SHARE

இலங்கையின் 76 ஆவது சுதந்திர தினத்தினை எதிர்த்து பிரித்தானியா வாழ் புலம்பெயர் தமிழர்கள் இலண்டனில் நடத்திய போராட்டத்திற்கு எதிராக சிறிலங்கா அரசு பிரித்தானியா மீது தனது அதிருப்தியை வெளிப்படுத்தும் என இலங்கை வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.

குறித்த சம்பவம் தொடர்பில் இலங்கை அரசாங்கத்தின் அதிருப்தியை இலண்டனிலுள்ள இலங்கை உயர்ஸ்தானிகராலயத்தின் ஊடாக பிரித்தானியாவிற்கு தெரிவிக்கவுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையிலும் ஏனைய நாடுகளிலும் தடைசெய்யப்பட்ட அமைப்பொன்று இலண்டனில் போராட்டம் நடத்துவதை இலங்கை அரசாங்கம் இங்கிலாந்திலுள்ள வெளிவிவகார அமைச்சின் கவனத்திற்கு கொண்டு செல்வதாகவும் தெரிவித்தார். ஆனால் அவர் எந்த அமைப்பை பற்றி பேசுகிறார் என்பதை குறிப்பிடவில்லை.

இலங்கையின் சுதந்திர தினத்தை தமிழர்களின் கறுப்பு நாளாக குறிக்கும் வகையில் கடந்த பெப்பரவரி 4 ஆம் திகதி சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பும்பெயர் தமிழர்கள் இலண்டனிலுள்ள இலங்கை உயர்ஸ்தானிகராலயத்திற்கு முன்னாள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

உயர்ஸ்தானிகராலயத்திற்கு முன்னாள் தமிழீழ தேசிய கொடிகளை ஏந்திய வாறு ‘தமிழீழம் ஒன்றே தீர்வு’ ‘போர்க்குற்றங்கள் மட்டுமல்ல இது திட்டமிட்ட இனப்படுகொலை’ என்ற வாசகங்கள் அடங்கிய பதாகைகளுடனும் வானுயர கோசங்களை எழுப்பினர். அத்துடன் பேரணியாக பாராளுமன்ற சதுக்கத்திற்கும் சென்றிருந்தனர்.

Print Friendly, PDF & Email