SHARE

வீரகேசரியின் முன்னாள் நிருபர்- ப.சுகிர்தன்

காணாமல் போனவர்கள் தொடர்பாக விசாரணை நடத்துவதற்கென கடந்த 1994 இல் இருந்து பல ஜனாதிபதி ஆணைக்குழுக்கள் நியமிக்கப்பட்டிருந்தன. அவற்றில் எந்த ஒரு ஆணைக்குழுவினாலும் பாதிக்கப்பட்டவர்களின் எதிர்பார்ப்புக்கள் முழுமையாக நிறைவேற்றப்பட்டதாக திருப்தி கொள்ளப்படவில்லை.

இது இவ்வாறு இருக்கையில் கடந்த 2015ஆம் ஆண்டு ஜ.நா. மனித உரிமைகள் ஆணைக்குழுவும் இலங்கையும் இணைந்து நிறைவேற்றிய தீர்மானத்திற்கமைய காணாமல்போனோர்கள் தொடர்பிலான நிரந்தரமான அமைப்பு ஒன்றை நிறுவி அவ்வகையிலானோரைத் தேடிக்கண்டு கொள்வதற்காக காணாமல் போனோருக்கான அலுவலகம் (OMP) நிறுவப்பட்டுள்ளது.

இதற்கான சட்டம் கடந்த 2016 இல் நாடாளுமன்றத்தால் நிறைவேற்றப்பட்டிருந்த போதிலும் கடந்த மே மாதம் மன்னாரில் நடந்த கலந்துரையாடல் ஒன்றைத் தொடர்ந்து இதன் செயற்பாடுகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில், இந்த அமைப்பிற்கான ஏற்பாடுகள் காணாமல் போனோரைத் தேடிக்கொண்டிருப்பவரின் அபிலாசைகளை நிறைவேற்றக்கூடியதாக இருக்குமா என்பதே எனது கேள்வியாக உள்ளது.

தமிழர்கள் மீது பாரிய இன அழிப்பு யுத்தத்ததை மேற்கொண்ட இலங்கை அரசு கடந்த 2009 மே மாதம் போர் முடிவுக்கு வந்ததாக அறிவித்த பின்னர் தம்மவர்கள் பலரைக் காணவில்லை என்பது தொடர்பிலும் யுத்தத்திற்கு பின்னர் முகாம்களில் வாழ்ந்து வந்த பலரும் புனர்வாழ்வளிக்கப்பட்டு வீடு திரும்பியவர்கள் பலரும் காணாமல் போயுள்ளார்கள் என்று அவர்களைத் தேடும் முயற்சி தீவிரமாக ஆரம்பிக்கப்பட்டது.

ஆனால் சிங்கள பேரினவாதம் பாரிய யுத்தக்குற்றத்தை புரிந்திருந்த நிலையில் இம்முயற்சிகளின் தீவிரத்தைத் தணிப்பதற்கென 2013 ஆகஸ்ட் மாதத்தில் ‘பரணகம ஆணைக்குழு’ என்று அழைக்கப்படும் விசாரணைக்குழு ஒன்று நியமிக்கப்பட்டது. ஆனால் அவ்விசாரணைகளால் எந்தப் பயனும் கிட்டாததால் காணாமல்போனோரைத் தேடும் முயற்சி தொடர்ந்துஇ தீவிரமடையத்தொடங்கியது.

தம் கண்முன்னே இராணுவத்தினரிடம் உறவுகளைப்பறிகொடுத்தவர்கள் வீதிகளில் இறங்கி தம்மவர்களை தேடி பொராட்டங்களை நடத்தத்தொடங்கினார்கள். ஆனால் காணமால் போனவர்கள் குறித்து அரசோ சம்பந்தப்பட்டவர்களோ பொறுப்புகூற முன்னவராது இருந்து வருகின்றனர்.

இந்நிலையிலேயே உறவுகளின் எதிர்பார்ப்புக்களை பூர்த்தி செய்யவென குறித்த OMP அலுவலகம் அமைக்கப்பட்டுள்ளது. இவ் அமைப்புக்கான சட்ட வரைவு 2016 இல் முன்வைக்கப்பட்டிருந்த பொழுது அதன் ஏற்பாடுகளை மையமாகக் கொண்டு அவ்வமையம் அரசினால் நிமிக்கப்பட்டு செயற்பட்டுக்கொண்டிருந்த Consultaion Task Force என்ற மக்கள் கருத்துக்களைத் திரட்டும் செயலணிக்கு காணாமல் போனோர்களின் எதிர்பார்ப்புக்களின் கருத்துக்கள் குறுகிய காலத்தில் தயாரித்து ஒரு மகஜர் சமர்ப்பிக்கப்பட்டது.

