SHARE

வடமாகாண வேலையற்ற பட்டதாரிகள் சமூகத்தின் ஏற்பாட்டில் இன்று புதன்கிழமை(20) யாழில் முக்கிய கலந்துரையாடலொன்று நடாத்தப்பட்டுள்ளது.
இன்று காலை-09.45 மணியளவில் வடமாகாண வேலையற்ற பட்டதாரிகளின் பிரதிநிதிகள் யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் நாகலிங்கம் வேதநாயகனைச் சந்தித்துக் கலந்துரையாடினர்.

இந்தக் கலந்துரையாடலின் போது “முதற்கட்டமாக 5000 பட்டதாரிகள் உள்வாங்கப்படவுள்ளதாகவும், அடுத்த 15000 பட்டதாரிகளுக்கான நியமன வெற்றிடத்தில் பிரதேச செயலகத்தில் பதிவு செய்தல் வேண்டும்” எனவும் தெரிவித்தார்.
குறித்த கலந்துரையாடலின் பின் வேலையற்ற பட்டதாரிகளுக்கிடையிலான கலந்துரையாடல் யாழ். மாவட்டச் செயலகத்திற்கு முன்பாக இடம்பெற்றது.

இந்தக் கலந்துரையாடலின் போது பட்டதாரிகளுக்குப் பட்ட இறுதித் திகதி அடிப்படையில் நியமனம் வழங்குதல் வேண்டும் என முடிவெடுக்கப்பட்டது. குறித்த கோரிக்கையை முன்னிறுத்தி வடமாகாணத்தில் நேர்முகத்தேர்வை எதிர்கொண்ட வடமாகாணப் பட்டதாரிகள் அனைவரும் நாளை மறுதினம் வெள்ளிக்கிழமை(22) முதல் தொடர் போராட்டத்தில் ஈடுபடுவதென ஏகமனதாகத் தீர்மானிக்கப்பட்டது.

இதேவேளை,குறித்த போராட்டம் யாழ்.மாவட்டச் செயலகம் முன்பாக ஆரம்பிக்கப்படவுள்ளதாகத் தெரிவித்துள்ள வடமாகாண வேலையற்ற பட்டதாரிகள் சமூகம் இந்தப் போராட்டத்தில் வேலையற்ற பட்டதாரிகள் அனைவரும் முழுமையாகப் பங்குபற்றுவதனூடாகவே எமக்கான உறுதியான தீர்வைப் பெற முடியுமெனவும் தெரிவித்துள்ளது.

Print Friendly, PDF & Email