SHARE

தொழில்கட்சியின் இரவு விருந்தில் கலந்து கொண்ட பாராளுமன்ற உறுப்பினர்களிடம் ஆதரவு திரட்டிய தமிழ் இளையோர் அணி

பிரித்தானிய தொழில்க்கட்சியினரின் தேர்தல் பிரச்சார நிதி சேகரிப்புக்கான இரவு விருந்து ஒன்று கூடலில் கலந்துகொண்ட தமிழ் இளையோர் அணி அங்கு வருகை தந்திருந்த தொழில் கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் முக்கிய அரசியல் பிரமுகர்களிடம் இலங்கை இராணுவ தளபதியும் இனப்படுகொலை குற்றவாளியுமாகிய சவேந்திர சில்வாக்கு எதிராக பிரித்தானிய தடை விதிக்க வேண்டும் என்ற தமது கோரிக்கையை எடுத்து விளக்கியதுடன், பிரித்தானிய அரசு உடன் நடவடிக்கை எடுக்கும்படி வலியுறுத்துமாறும் கோரிக்கை விடுத்தனர்.

இலங்கையில் இடம் பெற்ற இறுதி யுத்தத்தில் பல்லாயிரம் அப்பாவி தமிழ் மக்கள் கொல்லப்பட்டதற்கு காரணமான 58வது படைப்பிரிவிற்கு தலைமை தாங்கி இராணுவத்தை நேரடியாக வழிநடத்திய சவேந்திர சில்வாவை தடை செய்ய போதுமான ஆதாரங்களை யஸ்மின் சூக்கா தலைமையிலான சர்வதேச உண்மை மற்றும் நீதித்திட்டம் (ITJP) கடந்த ஏப்ரல் 2021 இல், பிரித்தானிய வெளிவிவகார அமைச்சுக்கு சமர்ப்பித்திருந்தது.

ஆனால் இதுவரையில் பிரித்தானிய வெளிவிவகார அமைச்சால் எவ்வித நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருக்கவில்லை. இதனால் பிரித்தானியாவின் அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களுடனும் இது தொடர்பிலான தொடர் சந்திப்புகளை இளையோர் அணி மற்றும் சித்திரவதையில் தப்பித்தவர்கள் மேற்கொண்டு வருகின்றனர். இதில் தமிழர்கள் தரப்பில் வழக்கறிஞர்கள் மனித உரிமை ஆர்வலர்கள் மற்றும் இரண்டாம் தலைமுறை என பலர் கலந்து பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு அழுத்தங்களை வழங்கி வருகின்றனர்.

இந்த வகையிலே கடந்த 8 ஆம் திகதி நடைபெற்ற பிரித்தானிய தொழிற் கட்சியின் தேர்தலுக்கான நிதி சேகரிப்பு இரவு விருந்து ஒன்று கூடலில் கலந்து கொண்ட தொழிற் கட்சியின் முக்கிய பிரமுகர்களை சந்தித்த இளையோர் அணி அதனை சவேந்திர சில்வாவுக்கு எதிரான பிரச்சாரத்துக்கான களமாக பயன்படுத்திக் கொண்டனர்.

இந்த விடயம் நிழல் வெளிவிவகார அமைச்சர் கௌரவ. டேவிட் லெமி ( Hon David Lammy- Shadow Foreign Affairs Minister)மற்றும் கௌரவ. ஸ்டீவ் ரீட்( Hon Steve Reet), நீதிக்கான மாநில நிழல் செயலாளர் ஆகியோரிடமும் கலந்துரையாடப்பட்டது.

பிரித்தானியாவின் அரசியலில் அடுத்த தேர்தலில் தெற்கு க்ராய்டனுக்கு தொழிலாளர் எம்.பி.யாக போட்டியிட இருக்கும் பென் டெய்லர் ( Ben Taylor) அவர்களை சந்தித்து சவேந்திர சில்வாவை தடை செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை மேற்படி செயற்பாட்டாளர்கள் ஆதரவு திரட்டியிருந்தனர், இதன்போது அவர் எங்கள் பிரச்சாரத்தை ஆதரிப்பதாகவும், எதிர்காலத்தில் எங்களுடன் இணைந்து பணியாற்ற ஆவலுடன் இருப்பதாகவும் தெரிவித்தார். அத்துடன் அவர் தனது ஆதரவை பகிரங்கமாக தெரிவிக்கும் வகையில் ITJP ஆல் வடிவமைக்கப்பட்ட “Sanction Shavendra Silva” என்ற பச்சைநிற பதாகையை தாங்கியபடி புகைப்படங்களும் எடுத்துக்கொண்டார்.

தொழிற்கட்சிக்கான தமிழர்கள் அமைப்பின் தலைவரான திரு. சென் கந்தையா அவர்களின் தலைமையில் செயற்பாட்டாளர்களான விஜய் விவேகானந்தன், டிலக்‌ஷன் மனோரஜன், அரவிந்தன் வசந்தி, சிந்துயா ஜெயன், அனுசன் பாலசுப்ரமணியம், வாகீசன் விசாகரெட்ணம், கனகசபாபதி கார்த்திகேசன், விதுரா விவேகானந்தன், முஹமட் சாபிக் ஆஃப்ரின் முஹமட் மற்றும் செஸான் பெர்னாண்டோ வர்ணகுலசூரிய ஆகியோர் கொண்ட அணியே மேற்படி பிரச்சார நடவடிக்கையை முன்னெடுத்தமை குறிப்பிடத்தக்கது.

Print Friendly, PDF & Email