ராஜபக்ச தரப்பினருக்கு வாக்களிக்க மாட்டார்கள் என்பதால் இது வாக்கைப் பிரிக்கும் செயற்பாடாகவே அமையும் என்றும் இரா.சாணக்கியன் இதன் போது தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இலங்கையில் படைப்பாளிகளுக்கு அரசு அச்சுறுத்தல்

image_pdfPRINT

யுனஸ்கோ மற்றும் சர்தேச மன்னிப்புச் சபைக்கு தீபச்செல்வன் கடிதம்

இலங்கையில் தன்னைப் போன்ற படைப்பாளிகளுக்க அரசாங்கம் அச்சுறுத்தல்களை ஏற்படுத்தி வருவதாகத் தெரிவித்துள்ள இலங்கை தமிழ் எழுத்தாளர் தீபச்செல்வன் அறிவுவெளிப்பாடுமீதான ஒடுக்குமுறையை தடுக்குமாறும்  யுனஸ்கோ மற்றும் சர்தேச மன்னிப்புச் சபையிடம் வேண்டுகோள்  விடுத்துள்ளார்.

இது தொடர்பில் ஐக்கிய நாடுகளின் கல்வி, அறிவியல் மற்றும் கலாச்சார அமைப்பின் (UNESCO) பணிப்பாளர் நாயகம் ஓட்ரி அஸூலே மற்றும் சர்வதேச மன்னிப்புச் சபையின் செயலாளர் நாயகம் ஆக்னஸ் காலமர்ட் ஆகியோருக்கு இலங்கை எழுத்தாளர் தீபச்செல்வன் கடிதங்களை எழுதியுள்ளார்.

இக் கடிதங்களின் பிரதிகளை கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் எஸ். முரளிதரன் மற்றும் மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் எஸ். சிறீதரன் ஆகியோரிடம் கையளித்தார்.

அக் கடிதங்ககளில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

“நான் இலங்கையை சேர்ந்த ஒரு தமிழ் எழுத்தாளன். கிளிநொச்சியை பிறப்பிடமாகக் கொண்ட நான், போர்ச் சூழலில் பிறந்து வளர்ந்து பல்கலைக்கழகக் கல்வியை முடித்து தற்போது ஒரு பாடசாலை ஆசிரியராகப் பணியாற்றி வருகின்றேன்.

போர் நடைபெற்ற காலத்தில் அதன் விளைவாக நான் ஒரு எழுத்தாளனாக வெளிப்பட்டேன். போரின் துயரங்களையும் போரில் என்னைச் சார்ந்த சமூகம் எதிர்கொள்ளும் உரிமை மறுப்புக்களையும் எழுத உந்தப்பட்டேன். புகழ், வருமானம் போன்ற நோக்கங்கள் இல்லாமல் மனித உயிர்கள் அழிக்கப்பட்டும் எனது தேசத்தில் இல்லாமல் ஆக்கப்படுபவர்களின் மனசாட்சியாய் இறுதிக்குரலாய் என் எழுத்துகள் வெளிப்பட்டன.

பதுங்கு குழியில் பிறந்த குழந்தை என்பது 2008ஆம் ஆண்டில் வெளியான என் முதல் கவிதை நூல். உரிமைக்கான போராட்டத்தில் தன் பிள்ளையை இழந்த தாய் அவன் நினைவுகளுக்காக முன்னெடுக்கும் வாழ்வையும் போராட்டத்தையும் பேசுவது நடுகல் என்ற என் முதல் நாவல். போரில் தாய் தந்தையை இழந்து தப்பும் ஒரு குழந்தை எந்தச் சூழலிலும் கல்வியைக் கைவிடாது பல்கலைக்கழகம் சென்று அங்கு மாணவத் தலைவராகிய நிலையில் அரச படைகளால் அவன் கொல்லப்படும் கதையைப் பேசுவது பயங்கரவாதி என்ற என் இரண்டாவது நாவல்.

