SHARE

இலங்கைத்தீவ முழுவதிலும் உள்ள பாரிய மனித புதைகுழிகளை தோண்டி ஆய்வு செய்வதில் இலங்கை தொடர் தோல்விகளை சந்தித்து வருவதுடன் கடந்த மூன்று தசாப்தங்களாக வெறும் 20 மனித புதைகுழிகளே தோண்டப்பட்டுள்ளன. அதேவேளை இதுவரையில் எந்த குடும்பத்திற்கும் தங்களது அன்புக்குரியவர்களது மனித எச்சங்கள் கிடைக்கவில்லை என்பது தொடர்பாக சர்வதேச உண்மை மற்றும் நீதித் திட்டத்திற்கான அமையம் (ITJP) இன்று வெளிட்ட கூட்டறிக்கையை தாயகத்திலிருந்து புலம்பெயர்ந்து பிரித்தானியாவில் வாழும் காணாமலாக்கப்பட்டவர்களின் உறவினர்கள் பிரித்தானிய பாராளுமன்ற உறுப்பினர்களிடம் நேரில் சென்று கையளித்தனர்.

தென்னாபிரிக்காலை தளமாகக் கொண்ட இயங்கும் சர்வதேச உண்மை மற்றும் நீதித் திட்டத்திற்கான அமையம் (ITJP), இலங்கையில் ஜனநாயகத்திற்கான ஊடக அமையம் (JDS) மனித உரிமைகள் மற்றும் அபிவிருத்தி மையம் (CHRD) மற்றும் காணாமல் ஆக்கப்பட்டோரின் குடும்பங்கள் அமைப்பு (FOD) ஆகிய மனித உரிமைகள் அமைப்புக்கள் இணைந்து இலங்கையில் மூடிமறைக்கப்படும் பாரிய மனித புதைகுழிகள் பற்றிய ஆய்வு அறிக்கை ஒன்றை இன்று வெளியிட்டிருந்தனர்.

பாரிய புதைகுழிகள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என கோரிநிற்கும் அனைத்து சமூகங்களையும் சேர்ந்த காணாமல் ஆக்கப்பட்டவர்களின் குடும்பங்கள் சார்பில் வெளியான இந்த அறிக்கையில் சிறிலங்காவில் நடந்த மோதலின் பல்வேறு காலப்பகுதியைச் சேர்ந்த பாரிய மனிதப் புதைகுழிகளை சிறிலங்கா எவ்வாறு கையாண்டது என்பதையும் பல்லாயிரக்கணக்கான சடலங்கள் நாடாளாவிய ரீதியிலுள்ள புதைகுழிகளில் இன்னமும் புதையுண்டுதான் கிடக்கின்றன என்பதையும் எடுத்துக் கூறுகின்றது.

அதேவேளை, சிறிலங்காவில் அமைக்கப்பட்ட ஏராளமான விசாரணை ஆணைக் குழுக்களில் ஒன்றுகூட பாரிய மனிதப் புதைகுழிகளை விசாரணை செய்வதற்கான ஆணையைக் கொண்டிருக்கவில்லை. மாறாக, உண்மையை வெளிக்கொண்டு வரும் முயற்சிகள் தடைப்பட்டுள்ளன. நீதிபதிகளும், தடயவியல் நிபுணர்களும் திடீர் இடமாற்றங்களுக்கு ஆளாக்கப்பட்டுள்ளனர், நீதிமன்ற உத்தரவுகளை நிறைவேற்றுவதை காவல்துறை தாமதப் படுத்தியுள்ளது, குடும்பங்களின் சட்டவாளர்கள் புதைகுழிகள் உள்ள இடங்களுக்குப் போவதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது, தற்போதும் உயிருடன் உள்ள சாட்சிகளைக் கண்டறிவதற்கு எந்தவொரு முயற்சியும் எடுக்கப்படவில்லை என்பதையும் விளக்கி நிற்கின்றது.

