SHARE

யாழ். மல்லாகம் குளமங்கால் பகுதியைச் சேர்ந்த இளம் குடும்பஸ்தரான இளைஞனொருவர் சற்று முன்னர் தெல்லிப்பழைப் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதாக எமது யாழ்.மாவட்ட விசேட செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை(17) இரவு யாழ்.மல்லாகம் சந்திக்கு அருகிலுள்ள சகாய மாதாத் தேவாலயத் திருவிழாவில் வெளியேயிருந்து வந்த சிலர் குழப்பம் ஏற்படுத்த முயன்றனர். இந்நிலையில் தேவாலயத் திருவிழாவில் கலந்து கொண்டிருந்த இளைஞர்கள் அதனைத் தடுக்க முற்பட்டுள்ளனர்.

இதன் போது அவ்விடத்திற்கு வந்த சுன்னாகம் பொலிஸ் நிலையத்தைச் சேர்ந்த பொலிஸ் உத்தியோகத்தரால் நடாத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் திருவிழாவில் பங்கேற்றிருந்த இளைஞரொருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்திருந்தார். இதனையடுத்து அப்பகுதியில் பெரும் பதற்றம் ஏற்பட்டிருந்தது.

இந்நிலையில் குறித்த இளைஞரை மோட்டார்ச் சைக்கிளில் கொண்டு சென்று தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் சேர்ப்பித்த இரு இளைஞர்களையும், அவருக்கு உதவிய குடும்பஸ்தரொருவரையும் வைத்தியசாலையில் வைத்துப் பொலிஸார் கைது செய்திருந்தனர்.

துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்திருந்த இளைஞனின் இறுதி அஞ்சலி மற்றும் இறுதி யாத்திரை நிகழ்வுகள் நேற்றுப் பிற்பகல் மல்லாகம் குளமங்கால் பகுதியில் பெருமளவான மக்களின் பங்கேற்புடன் இடம்பெற்றிருந்தது.

இந்நிலையிலேயே இன்று இரவு மல்லாகம் குளமங்கால் பகுதியில் குறித்த இளைஞரின் வீட்டிற்குச் சென்ற தெல்லிப்பழைப் பொலிஸார் அவரைப் பொலிஸ் நிலையம் அழைத்துச் சென்று கைது செய்துள்ளனர்.

இதேவேளை, குறித்த கைது நடவடிக்கை மேற்படி பகுதி மக்களிடையே மீண்டும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளதாகவும் எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

Print Friendly, PDF & Email