பயங்கரவாதி என்ற எனது இரண்டாவது நாவல், விடுதலைப் புலிகள் இயக்கத்தை மீள் உருவாக்கம் செய்கிறதா என்ற கோணத்தில் இலங்கை அரசின் பயங்கரவாத தடுப்புப் பிரிவு என்னிடம் கடந்த ஜூன் மாதம் விசாரணையை மேற்கொண்டது. சுமார் இரண்டு மணி நேரம் இந்த விசாரணை நடந்தது. இதற்கு முன்பு நான் தலைமை தாங்கி நடாத்திய ஒரு புத்தக வெளியீட்டிற்காகவும் மூன்று மணிநேரம் விசாரணையை பயங்கரவாத தடுப்புப் பிரிவு மேற்கொண்டது.

என் நாவலில் வரும் கதாபாத்திரங்கள் உண்மையானவையா? பிரதான கதாபாத்திரமாக வரும் மாறன் என்பவர் யார்? அவர் எங்குள்ளார் என விசாரணை நடாத்தப்பட்டது. இலங்கையில் கடந்த காலத்தில் பல எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள் கொல்லப்பட்டுள்ளனர். கருத்துச் சுதந்திரத்தின்மீது இரும்புக்கரம் கொண்டு ஒடுக்கப்பட்டது. இந்த நிலையில் பயங்கரவாத தடுப்புப் பிரிவின் விசாரணை என்னையும் என் குடும்பத்தினரையும் மாத்திரமின்றி என்னைப் போன்ற படைப்பாளிகளுக்கும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது.

இலங்கையில் நடந்த மேலாதிக்கத்திற்கான போர் மற்றும் உரிமைக்கான போராட்டத்தில் சந்தித்த இழப்புக்கள், தியாகங்கள், அனுபவங்கள் குறித்து இலக்கியங்கள் எழுதுவது இந்த தீவின் எதிர்கால அமைதிக்கும் சுபீட்சத்திற்கும் அவசியமானது. உலகின் எந்தவொரு தேசத்திலும் எழும் படைப்புக்களும் இலக்கியங்களும் உலக மக்கள் அனைவருக்குமான அறிவு மற்றும் படைப்பாக்கச் சொத்தாகும். அந்த வகையில் வரலாற்றினதும் கடந்த கால கசப்பக்களினதும் விளைவாக எழும் இலக்கியங்களை தடுக்க முற்படுவது அறிவுவெளிப்பாடு மீதான ஒடுக்குமுறையுமாகும்.

பொருளாதார நெருக்கடி போன்ற சூழலிலும் தமிழ் சிறுபான்மை எழுத்தாளர்கள்மீது  அழுத்தங்கள் பிரயோகிக்கப்படுகின்றன. போர் முடிவுக்கு கொண்டுவரப்பட்டு 15 ஆண்டுகளை கடந்துள்ள நிலையில் இத்தகைய செயற்பாடுகளை தடுக்க தாங்கள் இலங்கைக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும். இலங்கைத் தீவின் கலாசார பண்பாட்டு மற்றும் படைப்புக்கள்மீது மிகுந்த மதிப்பும் கரிசனையும் கொண்டுள்ள தங்களின் கவனம் இலங்கைத் தீவில் எழுத்தாளர்களின் சுதந்திரத்தை பாதுகாப்பதுடன் தமிழ் பேசும் மக்களின் இருப்பையும் சுதந்திரத்தையும் காத்து நிற்கும் என்றும் எதிர்பார்த்து வேண்டி நிற்கின்றேன்.” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

கிளிநொச்சியில் காணாமல் போனோர் பற்றிய விசாரணைகள் முன்னெடுப்பு!

image_pdfPRINT

கிளிநொச்சி மாவட்டத்தைச் சேர்ந்த மேலும் 243 பேரிடம் காணாமல் போனோர் பற்றிய அலுவலக அதிகாாிகள் (OMP) விசாரணைகளை மேற்கொண்டுள்ளனா்.

