யாழ்., வடமராட்சி பிரதேசத்தின் நெல்லியடி நகரப்பகுதியிலுள்ள நகைக்கடையொன்றிலிருந்து 90 ஆயிரம் ரூபா பெறுமதியான நகைகள் நேற்று பட்டப்பகலில் களவாடப்பட்டுள்ளன.
இச்சம்பவம் பற்றி தெரியவருவதாவது:
மேற்படி நகைக்கடைக்கு வந்த இருவர் ஒரு பவுண் சங்கிலியும் அரைப்பவுண் மோதிரமும் தேவையென கேட்டுள்ளனர்.
அதனை தொடர்ந்து நகைக்கடை ஊழியர் ஒருவர் அதனை கொடுத்துள்ளார். உடனே அதனை சம்பந்தப்பட்ட நபர் வாங்கி காற்சட்டை பொக்கட்டினுள் வைத்துள்ளார்.
அதன் பின்னர் கதிரையிலிருந்து ௭ழுந்த அவர் பணத்தை ௭டுப்பதாக பாசாங்கு செய்துவிட்டு கடையை விட்டு தப்பியோடியுள்ளார்.
அவருடன் வந்தவரும் அவரை பின்தொடர்ந்து தப்பியோடியுள்ளார்.
இருவரில் ஒருவரை உரிமையாளர் மற்றும் பொதுமக்கள் மடக்கிப் பிடித்து நையப்புடைத்து நெல்லியடிப் பொலிஸாரிடம் ஒப்படைத்தனர்.
அவரிடம் விசாரணையை மேற்கொண்ட போது இவர் கரவெட்டியைச் சேர்ந்தவர், நகையைக் களவாடி தப்பியோடியவர் அருகிலுள்ள மதுபானக் கடையிலேயே தன்னுடன் கதைத்ததாகவும், நகை வாங்கப் போவதற்கு தன்னையும் உதவிக்கு வருமாறும் கேட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பான விசாரணையை நெல்லியடிப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.