கிழக்கு மாகாணசபைக்கு அடுத்தமாதம் 8 ம் நாள் நடைபெறவுள்ள தேர்தலில் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி வெற்றிபெற்றால், தற்போதைய முதல்வர் சந்திரகாந்தன் மீண்டும் முதல்வராக வாய்ப்புக் கிடைக்காது என்று கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
இதுதொடர்பாக தகவல் வெளியிட்டுள்ள சிறிலங்கா சுதந்திரக் கட்சி வட்டாரங்கள், இந்தத் தேர்தலில் பிரதி அமைச்சர் முரளிதரனின் (கருணா) சகோதரி தவமலரும் போட்டியிடுவதால் மீண்டும் முதல்வராகும் வாய்ப்பு சந்திரகாந்தனுக்கு மறுக்கப்படலாம் என்று கூறியுள்ளன.
சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் கீழ்மட்டத் தலைவர்கள் தவமலருக்காக பரப்புரைகளை செய்துவரும் அதேவேளை, சந்திரகாந்தன் தலைமையிலான தமிழ்மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியினர் பலரும் கருணாவுக்கு ஆதரவு வழங்குவதாகவும் அந்த வட்டாரங்கள் கூறியுள்ளன.
தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியில் இருந்து பலர் வெளியேறியுள்ளதை அடுத்து, கிழக்கில் சந்திரகாந்தனின் செல்வாக்கு வீழ்ச்சியடைந்துள்ளதாக சிறிலங்கா சுதந்திரக் கட்சி மேற்கொண்ட ஆய்வில் இருந்து தெரியவந்துள்ளதாகவும் கொழும்பு ஆங்கில ஊடகம் சுட்டிக்காட்டியுள்ளது.