ஈ.பி.டி.பி. கட்சியின் தலைமைச் செயலகமாக தற்போது உள்ள யாழ்.நகர் ஸ்ரீதர் தியேட்டர் வளாகத்தை கடந்த 15 வருடங்களுக்கு மேல் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஆக்கிரமித்து வைத்துள்ளதாக அதன் உரிமையாளர் குற்றஞ்சாட்டியுள்ளார்.
அத்துடன் அதனை மீட்டுத் தருமாறு கோரி பல்வேறு தரப்பினரிடம் முறையிட்டும் இதுவரை எந்தப் பயனும் இல்லை எனவும் அதன் உரிமையாளர் மகேந்திரரவிராஜ் சண்டே லீடர் பத்திரிகைக்குத் தெரிவித்துள்ளார்.
இந்தக் கட்டிடத்திற்கான வாடகை கூட தனக்குத் தரப்படுவதில்லை எனவும் அவர் கவலை தெரிவித்துள்ளார்.
கடந்த 12ம் திகதி ஞாயிற்றுக்கிழமை வெளியான சண்டே லீடர் பத்திரிகையில் இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,
ஸ்ரான்லி வீதியில் அமைந்துள்ள ஸ்ரீதர் தியேட்டர் வளாகம் எனது சொந்தக் கட்டடமாகும். எனது தந்தை வழிச் சொத்தான இதனை தற்போது நான் அணுக முடியாத நிலையுள்ளது.
அதேவேளை, யாழ்ப்பாணத்தில் ஒரு பெரிய திரையரங்காகவும் ( தியேட்டர்) இது இருக்கிறது.
1991 ம் ஆண்டு நான் இங்கிலாந்தில் வசித்து வந்த நிலையில் ஒருசில பாதுகாப்பு உத்தியோகத்தர்களை நியமித்து இந்தக் கட்டடத்தை பராமரித்து வந்தேன்.
இந்நிலையில் டக்ளஸ் தேவானந்தா துப்பாக்கி முனையில் அவர்களை விரட்டிவிட்டு கட்டடத்தை ஆக்கிரமித்துக்கொண்டார் எனவும் பல தடவைகள் கட்டடத்தை விடுவிக்குமாறு கேட்டபோதும், விடுவிக்க மறுக்கும் அமைச்சர் கட்டிடத்திற்கான வாடகையினை தருமாறு கேட்டபோதும் 5 ஆயிரம், 6 ஆயிரம் என வாடகை கட்டணத்தை நியமிக்குமாறு கேட்டு வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை இந்த அமைச்சர் ஆலயங்களுக்கும், பொது மையங்களுக்கும் வரவுசெலவுத் திட்டத்திலிருந்து நிதியொதுக்கும்போது அதிலிருந்து குறிப்பிட்டளவு நிதி தமக்கு கிடைக்கவேண்டும் என வங்கி கணக்கு இலக்கங்களை வழங்கி வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.