SHARE

இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தியின் கொலை வழக்குடன் தொடர்புடைய சாந்தனை இலங்கைக்கு திருப்பி அனுப்புவதற்கான உத்தரவினை ஒருவார காலத்திற்குள் அறிவிக்கவுள்ளதாக இந்திய மத்திய அரசாங்கம் இன்று நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தண்டனை விதிக்கப்பட்டு பின்னர் பொதுமன்னிப்பின் கீழ் இலங்கையை சேர்ந்த சாந்தன் விடுவிக்கப்பட்டிருந்தார்.

எனினும் தமிழகத்திலுள்ள திருச்சி சிறப்பு முகாமில் சாந்தன் தொடந்தும் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.

தடுத்து வைக்கப்பட்டுள்ள சாந்தனை விடுவிக்குமாறு தொடர்ந்து கோரிக்கைகள் முன்வைக்கப்பட்ட நிலையில் சாந்தனை இலங்கைக்கு திருப்பி அனுப்புவதற்கான உத்தரவு ஒரு வாரகாலத்தில் வெளியாகும் என இந்திய மத்திய அரசாங்கம் இன்று தெரிவித்துள்ளது.

இலங்கையில் வசித்து வருகின்ற தாயாரை கவனித்துக்கொள்வதற்காக தன்னை விடுதலை செய்யக்கோரி சாந்தன் தாக்கல் செய்த மனு சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

இதன்போதே இந்தி மத்திய அரசாங்கத்திற்கு சார்பாக முன்னிலையான சட்டத்தரணி இதனை அறிவித்தார்.

விசாரணையின் போது சாந்தன் இலங்கை திரும்புவதற்கான தற்காலிக பயண ஆவணத்தை இலங்கை துணை தூதரகம் அனுப்பியுள்ளது.

இலங்கை அரசாங்கம் அனுப்பிய ஆவணங்கள் மத்திய அரசாங்கத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனஎன தமிழக அரசு தெரிவித்துள்ளது.

இதேவேளை தமிழக அரசாங்கம் அனுப்பிய ஆவணங்கள் இன்னமும் கிடைக்கவில்லை என சட்டத்தரணி நீதிமன்றத்தில் குறிப்பிட்டிருந்ததுடன் சாந்தனை இலங்கைக்கு அனுப்புவதற்கான உத்தரவு ஒரு வாரத்தில் பிறப்பிக்கப்படும் என்றும் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

Print Friendly, PDF & Email