யாழ்ப்பாணத்தில் நாளை நடைபெறவுள்ள சுதந்திரதின விழா கொண்டாடத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்றினை முன்னெடுக்க யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் அனைத்து தரப்பினரிடமும் அழைப்பு விடுத்துள்ளது.
இலங்கையின் 75 ஆவது சுதந்திர தினக் கொண்டாட்டத்தின் 2 ஆம் கட்டம் நாளை யாழ்ப்பாணத்தில் ஜனாதிபதி ரணில் தலைமையில் நடைபெறவுள்ளது. இதில் கலந்து கொள்ளுமாறு வடக்கைச் சேர்ந்த அனைத்து தமிழ் கட்சிகளிற்கும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ள போதிலும் பல கட்சிகள் அதனை புறக்கணித்து தமது எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர்.
இந்நிலையிலேயே நாளை யாழ்ப்பாணத்தில் நடைபெறவுள்ள 2 ஆம் கட்ட சுதந்திர தின கொண்டாட்டத்தை கரிநாள் கேளிக்கை நிகழ்வாக பிரகடணப்படுத்தி அதற்கு எதிராக அணிதிரள யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் அழைப்பு விடுத்துள்ளது.
பொருளாதார பின்னடைவு ஏற்பட்டுள்ள தற்போதைய நேரத்திலும் பெருந்தொகையான பண செலவில் இரண்டாவது தடவையாக சுதந்திர தின விழாவினை கொண்டாடவேண்டிய தேவை என்ன என கேள்வி எழுப்பியுள்ள மாணவர் ஒன்றியம் நாளை யாழ்.பேருந்து நிலையம் முன்பாக அணிதிரளுமாறு அனைவரிற்கும் அழைப்பு விடுத்துள்ளது.