அதேவேளை இவ்வறிக்கையினை எழுதிய அமைப்புக்கள் சிறிலங்கா அரசாங்கத்திற்கு 4 முக்கிய பரிந்துரைகளை விடுத்துள்ளன. அதில் பாரிய மனித புதைகுழி அகழ்வுகளை மேற்கொள் சட்டத்தினையும் கொள்கையினையும் இயற்றுதல் முன்மொழியப்பட்டுள்ள சட்டக் கட்டமைப்பு, கொள்கை, மற்றும் பாரிய மனிதப் புதைகுழிகள் மீதான நியம செயற்பாட்டு நடைமுறைகள் என்பன தொடர்பாக, ஐக்கிய நாடுகள் சபை மற்றும் இதர சர்வதேச வல்லுனர்கள் உட்பட, வெளிப்படையான ஆலோசனை செயற்பாடு ஒன்றினை மேற்கொள்ளுதல் பாரிய மனிதப் புதைகுழிகள் தொடர்பானது உள்ளிட்ட நாட்டிலுள்ள தடயவியல் ஆய்வுத்திறனை மேம்படுத்தல். ‘தேவையான நிபுணத்துவம் கிடைக்கும் வரை’ அகழ்வுப் பணிகளை இடை நிறுத்துவதற்காக காணாமற்போனவர்கள் மீதான அகில இலங்கை ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்தல் மற்றும் சட்டமா அதிபர் அலுவகத்தை மீள்கட்டமைப்புச் செய்தல், சுயாதீன வழக்குத்தொடரும் சேவையொன்றினை உருவாக்கி, அகழ்வுப் பணிகளின் முடிவுகள் தொடர்பான வழக்குகள் விசாரணைகள் சுயாதீனமாகவும் பக்கச்சார்பற்ற முறையிலும் இடம்பெறுகின்றன என்பதை உறுதிப்படுத்தல். ஆகிய கோரிக்கைளை முன்வைத்துள்ள.

இந்நிலையிலேயே இன்று வெளியாகிய சிறிலங்காவிலுள்ள மனித புதைகுழிகள் தொடர்பான மேற்படி கூட்டறிக்கையை தாயகத்திலிருந்து புலம்பெயர்ந்து பிரித்தானியாவில் வாழும் காணாமலாக்கப்பட்டவர்களின் உறவினர்கள், பிரித்தானிய பாராளுமன்ற உறுப்பினர்களிடம் நேரில் சென்று கையளித்துள்ளனர்.

இந்த சந்திப்புக்களின் போது இலங்கையில் இடம்பெற்ற இனப்படுகொலை தொடர்பாகவும், காணாமல் ஆக்கப்பட்டவர்கள் மற்றும் பாரிய மனித புதைகுழிகள் தொடர்பான விடயங்களை பிரித்தானிய பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு காணாமலாக்கப்பட்டவர்களின் உறவினர்கள் தெளிவுபடுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இந்த ஆய்வு அறிக்கையை பெற்றுக் கொண்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் புலம்பெயர் உறவினர்களின் வேதனைகளை அக்கறையுடன் கேட்டதுடன் மேலும் இவ்விடயம் தொடர்பாக தாங்கள் பாராளுமன்றத்தில் கேள்வி எழுப்புவதாகவும் வாக்களித்தனர்.

இந்நிகழ்வில் இலங்கையில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் பிரித்தானியா வாழ் உறவினர்களின் சங்கத்தின் சார்பில் விஜய் விவேகானந்தன், டிலக்சன் மேனோரஜன், லக்ஷ்மன் திருஞானசம்பந்தர், நிலக்ஜன் சிவலிங்கம், சாருப்பிரியன் ஸ்ரீஸ்கரன், புகழினியன் விக்ட்டர் விமலசிங்கம், மாதவ மேஜர் வேலுப்பிள்ளை, ரோய் ஜக்ஷான் யேசுதாசன், சுபதர்ஷா வரதராசா, சுபமகிஷா வரதராசா ரஞ்சனி பாலச்சந்திரன், செல்வகுமாரி லோகநாதன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Print Friendly, PDF & Email