காணாமல் போனோர் பற்றிய அலுவலகத்தினரால் கிளிநொச்சி மாவட்டத்தின் நான்கு பிரதேச செயலாளர் பிரிவுகளைச் சேர்ந்த 243 பேரிடம்  விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டது.

நேற்றையதினம் கரைச்சி பிரதேச செயலாளர் பிரிவில் 128 பேரிடமும், பச்சிலைப்பள்ளி பிரதேச செயலாளர் பிரிவில் 17 பேரிடமும் விசாரணை மேற்கொண்டிருந்தது.

அதனையடுத்து, இன்றைய தினம் பூநகரி பிரதேச செயலாளர் பிரிவைச் சேர்ந்த 50 பேரிடமும், கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவைச் சேர்ந்த 48 பேரிடமும் விசாரணை முன்னெடுக்கப்பட்டது.

கண்டாவளை பிரதேச செயலகத்தில் காணாமல் போன ஆட்கள் பற்றிய அலுவலகத்தின் தவிசாளர் மகேஸ் கட்டுலந்த தலைமையில் குறித்த விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டிருந்தன.

செஞ்சோலை படுகொலை: உயிரிழந்த மாணவர்களுக்கு அஞ்சலி

image_pdfPRINT

முல்லைத்தீவு, வள்ளிபுனம் -செஞ்சோலை வளாகத்தில் இராணுவத்தின் விமானப்படையினரின் வான் தாக்குதலில் உயிரிழந்த மாணவர்களுக்கு இன்று அஞ்சலி செலுத்தப்பட்டது.

படுகொலை செய்யப்பட்ட மாணவர்களுக்கு செஞ்சோலை வளாகத்தில் இன்று உணர்வுபூர்வமாக நினைவஞ்சலி செலுத்தப்பட்டது

முல்லைத்தீவு வள்ளிபுனம் இடைக்கட்டு பகுதியில் அமைந்துள்ள செஞ்சோலை வளாகத்தில் கடந்த 2006 ஆம் ஆண்டு தலைமைத்துவ பயிற்சிக்காக சென்றிருந்த மாணவர்கள் மீது இலங்கை விமானப்படை நடத்திய தாக்குதலில் பாடசாலை மாணவர்கள் 53 பேர் உட்ப்பட 61 பேர் உயிரிழந்தனர்.

இந்த நிலையில் 18 ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு இன்றையதினம் உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டுள்ளது.

உயிரிழந்த உறவுகளுக்கு சுடரேற்றி அக வணக்கம் செலுத்தி மலர்தூவி அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது.

அஞ்சலி நிகழ்வில் முன்னாள்  வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் முன்னான் புதுக்குடியிருப்பு பிரதேச சபையின் உறுப்பினர் குகனேசன் பொதுமக்கள் சமூகசெயற்பாட்டாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

தமிழ் பொது வேட்பாளர் தேவை இல்லாத ஒன்று – சாணக்கியன்

image_pdfPRINT

நாடாளுமன்றத்திற்கான தமிழ் பொது வேட்பாளரை முன்வைக்க வேண்டிய தேவை இல்லை என்று இலங்கை தமிழ் அரசு கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சானக்கியன் ராசாமணிக்கம் தெரிவித்தார்.

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடவுள்ள தமிழ் பொது வேட்பாளருக்கு ஆதரவளித்துள்ள தமிழ் கட்சிகள் தங்களது கட்சியின் சின்னங்களை அவருக்கு வழங்க மறுத்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் வைத்து அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

அதேநேரம் தமிழ் பொது வேட்பாளருக்கான ஆதரவு தொடர்பில் நாளைய தினம் இலங்கை தமிழரசு கட்சியின் மத்தியக் குழு கூடி தீர்மானிக்கும் எனவும் நாடாளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் தெரிவித்துள்ளார்.

