SHARE

அவுஸ்ரேலியாவுக்குச் சென்றபோது இயந்திரம் பழுதடைந்ததால் நடக்கடலில் 27 நாட்களாகத் தத்தளித்த 30 அகதிகளை சிறிலங்கா கடற்படையினர் மீட்டுள்ளனர்.

இவர்கள் அனைவரும் நேற்று தங்காலை துறைமுகத்துக்கு கொண்டு வரப்பட்டுள்ளனர்.

மீட்கப்பட்டவர்களில் 19 பேர் தமிழர்கள் என்றும், 11 பேர் சிங்களவர்கள் என்றும் சிறிலங்கா கடற்படைப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

ஆண்களான இவர்கள் யாழ்ப்பாணம், கிளிநொச்சி, வவுனியா, மன்னார், சிலாபம் மற்றும் நீர்கொழும்பு பகுதிகளைச் சேர்ந்தவர்களாவர்.

சிறிலங்காவுக்குத் தென்கிழக்கே 300 கடல் மைல் தொலைவில் சென்று கொண்டிருந்த போது இவர்கள் பயணம் செய்த படகின் புரொப்ளர் உடைந்து போனது.

நீர்கொழும்பில் இருந்து கடந்த மாதம் 17ம் நாள் இந்தப் படகு புறப்பட்டுள்ளது. ஐந்து நாட்கள் கழித்து படகு பழுதடைந்து போனதால், கடந்த 27 நாட்களாக அதில் இருந்த 30 பேரும் நடக்கடலில் செய்வதறியாமல் தத்தளித்துக் கொண்டிருந்தனர்.

படகில் இருந்தவர்கள் விடுத்த அபாய சமிக்ஞைகளை அடுத்து மற்றொரு மீன்பிடிப் படகு சிறிலங்கா கடற்படைக்கு தகவல் கொடுத்தது.

இதையடுத்து சிறிலங்கா கடற்படையின் அதிவேக ரோந்துப்படகு விரைந்து சென்று அந்தப் படகில் இருந்த அனைவரையும் மீட்டு நேற்று கரைக்கு கொண்டு வந்தது.

மீட்கப்பட்ட அனைவரும் பசி மற்றும் தாகத்தினால் உயர் நீரிழப்பு ஏற்பட்டு மிகவும் சோர்வுற்ற நிலையில் இருந்தனர்.

Print Friendly, PDF & Email