SHARE

யாழ். கோட்டைக்குள் இராணுவத்தை அமர்த்த அனுமதித்தால் யாழ் நகர்ப்பகுதியில் அமைந்துள்ள இராணுவ முகாம்கள் அனைத்தும் அகற்றப்படும் என இராணுவத்தினர் தெரிவித்துள்ளனர்.
கோட்டையை இராணுவத்திற்கு வழங்கினால் தற்போது இராணுவத்தினர் நிலைகொண்டுள்ள பல இடங்களை மீட்டு அபிவிருத்தி செய்ய முடியும் என பிரதமர் ரணில் விக்கிரம சிங்க ஆலோசனை வழங்கியுள்ளார்.

யாழ்.மாவட்டத்தில் படையினர் வசமுள்ள பொதுமக்களின் காணி விடுவிப்பு தொடர்பாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் பாதுகாப்பு படைத்தரப்பினர், அரச அதிகரிகள் மற்றும் மக்கள் பிரதிநிதிகளுக்கு இடையிலான கலந்துரையாடல் ஒன்று நேற்று யாழ்.மாவட்ட அரச அதிபர் அலுவலகத்தில் இடம்பெற்றது. குறித்த கலந்துரையாடலிலேயே மேற்கண்டவாறு இராணுவத்தினர் தெரிவித்துள்ளனர்.

யாழ்ப்பாணம் கோட்டை அமைந்துள்ள நிலப்பரப்பினுள் உள்ள 40 ஏக்கர் நிலப்பரப்பில் இருந்து 6 ஏக்கர் நிலத்தினை இராணுவத்தினருக்கு தந்தால் யாழ். நகர்ப்பகுதியில் ஆங்காங்கே அமைக்கப்பட்டுள்ள இராணுவ முகாமகள் அனைத்தும் உடனடியாக அகற்றப்படும் என இராணுவத்தளபதி தெரிவித்தார்
யாழ். கோட்டை தொல்லியல் சார் முக்கியத்துவத்தை கொண்ட மையமாகவும் மரபுரிமை சின்னமாக இருப்பதுடன் சுற்றுலா மையமாக உள்ளது. எனவே அங்கு இராணுவத்தினரை எவ்வாறு அமர்த்துவது என மக்கள் பிரதிநிதிகள் கேள்வி எழுப்பியிருந்தனர்.

அதற்கு பதிலளித்த பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, நகர் அபிவிருத்திக்கு காணிகள் தேவைப்பாடாக உள்ளது. எனவே 6 ஏக்கர் நிலப்பரப்பை கோட்டையில் இராணுவத்துக்கு கொடுத்தால் நகர்ப்புற காணிகளை நாம் மீட்க முடியும். அங்கு அபிவிருத்தி செய்ய முடியும் என மக்கள் பஜரதிநிதிகளுக்கு ஆலோசனை வழங்கிளார்.
எனவே தொல்லியல் திணைக்களத்திடம் இது தொடர்பாக பேசி மிக விரைவில் நடவடிக்கை எடுப்பதாக அவர் மேலும் தெரிவித்தார்.

Print Friendly, PDF & Email