SHARE

வல்வெட்டித்துறை பொலிஸ் நிலையத்தில் தடுப்பு காவலில் தடுத்து வைத்து இரு இளைஞர்களை பொலிஸ் பொறுப்பதிகாரி மிக மோசமாக சித்திரவதை செய்து தாக்கினார் என பாதிக்கப்பட்டவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். 

வல்வெட்டித்துறை மீனாட்சி அம்மன் கோவிலடியை சேர்ந்த சுந்தரலிங்கம் கெங்காரூபன் மற்றும் தீருவிலை சேர்ந்த குகதாஸ் விஜயதாஸ் ஆகிய இருவருமே சித்திவரதைக்கு உள்ளாகி உள்ளனர் என தெரிவித்தனர்.
குறித்த சம்பவம் தொடர்பில் பாதிக்கப்பட்டவரான சு. கெங்காரூபன் தெரிவிக்கையில்
கடந்த சனிக்கிழமை 16ஆம் திகதி ஊரில் நண்பர்களுக்கு இடையில் கைக்கலப்பு ஏற்பட்டது. அதன் போது எனது நண்பர் ஒருவரும் தாக்குதலுக்கு இலக்கானார். தாக்குதலுக்கு இலக்கான நண்பரை நான் அழைத்து வந்த போது , மற்றைய தரப்பினருக்கு சாதகமாக நடந்து கொண்ட வல்வெட்டித்துறை பொலிசார் எம்மை உதயசூரியன் கடற்கரை மதவடி பகுதியில் வழிமறித்து தாக்குதல் நடாத்தினார்கள்.
பின்னர் எம்மை பொலிஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று அங்கு தடுத்து வைத்து எம்மை சிவில் உடையில் இருந்த பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி உள்ளிட்ட பொலிசார் கடுமையாக சித்திரவதை புரிந்து எம்மை தாக்கினார்கள்.
அதனால் எமது உடலில் கண்டால் காயங்கள் ஏற்பட்டு இருந்தன. பின்னர் எம்மை பருத்தித்துறை நீதிவான் நீதிமன்றில் முற்படுத்தினார்கள். அன்றைய தினமே நீதிவான் எமக்கு பிணை வழங்கினார்.
எமது ஊரில் உள்ள ஊறணி வைத்திய சாலைக்கு சென்று சிகிச்சை பெற்றால் , பொலிசாரின் அச்சுறுத்தல் இருக்கும் என்பதனால் நாம் நேற்றைய தினம் திங்கட்கிழமை யாழ்.மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு பதிவு செய்த பின்னர் தற்போது யாழ்.போதனா வைத்திய சாலையில் தங்கி சிகிச்சை பெற்று வருகின்றோம் என தெரிவித்தார்.
Print Friendly, PDF & Email