ஒட்டுமொத்த தமிழ் சமூகத்தையும் குழி தோண்டி புதைக்கும் விடயமாக மாறிவிடும் இந்த பொது வேட்பாளர் விடயம் எப்பொழுதும் தமிழ் மக்களின் பூரண ஆதரவு கிடைக்காது.

இது ஒரு தேவையில்லாத விடயம் என அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட விடயமாகும். தங்களுடைய தனிப்பட்ட இலாபங்களுக்காக இந்த விடயத்தை முன்னெடுத்து வருகிறார்கள் என தெரிய வருகிறது.

ஜனாதிபதி தேர்தலில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஆதரவு யாருக்கு என்பது தமிழ் தேசிய கூட்டமைப்பாக கூடி தான் ஒன்றாக முடிவெடுக்க வேண்டும் இலங்கையில் வாழும் அனைத்து மக்களுக்கும் சிறப்பான எதிர்காலத்தை அமைக்க கூடிய ஒருவருக்கு நாங்கள் நிச்சயமாக ஆதரவு வழங்க வேண்டும் எதிர்வரும் காலங்களில் ஒரு தீர்மானத்தை எடுப்போம் என தெரிவித்தார்.

நல்லுார் ஆலய வளாகத்திற்குள் நுழைந்த பிக்குமார்களினால் பரபரப்பு

image_pdfPRINT

நல்லூர் கந்தசுவாமி கோயில் ஆலய சுற்று வீதியில் வாகனங்கள் நுழைய தடை செய்யப்பட்டுள்ள நிலையில் சில பிக்குகள் வாகனத்துடன் நுழைந்தமையால் சர்ச்சை எழுந்துள்ளது.

நல்லூர் கந்தசாமி கோவில் பெருந்திருவிழா காரணமாக வாகன போக்குவரத்துகளை தடை செய்யும் வீதி தடைகளையும் மீறி நல்லூர் கந்தசாமி ஆலய முன்பக்கம் வரை பௌத்த பிக்குகளின் வாகனம் உள் நுழைய அனுமதிக்கப்பட்டுள்ளது.

சாதாரண பொது மக்களின் வாகனங்களை திருப்பி அனுப்புகின்ற பொலிஸார், பிக்குகளின் வாகனத்தை உள்நுழைய அனுமதித்தமை சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

ஜனாதிபதித் தோ்தல் – தமிழ் பொது வேட்பாளரின் பெயா் அறிவிப்பு!

image_pdfPRINT

வடக்கு கிழக்கைப் பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ் பொது வேட்பாளராக இலங்கைத் தமிழரசுக் கட்சியைச் சேர்ந்த மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் பா.அரியநேந்திரன் அறிவிக்கப்பட்டுள்ளார்.

சிவில் அமைப்புகளின் ஒருங்கிணைவுடன் உருவாக்கப்பட்ட தமிழ் மக்கள் பொதுச்சபையின் ஏழு பிரதிநிதிகளும் தமிழ்த் தேசிய அரசியல்கட்சிகள் ஏழினது பிரதிநிதிகளும் கூட்டிணைந்து தமிழ்த் தேசியப் பொதுக்கட்டமைப்பை உருவாக்கியிருந்தனர்.

அவ்வாறு உருவாக்கப்பட்ட தமிழ்த் தேசியப் பொதுக்கட்டமைப்பின் சந்திப்பு யாழ்ப்பாணத்தில் இன்றையதினம் வியாழக்கிழமை கூடி தமிழ் பொது வேட்பாளரை அறிவித்துள்ளனர்.

