SHARE

பிரித்தானியாவில் தமிழீழ தேசியக கொடிக்கு எவ்வித தடைகளும் இல்லை. அதனை எவ்வித தயக்கமுமின்றி பயன்படுத்தலாம் என என பிரித்தானிய உயர்மட்ட காவல்துறை உறுதி பூர்வமாக தெரிவித்துள்ளது.

பிரித்தானியாவிற்கு விஜயம் மேற்கொண்டுள்ள இலங்கை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு எதிராக பிரித்தானியாவின் IHG Continental Park Lane Hotel முன்பாக புலம்பெயர் தமிழர்களால் ஏற்பாடு செய்யப்பட்ட ஆர்பாட்டத்தின் போதே இவ்வாறு அதிகாரியினால் கூறப்பட்டது.

இது குறித்து மேலும் தெரியவருவதாவது,

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கள் பிரித்தானியா மற்றும் பிரான்ஸ் நாடுகளுக்கான உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றினை மேற்கொண்டு முதலில் பிரித்தானியா வந்துள்ளார். அதனைத்தொடர்ந்து எதிர்வரும் 22 மற்றும் 23 ஆம் திகதிகளில் பிரான்சில் நடைபெறவுள்ள புதிய உலகளாவிய நிதி உடன்படிக்கைக்கான மாநாட்டில் கலந்துகொள்ளவுள்ளார்.

இந்நிலையில் பிரித்தானியாவிற்கு முதலில் விஜயம் செய்துள்ள ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு எதிர்ப்பு தெரிவித்து பிரித்தானியா வாழ் புலம்பெயர் தமிழர்களால் இன்று (19) இரு வேறு இடங்களில் மாபெரும் எதிர்ப்பு போராட்டம் நடத்தப்பட்டது.

இதில் அவர் தங்கியிருந்த விடுதிக்கு முன்னர் நடைபெற்ற எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட புலம்பெயர் தமிழர்கள் ஒன்று திரண்டு தமிழீழ தேசிய கொடிகளை கைகளில் ஏற்தியவாறு தமிழினப்படுகொலையாளி ரணிலே வெளியேறு என்ற கோசங்களை எழுப்பினர்.

இதன்போது அங்கிருந்த விசமிகளினால் தடைசெய்யப்பட்ட கொடிகளை ஏந்திப்போராடுகிறார்கள் என அங்கு நின்ற பிரித்தானிய பொலிஸ் அதிகாரிகளுக்கு பொய்யான தகவல் வழங்கப்பட்டது. இதனையடுத்து தமிழீழ தேசியகொடிகளை ஏந்தி போராட பொலிஸாரினால் முதலில் தடைகள் ஏற்படுத்தப்பட்டது. எனினும் ஆர்ப்பாட்டக்காரர்களினால் அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டபோது பின்னர் மேல் அதிகாரிகள் ஆர்ப்பாட்டக்களத்திற்கு வருகை தந்து குறித்த விடயம் தொடர்பில் ஆராய்து, தமிழீழ தேசிய கொடிக்கு பிரித்தானியாவில் தடையில்லை. நீங்கள் அவற்றை பயன்படுத்தலாம். தங்களிற்கு முதலில் தவறான தகவல்களே வழங்கப்பட்டது என்றும் கூறினார்கள்.

இதன்மூம் பிரித்தானியாவில் தமிழீழ தேசியக்கொடிக்கு தடையில்லை என்பதை மீண்டுமொருமுறை பிரித்தானியா உறுதிசெய்துள்ளது. கடந்த 2021 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் தமிழீழ தேசியக்கொடிக்கு பிரித்தானியாவில் தடை இல்லை என்பது தொடர்பில் பிரித்தானியாவின் முன்னாள் உள்துறை செயலாளர் தனது கடிதம் மூலம் தெளிவுபடுத்தியதை இன்று பிரித்தானியாவின் சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளார்.

Print Friendly, PDF & Email