SHARE

கூட்டமைப்பு- முன்னணி ஆதரவாளர்கள் முறுகல் 

கடலட்டை தொழிலை தடை செய்யக் கோரி யாழ். கடற்றொழில் நீரியல் வளத் திணைக்கள அலுவலக முற்றுகைப் போராட்டத்தில் மக்களுடன் பங்கேற்ற தமிழ் தேசியக்கூட்டமைப்பினருக்கும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினருக்கும் சர்ச்சை ஏற்பட்டுள்ளது.

வடமராட்சி கிழக்கு பிரதேசத்தில் வெளியிடங்களை சேர்ந்தவர்களால் மேற்கொள்ளப்படும் கடலட்டை பிடிப்பை நிறுத்துமாறு கோரி, இன்று யாழ்ப்பாண நகரிலுள்ள கடற்றொழில் நீரியல் வளத் திணைக்களம் முற்றுகையிடப்பட்டு போராட்டம் நடத்தப்பட்டது.

இதில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், பொதுச் செயலாளர் செ.கஜேந்திரன் மற்றும் வடமாகாணசபை உறுப்பினர்கள் சந்திரலிங்கம் சுகிர்தன், ரவிகரன் உள்ளிட்டவர்களும் இந்த போராட்டத்தில் கலந்துகொண்டனரன் .

இந்நிலையில் போராட்டத்தின் போது  ஊடங்களுக்குக் கருத்துத் தெரிவித்த தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளர் செ.கஜேந்திரன், “கொழும்பில் அரசுக்கு முண்டு கொடுத்துக் கொண்டு இங்கு வந்து போராட்டம் நடத்துகின்றனர்” என்று குறிப்பிட்டார்.

இதை கேட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர்கள் ஆதரவாளர்கள் தர்க்கத்தில் ஈடுபட்டனர்.

கூட்டமைப்பின் முன்னாள் பிரதேச சபை உறுப்பினராக பன்னீர்ச் செல்வம் “2010ஆம் ஆண்டுக்கு முன்னர் நீங்கள் அதைத்தானே செய்தீர்கள்” என்று கஜேந்திரனுடன் தர்க்கப்பட்டார்.

பின்னர் தர்க்கத்தில் ஈடுபட்டவர்களை ஏனையோர் சமரசப்படுத்த குழப்ப நிலை முடிவுக்கு வந்தது.

Print Friendly, PDF & Email