அதேவேளை இலங்கைத் தமிழரசுக் கட்சியின் கொழும்புக் கிளைத் தலைவரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான கே.வி.தவராசா. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் சந்திரநேரு சந்திரகாந்தன் ஆகியோரது பெயர்களும் இறுதிப் பட்டியலில் இருந்ததாக தெரிவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

பிரித்தானிய பயணம் குறித்து பல நாடுகளில் எச்சரிக்கை

image_pdfPRINT

பிரித்தானியாவில் (UK) இடம்பெற்று வரும் குடியேற்ற எதிர்ப்பு போராட்டங்கள் மற்றும் கலவரங்களின் காரணமாக அங்கு பயணம் செய்வது பாதுகாப்பற்றது என பல நாடுகள் தமது குடிமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளன.

இதற்கமைய, நைஜீரியா, மலேசியா, அவுஸ்திரேலியா, இந்தோனேஷியா, ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் இந்தியா ஆகிய நாடுகளே பிரித்தானிய பயணம் குறித்து மக்களை எச்சரித்துள்ளனர். 

அதேவேளை, பிரித்தனாயாவில் தற்போது வசித்து வரும் மற்றும் அங்கிருந்து சொந்த நாட்டுக்கு திரும்பவுள்ள மக்களையும் போராட்டங்கள் மற்றும் கலவரங்களில் இருந்து பாதுகாப்பாக இருக்குமாறும் குறித்த நாடுகள் அறிவுறுத்தியுள்ளன. 

நான் மற்றவர்களைப்போல் வாக்குறுதிகளை அளிப்பதில்லை-ஜனாதிபதி!

image_pdfPRINT

என்னைப் பொறுத்தவரை இந்த ஜனாதிபதித் தேர்தல் ஒரு போர் அல்ல. நான் யாரிடமும் சண்டையிட வரவில்லை. நான் எனது கொள்கைகளுடன் வருவதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

ஊடகங்களின் பிரதிநிதிகளை இன்று சந்தித்த போதே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்தார்.

உண்மையைச் சொல்லி நாட்டைக் காப்பாற்றத் தயாரா அல்லது பொய்யைக் கூறி நாட்டைக் குழப்பத் தயாரா என்பதைச் மக்கள் சிந்திக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.

அத்துடன் நாட்டை முன்னெடுத்துச் செல்வேன். நான் மற்றவர்களைப் போல வாக்குறுதிகளை அளிப்பதில்லை. செய்து காட்டியுள்ளேன். ஏனையோர் வாக்குறுதிகளை வழங்குவதாகவும் ஜனாதிபதி இங்கு தெரிவித்தார்.

மேலும் மற்ற வேட்பாளர்கள் எனக்கு சவாலாக இல்லை என்றும் நான் நாட்டின் எதிர்காலத்திற்காக வருகிறேன். ஏனைய வேட்பாளர்கள் தமது எதிர்காலத்திற்காக வரவுள்ளதாக ஜனாதிபதி கூறியுள்ளார் .

இதேவேளை சர்வதேச நாணய நிதியத்துடனோ அல்லது கடன் வழங்குநர்களுடனோ செய்து கொள்ளப்பட்ட உடன்படிக்கைகளில் எந்த அளவுகோலையும் மாற்ற முடியாது எனவும் அவ்வாறு செய்தால் இலங்கைக்குக் கிடைக்கும் நிதியை இழக்க நேரிடும் எனவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

அடுத்த வருடம் முதல் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு – ஜனாதிபதி

image_pdfPRINT

இளைஞர்களுக்கு தொழில் வழங்கும் வேலைத்திட்டம் அடுத்த வருடம் முதல் ஆரம்பிக்கப்படும் எனவும், அதற்காக அரச மற்றும் தனியார் துறைகளில் புதிய தொழில் வாய்ப்புகளை உருவாக்குவதே தமது நோக்கமாகும் எனவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.