அதில் குறிப்பிடப்பட்டிருந்த பல அபிலாசைகளில் ஒரு சில வருமாறு:
• பலாத்காரமாக காணாமல் போகச் செய்தலை OMP சட்டம் நிறைவேற்றப்பட முன்னர் அதனை ஒரு குற்றவியல் செயலாக தண்டனைக்கோவையில் சேர்த்துக் கொள்ளப்பட வேண்டும்.
• புதைகுழிகள் தொடர்பில் தகவல் இருப்பின் அவை தொடர்பில் புலனாய்வுகள் நடத்தப்படுதல் வேண்டும்.
• காணாமல்போனோர் சம்பந்தமாக விசாரணை செய்யவென காலத்துக் காலம் நியமிக்கப்பட்டிருந்த ஆணைக்குழுக்களுக்குப் புலனாய்வு செய்வதற்கென வழங்கப்பட்டிருந்த சகல அதிகாரங்களும் பொறிமுறைகளும் அரச அமைப்புக்களிலிருந்து பதிவேடுகளைப்பெற்று பரிசோதனை செய்ய வழங்கப்பட்டிருந்த அதிகாரங்களும் OMP க்கு வழங்கப்படுதல் வேண்டும்.
• காணாமல்போனோர் தொடர்பில் ஏற்கனவே நியமிக்கப்பட்டிருந்த விசாரணைக்குழுக்களிற்கு வழங்கப்பட்ட தகவல்களை OMP யும் ஏற்றுக்கொள்ளச் செய்யப்படுதல் வேண்டும்.
• OMP யிற்கு வழங்கப்படும் தகவல்களின் இரகசியத்தன்மை பாதுகாக்கப்பட வேண்டும். எனினும்இ அவற்றை அடிப்படையாகக் கொண்டு பாதிக்கப்பட்டவர்கள் நீதிமன்றங்கள் மூலம் நியாயம் பெறுவதற்குத் தடை இருக்கலாகாது.
• OMP யின் புலனாய்வுகளின்போது பயங்கரவாதப் புலனாய்வுத் திணைக்களத்தினையோ (TID) குற்றவியல் புலனாய்வுத் திணைக்களத்தினரையோ (CID) பங்கு கொள்ளச் செய்தல் ஆகாது.
• OMP யின் விசாரணையின் போது பெற்றுக் கொள்ளும் தகவல் யாவற்றையும் நீதித்துறை மூலம் நியாயம் பெற்றுக்கொள்ள ஏதுவாக வழக்கு தொடரும் அதிகாரிகளுக்கு வழங்கப்படுதல் வேண்டும்.
• சம்பந்தப்பட்ட காணாமல் போனவர்களைக் கண்டுகொள்ள முடியாதுள்ளது. தொடபிலான அத்தாட்சிப்பத்திரம் ஒன்றினை ழுஆP வழங்கக் கூடியதாக இருக்க வேண்டும். எனினும்இ அதனை முறைப்பாட்டுக்காரர் ஏற்றுக்கொள்ள கட்டாயப்படுத்த முடியாததாக இருத்தல் வேண்டும்.
• OMP க்கு சாட்சியமளிப்பவர்களைப் பாதுகாப்பதற்கான ஏற்பாடுகளை அது செய்தல் வேண்டும்.
• OMP யின் செயற்பாடுகளிற்கு உதவும் முகமாக ஜ.நா. மனித உரிமை ஆணையாளரின் அனுசரணையுடன் ஆளணியினரையோஇ ஆலோசகர்களையோ OMP யின் ஆளணியினருடன் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

மேற்கூறியவற்றில் இருந்து காணாமல் போனவர் தொடர்பில் பாதிக்கப்பட்டவர்களின் அபிலாசைகள் எந்த அளவிற்கு இருந்ததென்பதை ஓரளவிற்கு கணித்துக் கொள்ளக் கூடியதாக இருக்கும்.

எனினும், குறித்த சட்ட வரைவு நாடாளுமன்றத்தில் விவாதத்திற்குள்ளாகிய பொழுது இவ் அபிலாசைகளிற்கு போதிய அளவு கவனம் செலுத்தப்படவில்லை. பதிலாக நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலர் பிரதிகளில் இருந்த ஏற்பாடுகளுக்கு எதிராக கருத்துக்களைக் கூறியதுடன்இ சர்வதேச அழுத்தங்களிற்கு இடமளித்து விடுதலைப்புலிகளை வெற்றிகொண்ட இராணுவ வீரர்களைத் தண்டிப்பதற்காகவே இந்த சட்ட வரைபை முன்வைத்ததாகக் குற்றம்சாட்டினார்கள்.

இந்த குற்றச்சாட்டு அழுத்தங்களுக்கு இசைந்த அரசும் தமது இராணுவ வீரர்களை காப்பாற்றவும் சிங்கள மக்களிடமிருந்து நம்பிக்கை வாக்கு வாங்கியை நிரப்பிக்கொள்ளவும் OMP யின் விசாரணையினால் இராணுவம் எந்த வகையிலும் பாதிப்புற இடமளிக்காத வகையில் திருத்தங்களை செய்து நிறைவேற்றியது.

இதன் விளைவாக OMP என அழைக்கப்படும் இந்தக் காரியாலயம் பாதிக்கப்பட்டவர்களின் அபிலாசைகளை ஓரளவேனும் நிறைவேற்றக்கூடிய வகையில் அமையாது என்பது புலனாகியுள்ளது.

இத்தறுவாயில் முன்னொரு காலத்தில இலங்கைக்கு அழைக்கப்பட்டிருந்த சர்வதேச சுயாதீன நிபுணர்கள் குழு 2007இல் செயற்பாடுகளை இடையில் நிறுத்திச் செல்லும் போது சமர்ப்பித்த ஒரு கூற்று ஞாபகம் வருகின்றது. “மனித உரிமைகளை மேம்படுத்துவதிலோ பாதுகாப்பதிலோ அப்போதைய அரசாங்கத்திற்கு ஆர்வமோ திடமான மனநிலையோ இருக்கவில்லை” எனக் கூறப்பட்டது.

இந்நிலையில் தற்போதைய அரசாங்கமும் OMP தொடர்பான சட்டத்தை நிறைவேற்றியதில் மேற்படி நிபுணர்குழு கூறியவாறான அத்தகைய நிலையில் இருந்ததோ என எண்ணத் தோன்றுகின்றது.

இவற்றை எல்லாம் பார்க்குமிடத்து தொலைந்த தம் உறவுகளை தேடி நாளாந்தம் கண்ணீரும் கம்ளையுமாய் ஓடிக்கொண்டிருக்கும் உறவுகளின் அபிலாசைகளை OMP நிறைவேற்றுமா? என்பதைப் பொறுத்திருந்தே பார்க்கவேண்டும்.