SHARE

பலாலி பிராந்திய விமானநிலைய விஸ்தரிப்புக்கு 724 ஏக்கர் காணி மட்டுமே தேவை என விமானப்படை தரப்பு தெரிவித்துள்ள நிலையில் விமானநிலைய விஸ்தரிப்புக்கு என மீண்டும் மேலதிகமாக பொதுமக்களின் காணி சுவீகரிக்கப்படக்கூடாது என மக்கள் பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர்.

யாழ்.மாவட்டத்தில் படையினர் வசமுள்ள பொதுமக்களின் காணி விடுவிப்பு தொடர்பாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் பாதுகாப்பு படைத்தரப்பினர், அரச அதிகரிகள் மற்றும் மக்கள் பிரதிநிதிகளுக்கு இடையிலான கலந்துரையாடல் ஒன்று நேற்று யாழ்.மாவட்ட அரச அதிபர் அலுவலகத்தில் இடம்பெற்றது. குறித்த கலந்துரையாடலிலேயே மேற்குறித்த விடயத்தை விமானப்படை அதிகாரி தெரிவித்துள்ளார்.

பலாலி விமானநிலைய விஸ்தரிப்புக்கு ஏற்கனவே 600 ஏக்கர் காணி சுவீகரிக்கப்பட்டது. இந்த நிலையில் மேலதிகமாக பொதுமக்களின் 400 ஏக்கர் காணி சுவீகரிக்கப்படப்போவதாக அண்மையில் அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் மக்களின் காணிகள் சுவீகரிக்கப்படவுள்ளமைக்கு பொதுமக்கள் மக்கள் பிரதிநிதிகள் தமது எதிர்ப்பினை வெளியிட்டிருந்தனர்.

எனவே நேற்றைய கலந்துரையாடலில் இந்த விடயம் தொடர்பாக கலந்துரையாடியிருந்தனர் அதில், பலாலி பிராந்திய விமானநிலைய விஸ்தரிப்புக்கு குறைந்த பட்சம் எத்தனை ஏக்கர் காணி தேவை என படைத்தரப்பிடம் கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த விமானப்படை அதிகாரி பலாலி விமானநிலைய விஸ்தரிப்புக்கு 724 போதும் எனவும் அதை விட குறைந்த அளவு காணி விஸ்தரிப்புக்கு போதாது எனவும் மேலதிகமாக காணி தேவையில்லை எனவும் தெரிவித்தனர்.

எனவே அதற்கு அனைத்து தரப்பும் சம்மதித்துள்ள நிலையில் விமானநிலைய விஸ்தரிப்புக்கு மேலதிக நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பிரதமர் தெரிவித்திருந்தார்.
குறித்த கலந்துரையாடலில் வலி வடக்கு பிரதேசத்தில் கடற்படையினர் வசமுள்ள காணிகளை விடுவிக்குமாறு மக்கள் பிரதிநிதிகள் கோரிக்கை விடுத்திருந்தனர். அத்துடன் படையினர் வசமுள்ள பிரதான வீதிகளை விடுவிக்குமாறும் கோரிக்கை முன்வைக்கப்பட்டது.

பாரிய படை முகாம்கள் அமைந்துள்ள பகுதிகள் தற்போது விடுவிப்பதற்கான சாத்தியக்கூறுகள் இல்லை என்பதுடன், பிரதான வீதிகள், மதஸ்தலங்கள் பாடசாலைகள் உள்ளிட்ட பகுதிகள் எதிர்வரும் சில மாதங்களுக்குள் விடுவிப்பதற்கான சாத்தியக்கூறுகள் இருப்பதாக படைத்தரப்பு தெரவித்துள்ளது.

Print Friendly, PDF & Email