SHARE

ஐக்கிய நாடுகள் உயர் ஆணையாளர் விசனம்

பல தசாப்த காலம நீடித்த உள்நாட்டு போர் முடிவடைந்த 15 வருடங்களானபோதிலும் மனித உரிமைகள் மீறல்கள் தொடர்பான விடயம் இன்னமும் கவனத்தில் எடுக்கப்படாதிருக்கிறது என மனித உரிமைகளுக்கான ஐக்கிய நாடுகள் உயர் ஆணையாளர் வொல்கெர் டேர்க் தெரிவித்துள்ளார்.

மேலும் காணமற்போன ஆட்களில் பல்லாயிரக்கணக்கான குடும்பங்கள் இன்னமும் தமது அன்புக்குரியவர்களை தேடிக்கொண்டிருப்பதுடன் அத்தேடலின் போது அவர்கள் பயமுறுத்தல், கைதுகள் மற்றும் வன்முறை என்பவற்றை எதிர்கொண்டு வருகிறார்கள் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஜெனிவாவில் நடைபெற்றுவரும் ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் 55 ஆவது ஆமர்வில் இலங்கை தொடர்பிலான வாய்மூல அறிக்கையின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவ்வறிக்கையில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

நாட்டின் வடக்கு மற்றும் கிழக்குப் பிரதேசங்களில் காணித் தகராறுகள் தொடர்ந்து தீவிரமடைந்து வருவதுடன், அது மக்களின் வாழ்வாதாரங்களின் மீது தாக்கங்களை ஏற்படுத்துகின்றது. ஓரளவுக்கு அதிகாரப் பகிர்வுக்கான வாக்குறுதியை வழங்கிய மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்றங்கள் என்பன இப்பொழுது செயற்படாதிருந்து வருகின்றன.

உண்மை, ஒருமைப்பாடு மற்றும் நல்லிணக்கம் என்பவற்றுக்கான ஆணைகுழு ஒன்றுக்கான வரைவுச் சட்டத்தை அரசாங்கம் அறிமுகம் செய்து வைத்திருக்கும் அதே வேளையில், நம்பகமான விதத்தில் உண்மையைக் கண்டறியும் ஒரு செயன்முறை இடம்பெறக் கூடிய ஒரு சூழல் நாட்டில் காணப்படவில்லை. சிவில் சமூகப் பிரதிநிதிகள், இதழியலாளர்கள் மற்றும் பாதிக்கப்பட்டவர்கள் ஆகியோர் தொடர்பாகப் பாதுகாப்புப் படையினர் கண்காணிப்பு, துன்புறுத்தல் மற்றும் கைதுகள் என்பவற்றை தொடர்ந்து மேற்கொண்டு வருவதாக எனது அலுவலகத்திற்கு தொடர்ச்சியாகக் குற்றச்சாட்டுகள் கிடைத்து வருகின்றன. போரினால் பாதிக்கப்பட்டவர்கள் தொடர்பாக நினைவேந்தல் நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்வதில் சம்பந்தப்பட்டிருப்பவர்களும் இதே விதத்தில் இந்த பாதிப்புகளை எதிர்கொள்கிறார்கள்.

இலங்கை பொலிஸ் மற்றும் பாதுகாப்புப் படைகள் ஆகிய தரப்பினரால் பாலியல் வன்முறையையும் உள்ளடக்கிய விதத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் ஆட் கடத்தல்கள், சட்டவிரோதமான தடுத்து வைப்பு மற்றும் சித்திரவதை என்பன தொடர்பான தகவல்கள் எனது அலுவலகத்துக்கு கிடைத்து வருவது குறித்து நான் ஆழ்;ந்த கவலை அடைந்துள்ளேன்.

இச்சம்பவங்கள் ஒரு சில 2023 ஆம் ஆண்டில் பிரதானமாக நாட்டின் வடக்குக் கிழக்குப் பிரதேசங்களில் நிகழ்ந்திருப்பதாகக் கூறப்படுகின்றது. கடந்த வாரம் ஒரு புதிய பொலிஸ் மா அதிபரின் நியமனம் ஊர்ஜிதம் செய்யப்பட்டது. 2010 ஆம் ஆண்டில் அவர் ஆளொருவரை சித்திரவதை செய்தாரென உயர் நீதிமன்றம் கண்டறிந்த நிலைக்கு மத்தியிலேயே இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது. இந்தச் சம்பவங்கள் அனைத்துமடங்கிய பாதுகாப்புத் துறை சீர்த்திருத்தமொன்றுக்கான தேவையையெடுத்துக் காட்டுகின்றன என்றும் அவர் அதில் தெரிவித்துள்ளார்.

Print Friendly, PDF & Email