சிறிலங்காவில் போரினால் இடம்பெயர்ந்த தமிழ் மக்களுக்கான இந்தியாவின் 270 மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான வீடமைப்புத் திட்டம் மிக நீண்ட தாமதத்தின் பின்னர், தற்போது மீண்டும் செயல்படத் தொடங்கி உள்ளது.
“இதில் 1000 வீடுகளைக் கட்டுவதற்கான மாதிரித் திட்டம் ஏற்கனவே பூர்த்தியடைந்து விட்டது. அடுத்த கட்டமாக 43,000 வீடுகளைக் கட்டுவதற்கான திட்டத்தின் இரண்டாவது கட்டம் தற்போது வடக்கு கிழக்கு மாகாணங்களில் தொடங்கப்படுகிறது” என சிறிலங்காவுக்கான இந்திய உயர் ஆணையர் அசோக் கே.காந்தா இந்திய சுதந்திர நாள் உரையில் தெரிவித்துள்ளார்.
இத்திட்டத்தின் முதற்கட்டமாக 1000 வீடுகளைக் கட்டுவதற்கான மாதிரித் திட்டம் இவ்வாண்டு ஜுலை மாதத்தில் நிறைவடைந்துள்ளது.
இதனைத் தொடர்ந்து, அடுத்த கட்டமான 43,000 வீடுகளை நிர்மாணிப்பதற்கு உள்நாட்டில் சிறிலங்கா செஞ்சிலுவைச் சங்கத்தை பங்காளி நிறுவனமாகக் கொண்ட அனைத்துலக செஞ்சிலுவைச் சங்கம், சிறிலங்கா அரசாங்கத்தின் தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அமைப்பு, மற்றும் UN-HABITAT போன்ற திட்ட செயலாக்கல் அமைப்புக்களுடன் இந்திய உயர் ஆணையர் உடன்படிக்கைகளை செய்துகொண்டிருந்தார்.
வீடுகளை நிர்மாணிக்கும் நிறுவனங்களின் தொழில்நுட்ப மற்றும் ஏனைய உதவிகளுடன் சிறிலங்காவின் வடக்கு கிழக்கில் தெரிவுசெய்யப்படும் பயனாளிகள் தமது வீடுகளை நிர்மாணிக்க அல்லது திருத்த முடியும். இவ்வீடுகளை நிர்மாணிப்பதற்கான நிதி, தெரிவு செய்யப்படும் பயனாளிகளின் வங்கிக் கணக்குகளில் இந்திய உயர் ஆணையகத்தினால் நேரடியாக வைப்புச் செய்யப்படும்.
இந்தியாவின் இரண்டாவது கட்ட வீட்டுத் திட்டத்தில் நிர்மாணிக்கப்படும் வீடுகள் மூலம் வடக்கு கிழக்கில் வீடிழந்து வாழும் மக்களின் பெரும்பகுதியினர் வீடுகளைப் பெற்றுக் கொள்ள முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இத்திட்டத்தின் இறுதிக் கட்டத்தில் வடக்கு, கிழக்கு, மத்திய மற்றும் ஊவா மாகாணங்களில் வாழும் மிகவும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு 6000 வீடுகளை இந்தியா நேரடியாக நிர்மாணிக்கவுள்ளது.
ஜுன் 2010ல் சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச இந்தியாவிற்கு பயணம் செய்த போது, சிறிலங்காவில் போரால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு 50,000 வீடுகளை நிர்மாணிப்பதற்கான நிதியை இந்திய அரசாங்கம் வழங்கும் என இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் அறிவித்திருந்தார்.
இதன் ஒருபகுதியாகவே தற்போது 43,000 வீடுகள் நிர்மாணிக்கப்படவுள்ளன.
இதன் மாதிரித் திட்டமானது சிறிலங்காவின் வடக்கு மாகாணத்தில் உள்ள ஐந்து மாவட்டங்களில் நவம்பர்
2010ல் ஆரம்பிக்கப்பட்டது.
கடந்த ஜுலை 13 ம் நாள் வரை, இம்மாதிரித் திட்டத்தின் கீழ் 950 வீடுகள் பூர்த்தியாக்கப்பட்டு பெரும்பாலான வீடுகள் அவர்களது பயனாளிகளிடம் கையளிக்கப்பட்டன. எஞ்சிய 50 வீடுகள் ஜுலை மாத இறுதியில் பூர்த்தியாக்கப்பட்டன.