கொவிட் தொற்றுநோய் மற்றும் பொருளாதார வீழ்ச்சி காரணமாக கடந்த 4 வருடங்களாக இலங்கையின் இளைஞர்களுக்கு தொழில் வாய்ப்பை வழங்க முடியவில்லை என சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, நாடு வங்குரோத்து நிலையில் இருந்து விடுபட்டிருப்பதால் தற்போது அதற்கான சந்தர்ப்பம் கிடைத்துள்ளது என்றும், அதனால் புதிய தொழில் வாய்ப்புகளை உருவாக்கும் திட்டங்களை செயல்படுத்தி நாட்டை முன்னேற்ற வேண்டும் என்றும் தெரிவித்தார்.

யாழ்ப்பாணம் வலம்புரி ஹோட்டலில் நேந்நு  நடைபெற்ற இளைஞர் சந்திப்பில் உரையாற்றும் போதே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இதனை தெரிவித்தார்.

“செழிப்பான எதிர்காலத்திற்கான பயணம்” என்ற தொனிப்பொருளில் ஏற்பாடு செய்யப்பட்ட இக்கூட்டத்தில் யாழ். மாவட்டத்தைச் சேர்ந்த பெருமளவான இளைஞர்கள் கலந்துகொண்டனர்.

இங்கு மேலும் உரையாற்றிய ஜனாதிபதி, இளைஞர்களின் எதிர்பார்ப்புகளை அரசாங்கம் ஒருபோதும் மறக்கவில்லை என்பதையும் சுட்டிக்காட்டினார்.

நிதிப் பிரச்சினைகளுக்கு மத்தியிலும் ஆசிரியர் வெற்றிடங்களை நிரப்புவதற்கு அரசாங்கம் இவ்வருடம் நிதி ஒதுக்கியுள்ளதாகக் குறிப்பிட்ட ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, ஆசிரியர் சேவையில் புதியவர்களை இணைத்துக் கொள்வதற்கு அடுத்த வருடம் மேலதிக நிதியை வழங்கவுள்ளதாகவும் தெரிவித்தார்.

சுயதொழிலில் ஈடுபட விரும்பும் இளைஞர்களுக்கு நிவாரணத்துடன் கூடிய கடன் வழங்கும் முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாகவும், விவசாய நவீனமயமாக்கல் வேலைத்திட்டத்தில் இணைந்து இளைஞர்கள் முன்னோக்கிச் செல்வதற்கான சந்தர்ப்பம் உருவாக்கப்படும் என்றும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.

இளைஞர்கள் எழுப்பிய சில கேள்விகளுக்கு சாதகமான பதில்களை வழங்கிய ஜனாதிபதி அவர்களின் தகவல்களை கேட்டறிந்துகொண்டதோடு சிநேகபூர்வமாக கலந்துரையாடினார்.

இளைஞரொருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, எதிர்காலத்தில் அனுபவத்தைப் பொருட்படுத்தாமல் தனியார் துறை தொழில் வாய்ப்புக்களுக்கு ஆட்சேர்ப்பு செய்யுமாறு தனியார் துறையிடம் கோரிக்கை விடுப்பதாகவும் உறுதியளித்தார்.

சர்வதேச ரீதியில் ஏற்படக்கூடிய எந்தவொரு சூழ்நிலையினையும் எதிர்கொள்ளத் தயார்!

image_pdfPRINT

மத்திய கிழக்கு நாடுகளில் பதட்டமான சூழ்நிலை உருவாகும் பட்சத்தில் அதனைச் சமாளிப்பதற்கு மூன்று விசேட குழுக்களை ஜனாதிபதி ரணில்  விக்ரமசிங்க நியமித்துள்ளதாக வெளிவிவகார அமைச்சரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான அலி சப்ரி தெரிவித்தார்.

ஜனாதிபதி ஊடக மையத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அமைச்சர் அலி சப்ரி இதனைத் தெரிவித்தார்.

இதன்போது ”சர்வதேச ரீதியில் ஏற்படக்கூடிய எந்தவொரு சூழ்நிலையையும் எதிர்கொள்ளத் தேவையான நடவடிக்கைகள் தற்போது எடுக்கப்பட்டுள்ளதாகவும் அலி சப்ரி மேலும் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!