SHARE

இந்திய வம்சாவளி அமைப்புகள் எதிர்ப்புத் தெரிவித்திருந்தாலும், சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்சவின் மலேசியப் பயணம் அரசியல் அழுத்தங்களால் கைவிடப்படவில்லை என்று கோலாலம்பூரில் உள்ள சிறிலங்கா தூதரகம் கூறியுள்ளது.

இது தொடர்பாக ‘மலாய் மெயில்‘ நாளிதழுக்கு சிறிலங்கா பதில் தூதுவர் மேஜர் ஜெனரல் லலித் தவுலகல கருத்து வெளியிடுகையில்,

“அமெரிக்காவில் சிகிச்சை பெற்று வந்த சிறிலங்கா பிரதமர் டி.எம்.ஜெயரட்ணவை பார்வையிடச் சென்றதால் தான், சிறிலங்கா அதிபரின் மலேசியப் பயணம் கைவிடப்பட்டது.

ஆரம்பத்தில் கடந்த ஜனவரி மாதம் இந்த அழைப்பை சிறிலங்கா அதிபர் ஏற்கவில்லை.

பின்னர், சிறிலங்காவில் நடந்த வர்த்தக மாநாடு ஒன்றில் பங்கேற்ற மலேசிய முக்கிய பிரமுகர் ஒருவரின் வற்புறுத்தலின் பேரில் தான் அவர் மலேசியா வரச் சம்மதித்தார்.

சிறிலங்கா அதிபர் கசகஸ்தான் சென்றிருந்தபோதே, நாம், அவரது மலேசியப் பயணம் தவிர்க்க முடியாத சூழ்நிலைகளால் கைவிடப்பட்டு விட்டதை அறிவித்திருந்தோம்.

அவர் அமெரிக்காவில் சிறிலங்கா பிரதமரை பார்க்க முடிவு செய்திருந்தார்.

மலேசியாவில் எதிர்ப்புக் கிளம்ப முன்னர், நவம்பர் 23ம் நாளே தனது பயணம் கைவிடப்பட்டதை சிறிலங்கா அதிபர் எமக்கு அறிவித்திருந்தார்.” என்று குறிப்பிட்டுள்ளார்.

எனினும், சிறிலங்கா அதிபர் கலந்து கொள்ளவிருந்த இஸ்லாமிய பொருளாதார மன்றத்தின் மாநாடு கடந்த 4ம் நாள் தொடங்கி நேற்று வரை நடந்திருந்தது.

அதேவேளை அமெரிக்காவில் சிறிலங்கா பிரதமரை பார்த்து விட்டு, கடந்த மாதம் 27ம் நாள் மகிந்த ராஜபக்ச கொழும்பு திரும்பி விட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Print Friendly, PDF & Email